சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 7
சிறார் தொடர் | வாசகசாலை

புதிய பாடசாலை
நிலப்பிரபுக்கள், மந்திரி, தளபதி வாழ்கிற அந்த மாளிகை வீதி விழாக்கோலம் பூண்டிருந்தது. வருடத்தின் பல நாட்கள் அந்தப் பகுதியில் கோலாகலமாக விழாக்கள் நடக்கும்தான். ஆனால், இன்று நடப்பது வித்தியாசமான விழா.
‘’பரவாயில்லையே… உங்கள் உரைகல்லால் ஒரு உருப்படியான விஷயம் நடந்துவிட்டதே’’ என்று கேலியுடன் சொன்னாள் நட்சத்திரா.
அவள் அருகே நின்றிருந்த உத்தமன், ‘’இனிவரும் காலங்களில் உரைகல் என்னவெல்லாம் செய்யப்போகிறது என்று பார்’’ என்று பெருமையுடன் சொன்னான்.
அரிமாபுரி மேல்நிலைப் பாடசாலைத் திறப்பு விழாதான் அது. இப்போது பள்ளியாகத் திறக்கப்படும் இந்த இடமே முன்பு பள்ளியாக இருந்ததுதான். பள்ளியை ஏரிக்கரைக்கு விரட்டி இந்தக் கட்டடத்தைத் தனது தானியக் கிடங்காக வைத்திருந்தார் ஒரு நிலப்பிரபு. இப்போது அதை மீட்டு மீண்டும் பள்ளியாக மாற்றி திறக்க ஏற்பாடு செய்துவிட்டார் சிங்கமுகன். வெவ்வேறு பணிகளுக்குச் சென்றுவிட்ட ஆசிரியர்களையும் திரும்ப அழைத்துள்ளார்.
அதற்கான விழாதான் இது. பொதுமக்களும் திரண்டு வந்திருந்தார்கள். அந்த மக்கள் கூட்டத்தில் இவர்களும் ஒரு பக்கமாக நின்றிருந்தார்கள்.
‘’இந்த நல்ல விஷயத்தையாவது உரைகல்லில் எழுதி அரசரை ஒரு வார்த்தை பாராட்டுவீர்களா மாட்டீர்களா?’’ என்று கேட்டாள் நட்சத்திரா.
‘’பாராட்டுவதாக இருந்தால் உன்னையும் குழலனையும்தான் பாராட்ட வேண்டும். நீங்கள் இருவரும் துணிச்சலுடன் அரசரிடம் பாடசாலையின் அவலத்தைச் சொன்னதுதான் இந்த மாற்றத்துக்குக் காரணம்’’ என்று புன்னகைத்தான் உத்தமன்.
‘’வெறும் பாராட்டு மட்டும்தானா? பரிசு எதுவுமில்லையா உத்தமரே?’’ என்று கேட்டாள் நட்சத்திரா.
‘’பரிசுதானே…? அடுத்த உரைக்கல் அதிகம் விற்பனை ஆகும். அதற்கு பிரதிகள் எழுத ஆள் வேண்டும். வந்து எழுது’’ என்ற உத்தமனின் கன்னத்தில் செல்லமாக இடித்தாள் நட்சத்திரா.
‘’ராஜாதி ராஜ… ராஜ கம்பீர…’’ என்று கட்டியம் ஒலிக்க… அனைவரின் பார்வையும் ஒரு திசைக்குச் சென்றது.
அலங்கரிக்கப்பட்ட பட்டத்துயானையில் சிங்கமுகனும் கிளியோமித்ராவும் அமர்ந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அருகிலேயே இன்னொரு யானையில் கிங்விங்சன் வீற்றிருந்தார்.
‘’பார்த்தாயா… பாடசாலை பாழடைந்து கிடந்தபோது பிள்ளைகளுக்குப் பாடம் நடத்தியவள் நீ. அந்த அவலத்தை எடுத்துச் சொன்னவன் குழலன். ஆனால், புதிய பாடசாலையைத் திறந்து வைக்க எங்கிருந்தோ இங்கே வாணிபம் செய்ய வந்தவனை அழைத்துள்ளார்கள். சிறப்பு விருந்தினர் கிங்…விங்…சன்’’ என்று கேலியாகச் சொன்னான் உத்தமன்.
