
முதிரும் இந்த இரவை தொடர்ந்து
முன்னேறும் புலர்வுக்கு
சற்றும் குறைவானதல்ல உனது நினைவு.
மழையுண்ட பாதையில்
உனது திருபாதத் தடத்தில் பச்சயம் பூத்திருந்தது.
அதிலிருந்து பெருகிய வாசனை
உன்னை உலகறியச்செய்தது.
நளினம் மிளிர,
தொடங்கிய அந்தியில்
அலைசூழும் ஆழியைப்போல்
நீ வருவதும் போவதும் உற்சாகமெனக்கு.
திசை சூழ்ந்த குமிழ்களிடையே ஏகாந்தத்தின் உற்சவமாய் வந்துசேர்ந்தாய்.
பிறகெப்போதேனும்
வெண்மணலென இறையப்போகும்
சொற்கள் குறித்ததல்ல,
இறைஞ்சும் காலத்தின் புதிரெண்ணியே
கலங்கி நிற்கிறேன் நான்.