உழைப்பின் கண்ணியமும் (Dignity of Labour) வேலை பகிர்வும் (Division of Labour) – லதா
கட்டுரை | வாசகசாலை

உழைப்பின் கண்ணியம் என்பது அனைத்து வகையான வேலைகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.. எந்தத் தொழிலும் உயர்ந்ததாகவோ, தாழ்ந்ததாகவோ கருதப்படக்கூடாது.. எந்த ஒரு மனிதரையும் அவர் தொழிலையோ/அவர் புரியும் வேலையயோ வைத்து பாகுபாடு காட்டப்படக்கூடாது என்ற ஒரு நிலை.
இதுதான் நியாயமாக இருக்க வேண்டும் இல்லையா? நாம் உழைத்து நம் வாழ்வாதரத்திற்காக பொருள் ஈட்டவேண்டும். அவரவர் பிறக்கும் சூழல், வளரும் சூழல் வேறு வேறு. அவரவர் திறமைக்கு ஏற்ப, விருப்புகளுக்கு ஏற்ப, தன் அறிவு, உடல் இரண்டையும் மூலதனமாகக் கொண்டு மனிதர்கள் உழைத்து பொருள் ஈட்டுகிறார்கள். இதில் உயர்வு, தாழ்வு எங்கிருந்து வருகிறது?
ஆனால், நம் சமூகத்தில் இந்த உழைப்பின் கண்ணியம் காக்கப்படுகிறதா என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டால், இல்லை என்பதே உண்மை. அவரவர் தொழிலை வைத்து சாதிகளைப் பிரித்து மேல் சாதி, கீழ் சாதி என்று பிரித்து வைத்த சமூகத்தில், தொழிலே மாறிய பிறகும் கூட இன்னும் சாதிகள் ஒழிந்தபாடில்லை. இதில் உழைப்பின் கண்ணியம் எங்கிருந்து காக்கப்படும்? எல்லோரும் எல்லா தொழிலிலும் இப்பொழுது ஈடுபடத் தொடங்கிவிட்டாலும், ஓரளவு சாதிகள் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் இல்லாத இடங்களில் கூட தொழில் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன என்பதே நிதர்சனம். இன்னும் சில தொழில்களை மற்ற சாதிக்காரர்கள் செய்வதில்லை என்பதும் நிதர்சனம்.

உதாரணமாக, நாம் வசிக்கும் வீட்டிலோ, நாம் பணி புரியும் அலுவலகத்திலோ, சுத்தம் செய்வதற்கான தொழிலாளிகள் நமக்கு டீ/காபி போட்டுக் கொடுக்கும் தொழிலாளிகள் என்று பல நிலையில் மனிதர்கள் இருப்பார்கள் அல்லவா? நம்மில் எத்தனை பேர் அவர்களை சக மனிதர்களாக பாவிக்கிறோம் என்று நம்மையே கேட்டுக்கொண்டால் நமக்குள்ளேயே இதற்கு பதில் கிடைத்துவிடும். அவர்கள் போட்டுக்கொடுக்கும் காபியை அவர்களுடன் ஒரே மேசையில் அமர்ந்து நம்மில் எத்தனை பேர் குடித்திருக்கிறோம்?
நம் வீட்டில் ஒரு விசேஷம் எனில் நம் வீட்டில் வேலை செய்பவர்களை மேல் வேலை பார்ப்பதற்காக அன்று அழைப்போமேயன்றி, அவர்களை ஒரு விருந்தினராக நம்மில் எத்தனை பேர் அழைப்போம்? விசேஷ நாட்களை விடுவோம். நம்மில் எத்தனை பேர் நம் வீட்டு வேலையில் உதவ வரும் தொழிலாளிகளுடன் அமர்ந்து உணவு உண்டிருக்கிறோம்? இன்றும் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு என தனித் தட்டும், டம்ப்ளரும் இருக்கும் வீடுகள் எத்தனை?
நமக்காக கார் ஓட்டிக்கொண்டு வரும் ஓட்டுனரை நம்மில் எத்தனை பேர் வழியில் எங்காவது உணவு அருந்தச் செல்கையில் ஒரே மேசையில் அவரையும் அமர்த்தி அவருடன் சேர்ந்து உணவு அருந்துகிறோம்? வெளியூர் பயணங்கள் செல்லும் போதெல்லாம் என் கண்களில் இந்தக் காட்சிகள் படாமல் இல்லை.
நம் சமூகத்தில் மக்கள் நாம் ஒன்றை மறந்துவிடுகிறோம். நமக்காக வேலை செய்பவர்கள் அவர்கள் எனில், அந்த வேலைக்கு ஈடான பணத்தை நாம் அவர்களுக்கு தருகிறோம். இது ஒரு கொடுக்கல் வாங்கல் தானே தவிர, அவர்களுக்கு நாம் செய்யும் தர்மமோ இல்லை உதவியோ இல்லை. நம்மால் ஒரு வேலை செய்ய இயலவில்லை (காரணம் எதுவாக வேண்டுமானால் இருக்கலாம்), அந்த வேலையைச் செய்ய நமக்கொரு மனிதர் தேவைப்படுகிறார். ஒருவருக்கு பணம் தேவைப்படுகிறது, நமக்கு அந்த வேலையை செய்ய ஒருவர் ஒப்புக்கொள்கிறார். நாம் அதற்கு ஒப்புக்கொண்ட பணத்தை தருகிறோம். ஆக, இங்கு நம் தேவை அவரால் பூர்த்தியாகிறது, அவர் தேவை நம்மால் பூர்த்தி செய்யப்படுகிறது. இதில் எது பெரியது இல்லை சிறியது? பணமா இல்லை உழைப்பா என்றால், இரண்டும் பெரியதும் இல்லை இரண்டும் சிறியதும் இல்லை. உழைப்பிற்கான ஊதியம், ஊதியத்திற்கான உழைப்பு. ஆக, இரண்டும் ஒரு பண்டமாற்று போல. அப்படியிருக்க ஊதியம் கொடுப்பவன் பெரியவனாகவும், உழைப்பவன் சிறியவனாவதும் எப்படி சரியான செயலாக இருக்க இயலும்?
நான் பணம் கொடுப்பவன் என்னும் திமிர் இன்னொரு இடத்தில் தான் வேலை செய்து இன்னொருவர் கொடுக்கும் பணத்தை வைத்து நாம் இன்னொருவரை நம் வேலைக்கு வைத்து கொடுக்கும் போது கூட ஏற்படுவது வேடிக்கையாக இல்லை? ஓர் அலுவலகத்தில் நான் உழைக்கிறேன், அதற்காக ஊதியம் பெறுகிறேன். அந்த ஊதியத்தில் ஒரு பங்கை என் வீட்டில் என்னால் செய்ய இயலாத வேலைகளுக்காக ஒருவரை நியமித்து அவருக்கு நான் கொடுக்கிறேன். இங்கு யார் பெரியவர்? யார் சிறியவர்?