‘’யார் வந்து திறந்தால் என்ன உத்தமரே… நமக்கு தேவை பிள்ளைகளின் படிப்பு. அது பாதுகாப்பான இடத்தில் நடைபெற வேண்டும்… அது போதும்’’ என்றாள் நட்சத்திரா.
‘’ம்… நீ இன்னும் உலகம் பற்றி கற்க வேண்டியது இருக்கிறது நட்சத்திரா. யாரோ ஒருவன் நம்மிடம் இவ்வளவு நெருங்குகிறான் என்றால் யோசிக்க வேண்டும். அதிலும் வியாபாரியின் ஒவ்வொரு செயலிலும் ஒரு முதலீடு இருக்கும்’’ என்றான் உத்தமன்.
அந்த அணிவகுப்பு பாடசாலை கட்டடம் முன்பு முடிந்தது. சிங்கமுகன், கிளியோமித்ரா, கிங்விங்சன் தங்கள் யானைகளில் இருந்து இறங்கினார்கள்.
‘’மக்கள் மன்னர் சிங்கமுகன்…’’
‘’வாழ்க… வாழ்க’’
‘’மன்னரின் அரசி கிளியோமித்ரா…’’
‘’வாழ்க… வாழ்க…’’
‘’பிள்ளைகளுக்காகப் பாடசாலையைக் கொண்டுவந்த அற்புத மன்னர்…’’
‘’வாழ்க… வாழ்க…’’ என்று மக்களிடம் இருந்து முழக்கங்கள் எழுந்தன.
சிங்கமுகன் கைகளை உயர்த்தி அமைதிப்படுத்தி, ‘’பாடசாலையைத் திறக்க வந்துள்ள நமது சிறப்பு விருந்தாளி கிங்விங்சன்…’’ என்றார்.
மக்களிடம் ஓரிரு நிமிடம் அமைதி!
‘’சொல்லுங்கள் மக்களே… சிறப்பு விருந்தாளி கிங்விங்சன்…’’ என்று சிங்கமுகன் மீண்டும் முழக்கமிட…
‘’வாழ்க… வாழ்க…’’ என்று மெல்ல மக்கள் முழக்கமிட்டனர்.
‘’ஙிஙிஙி ஙீஙஙா’’ என்றது சூறாவளி. (இது என்ன கூத்து? ஓர் அயல் தேசத்தவனுக்கு அரசரே முழக்கமிடுகிறார்)
‘’மியாவ்… மியாவ்… மியாவ் மியாவ்’’ என்றது வெற்றி. (இப்போது இந்த நாட்டில் அந்த ஆளுக்குத்தான் அதிக மதிப்பு. எந்த நேரமும் அரண்மனைக்குள் வந்துபோகும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது)
சூறாவளியும் வெற்றியும் கூட்டத்தில் இருந்து விலகி பாடசாலையின் சுவர் அருகே இருந்தன. சூறாவளியின் முதுகில் வெற்றி அமர்ந்திருந்தது.
‘ஓஹோ… ஒரு வணிகன் அவ்வளவு பெரிய ஆளாகிவிட்டானா?’ – சூறாவளி.
‘பின்னே… ராணியாருக்கு என்னென்னமோ பரிசுகளைக் கொண்டுவந்து தருகிறான். அரசருக்கும் ஏதேதோ ஆலோசனைகள் சொல்கிறான். பயங்கரமான மூளைக்காரனாக இருக்கிறான். பேசியே ஆட்களை மயக்கிவிடுகிறான். இங்கு வந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நமது மொழியைக் கற்றுக்கொண்டுவிட்டான்’’ – வெற்றி.
‘ஒரு அந்நிய தேசத்தவனுக்கு இவ்வளவு இடம் கொடுப்பது ஆபத்தாயிற்றே!’ – சூறாவளி.
