சிறுகதைகள்

தரிசனம்

- அரிசங்கர்

 

 

ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த போது என்னைக் கடந்து சென்ற பறவைகளும், அவ்வப்போது தூரத்தில் எங்கேயோ குரைத்துக்கொண்டிருக்கும் நாயும், எதிரே காற்றில் தன் கிளைகளை நடமாடவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மரங்களும், எதிர் வீட்டுப் பெண்ணின் மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையும், ஜன்னல் கம்பியில் அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சியையும் போல நானும் நிர்வாணமாக நின்றுகொண்டிருந்தேன்.

            மின்சாரமில்லாமலேயே இரவு தொடங்கியிருந்தது. நான் வீட்டிற்கு வரும் போதே மின்சாரமில்லை. வாசலிலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். அக்கம்பக்கத்து வீடுகளின் பேச்சொலியும், தெருவில் சிறுவர்களின் கூச்சலும் அதிகரிக்கவே வீட்டிற்குள் வந்துவிட்டேன். புழுக்கத்தில் உடல் எரியத்துவங்கியது. சில நாட்களாகவே உடலும் மனதும் எரிந்துகொண்டுதான் இருந்தது. அப்போதெல்லாம் அதை அணைக்கச் சிலர் வருவதுண்டு. நெருக்கத்திலும் உராய்விலும் பொங்கியெழும் நீர்த்துளிகள் என் உடலைக் குளிரச் செய்துவிடும். ஆனாலும், மனம் சில நொடிகளிலேயே மீண்டும் பற்றியெரியத் தொடங்கிவிடும். இரண்டாவது முறை எரியத் தொடங்கும் அதை எதைக் கொண்டு அணைப்பது என்று எனக்குத் தெரிந்ததேயில்லை.

            யாருமில்லாமல் வாழ்வது எத்தனை சுலபமோ, அதேபோல் எத்தனை கடினம் என்று உரைக்கத் தொடங்கியிருந்தது. கடைசியாக இருந்த அம்மாவும் இறந்துபோய் சில ஆண்டுகள் ஆகிவிட்டது. எப்படி நானாக ஒரு துணையைத் தேடிக்கொள்வது என்று தெரியாமலேயே காலமும் உடலும் கரைந்துவிட்டது. உடலின் வேட்கையை அவ்வப்போது சிலர் வந்து தீர்த்துக்கொண்டிருந்தார்கள். அதன்பிறகு எதற்கு ஒரு துணை எனத் தோன்றியது. அம்மா இருக்கும் போதே நன்றாகச் சமைக்கக் கற்றுக்கொடுத்துவிட்டாள். மற்ற வேலைகளுக்கு இயந்திரங்கள் வந்துவிட்டது. வாழ்க்கை யார் இல்லாமலும் ஓடும் என்று நான் முடிவு செய்து வாழத் துவங்கிய ஏதோ ஒரு நாளில் தான் வீடு திரும்பும் போது மின்சாரம் இல்லாமலிருந்தது.

