
யாருக்கு எப்படியோ…
உண்மையில் சினிமா ரசிகர்களுக்கு இந்த கொரோனாவினால் கிடைத்திருக்கும் நாட்கள் ஒவ்வொன்றும் சொர்க்க தினங்கள். சினிமாவையே வாழ்க்கையாக்கிக் கொண்டிருப்பவர்களுக்கும், வாழ்க்கையாக்கிக் கொள்ளவிருப்பவர்களுக்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம் கொரோனா எனும் வைரஸ் அளித்த வரப்பிரசாதம்.
இப்போது உள்ள கலை ரசிகர்கள் உலகம் முழுக்க அலசி ஆராய்ந்து பல நல்ல திரைப்படங்களையும் வலைத்தொடர்களையும் தேடிப்பிடித்து பார்ப்பதையும் தன் போன்ற ரசனை கொண்ட நண்பர்களிடம் அப்படைப்புகளைப் பற்றி உரையாடுவதிலும் அலாதி இன்பம் கொள்கிறார்கள்.
குடும்பம், உறவு, காதல் என இப்படியான மனித கதைகளைத் தாண்டி கற்பனைக் கதைகளையும், சூப்பர் ஹீரோக்களையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதன் பிரதிபலிப்புதான் சென்ற ஆண்டு முழுக்க முழுக்க சூப்பர் ஹீரோக்களை மையப்படுத்தி வெளிவந்த ‘END GAME’ திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது.
கற்பனை என்ற ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு கதாப்பாத்திரங்களை வடிவமைத்து அக்கதாபாத்திரங்களைக் கொண்டு மக்களை உணர்ச்சிவசப்படுத்துவதெல்லாம் உண்மையில் பெரிய விஷயம்.
நிஜ வாழ்க்கையில் சாத்தியமில்லாததைத்தான் செய்கிறார்கள் என்றாலும் Entertainment என்று வருகையில் அவர்களுக்கு ஆகச்சிறந்த அனுபவமாக அமையும் போது மக்கள் கொண்டாடத் துவங்குகிறார்கள்.
அப்படி ஒரு கற்பனை வலைத் தொடர்தான் DARK.
காலப்பயணத்தை மையப்படுத்திய ஒரு கதை.
2019,1986,1953 என 33 ஆண்டுகள் இடைவெளி கொண்ட முக்காலங்களோடு ஒரு எதிர்காலமும் கலந்து பல்வேறு காலங்களில் கதை மாறி மாறிப் பயணிக்கிறது.
கதையின் துவக்கத்தில் ஜூன் 21, 2019 அன்று, நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கு தொலைந்து போன ஒரு சிறுவன் வளர்ந்து பெரியவனானதும் தன்னைக் கடந்த காலத்தில் கண்டெடுத்து வளர்த்த தன் வளர்ப்பு தாய்க்கு ஒரு கடிதம் எழுதி அதை நவம்பர் 4 இரவு 10.13 மணிக்கு முன்பு வரை திறந்து பார்க்க வேண்டாம் எனக் குறிப்பெழுதி வைத்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறான். அவன் குறிப்பெழுதிய அதே நாள் அதே வேளையில் ஒரு சிறுவன் தொலைந்து போகிறான். தொலைந்து போன சிறுவனை மையப்படுத்தி கதை நகர்கிறது.
குறிப்பிட்ட கால இடைவெளியில் அடுத்தடுத்து குழந்தைகள் தொலைந்து போகிறார்கள். முதலில் தொலைந்து போன சிறுவனைத் தேடி காவல்துறையைச் சேர்ந்த அவனது தந்தையும், தன் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதன் காரணத்தைத் தேடி அலையும் அவரது மகனையும் மையப்படுத்தி நிகழும் மாயாஜாலம்தான் DARK.
மொத்தத் தொடரில் குறைந்தது 50,60 முடிச்சுகளோடும், திருப்பங்களோடும் திரைக்கதை தாறுமாறாக நகர்கிறது. ஒரு கலைப் படைப்பைப் பார்க்கும் போது கதையின் போக்கில் செல்வது என்பதை ஒரு பக்கம் வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு காட்சிக்கும் இந்த கதாப்பாத்திரம் யார்? இதுவரை கதையில் நாம் கண்ட கதாப்பாத்திரங்களுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? இந்தக் காட்சியில் இந்த கதாபாத்திரம் செய்யும் அல்லது செய்யப் போதும் இந்த சம்பவம், கதையில் 33 ஆண்டுகளுக்கு பிறகோ, 66 ஆண்டுகளுக்கு பிறகோ, எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தப் போகிறது என காட்சிக்குக் காட்சி மெய்மறந்து சிலிர்த்துப் போய் சில்லறையை விட்டெறியும் அளவிற்கு வெறித்தனமாக பசி தூக்கத்தை மறந்து பார்க்கப் பிரியப்படுவது இன்னொரு பக்கம்.
இதில் DARK இரண்டாம் வகை. உண்மையில் இப்படியான ஒரு வலைத்தொடரைப் பற்றி ஒரு நிகழ்ச்சி அல்ல, தொடர் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். ஒரு பதிவு அல்ல, ஒரு தொடரே எழுத வேண்டும். அவ்வளவு அற்புத சுவாரஸ்யங்கள் குவிந்துள்ளன.
இப்படி ஒரு திரைக்கதையைப் படைத்தவருக்கும், இதை வெட்டி ஒட்டியவருக்கும் திரைக்கலை பக்தர்கள் கோவில் கட்டினால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. காலப் பயணத்தை கையில் எடுத்துக்கொண்டு இவர்கள் செய்யும் பயணம் மிகவும் அசாத்தியமானது.
DARK இன்னும் பல வருடங்கள் அசைபோட வைக்கும் ஒரு அற்புதமான ‘காலப் பயண’ வலைத்தொடர். இதை எழுதத் துவங்கிய போது இரண்டாம் முறையாக முதல் அத்தியாயத்திலிருந்து இத்தொடரை பார்க்கத் துவங்கியிருந்தேன்.
ஒவ்வொரு பகுதியையும் விளக்கி எழுதுங்களேன். நன்றி