‘அது பற்றி பூனையும் புரவியுமாகிய நாம் பேசிக் கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது? யோசிக்க வேண்டியவர்கள் யோசிக்க வேண்டுமே… நடப்பதை வேடிக்கை பார்ப்போம்’ – வெற்றி, ‘’மியாவ்… மியாவ்…’’ என்றது.
கூட்டத்தைப் பார்த்து அகன்ற புன்னகையுடன் கையசைத்த கிங்விங்சன், நம்மைப் போலவே கைகூப்பி தலை பணிந்து வணங்கினான்.
அந்தப் பணிவான வணக்கத்தைக் கண்டு மக்கள் கூட்டம் மெல்ல ஆர்ப்பரித்தது.
‘’எங்ளை வாழ்வைக்கும் அர்மாபுரி மக்ளுக்கு என்து பணி… பணிவான வணக்கம். நீங்ளே எங்கள் தெ… தெய்வம்’’ என்றான் கிங்விங்சன்.
அவ்வளவுதான்… மக்கள் கூட்டம் பரவசமாகி பெரும் கைதட்டலை அளித்தது.
‘’மியாவ்…’’ என்றது வெற்றி (சொன்னேனில்லே)
‘’ஙிங்ங்ஙி… ங்ஙை’’ என்றது சூறாவளி. (பெரும் மூளைக்காரன்தான்)
‘’அடேங்கப்பா… ஒற்றை வரியில் மொத்தக் கூட்டத்தையும் கவர்ந்துவிட்டானே’’ என்று வியந்தான் உத்தமன்.
‘’இப்படித்தான் அரசரையும் அரசியையும் கவர்ந்திருப்பான்’’ என்றாள் நட்சத்திரா.
பாடசாலையின் வாசல், திறப்பு விழாவுக்காகப் பட்டுத்துணியால் மூடப்பட்டு இருந்தது. ஒரு பக்கம் சிங்கமுகன்… இன்னொரு பக்கம் கிளியோமித்ரா… நடுவில் கிங்விங்சன் நின்றிருந்தான்.
கிளியோமித்ரா அருகே செவ்வந்தி. அவளது பார்வை அடிக்கடி சூர்யனிடம் சென்றது. சிங்கமுகன் அருகே நின்றிருந்த சூர்யனின் பார்வையோ நாலா திசையிலும் சுழன்றவாறு இருந்தது. பழைய பாடசாலையில் நிகழ்ந்தது போன்ற விபரீதம் நிகழ்ந்துவிடக் கூடாது என்று அவனது உடலின் ஒவ்வொரு அணுவும் துடிப்புடன் கண்காணித்தது.
சற்றுத் தள்ளி மந்திரி நிலாமதி சந்திரன் மற்றும் தளபதி கம்பீரன் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு இந்தக் கோலாகல விழாவில் விருப்பம் இல்லை. ஆயினும் அதை வெளிக்காட்டாமல் செயற்கையாகப் புன்னகை செய்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் குழலன் உள்ளிட்ட மாணவர்களும் சில ஆசிரியர்களும் நின்றிருந்தார்கள்.
சிங்கமுகன் கூட்டத்தை நோக்கிக் கையை உயர்த்த… அனைவரும் அமைதியானார்கள்.
‘’என் அன்பு மக்களே… இப்போது நமது சிறப்பு விருந்தாளி கிங்விங்சன் பாடசாலையைத் திறந்து வைப்பார்’’ என்றார்.
கூட்டம் கைகளைத் தட்டியது. கிங்விங்சன் அரசர் காதருகே குனிந்து என்னமோ சொன்னார். சிங்கமுகன் சற்றே திகைத்து பின்னர் தலையாட்டி மீண்டும் கூட்டத்தை நோக்கினார்.
