இணைய இதழ்இணைய இதழ் 96சிறுகதைகள்

பூனையற்ற புன்னகை – ராம்பிரசாத்

சிறுகதை | வாசகசாலை

பூமி இனி மனிதர்கள் வாழமுடியாத மலட்டுக் கிரகமாகிவிட்டது. விண்ணில் பறந்து, வேறொரு கிரகத்தில் பிழைக்கவென இப்பூமியை விட்டுச்செல்லும் கடைசி மனிதக் கூட்டத்தைத் தாங்கிய கடைசி விண்வெளிக்கப்பலை சோகத்துடன் பார்த்தபடியிருந்தேன் நான்.

இப்படி நடக்கும் என்று கிஞ்சித்தும் நினைத்திடவில்லை. ஏழு கடல், ஏழு மலை தாண்டி எல்லாத்திசைகளிலும் நான் நொடிப்பொழுதில் சென்று பார்த்துவிட்டேன். ஒரே ஒரு மனிதன் கூட இல்லை. பூமியில் மனிதர்களே இல்லை என்பதைக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.

இப்படி ஒரு நிலை வரும் என்று எனக்கு ஏன் இதுகாறும் ஒருமுறை கூடத் தோன்றியிருக்கவில்லை என்ற எண்ணம் வந்தது. துவக்கம் முதலே அவர்கள் இருந்ததினாலா? நீங்கள் உள்பட எல்லா விலங்குகளுக்கும் சருமம் இருக்கிறது. ஒரு நாள் அது திடீரெனக் காணாமல் போகும் என்று நினைப்பீர்களா என்ன? அதெப்படி சருமமே இல்லாமல் ஒரு விலங்கு? அதைக் கற்பனை கூடச் செய்ய முடியவில்லைதானே? அதே போலத்தான் என்னாலும் மனிதர்களே இல்லாமல் நாங்கள் மட்டும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை. அது எப்போதும் ஒரு சாத்தியமாகக்கூடத் தோன்றவில்லை. ஆனால், இப்போது நிஜமாகியிருக்கிறது. எப்படிப்பட்ட சிக்கல் பார்த்தீர்களா?

இவ்விதம் நான் சிந்தையில் தொலைந்திருந்தபோது, ஒரு சர்ப்பத்தைக் கண்ணுற்றேன். பொந்தொன்றிலிருந்து அப்போதுதான் வெளிப்பட்டிருந்தது. 

‘அஹ்! மனிதன் இல்லையென்றால் என்ன? இதோ விலங்குகள் இருக்கிறதே! பயமுறுத்த ஏதோ ஒரு உயிரினம் இருந்தால் போதாதா?!’ என்றெண்ணி நான் காற்றில் தவழ்ந்து அந்த சர்ப்பத்தை நெருங்கினேன். சட்டென அதன் முன்னே என்னை நானே தோன்றச்செய்தேன். 

ம்ஹும்.. என் தோற்றமோ, என் பயமுறுத்துதலோ எவ்விதத்திலும் அச்சர்ப்பத்தை அச்சமூட்டவில்லை என்பது என்னை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அச்சர்ப்பத்தின் பார்வைக்கோணத்தை அவதானித்ததில் அதன் பார்வை, சற்று தொலைவில் இருந்த எலியின் மீதே இருப்பதை உணர்ந்தேன். சற்றைக்கெல்லாம், அச்சர்ப்பம் பக்கவாட்டில், தன் உடலையே உருட்டி, நெகிழ்த்தி, நகர்ந்து அந்த எலியை நெருங்கி அதனைத் தன் வாயில் கவ்வியது. தன் பல் விஷத்தைச் செலுத்தி அந்த எலியைக் கொன்றது. பின் அந்த எலியை மெல்ல மெல்ல தன் உடலை நெகிழ்த்தியும், விரித்து விரித்துச் சுருக்கியும் விழுங்கியது. ஆக, அது என்னைப் பார்க்கவே இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். 

