
1.
வெகுதூரமில்லை என் வீடு
பேருந்தோ தொடரியோ
ஐந்தாறு மணிநேரம்தான்
ஆனாலும்
அவ்வளவு தனித்திருக்கிறேன்.
எப்போதோ நான் போட்ட விதை
இன்று பூத்திருக்கிறது
எப்போதோ அப்பா வைத்த கொய்யா
இப்பொது காய்க்கிறது
என் ஊஞ்சல்
இடம் மாறியிருக்கிறது
என் அறையின்
வண்ணம் மாறியிருக்கிறது
அலமாரி புத்தகம்
பரண் ஏறியிருக்கிறது
இன்னும்
என் மைதானம்
வீடாகிவிட்டது
அங்கிருந்த காடு
பூங்காவாகி விட்டது
இதேதும் தெரியாத நான்
இன்னும் அங்கொரு தாத்தா
தேன்குழல் விற்பதாய் நம்புகிறேன்.
அலைபேசியும் அழைப்புகளும்
மலிந்துவிட்ட காலம்தான்
பேருந்தோ தொடரியோ
ஐந்தாறு மணிநேரம்தான்
ஆனாலும்
அவ்வளவு தனித்திருக்கிறேன் நான்.
***
2.
எல்லாருக்கும் கேட்கும்படி கைதட்டி
சண்டிகேஸ்வரனிடம்
பிராத்திக்கிறாள் ஒருத்தி
யாருக்கும் கேட்காதபடி
நந்தியின் காதில்
குசுகுசுக்கிறாள் ஒருத்தி
நெடுஞ்சாண்கிடையாய்
விழுந்து கும்பிடுகிறான் ஒருவன்
அத்தனைக்கும் மத்தியில்
ஒன்றிரண்டு சில்லறை தந்தவனை
கடவுளாய் மாற்றி
வாழ்த்திக்கொண்டிருக்கிறாள்
பிச்சைக்காரி…
***
3.
ஒவ்வொருமுறை தும்முமபோதும்
“நூறு ஆயுசு” என
நெகிழ்ந்து கொள்கிறாள் அம்மா.
அனிச்சையாய் தடவிக்கொள்கிறேன்
ஆயிரமாவது முறையாய்
வெட்டுண்ட சிறகுகளை…
*****