கவிதைகள்
கவிதைகள்-உமா மோகன்

1)
திரும்பிவந்து பார்க்கும்போது
நிச்சயமாக இவ்விடம்தானா
எனச்சொல்ல முடியாதபடி
எல்லாம் மாறிப்போய்விடுகின்றன
தூரங்களைத் தாண்டுவது
பாதுகாப்பு என்றிருந்த நாளில்
பாழ்பட்ட மனைக்கு என்று
எவ்விதப் பொருண்மையும் இல்லை
கனவுகளிலும் சிரித்துக்கொண்டிருந்த ஒற்றைச் செம்பருத்திச்செடிதான் கற்றுத் தந்திருந்து கனத்தை
புத்துருக் கொண்ட இடங்களில் செம்பருத்திக்கு மண்ணில்லை
2) இல்லாமற் போகவில்லை
வலிந்து சிரித்தல்
ஒற்றை அறைக்குள் நரகமான நாளில்
நீ முனைந்த முத்தம் அத்தனை கசப்பு
போதும்
என மணிக்கட்டைத் தளர்த்திக்கொண்டபோது
புறங்கழுத்துக்குள்ளும்
தென்றல் புகுந்து எழுந்தது
தூரச்சிரிப்பு
தூரமுறைப்பு
நீதிமன்றங்கள் கூண்டுக்குள் வைக்கமுடியாத உறவு
கண்ணாடித்துகளை முறத்தில் அள்ளியபின்னும்
எங்கோ ஒன்று மினுக்குவதாகவே உற்று உற்று குனிந்து பார்க்கிறது
கதர்ப்பட்டு சேலையை ஞாபகமாக தூக்கிப்போட்டு விடவேண்டும்
அதன் புட்டாக்களுக்கு அவன் கண்ணாடியின் ஃபிரேம் ஜாடை