இல்லையில்லை. சரியாகச் சொல்ல வேண்டும். அதன் பார்வையில் நான் படவே இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.

எனக்கு எதுவோ புரிந்தது போல் இருக்க நான் புரிந்துகொண்டதை நிரூபிக்கும் விதமாக நான் இன்னொரு பரிசோதனை செய்ய நினைத்தேன். அப்போது ஒரு வெள்வால் பறந்து வந்தது. நான் மீண்டும் காற்றில் தவழ்ந்து அதனைப் பக்கவாட்டிலிருந்து நெருங்கி பயமுறுத்த முயன்றேன். ஆனால், அந்த வெளவால் என்னைக் கண்டுகொண்டது போலவே தோன்றவில்லை. அதன் போக்கில் அதன் பாதையில் அது தொடர்ந்து பறந்து என்னைக் கடந்தது.

ஆக, நடந்தவற்றை எல்லாம் வைத்து நான் புரிந்து கொண்டதெல்லாம் ‘மனித இனம் தோன்றியபிறகே நாங்களும் எங்கள் பயமுறுத்தும் நடத்தையும் வழக்கத்தில் வந்திருக்க வேண்டும்’ என்பதைத்தான். மற்ற விலங்கினங்களின் கண்களுக்கு நாங்கள் தெரிவது கூட இல்லை; எங்களிடம் பிரச்சனை இல்லை, அவ்வினங்களின் பார்வை அப்படி. மனிதர்களின் குறிப்பேடுகளில் அப்பார்வைகளுக்கு புற ஊதா (Ultra violet), அகச்சிவப்பு (infrared vision), மற்றும் எதிரொலி (echo location) என்று பல விதங்களில் வார்த்தைகள் இருந்திருக்கக்கூடும். சர்ப்பங்கள் போல், வெளவால்கள் போல் அவைகளின் பார்வைகள் எங்களை ஊடுருவித்தான் பார்த்திருக்க வேண்டுமே ஒழிய எங்களை ஒட்டு மொத்தமான ஓர் உருவமாகப் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது.

மனிதர்கள் மட்டுமே எங்களை, கருமை நிறத்தாலான அடர் உருவமாக அதுவும் மனித உருவத்தை ஒத்திருக்கும் ஓர் உருவமாகப் பார்த்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் சர்ப்பங்களையும், வெளவால்களையும் பயமுறுத்தியிருக்க வேண்டுமே? அப்படி ஏன் இல்லை? அப்படியானால், சர்ப்பங்கள், வெளவால்கள் அகராதியில் பேய் என்ற வார்த்தைக்கு இடமே இல்லாமல்தான் இருந்திருக்க வேண்டும், இல்லையா? மனிதர்களுக்கு மட்டும் கருமை நிறத்தாலான அடர் உருவமாக நாங்கள் தெரிந்தது, எதைக் காட்டுகிறது? மனிதர்களுக்கு புற ஊதா, எதிரொலி அல்லது அகச்சிவப்பு பார்வைகள் இல்லை என்பதைத்தான் அல்லவா?

ஆக, மனிதர்களிடம் புற ஊதா, எதிரொலி, மற்றும் அகச்சிவப்பு பார்வைகளின் இல்லாமையே அவர்களிடம் நாங்கள் விளையாடிப் பார்ப்பதற்கான சாத்தியங்களைத் திறந்தது என்று சொல்லலாம்தானே, இல்லையா? 

ஒரு உதாரணத்திற்கு, நடுச்சாமத்தில் உயிரே போவது போல் அடித்தொண்டையில் உச்சஸ்தாயில் கத்தும் கதறலை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு எத்தனை மனிதர்கள் பயந்திருக்கிறார்கள் தெரியுமா? அந்தக் க்ஷணத்தில் அவர்கள் கண்களில் தோன்றும் மிரட்சி, கன்னக்கதுப்புகளில் வழியும் வியர்வை, மயிர்க்கூச்செரியும் சருமம், பிதுங்கும் இமைக்கா விழிகள் எல்லாம் எங்கள் வெற்றியின் பதக்கங்கள் அல்லவா?

இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். உலகின் அதி உயர்ந்த, ஆளுமை வாய்ந்த ஒரு இனத்தையே எங்களால் பயமுறுத்திப் பார்க்க முடியும் என்றால், இவ்வுலகின் அசல் ஆளுமை வாய்ந்த இனம் யார்? மனிதர்களா? நாங்களா?

இன்னொரு உதாரணம் கூடச் சொல்ல முடியும். சட்டென இருளில் இருந்து லேசாக விலகியும் விலகாமலும், வாயை அகலத்திறந்து, கீழண்ணத்தைக் கீழிழுத்து விழிகள் பிதுங்கப் பார்க்கும் எங்கள் முகபாவனை இருக்கிறதே, அதை நாங்கள் மனிதர்களிடமிருந்தே சுவீகரித்துக்கொண்டோம். அது வேறொன்றுமில்லை. மனித உருவை அல்லது அது போன்ற தோற்றத்திலான சாயலை, அடர்த்தியான குளிர்காற்றைக் கொண்டு உருவாக்கும் முயல்வுதான். சும்மா, மனித உருவை தோராயமாக உருவாக்கினால் கூடப் போதும். இன்னும் சொல்லப்போனால், இந்தத் ‘தோராயம்’ என்பது துல்லியமான தோராயமாக இருக்க வேண்டும். ஆம். தோராயத்தைத் துல்லியமாக உருவாக்கினால் போதுமானது. பார்க்கப்போனால், அதுதான் எங்களை ‘பிசாசு/பேய்’ என்றாக்குகிறது என்பது என் வாதம் அல்லது அவதானம்.

அந்த தோராயம்தான் நாங்கள் என்றே நான் கருதுகிறேன். எந்த நேரத்திலும் நாங்கள் எங்கள் தோராயத்தைக் கலைத்துவிடலாம். கடந்து போகும் இளஞ்சூட்டுக் காற்றில் கூட எங்கள் தோராயம் கலைந்து போகலாம். ஆக, எங்கள் தோராயம் என்பது தற்காலிகமானதுதான். எங்கள் சுற்றத்திலிருந்து அதனைக் கடன் வாங்கும் நாங்கள் ஒரு கட்டத்தில், அதன் பயன்பாடு முடிந்தவுடன் அதை திரும்ப சுற்றத்திடமே அளித்துவிடுகிறோம். இடைப்பட்ட காலத்தில், இருக்கும் அந்த தோராயமான மனித உருவை உருவாக்க முனையும் அந்த ‘ஆர்வத்தை’, ‘முயல்வை’, ‘முனைப்பை’ என்னவென்பது? புன்னகைக்கும் பூனையிடமிருந்து, புன்னகையைத் தக்க வைத்துக்கொண்டு பூனையைப் பிடுங்கிவிட்டால் எஞ்சியிருப்பதைப் போன்றது – அதாவது, ‘பூனையற்ற புன்னகை’. 

ஆம் அதுதான் நாங்கள். 

நான் ஒன்று சொல்கிறேன். இந்தத் துல்லிய தோராயத்தை மிக இலகுவாக எண்ணிவிடாதீர்கள். ஒரு மனிதன் மரணித்துவிட்ட பிறகும் அவனது நினைவுகள்….. இல்லையில்லை.. அவனது அரூபம்… அதுவும் இல்லை… அடையாளம்.. அடச்சீ.. அவனது ஆன்மா…. ஐயோ.. சரி ஏதோ ஒன்று.. அந்த ‘அது’ அவனது பூவுடலைவிட்டு நீங்கித் தனித்திருக்கும் ஆற்றலைப் பெற்றுவிடுவது என்பது அசாதாரணம். அது கிட்டத்தட்ட, பூனையற்ற புன்னகை போல. பூனை மரணித்தாலும் அதன் புன்னகை மரணத்தை ஏற்காமல் நீள முனைவது போன்றது. அதற்கு அசாத்திய ‘இருத்தல் முனைப்பு’ வேண்டும். பிடிவாதமான முனைப்பு அது. மீட்சி காணும் முனைப்பு அது. அஸ்திவாரமற்ற மாளிகை அது. வேர் அற்ற மரம் அது. 