உள்ளே வந்த அமர்ந்த போது மெல்ல மெல்ல வேர்வைத்துளிகள் பெருக்கெடுக்க என் உடல் எரிச்சலடையத் தொடங்கியது. முதலில் சட்டையைக் கழட்டிவிட்டு அமர்ந்தேன். சிறிது நேரத்தில் உள்ளாடை முழுவதும் நனைந்துவிட்டது. மேலும் வெளியே சிறுவர்களின் இரைச்சலும், நாய்களின் குரைப்பொலியும் என் மண்டைக்குள் யாரோ வந்து பெரிய சம்மட்டியால் அடிப்பது போல் இருக்க நான் அணிந்திருந்த மொத்த ஆடைகளையும் களைத்துவிட்டு நிர்வாணமாக வந்து ஜன்னல் அருகே அமர்ந்தேன். இதுவரை அவ்வாறு செய்ததில்லை. புதிதாக இப்படி அமர்ந்திருக்கிறோமே என்று உறைக்கவேயில்லை. வெளியே இருந்து பார்த்தால் இருப்பதே தெரியாதவாறு அமர்ந்திருந்தேன். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. எப்போதாவது லேசாகக் குளிர்ந்த காற்று அடித்தது. ஆனாலும் அது உடலுக்கு போதாமலேயே இருந்தது. தெருவில் அவ்வப்போது வாகனங்கள் கடக்கும் போது அதன் முகப்பு வெளிச்சம் அறைக்குள் நுழைந்து ஒரு அரைவட்ட மடித்துச் சென்றது. அந்த வெளிச்சத்தில் தெரிந்த ஜன்னல் கம்பியின் நிழல், விகாரமாக ஒரு உருவத்தை உருவாக்கி பயங்கொள்ளச் செய்தது. சிறிது நேரத்தில் மெல்லப் பசி எடுக்க ஆரம்பிக்க கைப்பேசியில் இருக்கும் விளக்கை வைத்து சமையலறையிலிருந்த குளிர்சாதனப் பெட்டியிலிருந்து ஒரு ஆப்பிளை எடுத்துக்கொண்டுவந்து, மீண்டும் அந்த ஜன்னலின் அருகிலேயே வந்து அமர்ந்துகொண்டேன். முழு ஆப்பிளை மெல்ல மென்று தின்று முடிக்கும் வரை மின்சாரம் வரவேயில்லை. கைப்பேசியிலிருந்த பேட்டரி தீரும் வரை ஆன்லைனில் நேரத்தை செலவிட்டேன். ‘போதும் போதும்’ என அதுவும் உறங்கச் சென்றுவிட்டது. தெரு மெல்ல மெல்ல அமைதியாகிக்கொண்டிருந்தது. சிலர் மொட்டை மாடிகளுக்கும், வராண்டாவுக்கும் படுக்கைகளை மாற்றிக்கொண்டனர். காலையில் எழுந்து வேலைகளுக்கும், பள்ளிகளுக்கும் போக வேண்டிய கடமை இருப்பதாக அவர்களுக்குள் பேசிக்கொண்டது என் காதிலும் விழ, நானும் எனக்கும் அந்த கடமை இருப்பதை உணர்ந்தேன். பொருத்துப் பொருத்துப் பார்த்து, இனி இந்த மின்சாரம் எப்போதாவது வந்து தொலையட்டும் நாம் உறங்கச் செல்வோம் என்று நினைத்துக்கொண்டேன். அதே நேரத்தில் ஜன்னல் வழியாகக் குளிர்ந்த காற்று வர என் முடிவை உறுதிப்படுத்திக்கொண்டு மெல்ல அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்தேன். எழுந்த அதே நொடி சரியாக மின்சாரமும் வந்தது. அதற்கு அறிகுறியாக எங்கிருந்தோ சிறுவர்களின் “ஹே……..” என்ற கூச்சல் எழுந்து அடங்கியது. எழுந்ததும் அப்படியே ஜன்னலை அடைத்துவிட்டுத் திரும்பினேன். எதிரே இருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியில் என் நிர்வாணத்தைக் கண்டேன்.  முழுக்க வியர்வையில் நனைந்த எனது உடல் முதலில் எனக்கு அதிர்ச்சியை தந்தது. உண்மையில் நான் பயந்துவிட்டேன். கண்ணாடியில் தெரிந்த உருவத்தின் முகத்தை உற்றுப்பார்த்து அதை நான் தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டேன்.

என் நிர்வாணம் எனக்குப் புதிதாக இருந்தது. இதைத் நான் இதற்கு முன்பு இப்படிப் பார்த்திருக்கிறேனா என்று யோசித்தேன். மெல்ல அந்த கண்ணாடி அருகே சென்று நின்று, மீண்டும் என் வருத்தக் கோதுமை வண்ண உடலை மேலிருந்து கீழ் நோக்கிப் பார்வையிட்டேன். இத்தனை ஆண்டுகளில் என்னுடனே இருக்கும் உடலை நான் தரிசித்ததேயில்லை என்று எனக்கு உரைக்கத் துவங்கியது. 

எப்போதும் குளித்து முடித்ததும் குளியலறையிலேயே என் உள்ளாடைகளை அணிந்துகொண்டு அறைக்கு வந்து ஆடைகளை அணிந்துகொண்டு, வெறும் முகத்தை மட்டுமே இத்தனை ஆண்டுகளாய் அந்த கண்ணாடியில் கண்டிருக்கிறேன். பார்க்க முடியாத முகத்தை மட்டுமே இந்த கண்ணாடி காட்டும் என்று இத்தனை ஆண்டுகளாக முட்டாளாக இருந்திருப்பதை அப்போது உணர்ந்தேன். என்னுடைய உடலாக இருந்தாலும் அதை இப்படிப் பார்ப்பது முதலில் சற்று கூச்சமாக இருந்தாலும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் போல் இருந்தது. எனக்கு ஏதோ ஒன்று புதிதாக கிடைத்தது போல் உணரத்துவங்கினேன்.