‘’அருமை மக்களே… இந்தப் பாடசாலை திறக்கப்படும் விதம் பற்றி கிங்விங்சன்னு நான் ஏற்கெனவே விரிவாகச் சொல்லியிருந்தேன். இப்போது அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? இதை நான் மட்டும் திறப்பது சரியாக இருக்காது. இதற்குப் பெரிதும் காரணமாக இருந்த அந்தப் பகுதி நேர ஆசிரியையும் சிறுவனும் சேர்ந்து திறக்க வேண்டும் என்று சொல்கிறார். பார்த்தீர்களா இவரது பெருந்தன்மையை’’ என்றார் சிங்கமுகன்.
கூட்டம் மேலும் பரவசமாகி ஆர்ப்பரித்தது. உத்தமன் அருகே நின்றிருந்த நட்சத்திராவும் திகைத்துப் பரவசமானாள்.
உத்தமன் மெல்லப் புன்னகைத்து, ‘’ம்… கிங்விங்சன் அபார மூளைக்காரன்தான். அவனுக்கு மட்டுமல்ல… அவன் கூட்டத்துக்கே நம் தேசத்தில் வருங்காலத்தில் பெரிய இடம் இருக்கப் போகிறது. போ… அந்தப் பெருமைமிகு மனிதனுடன் சேர்ந்து திறப்பு விழாவில் பங்கெடு’’ என்றான்.
‘’ம்… உங்களுக்குப் பொறாமை’’ என்று தலையை அழகாக ஒடித்துக் காண்பித்துவிட்டு கூட்டத்தைப் பிளந்துகொண்டு சென்றாள் நட்சத்திரா.
குழலன், நட்சத்திரா இருவரும் பட்டுத்துணியின் ஒரு பக்கத்தைப் பிடிக்க… இன்னொரு பக்கத்தை கிங்விங்சன் பிடிக்க… மூவருமாக விலக்கித் திறந்தார்கள்.
‘’கிங்விங்சன்…’’
‘’வாழ்க… வாழ்க…’’
‘’மாவீரர் சிங்கமுகன்…’’
‘’வாழ்க… வாழ்க…’’ என்று மக்கள் மகிழ்ச்சியுடன் முழக்கமிட்டார்கள்.
‘’மக்களே… இந்த நன்னாளில் இன்னொரு மகிழ்ச்சியைப் பகிர்கிறேன். நீண்ட காலமாகப் பாடசாலை விஷயத்தில் மெத்தனமாக இருந்துவிட்டதற்கு என்னை மன்னிக்கவும். விரைவில் நம் நாடு முழுவதும் மக்கள் வசிப்பிடத்துக்கு அருகிலேயே தொடக்கப் பாடசாலை மற்றும் உயர்நிலைப் பாடசாலை போன்றவை திறக்கப்படும். அதற்கு என்னுடன் இணைந்து மிஸ்டர் கிங்விங்சன்னும் நிதியுதவி செய்வதாகச் சொல்லியிருக்கிறார்’’ என்றார் சிங்கமுகன்.
கூட்டம் இன்னும் பெரும் ஓசையுடன் கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தது.
‘’அந்தப் பணிகளுக்கான பொறுப்பாளர்களில் இந்த நட்சத்திரா மற்றும் குழலனையும் நியமிக்கிறேன்’’ என்று சிங்கமுகன் சொன்னதும் இருவரும் அரசரை நன்றியுடன் வணங்கினார்கள்.
அருகில் நின்றிருந்த தளபதி கம்பீரனும் மந்திரி நிலாமதி சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
‘’மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு பக்கம் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ளலாம். மாணவர்களுக்கு இன்று ஒருநாள் விடுமுறை. விருந்து முடிந்து வீட்டுக்குச் செல்லலாம். நாளை முதல் தவறாமல் வந்து அறிவுச் செல்வத்தை அள்ளிப் பருகுங்கள்’’ என்றார் சிங்கமுகன்.
கூட்டம் மீண்டும் கைகளைத் தட்டிவிட்டு விருந்து நடக்கும் பகுதிக்குச் சென்றது.
