நாய் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், மொதல்ல உனக்குள் என்ன உணர்வு தோன்றும் ?”.
எதிரில் இருந்த சதீஸ், சாப்பாட்டுத் தட்டின் மீதிருந்த கவனத்தைத் திரும்பி இப்பொழுது ஹரிதாவைப் பார்த்தான். பக்கத்து மேசையிலிருந்தவர்களுக்கும் இவள் குரல் கேட்டிருக்க வேண்டும். அவர்களின் தலைகள் ஹரிதாவின் கைகளின் பக்கம் திரும்பியிருந்தன.
அவன் முன் நீண்டிருந்த கைகளைக் கண்கொட்டாமல் பார்த்தான். விரல்களில் நாவல் நிற நகப்பூச்சு. அலுவலக காப்பிடீரியாவில் சிம்மினி விளக்கைப் போல் தொங்கிக் கொண்டிருந்த விளக்கிலிருந்து வரும் இள மஞ்சள் ஒளி, நாயின் ரோமங்களை இன்னும் பளிச்சிட்டுக் காட்டியது. நகங்களிலும் பல பிம்பங்கள் பட்டு ஒளிச் சிதறல் ஏற்பட்டிருந்தது.
இவளோடு எத்தனை முறை பேசினாலும் ஒவ்வொருமுறையும் புதிதாகச் சொல்வதற்காகப் புதிர்களை, விளையாட்டுகளை, கதைகளைக் கற்பனையாக உருவாக்குகிறாள். வாழ்க்கையை யதார்த்தமாகப் பார்க்கும் குணம் இயல்பிலிருந்தது பிறக்கும் ஒன்றா என்பது சதீஸிற்கு இப்போதும் புதிராக இருந்தது.
அவளைப் பக்கத்து மேசையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தலைகள் திரும்பிய பாடில்லை. மூன்று ஆண்கள். ஒரு பெண். இவளின் புதிர் விளையாட்டில் பக்கத்து மேசைக்காரர்களும் சேர்ந்து கொள்வதற்கான விருப்பம் தெரிந்தது. பேச்சை நிறுத்திவிட்டார்கள். அவர்களின் ஆவல் கிளறப்பட்டுவிட்டது. ஹரிதா விரித்த கையை இன்னும் மூடவில்லை. அவள் அடுத்து என்ன சொல்லப் போகிறாள். ஹரிதா அவர்கள் இருந்த இடது பக்கம் தலையைத் திருப்பி கண் அசைத்தாள். அதற்கு உங்கள் பதில் என்னவென்று தொனிக்கும் அர்த்தம்.
ஹரிதாவின் கை மந்திரங்கள் செய்யும் நிபுணரின் கைகளை ஒத்திருந்தது. மாந்திரீகனைப் போல் மற்றவர்களையும் வசியம் செய்திருந்தாள். அவர்கள் கேட்கும்படி மீண்டும் ஒரு முறை, “ நாய்ன்னு சொன்னா, உங்களுக்கு உடனடியாக தோன்றுகிற உணர்வைச் சொல்ல வேண்டும். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்”.
ஒவ்வொருவரும் தங்களின் கற்பனை நாயை அவளின் கைகளில் பார்த்தார்கள். சதீஸிற்கு நாயின் பற்கள் மேல் கவனம் சென்றது.
ஹரிதா தொடர்ந்து சொன்னாள். “ நிறையத் தோன்றலாம், ஆனாலும், நாயைப் பற்றிய நெனப்பு உங்களுக்கு வரும் பொழுது அந்த உணர்வு இந்த நிமிசத்தில அனிச்சையா வந்தே தீரும். தாமதிக்காம சொல்லுங்க”.
“நாய்னா எனக்கு ரொம்ப செல்லம்” மேசையிலிருந்து வந்தது ஓர் ஆணின் குரல். அருகிலிருந்தவர்கள் இன்னும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஹரிதா சொன்னாள். “நீங்கள் நெறைய நேரம் எடுத்துக்க கூடாது. சட்டுனு பதில் சொல்லுங்க”. குரலில் வடித்தெடுத்த குழந்தைத்தனம்.
சதீஸைப் பார்த்து ஹரிதா புருவத்தை உயர்த்தினாள். சிந்தனை செய்வது போல் பாவனை செய்யும் முறை இப்பொழுது அவனுக்கு.
