ரொம்ப நாட்களுக்குப் பிறகு
உன்னைப் பார்த்தேன்
ரொம்ப நாட்களுக்குப் பிறகு
நீயும் என்னைப் பார்த்தாய்
நீ நீயாகவே இருக்கிறாய்
நான் நானாகவே இருக்கிறேன்
‘ரொம்ப நாட்களுக்கு’ மட்டும்தான்
தான் ஏன் ரொம்ப நாட்கள் ஆனோம் என்பது
புரியாமலே இருக்கிறது
மற்றபடி இப்பொழுதும்
நீயும்
நானும்
ரொம்ப நாட்களும்
இன்னும் வசீகரமாகத்தான்
இருக்கிறோம்.
*****
ஒரு கோப்பை மதுவும்
நானும்
உன் எதிரே அமர்ந்திருந்தால்
எங்களில் எதனைத் தேர்ந்தெடுப்பாய்
என்று கேட்டாய்
ஒரு மது
ஆயிரமாண்டு
பழமையான மாது
ஒரு மாது
ஆயிரமாண்டு
பழமையான மது
என்றேன்
என்ன உளறுகிறாய்
என்றாய்
ஒரு கோப்பை மது
எனக்கு வேண்டாம் என்றேன்
புன்னகைத்தாய்
ஒரு கோப்பை மதுவை
உன் வாயில் ஊற்றிவிட்டு
பிறகு
உன்னைத் தேர்ந்தெடுப்பேன்
என்றேன்.
*****
The Effects Of பால்யகால சகி
இன்றென் அதிகாலைக் கனவில்
கனிகள் அடர்ந்த அந்த மாமரத்தின் உச்சியில்
கிளை பற்றி நின்றிருந்தேன்
சுகறா எந்த வயதினளாக
வரப்போகிறாள்
குறும்புத்தனம் மிக்க கூரிய நகங்கள்
உடைய சிறுமியாகவா
வறுமையில் இருந்தாலும்
அழகில் வறுமையற்ற மங்கையாகவா
முன் பல்லொன்று விழுந்துபோன
ஒரு ஈர்க்குச்சிக்கு துணி சுற்றினாற்
போலுள்ள சுகறாவா
குழப்பமாக இருந்தது
மரத்தின் கீழே புற்கள் நிறைந்த தரையில்
வாயில் வெற்றிலை குதப்பியபடி
வெறுப்பாய் எனைப் பார்த்துக்
கொண்டிருந்தார் பஷீர்
நான் மஜீது போலில்லை போலும்
எந்த நடிகையின் சாயலுமற்று
வந்திருந்தாள் சுகறா
சிறுமிக்கும் மங்கைக்கும் இடையிலிருந்தாள்
மேலே எனைப் பார்த்தாள்
”என்னடா பயலே
மக்கம் தெரிகிறதா?” என்றாள்
”இல்லை, நெல்லையப்பர் கோவில்தான்
தெரிகிறது” என்றேன்
பஷீர் சொத்தென்று தன்
தலையிலடித்துக் கொண்டார்
”கனிகள் ஒன்று கூட
தென்படவில்லையே” என்றாள்
நான் கீழே பார்த்தபடியே,
”எனக்கு இரண்டு மட்டும் தெரிகின்றது”
என்றேன்
பஷீர் வெற்றிலைக் குதப்பலை ஏனோ
அத்தனை ஆங்காரமாய் காறித் துப்பினார்
”ஒரு மாங்கனியாவது பறித்துத் தருகிறாயா
அல்லது
கொஞ்சம் பெரிய ஒண்ணு
என்று சொல்லவா?” என்றாள்
நான் கீழே குதித்தேன்
சுகறா திடுக்கிட்டாள்
”அடப்பாவி…
நீ மஜீது இல்லையே” என்றாள்
பஷீர் வெடி வெடித்ததைப் போல
குலுங்க குலுங்கச் சிரித்தார்
”ஆனால் நீ மஜீதை விட
அழகாக இருக்கிறாய்” என்றாள்
இப்போது பஷீர் திடுக்கிட்டார்
என்ன நினைத்தாரோ
எனதருகே வந்து கொஞ்சம் புன்னகையுடன்
கேட்டார்,
”ஒரு பீடியுண்டோ சகாவே?”
******