நாம் ஒருவரிடம் உழைத்து அதற்கு ஈடாகத்தான் அவரிடமிருந்து ஊதியம் பெறுகிறோம் என்ற சுயமதிப்பு இல்லாமல், பணம் கொடுப்பவரிடம் அடிமை வாழ்வு ஏற்றும், வீட்டிற்கு வந்ததும், தான்தான் கொடுப்பவன் என்ற அகம்பாவம் கொண்டு தன்னிடம் உழைப்பவரை ஆதிக்கம் செலுத்துவதும் என்ன ஒரு மனநிலை ?
இதே நிலைதான் சில குடும்பங்களில் இணையர்களுக்குள்ளும் இருக்கிறது. குடும்பத்திற்கு பணம் ஈட்டி வருபவர் ஆதிக்கம் செலுத்த குடும்பத்தை நிர்வகித்து மற்ற அத்துனை வேலைகளையும் பார்க்கும் பெண் அடிமைப்பட்டு கிடக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறாள். வீட்டை நான் பார்த்துக்கொள்கிறேன், பணத்தை நீ கொண்டுவா எனும் ஒரு குடுபத்திற்காக வேலைகளை பகிர்ந்துகொள்ளுதல்தானே இது? ஒரு பெண் தான் வீட்டில் செய்யும் வேலைக்கு ஊதியம் கேட்கத் தொடங்கினால் அந்த ஆணின் வருமானம் அதற்கு போதுமானதாக இருக்குமா?
நாம் அனைவரும் மனிதர்கள்தான். தனிமனிதர்கள் வாழ சமூகம் எனும் சார்புநிலை அவசியமாகிறது. அதைக் கையாள நம்மில் ஒவ்வொருவர் ஒவ்வொரு வேலையில் நம் உழைப்பைச் செலுத்துகிறோம். அந்த உழைப்பிலிருந்து ஈட்டும் பணத்தை கொண்டு நம் வாழ்வாதாரத்தை உறுதி செய்துகொள்கிறோம். ஆக, பொதுவில் பார்த்தாலும், வீட்டினுள் பார்த்தாலும், உழைப்பு என்பது அது எந்த மாதிரி வேலையாக இருந்தாலும் அவசியமாகிறது. அது இல்லாமல் இங்கு தனிமனித வாழ்வும் இல்லை; சமூக வாழ்வும் இல்லை. எங்கோ ஒரு நிலத்தில் ஒரு உழவன் உழைக்கவில்லையெனில் நமக்கு உணவு எங்கிருந்து வரும்? எங்கோ மனிதரின் கழிவுகளை யாரோ ஒருவர் சுத்தம் செய்யாமல் நாம் எப்படி இங்கு உலா வருவோம்?

பலதரப்பட்ட வேலைகள் இருக்கின்றன, அவசியமாகின்றன, அதில் சிலவற்றை நாம் செய்கிறோம், பலவற்றை பலர் செய்கிறார்கள். ஆக,, உழைப்பு என்பது நமக்கான வேலை பகிர்தலே தவிர வேறொன்றுமில்லை. இந்த உண்மையை உணர்ந்தால் மட்டுமே இங்கு உழைப்பின் கண்ணியம் காக்கப்படும். ஒவ்வொரு மனிதரின் கண்ணியமும், இந்த சமூகத்தின் கண்ணியமும் உயரும்.