கவிதைகள்
கவிதைகள் – இரா மதிபாலா

# 01
காட்டுப் பூ
—————-
வேர்களின்
குறு அறையில்
தவம் முடிய
வரம் பெற விழிக்கையில்
அடுக்ககத்தின் வரவேற்பறைக்கு கடத்தப்பட்டிருந்த
மரத்தில்
மலங்க, மலங்க விழித்தது காட்டுப் பூ.
இருண்மையில் மறித்து
கொத்தெனப் பிடுங்கி
மேய அலைந்த தோள்களில்
வாகாய் அமர்ந்து
போகச்சொல்ல
வெறி நாவுகள் ஊற
இடம் தேர்ந்த பின் உச்சமிட எத்தனிக்கும் நொடியில்…
மறைந்திருந்து
நீண்ட கரங்களில்
கழுத்தின் நரம்புகள்
எத்தி எகிறிய கால்களின்
விரல் இடுக்குகளில்
நசுங்கிய ஓலமிட்ட
வெறி விதைகள்
வேட்டைக்கு வந்த
மிருகம் அறியாது இருந்தது
அவள்
வன மண்ணில் சீறி முளைத்து
வளர்ந்த காட்டுப் பூ என.
———
# 02
காலத்தே கசிந்து பெருகிய வெறுமை குழம்பு
கருநிறத்தே
கிடக்கிறது வட்டில் நிறைய்ய
தொலைவிருந்து
வந்தாய்
லகுவாய்
அசையாது ஆடாது
கொண்டு செல்கிறாய்
பார்த்துக் கொண்டே
அமர்ந்திருக்கிறேன்
சட்டென ஜதி சத்தம்
திரும்புகிறேன்
ஆடுகிறாய்
பாத தூரிகைகளால்
கோடுகளை இழுக்க…
கருநிறத்து வெறுமைக் குழம்பு
யானை ஆகிக் கொண்டிருந்தது
என்னை அறியாது
எழுந்து வந்து
தந்தங்களுக்காக இரு கைகளை தருகிறேன்.
யானை அசைய
நானும் அசைகிறேன்
பிளிறியபடி அழைக்கிறது
வாழ்க்கை.