இவ்வுலகை விட்டு நீங்கிட விரும்பாத இருத்தல். இவ்வுலகை, இவ்வுலகில் நாங்கள் அதிகம் விரும்பிய மனிதர்களைச் சுற்றி, அவர்களுடனான நினைவுகளால் கட்டுண்டு ஒரு பூனையற்ற புன்னகை போல் நீங்கிச்செல்ல முடியாமல் சிக்கிக்கொண்ட ‘அது’கள் நாங்கள். 

ஆதலால், நாங்கள்…அபலன்…இல்லையில்லை.. அபலை…ஹும்.. அபலது என்றால் அது மிகையில்லை.

இப்போது எஞ்சியிருந்த கடைசி மனிதர்களும் பூமியை விட்டகன்றுவிட்டார்கள் என்பதில், அவர்களை நான் இழந்துவிட்டேனோ என்று கலங்கினேன். இனி அவர்களை எப்போதும் பார்க்கவே முடியாதோ என்று மருண்டேன். இனி அவர்களை பயமுறுத்தி பயமுறுத்தி என்னால் விளையாடவே முடியாதோ என்று சோர்ந்தேன். யோசித்துப் பாருங்கள். பொம்மைகளற்ற குழந்தைகளின் நிலை என்ன? அதுதான் என் நிலையும்.

நான் மனிதர்களின் அருகாமையைத் தொடரவே விரும்பினேன். சேயை இழந்து வாடும் தாய் போல மனிதர்களின் சகவாசத்திற்காய் நான் ஏங்கினேன். வாடினேன். இனி எப்போதும் அவர்களின் அண்மை வாய்க்காதோ என்று மனக்கிலேசம் அடைந்தேன். மனிதர்களின் விண்வெளிக் கப்பலைப் பின் தொடர்ந்து சென்றிருக்கலாமே என்று யாரேனும் ஆலோசனை தரலாம். வெற்றிடத்தில் நாங்கள் எப்படி இருக்க முடியும்? அது சாத்தியமில்லையே. அது சாத்தியமில்லாதபோது அவர்களைத் தொடர்வது குறித்தான கேள்வியே இல்லை அல்லவா?

நான் இவ்வாறு மனிதர்களுடனான எங்கள் இருப்பைக் குறித்தான பகுப்பாய்வில் ஆழ்ந்திருந்தபோது, ஒரு நாய் குரைக்கும் ஓசை கேட்டது. ஓசை கேட்ட திசையில் திரும்பினேன். நாயேதான் – என் போன்ற பேய், பிசாசுகளை ஆராயும் டெட்டியின் நாய், ரூடி. 

பாவம். 

டெட்டி அவளை நிராதாரவாக விட்டுச்சென்றது அவளுக்கு இன்னும் உரைக்கவில்லை போலும். ஒரு நீச்சல்குளம். அதனருகே கண்ணாடியால் தடுக்கப்பட்ட ஒரு படுக்கையறை. ஓர் முனையில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி. ரூடி, ரிமோட் மீது எம்பிக்குதிக்க, சட்டென உறக்கத்திலிருந்து எழுந்தது தொலைக்காட்சிப்பெட்டி. 

டெட்டியும் அவரது பிள்ளைகளும் ரூடியுடன் விளையாடும் காணொளி ஒன்று தானாகவே ஓடத்துவங்கியது; அதைப் பார்த்துவிட்டு ரூடி மகிழ்ச்சியில் அங்குமிங்கும் குதித்தாள். 