எப்படி என் உடலை முழுவதுமாக கண்டதே இல்லையோ, அப்படியே தான் என்னுடன் கூடுபவளையும் கண்டதேயில்லை. விளக்கை அணைத்து ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தை உருவாக்கிவிட்டு எப்போதும் ஆடைகளைக் களையத்துவங்குவேன். எல்லாம் முடிந்து இருதயத்துடிப்பு சீராகியதும் முழு ஆடைகளை அணிந்தபிறகு தான் வெளிச்சத்திற்கு வருவேன். வந்தவர்கள் உடல்கள் எப்போதும் எனக்கு ஒரு நிழற்படமாகத்தான் நினைவிலிருந்தது.

            என்னுடல் எனும் பொக்கிஷத்தை நான் அந்த நிலைக்கண்ணாடியின் முன் நின்று ரசித்துக்கொண்டிருந்தேன். இது எத்தனை அழகு என்று என்னால் நிச்சயமாக வரையறுக்க முடியவில்லை. எனக்கு கட்டுக்கோப்பான உடலில்லை. வயிறு பிதுங்கி வெளியே தொங்கியது. கால்களில் காயங்களின் தழும்புகள் தெரிந்தன. மார்புகளில் லேசாகப் பெண்மை தெரிந்தது. அதில் அதிக ரோமங்கள் இல்லை. கைகளில் சிறுவயதில் அம்மா வைத்த சூடுகளின் தழும்பு கூட ஏதோ கருப்பு வெள்ளை நவீன ஓவியம் போல் இருந்தது. ஆடையால் மறைக்கப்படும் இடம் வரை ஒரு வண்ணமும், வெயில் படும் இடங்களில் ஒரு வண்ணமும் என அந்த வண்ண கலவை என்னை ஆச்சர்யமடையச் செய்தது. பின் பக்கமும் ஒரு பெரிய நிலைக் கண்ணாடியை வைக்க வேண்டும் என்று முடிவுசெய்தேன்.

மின்சாரம் வந்து வெகு நேரமாகியும் நான் மின்விசிறியை இயக்கவேயில்லை. என் உடலில் பெருகி ஓடும் வியர்வை துளிகள் எதையோ சொல்ல என்னிடம் ஓடிவருவதாகத் தோன்றியது. இதயத்துடிப்பு தெளிவாக வெளியே கேட்டது. நான் என் உடலை அணுஅணுவாக ரசித்தேன். என் அங்கங்களை மெல்லத் தொட்டுப்பார்த்துக் கொண்டேன். என் கைகள், கால்கள், அதிலுள்ள ரோமங்கள் எல்லாம் எனக்கு ஏதோ புதிதாக இருப்பது போல் தோன்றியது. குளிக்கும் போது தினமும் தொடுவது தான் என்றாலும், இது அதுவல்ல என்று தோன்றியது. அப்படியே பின்னோக்கி வந்து கண்ணடியில் பார்த்தவாறே அமர்ந்துகொண்டேன். என்னுடல் மேல் எனக்குத் தீராத காதல் உண்டானது. அதே நேரம் என் மனம் ஒரு பெண்ணுடலைத் தரிசிக்க விரும்பியது. அது காமத்தின் அறிகுறியோ அல்லது ஆழ்மன வேட்கையோ அல்ல என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அப்போதும் என் ஆண்மை அமைதியாக இருந்தது.

