இணைய இதழ்இணைய இதழ் 60கவிதைகள்

அ.ஈஸ்டர் ராஜ் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

பின்நவீனத்துவத்தின் உரையாடல்

பின்நவீனத்துவத்தின் குரல் கழுத்தைக் குதறி
ரத்தத்தை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கிறது
கண் பிதுங்கி மூச்சு அவஸ்தையாகிறது
காது ஜவ்வு கிழிகிறது
குறிப்பிட்ட தொலைவு எல்லாம்
வவ்வால் போல் தலைகீழாய் தொங்கிக் கொண்டிருக்கிறது
மனிதர்கள் முகம் பார்க்க மறந்து
பொருட்களோடு தீவிர உரையாடல் செய்கிறார்கள்
குடும்பங்கள் கல்லெறி பட்டு தகர்ப்புக்குள்ளாகின்றன
ஒருவன் வேசியைப் பின் தொடர்கிறான்
ஒருவன் உத்தமியைச் சாலையில் வைத்து அடிக்கிறான்
நிகழ்கால யுத்தம்
பெண் நிமித்தம் மட்டுமல்ல
ஆண் நிமித்தமும்
சிறு பெரு முதலாளிகள் நிமித்தமும் உருவாகிறது
இதற்கெல்லாம் ஒருவன்   டெரிடாவைத் துணைக்கு அழைக்கிறான்
லக்கானைச் சொந்தம் கொண்டாடுகிறான்
அல்தூசரை நண்பன் என்கிறான்
பிறகு அவனே
நான் டெரிடாவிடம் இருந்து வேறுபட்டவன் என்கிறான்
ஒரு பூரான் ஓராயிரம் தேளின் விஷத்தை
எழுத்தில் பரவவிட்டு மகிழ்ச்சி அடைகிறான்
காரணம் கேட்டால்
பூரான் சிதைந்து தேளாகிறது
தேள் சிதைந்து  பாம்பாகிறது என்கிறான்
எது ஒன்று சிதைக்கப்படுதோ
அது அந்த இடத்தில்
வேறொரு பொருள் தரும் என்று வாதாடுகிறான்
என்னைப் பொருத்தவரை
பின்னவீனத்துவம் என்பதும்
சிதைவு எழுத்து என்பதும்
பாம்புப் புற்றுதான்
குளவிக் கூட்டுக்குள் கை வைத்தவனின்
நிலைதான்.

*** 

எழுத்தெனப்படுவ

இம்முறை என் எழுத்தைக் கொத்தட்டும்
மணிப் புறாக்கள்
இம்முறை என் எழுத்தில் வளரட்டும்
ஒலிவ மரம்
இம்முறை என் எழுத்தில் சுகந்தத்தை வீசட்டும்
பரிமளத் தைலம்
இம்முறை என் எழுத்தில் மலரட்டும் லீலிப் பூக்கள்
இம்முறை என் எழுத்தில் வெளிப்படட்டும்
அசரீரிச் சொற்கள்
இம்முறை இம்முறை இம்முறை என் எழுத்து
பனையைப் போல்
ஈச்ச மரத்தைப் போல்
குலை விட்டுக் குலை விட்டுச் சரிந்து தொங்கட்டும்
இம்முறை இம்முறை இம்முறை என் எழுத்து
என் பிரியம் என் ரூபவதி.

*** 

கூத்தனின் வாழ்வு

கூத்தனின் வாழ்வு காடு, மேடு, நகரமென அலைந்து
இசையின் ஒலியைக் கானகத்திலிருந்து இதயத்திற்குத் திருப்பி விடுபவன்
ஒரு பண்டிதக்காரனாய் மனதிற்குள் புகுந்து
மெல்ல இதய நோயை விரட்டி அடிப்பவன்
ஆன்ம தரிசனத்தைப் பாடினியோடும் விறலியரோடும்
ராகத்தின் வழியாக இசையை அரங்கேற்றம் செய்பவன்
வெம்மையின் அழுக்குப் படிந்த மனது போ என்றால் போகாது
சலவைக் கல்லில் அடித்துத் கிழித்தாலும் போகாது
கூத்தன் இசையில் போ என்றால் போகும்
நட்சத்திர ஒளி அவன் மூங்கிலில் எப்பொழுதும் விழுகிறது
துளையிடப்பட்ட நரம்பின் முறுக்கு அவன் கையின் இழுப்புக்கு
எப்போதும் கட்டுப்படும்
மொழியின் உச்சத்தாயில் அவன் ஒரு வாழ்க்கையை
ஒரு மண் விட்டு ஒரு மண்  நகர்த்திக் கொண்டு செல்கிறான்
அவன் கலைகளின் அரசன்தான்
அவனுக்குள் மித மிஞ்சிய பசி என்றைக்கும் இருந்துகொண்டே இருக்கிறது உனக்காகவும் எனக்காகவும் அவன் அந்தப் பசியைச்
சிறிது நேரம் தள்ளி வைக்கிறான்
சில நாளேனும் தள்ளி வைக்கிறான்
பொருளின் சுவையை இறைவன் அவன் காதுகளில் வைத்தானே ஒழிய நாவில் வைக்கவே இல்லை
அவனுக்குள் தோல் கருவியும்
துளைக் கருவியும் மாறி மாறித்
தாளம் போடுகிறது
கால்நடையாகவும் தலைச் சுமையாகவும்
இசைக்கருவியைக் கொண்டு செல்லும் அவன்
மனதார நேசிக்கிறேன் மண் சார்ந்த வாழ்வை
அவனுக்குள் ஆகச் சிறந்த வாழ்வு என்பது
பாலைவன மண்ணில் இசையைத்  துளிர் விடச் செய்வது

***

சொல் என்பது

சொல் என்பது எனக்குப்
பழரசமாகவுமில்லை
இளநீராகவுமில்லை
தேநீராகவுமில்லை
பழங்கஞ்சியுமாகவுமில்லை
அது  பூவோடும் காயோடும்
கனியோடும்
பூமியில் நிறைந்திருக்கிறது
எனக்கு மட்டும்
கசப்போ டும் நஞ்சோடும்
வதைபட்டுக்  கொண்டிருக்கிறது
அது வெட்டப்பட்ட ஒரு கிளை
வாடிக் கிடப்பது போல் கிடக்கிறது.
தலை துண்டிக்கப்பட்ட
ஒரு கோழியின் உடல் போல்
துடியாய்த்  துடிக்கிறது
அந்த சொல் கிளர்ச்சி கொள்ள
அதிகப்படியான வெயில் இடி மின்னலில்
கிடந்து தவிக்கிறது
கொல்லன் பட்டறையின் தீயில்
துவண்டு கொண்டிருக்கிறது.
அதை நீங்கள் வருவிக்க
ஒரு நெல் மணியை எடுத்து
நாவில் கீறி
அம்மா சொல்லி வரவழைக்கிறீர்கள்
உண்மையில் சொல் என்பது
ஒரு சிறு பையன்
எழுத்துக்கூட்டிப்  படிக்கும் சுகத்தில் உள்ளதா?
அல்லது
முன்னோர்கள் திரட்டிக் கொடுத்த
கலைச் சொல்லாக்கத்தின்
சுவையில் இருக்கிறதா?
எதுவாக இருக்கட்டும்
முதலில் சொல்லை
அதிகாரத்திற்கு உட்படுத்தும் ஆணவத்தை
எல்லாவித சக்தியோடும்
தகர்க்கவேண்டும்
பிறகு எல்லோருக்குமான
ஜனநாயகத்தைக்
கனத்தை
அது பெற வேண்டும்.

*******

easter.bhc@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button