எனக்கு ரூடியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவளும் என்னைப் போலவே மனிதர்களின் அருகாமையை விரும்பியிருக்கிறாள். அவர்களின் அருகாமையைத் தொலைத்திருக்கிறாள். அவர்களின் அருகாமையை மீண்டும் தேடுகிறாள், நாடி அலைபாய்கிறாள்.

ரூடியின் கண்களில் அத்தனை அன்பு, பாசம். தன் வளர்ப்பு எஜமானர்களை அவர்களின் கண்கள் ஆர்வமுடன் தேடுவதும், அவர்களின் முகத்தைத் தொலைக்காட்சியில் பார்த்து குதூகலமடைவதுமாக இருந்தது. எத்தனை பாசம் மிக்க ஜீவன்? அவளை பூமியிலேயே விட்டுவிட்டுச் செல்ல டெட்டிக்கு எப்படி மனம் வந்தது? ஆனால், எனக்கு டெட்டியின் நிலைபாடு ஒன்றும் புரியாமல் இல்லை. எத்தனை ‘நாய்’களைத்தான் அந்த இத்தனியூண்டு விண்வெளிக் கப்பலில் அடைக்க முடியும்?… ச்சீச்சி.. மனிதர்களை நாய் என்று விளித்துவிட்டேனோ என்று நீங்கள் நினைப்பது புரிகிறது… ஆங்க்.. அப்படி அல்ல.. ஆனால், பூமியில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை உருவாக்கியுள்ள அர்த்தங்களை வைத்துப் பார்க்கின் அது அப்படி ஒன்றும் தவறான விளித்தல் போல் தோன்றவில்லைதான். ச்சே.. பாருங்கள்.. எதையோ சொல்ல வந்து, எந்தப்பக்கமோ சென்றுவிட்டேன். 

நான் ரூடியின் பால் மனமிறங்கினேன். அப்போது கடந்து போன உஷ்ணக்காற்றில் என் பலம் குன்றி நான் என் வயப்படுத்தியிருந்த குளிர்காற்று சேதாரம் ஆனது. அப்படி ஆகக்கூடாது. அது என்னை பலவீனமாக்கும். சூழலின் தீவிரம் உரைத்து நான் மீண்டும் காற்றில் அலைபாய்ந்து அக்கம்பக்கத்திலிருந்து குளிர் காற்றை சேகரித்தேன். எனக்குள்ளேயே தேற்றித் தேற்றி ஆங்காங்கே சிராய்த்தும், நழுவ விட்டும், அடைத்தும் பொத்தியும் ஒரு மனித உரு போன்ற தோற்ற மாயையைத் துல்லியமான ‘தோராயமாக’ எழுப்பினேன். அதில் எழுந்த சப்தத்தில் சலனமுற்றுத் திரும்பிய ரூடியின் பார்வை என் மீது விழுந்தது.

அந்தப் பார்வை! அந்தப் பார்வை!

வாவ்! இட்ஸ் எ ப்ளிஸ்!

அவள் முகத்தில் தோன்றிய அச்சம், பயம் அப்படியே மனிதர்களின் முக பாவனைகளை நினைவூட்டுவதாக அமைந்தது. அவள் முதலில் தலையை உயர்த்தி என்னைப் பார்த்தாள். பின் புருவம் உயர்த்தினாள். விழிகளை விரித்தாள். கவனித்தீர்களா? இது அத்தனையையும் மனிதர்களும் செய்வார்கள் – ஒரு பேயை, அதாவது, என்னைக் காண நேரும் பட்சத்தில்.