            எனக்கென சில பெண்கள் இருந்தார்கள். உடலின் இரசாயனம் ஏதேனும் மாற்றத்திற்கு ஆளாகும்  போது யாரையாவது அழைப்பேன். அவர்களும் வருவார்கள். நிழற்படம் போல் இருவரும் அசைவோம். பின் அவள் சென்றுவிடுவாள். ஒரு முறைகூட நான் அவர்களின் உடலைப் பார்த்ததேயில்லை. இப்போது யோசித்துப்பார்க்கிறேன். நான் அவர்களை முத்தமிட்டதாகக் கூட எனக்கு நினைவில்லை. என் கைப்பேசியை எடுத்து ஒவ்வொரு எண்ணாகப் பார்வையிட்டேன். அதில் யார் அழகாக இருப்பார்கள் என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. முதலில் யார் எண் வருகிறதோ அவர்களைத் தொடர்புகொள்ள நினைத்தேன். முதலில் பெயர் வந்த பெண்ணிற்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன். பதில் வந்தது. நாளை இரவு வருவதாகத் தெரிவித்தாள். மனம் சிறிது அமைதிகொள்ளத் துவங்கியது. எழுந்து சென்று மின் விசிறியை இயக்கிவிட்டு விளக்கை அணைத்துவிட்டு நிர்வாணமாகவே கட்டிலில் படுத்துக்கொண்டேன். மறுநாள் இரவுக்குக் காத்திருக்கத் தொடங்கினேன். தூங்கப் போகிறோம் என்ற சுயநினைவோடே தூங்கினேன். தூங்கப் போகும் கடைசி கணத்தில் கூட நிர்வாணத்தையே நினைத்துக்கொண்டேன். சில சமயம் கடைசி கணத்தில் நினைத்துக்கொள்ளும் விஷயம் கனவிலும் தொடர்வதுண்டு.

            நிமிடத்திற்கு அறுபது நொடி என்பது மாபெரும் பொய் எனக் காத்திருக்கும் ஒருவனுக்குத் தான் தெரியும். அன்றைய இரவுக்காகக் காத்திருந்தேன். வேலைக்குச் செல்லவில்லை. விடுப்புச் சொல்லிவிட்டு வீட்டிலேயே இருந்தேன். மூன்று முறைக் குளித்தேன். குளிக்கும் போது தன் உடலை முழுவதுமாக தொட்டுணர்ந்தேன். ஆடைகளைப் பார்க்கும் போது வெறுப்பாக இருந்தது. தொலைக்காட்சி, புத்தகம், பத்திரிக்கைகள், ஃபேஸ் புக், டிவிட்டர், வீடியோ கேம், ஆபாசப் படங்கள் என எதுவுமே என் நேரத்தை போக்கவோ மனதை மாற்றவோ உதவவில்லை. மெல்ல மெல்லக் காலம் நகர்ந்து என்னை இரவுக்கு அழைத்து சென்றது.

            எட்டு மணிக்கு அவள் அழைத்தாள். வருவதை உறுதி செய்துக்கொண்டாள். அதுவரை அமைதியாகத் துடித்துக்கொண்டிருந்த என் இதயம் இப்போது தன் அமைதியை மெல்ல இழக்கத்தொடங்கியது. நேரம் இன்னும் மெதுவாக நகரத்துவங்க நான் வாசல் கதவையே பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். அவள் வரும் போதே நிர்வாணமாக வரவேற்றால் அவள் என்ன நினைப்பாள் எனத் தோன்ற, எழுந்து சென்று வேண்டா வெறுப்பாக ஆடையை உடுத்திக்கொண்டு வந்து அமர்ந்தேன். சரியாக ஒன்பது மணிக்குக் கதவு தட்டப்பட எழுந்து சென்று கதவைத்திறந்து அவளை உள்ளே அழைத்துக்கொண்டேன். யாராவது பார்க்கிறார்களா என்று ஒரு முறைப் பார்த்தேன். பிறகு பார்த்தால் என்ன என்று தோன்றியது. தெருவில் சிலருக்குத் தெரிந்து தான் இருந்தது. ஆனால் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை. பெரும்பாலும் பலர் வேலைக்காகச் சொந்த ஊரைவிட்டு வந்து வாடகைக்குக் குடியிருப்பவர்கள். நமக்கு எதற்கு வம்பு என்று தான் இருப்பார்கள்.

