கவிதை எழுதி முடித்து
ஓரத்தில்
பெயர் போட்டுக் கொள்வது போலிருக்கிறது
கூடலுக்குப் பின்
நாம் நிலா பார்ப்பது.
****
என்ன இருந்தாலும்
நான் யாரோதான்
இல்லையா
என்பதுவும்
உனக்கான என் பிரார்த்தனையின் முடிவில்
காதுகளில் ஓதப்படுகிறது
அவ்வோசையை
புறந்தள்ளி
வாழ்வாங்கு வாழ்கிற
பிரியத்தின் நம்பிக்கையைப்
பற்றிக்கொள்கிறேன்.
****
அடுத்த பக்கம்
மாற்றுவதற்குள்
பீறிடும் பாலின்
நிறத்தில்
நம் பிரியம்.
****
எனக்கு வெளியே
ஒரு நான் இருக்கிறேன் அல்லவா?
அது மட்டும்தான் உங்களுக்குத் தெரியும்
எனக்குள்ளே ஒரு நான் இருக்கிறேன்
தெரியுமா?
அது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை
வெளியே இருக்கிற நான்
உள்ளே இருக்கிற என்னை
அழ விடாமல்
அசட்டு தைரியத்தோடு
சிரித்தபடியே
இப்போது பேசிக் கொண்டிருக்கிறேன் அல்லவா?
உண்மையில்
என்னையும் கூட எனக்கே தெரியாது
என்பதுவே சகித்து
வாழப் போதுமானது.
*******