‘’மிஸ்டர் கிங்விங்சன்… நமக்கு உள்ளேயே விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாருங்கள்…’’ என்றாள் கிளியோமித்ரா.
‘’நன்றி ராணி ஆரே…’’ என்று புன்னகைத்தான் கிங்விங்சன்.
‘’முன்பை விட இப்போது அழகாகத் தமிழ் பேசுகிறீர்கள்’’ என்றாள் கிளியோமித்ரா.
‘’நீங்ளும்தான்… மிஸ்டர், வெல்கம் என எங்கள் லாங்வேஜ் பேசறீங்க’’ என்றான் கிங்விங்சன்.
சிங்கமுகன் தலையைத் திருப்பிப் பார்த்து சூர்யனை அருகில் அழைத்தார். அவன் காதருகே ஏதோ சொன்னார். அவன் தலையாட்டினான். அங்கிருந்து நகர்ந்தான்.
பொதுமக்கள் விருந்து நடக்கும் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த உத்தமனை எட்டிப் பிடித்து, ‘’உத்தமா நில்’’ என்றான் சூர்யன்.
‘’என்ன சூர்யா?’’ என்று கேட்டான் உத்தமன்.
‘’அரசர் உன்னை உள்ளே அழைக்கிறார்’’ என்றான் சூர்யன்.
‘’என்னையா… ஏன்?’’
‘’உள்ளே நடக்கும் விருந்தில் பங்கேற்க!’’
‘’வியப்பாக இருக்கிறதே… நிலப்பிரபுக்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் நடக்கும் விருந்தல்லவா அது?’’
‘’நீயும் அந்த இடத்துக்கு வந்துவிட்டாயோ என்னமோ?’’
‘’ஒருகாலமும் என்னால் அந்த உயரத்துக்கு வரமுடியாது சூர்யா’’
‘’ஆனால் அழைக்கிறாரே… திட்டி திட்டி எழுதியே மன்னரின் மதிப்பை பெற்றுவிட்டாயே… வா சீக்கிரம். நான் மன்னர் அருகே இருக்க வேண்டும்’’ என்றபடி நடையில் வேகம் கூட்டினான் சூர்யன்.
‘’ஏன்… நீ ஒரு நொடி இல்லாவிட்டால் சிங்கமுகனை கழுகுகள் கொத்திச் சென்றுவிடுமா?’’
‘’ஆமாம்… முகம் காட்டாத கழுகு ஒன்று என்னிடம் வேடிக்கை காட்டியவாறே இருக்கிறது’’ என்று அர்த்தம் பொதியச் சொன்னான் சூர்யன்.
‘’ஓ… அன்று புகை குண்டு வீசியவன்… ஏரிக்கரை அருகே அம்பு எய்தவன் பற்றிச் சொல்கிறாயா? இரண்டு முறையுமே உன் வீரத்துக்குப் பிடிகொடுக்காமல் மாயமாகி விட்டான் அல்லவா?’’ என்று கேலியாகக் கேட்டான் உத்தமன்.
‘’பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் உத்தமா!’’
‘’பிடிபடட்டும்… நானும் உனக்காகப் பிரார்த்திக்கிறேன்.’’
இருவரும் உள்ளே வந்துவிட்டார்கள். அரசரை நெருங்கினார்கள்.
‘’வா உத்தமா’’ என்ற சிங்கமுகன் தன் அருகே இருந்த கிங்விங்சன் பக்கம் திரும்பினார்.
‘’மிஸ்டர் கிங்விங்சன்… இவர் என் நாட்டில் மிக முக்கியமானவர். என்னை எப்போதும் எதிரியாகப் பார்ப்பவர்’’ என்று சிரித்தார்.
கிங்விங்சன் புருவங்களைச் சுருக்கி… ‘’எதிரி…? மீன்… எனிமி… விரோதி?’’ என்று கேட்டான்.
‘’சரியாகப் புரிந்துகொண்டீர். ஹா… ஹா… ஹா…’’ என்று சிரித்தார் சிங்கமுகன்.