            அவள் உள்ளே நுழைந்ததும் எவ்வித தயக்கமும் இல்லாமல் நேராகப் படுக்கையறைக்குச் சென்று தன் கைப்பையை வைத்துவிட்டு நேராகக் குளியலறைக்குச் சென்று சிறிது நேரத்தில் திரும்பி வந்து கட்டிலில் அமர்ந்தாள். அவள் முகத்தையே நான் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன். பல முறை அவள் இங்கு வந்திருந்தாலும் அவள் முகம் எப்படி இருக்கிறது என்று இப்போது தான் முழுவதுமாகப் பார்த்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு அவளே எழுந்து சென்று விளக்கை அணைத்து விட்டு, ஜீரோ வாட்ஸ் விளக்கை மட்டும் போட்டுவிட்டு தன் ஆடைகளை கலையத்துவங்கினாள். வெறும் நிழற்படமாக நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். இதுவே முன்பு போல் இருந்தால், அவளுக்கு முன் நான் ஆடைகளைக் களைந்துவிட்டு கட்டிலில் காத்திருந்திருப்பேன். ஆனால் இன்று நானோ வேறு ஒருவன். அவளே ஆடைகளைக் களைந்துவிட்டு கட்டிலில் படுத்துக்கொண்டாள். நான் அப்படியே நின்றுகொண்டிருந்தேன். எனக்கு என்ன ஆனது என்று அவள் குழப்பமடைந்தாள். பிறகு இவனுக்கு என்ன ஆனால் நமக்கென்ன என்று நினைத்து அமைதியாக படுத்துக்கொண்டிருந்தாள். நான் மெல்ல நடந்து சென்று அறையின் விளக்கைப் போட்டேன். விளக்கு எரிந்ததும் அவள் சட்டென அதிர்ச்சியடைந்தாள். ஆனாலும் அமைதியாகப் படுத்திருந்தாள். நான் அவளருகே சென்று அமர்ந்துகொண்டேன். அவள் உடலை முழுவதுமாகப் பார்த்தேன். எனக்கு எந்த வித காமவுணர்களும் எழவேயில்லை. ஒருவன் தன் உடலை இப்படிப் பார்ப்பது அவளுக்கு என்னவோ போல் இருந்தது. இருந்தாலும் என்னை எதுவும் சொல்லவும் முடியாது. தன்னை கொடுமைப் படுத்தாமல், சித்ரவதை செய்யாமல் இருந்தால் சரி என்று நினைத்துக்கொண்டாள். ஆனாலும் நான் இவ்வாறு பார்க்கும் போது அவளுக்குச் சற்று கூச்சமாக இருக்கவே முகத்தைத் திருப்பிக்கொண்டாள். நான் ஏதோ ஒரு தெய்வ தரிசனத்தைக் கண்ட பரவசத்தில் மூழ்கிக்கொண்டிருந்தேன். அவள் உடல் அவ்வளவு செழுமையானதெல்லாம் இல்லை. அவள் கை கால்களெல்லாம் குச்சி போல் இருந்தது. வயிறு ஒட்டிப்போய் அதில் குழந்தை பிறந்ததிற்கான அடையாளம் காணப்பட்டது. அவள் தொடை மற்றும் மார்பகங்கள் ஒட்டி சில இடங்களில் காயத்தழும்புகளை பார்த்தேன். இவளால் இவள் உடலை ரசிக்க முடியுமா என்று யோசிக்கத் துவங்கினேன். நிச்சயம் முடியாது எனத் தோன்றியது. ஆனால் அவள் இந்த உடலை வைத்து தான் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். காலம் எவ்வளவு வேகமானது என்று மனம் மகிழ்ச்சியில் திளைக்கும் போது தான் தெரியும். மின்சாரமிருந்தும் சில்லென்று காற்று அடித்தும் என் உடலிலிருந்து நீர்த்துளிகள் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரம் கடந்தது என்று தெரியவில்லை எனக்கு. மீண்டும் நான் அவள் முகத்தைப் பார்க்கும் போது அவள் உறங்கிக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் ஒரு குழந்தை தனம் சட்டென குடிகொண்டது. அது உறங்கும் போது தானாக ஏற்படும் ஒன்றுபோல…அல்லது இன்று திடீரென்று சீக்கிரம் உறங்கியதால் உண்டான மகிழ்ச்சியாக இருக்கலாம். அவள் மேல் ஒரு போர்வையை எடுத்துப் போர்த்திவிட்டேன். அவள் எனக்காக தன் உடலை எத்தனை இரவுகள் கொடுத்திருக்கிறாள், காசுக்காக அற்புதமான இவ்வுடலை அனுபவித்திருக்கிறோம் என்று எனக்குக் குற்றவுணர்ச்சி ஏற்படத்துவங்கியது. அதே நேரம் தான் யாரையும் வற்புறுத்தவில்லை என சமாதானம் செய்துகொண்டேன். 

நான் எழுந்து சென்று அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டு மீண்டும் வந்து அமர்ந்துக்கொண்டேன். அவள் எழுந்ததும் அவளோடு கைகோர்த்து நீண்ட தூரம் நடக்க வேண்டும் போல் இருந்தது. நான் எழுந்து சென்று மீண்டும் கண்ணாடியில் என் நிர்வாணத்தை தரிசித்தேன்.

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button