அவள் சட்டென, கண்ணாடிக் கதவின் மீது முன்னங்கால்களை வைத்து எம்பி, அக்கதவினை மூட முயற்சித்தாள். அதில் அவள் காட்டிய அவசரம், துரிதம், லாவகம் ஆகியனவற்றில் நான் டெட்டியையும், அவரது பிள்ளைகளையுமே பார்த்தேன். அவர்களும் இப்படித்தான். என்னைக் காண நேர்ந்தால், அச்சம் கொள்வார்கள், கதவுகளை மூடப் பிரயத்தனப்படுவார்கள். என்னமோ அக்கதவுகள் வழி என்னால் உள்ளே நுழைய முடியாது என்பதைப் போல. குளிர் காற்றை யாரால் தடுக்க இயலும்? குளிர் காற்றைக் கொண்டு மோதினால் உடைந்துவிடக்கூடிய ஒரு கண்ணாடிக் கதவால் என்னைத் தடுத்திட இயலுமா என்ன? டெட்டி மற்றும் அவரது பிள்ளைகளின் பேதைமைகளை ரசிப்பது போலவே ரூடியின் பேதைமையையும் ரசித்தேன்.

அவள் கண்களுக்கு நான் தெரிவது கண்டு நான் சற்றே ஆசுவாசமடைந்தேன். எங்கே என்னை, என் போன்றவர்களை இனம் காணும் அந்த ஒரே ஒரு இரண்டு கால் விலங்கினத்தை நான் தொலைத்துவிட்டேனோ, இனி எப்போதும் அவர்களைப் பார்க்கவே முடியாதோ என்று கலங்கியிருந்தேன். அந்தக் கலக்கம் பெருமளவில் வடிந்தது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டு நான் அமைதியடைந்தேன். நான் முன்பு நினைத்தது போல் சூழல் அத்தனை தீவிரமாக இல்லை என்பது என் மனத்தை அமைதி கொள்ளச்செய்வதாக இருந்தது. மென்மேலும் குளிர்மை கூட்டுவதாக இருந்தது.

நான் ரூடியை நெருங்கினேன். வாஞ்சையுடன்தான் நெருங்கினேன். என்ன வாஞ்சை? டெட்டி மற்றும் அவரது பிள்ளைகள் மற்றும் எங்களை காண முடிந்த எல்லா மனிதர்கள் மீதான வாஞ்சை. ஆனால், என்னைக் கண்டதும் அவள் கண்களில் தோன்றிய மிரட்சி, அவள் கன்னக்கதுப்புகளில் செரிந்த வியர்வை, மயிர்க்கூச்செரியும் சருமம், பிதுங்கும் இமைக்கா விழிகள் இவற்றிலெல்லாம் நான் கண்டது டெட்டியைத்தான். டெட்டியை என்றால் டெட்டியை அல்ல. மனிதர்களை. அவர்களின் இருப்பை, சாயலை.

மனிதர்களை நான் இழந்துவிட்டேனோ, இனி அவர்களை நான் பார்க்கவே முடியாதோ என்கிற என் அவநம்பிக்கை ரூடியால் பொய்த்துப் போனதை உணர்ந்து அகமகிழ்ந்தேன். ரூடியின் முக பாவனைகளில் நான் மீண்டும் மனித இனத்தை உணர்ந்தேன் என்று சொல்வதை விட, மனித முக பாவனைகளை வெளிப்படுத்தும் ரூடி மனிதர்களையே மீண்டும் நினைவூட்டினாள் என்று சொல்லலாம். மரணித்தவர்களின் ஆடைகளில் அவர்களின் வாசம் இருக்குமே. அந்த சன்னமான வாசம், ஏதோ அவரே உயிருடன் அருகாமையில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருமே. அதைப் போல. 

ரூடியின் முக பாவனைகளில் எஞ்சியிருந்த மிக மிக சன்னமான மனிதத்தன்மை, நான் தொலைத்ததாக நினைத்ததை மீட்டுத்தந்ததைப் போல் உணர்ந்தேன். 

ரூடியின் மனித முக பாவனைகளில் இனி எப்போதும் எக்காலத்திலும் நான் மனித இனத்தை நீங்கவே போவதில்லை என்ற எண்ணம் மேலோங்கியது. பார்க்கப்போனால், ரூடிக்கும் கூட என்னில் மனித உருவைக் காண்பது அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். இல்லையா?

*******

ramprasath.ram@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button