கிங்விங்சன் கையை நீட்ட உத்தமன் அதைப் பற்றி குலுக்கியவாறு, ‘’இல்லை மிஸ்டர் கிங்விங்சன்… தவறான புரிதல். நான் என்றுமே தனிப்பட்ட யாருக்குமே எதிரி இல்லை. மக்களைப் பாதிக்கும் விஷயங்களைச் சுட்டிக்காட்டுபவன். அதனால், அவ்வப்போது எதிரியாகத் தெரிபவன்’’ என்றான்.
கிங்விங்சன் புன்னகைத்து, ‘’புரிகிறது. ம்… அதென்ன பெயர்? ஆங்… உரைகல்… அதன் ஆசிரியர் நீங்கள்தானே?’’ என்று கேட்டான்.
‘’சரியாகச் சொன்னீர்… எங்கள் நாட்டின் ஒவ்வொரு குடிமகன் பற்றிய விபரங்களையும் விரல்நுனியில் வைத்திருக்கிறீர் போல… மந்திரி போன்ற இன்னபிற உயர் அதிகாரிகளுக்கே எங்களைப் பற்றி சரியாகத் தெரியாது’’ என்றபடி கம்பீரனையும் நிலாமதி சந்திரனையும் ஓரக்கண்ணால் பார்த்தான் உத்தமன்.
அவர்களும் இவனை ஓரக்கண்ணால் முறைத்தார்கள்.
‘’உங்ளை நானே சந்திக்க நினைத்திருந்தேன் மிஸ்டர் உத்மன்’’ என்றான் கிங்விங்சன்.
‘’அப்படியா? ஆச்சர்யம்தான்’’ என்றான் உத்தமன்.
கிங்விங்சன் தலையைத் திருப்பி தனது உதவியாளனைப் பார்த்து ஆங்கிலத்தில் என்னமோ சொன்னான். அவன் தலையசைத்து விலகிச் சென்றான்.
இவர்கள் சாப்பிட அமர்ந்தார்கள். வலது பக்கம் சிங்கமுகன் இருக்க… இடது பக்கம் உத்தமனை அமரச் சொன்னான் கிங்விங்சன்.
‘’நீங்கள் உரைகல்லை ஒவ்வொரு காபி… ஐ மீன்… அது என்ன சொல்வதென்றால்…’’ என்று திணற…
‘’பிரதி’’ என்றான் உத்தமன்.
‘’யா… பிர்தி எப்படி எடுப்பீர்?’’
‘’எல்லாம் கையால் எழுதித்தான்’’ என்றான் உத்தமன்.
‘’காகிதம் என்று ஒன்றிருக்கிறது தெரியுமா?’’
‘’ம்… கேள்விப்பட்டுள்ளேன். அச்சு… புத்தகம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.’’
‘’அதே… அதன்மூலம் வேகமாகப் பிர்தி எடுக்கலாம். மெஷின்… மீன்… இயந்திரமே செஞ்சுடும் ’’ என்றார் கிங்விங்சன்.
அப்போது அவனது உதவியாளன் அதைக் கொண்டுவந்து நீட்டினான். அதனை உத்தமனிடம் கொடுத்தான் கிங்விங்சன்.
‘’ஓ… இதுதான் காகிதப் புத்தகமா?’’
‘’யா… இதன்மூலம் உன் உரைகல் ஈஸியா பப்ளிஷ்… பிர்தி எடுக்கலாம். இதற்கான மெஷின்… அதை எப்படி இயக்குவது என்றும் சொல்கிறேன். நாளை என்னை வந்து சந்யுங்கள்’’ என்றான் கிங்விங்சன்.
‘’இது பெரிய உதவி ஆயிற்றே… இதன் மூலம் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் மிஸ்டர் கிங்விங்சன்?’’ என்று அர்த்தமான பார்வையுடன் கேட்டான் உத்தமன்.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்த கிங்விங்சன் புன்னகையுடன் சொன்னான்… ‘’உங்கள் அன்பு போதும் மிஸ்டர் உத்மன்’’
தொடரும்…