
அழகிய புகைப்படம் வேண்டி
நீங்கள் மெனக்கெட்டு சரியான இடத்தில்
ஒளிப்படம் எடுக்கையில்
எங்கிருந்தோ வந்த அந்தக் காற்று
உங்களின் குழலைக் கோதிவிட்டு
ஒன்றும் அறியா மழலையாய்
ஓடி விடக்கூடும்.
பலகணியை அல்லது கதவை
காற்று நினைத்தால்
திறந்தும், மூடுவதுமான
இரு எதிரெதிர்
வேலைகளையும் செய்யும்
நாம் சில நேரங்களில்
நடந்து கொள்வதைப் போல
யாரிடமும் சேராமல்
ஒதுங்கி இருக்கும் சிலரைப்போல்
தனியே வளர்ந்து நிற்கும்
அந்தச் செடியின்
ஆணவம் குலைக்க
எதிர்பாராது காற்று வந்து
அண்மைச் செடிகளை உரசச் செய்துவிடும்.
தன்னை மறந்து
கடல் பார்த்துக்கொண்டிருக்கும் வேளை
உங்கள் ஆடைகளை
வரைமுறையின்றிக் களைத்து
காற்றோடு பறந்து
அவ்விடத்தே ஆடை நடனம் புரியச் செய்யும்.
ஒரு வழியாக வானிலை
மழை பெய்யும் எண்ணத்திற்கு மாறி
கருமுகில்களைச் சூழச்செய்த பொழுது
காற்று என்ன நினைத்ததோ
சுழன்றடித்து
அவற்றை விலக்கிவிட்டு
தான் வெற்றி பெற்றதாக எண்ணிச் சென்றுவிடும்.
படிக்கலாம் என்று
எடுத்துவைத்த ஒரு புத்தகத்தைக்
குழந்தை படம் பார்ப்பதுபோல் படித்துவிட்டு
வேறு புத்தகத்தை எடு எனச் சொல்லி
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்
அது மட்டுமன்றி
திருப்பித் திருப்பிப் பக்கங்களைப் புரட்டி
நம்மைக் கேலி செய்யும்.
காற்றுக் குற்றவாளி மீது
புகார் கொடுப்போம்
அது
இன்னும் என்னவெல்லாம்
செய்ததைக் கண்டிருக்கிறீர்கள்?
கொஞ்சம் சொல்லிவிட்டுப் போங்களேன்
இல்லெனில்
காற்று நம்மைச் சும்மா விடாது
இப்படி ஏதாவது
எழுத வைத்துவிடும்.
Good