‘இவள் அழகா?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். குள்ளம் என்று சொல்வதிலிருந்து தப்பித்துக் கொண்ட சற்றே கூடிய உயரம். சின்ன கண்கள் ஆனாலும், அவள் போட்டிருந்த கண்ணாடி வில்லை கண்களைப் பெரிதாகக் காட்டியது. சதை நிரம்பிய உடல். அதை அதிகம் வெளிக்காட்டாத உடை. ஆந்திராவிலிருந்து வந்தவள் இரண்டு ஆண்டுகளில் அழகாகத் தமிழ் பேசக் கற்றுக் கொண்டு விட்டாள். வசீகரிக்கும் தோற்றம் இல்லை என்றாலும் அவளை எல்லாருக்கும் பிடிக்கும். அதற்கு அவளின் பேச்சே காரணம். ஒவ்வொருவரிடமும் பேச அவளுக்கு தனித்தனி கதைகள் இருந்து கொண்டேயிருக்கின்றன. இல்லை எல்லாரிடமும் அதே கதைகளை மீண்டும் சொல்வாளா?
அவளைக் கூட்டிக்கொண்டு சுற்றுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பலமுறை அவளுடன் சுற்றியிருக்கிறான். அவள் என்றும் தன்னைப் பற்றிய ரகசியம் காத்தவள் இல்லை. அவனுக்கென்று ஒரு முறை வாய்க்கும் என்றால் படுக்கைக்கு அவளை அழைக்கும் தன் விருப்பத்தை ஒருநாள் அவளிடம் கேட்க வேண்டும். கேட்கும் தருணம், நிராகரிப்பின் வலியில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
“ நாய் நன்றி உள்ளது” என்றது பக்கத்து மேசை பெண்ணின் குரல்.
“காவல் இருக்கும்” என்றவனுக்குக் கீச்சுக் குரல்.
“ நாய் நிறையச் சாப்பிடும்” அந்த குரலோடு சிரிப்பு சத்தமும் மற்றவர்களிடம் சேர்ந்து எழுந்தது.“ டேய்! அரிசி மூட்டை” என்று மற்றொரு குரல் பதில் சொல்லியவனை வெட்கித்து அடக்கியது. சேர்ந்து சிரித்தார்கள்.
இதற்கு மேலும் பதில் சொல்லாமல் இருக்க முடியாது. அவனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பதில் சொல்லிவிட்டார்கள்.
“ பயம்” என்றான் சதீஸ்.
“சதீஸ் குறிச்சுக்கோ. உனக்க நாய்னா பயம்” அதில் ஏதோ சிறப்பு இருக்கிறது போல் ‘பயம்’ என்பதை அழுத்திச் சொன்னாள்.
நாயைப் பற்றிய உணர்வின் சர்ச்சை இன்னும் முடியவில்லை. காண்டீன் மதியக் கூட்டத்தால் நிறைந்திருந்தது. அவர்கள் இன்னும் குரலை உரக்க உயர்த்த வேண்டி இருந்தது. பக்கத்து மேசைக்காரர்களின் தட்டுகள் காயந்து விட்டன. கீச்சுக்குரல் காரனின் கையில் சாம்பாரின் மஞ்சள் பிசிறு.
ஹரிதா விளையாட்டுக்குச் சூடு பிடிப்பது போல் தன் பேச்சில் இடம் விட்டும் மற்றவர்களைப் பேச விட்டும் கேட்டுக் கொண்டிருந்தாள். அழையா விருந்தாளியைப் போல் உணர்ந்தான் சதீஸ். முன்பின் பார்த்திராதவர்களோடு அவள் பாலிய கால சினேகிதர்களைப் போல் கலந்து விட்டாள்.
ஒரு நாள் புல்லாங்குழல் கற்றுக் கொள்ளப் போகிறேன் என்பாள். அதற்கு சாட்சியாக, அமேசானில் இருந்து புல்லாங்குழல் ஒன்றைத் தருவித்துக் காட்டினாள். இன்னொரு நாள் ஓவியம் கற்றுக் கொள்கிறேன் என்றாள். கெட்டியான அட்டை கேன்வாஸில் இரவு உயிரி என்ற தலைப்பில் ஓவியம் ஒன்றைக் காண்பித்தாள். அடர் நீல இரவு பின்னணியில் வெள்ளை நிலா ஒளிர்ந்து கொண்டிருந்தது. பெரும் மரமொன்று, வெள்ளை கதிர்களை உள் வாங்கிச் செரித்த அதன் பிரகாசம் இரவுத் தனிமையையும் களிப்பு மனத்தின் ஓய்வையும் கூட்டிக் காட்டியது. சில நாட்கள் கழித்து பூக்களை வரைந்து வந்து இதுதான் ‘ப்ளோரல் டிசைன் பெயிண்டிங்’ என்றாள். அவளுக்குச் சகலத்தையும் உய்த்து வாழ்ந்து மறைய வேண்டும்.
ஒருமுறை ‘நோய்களில் கொடியது கேன்சர்’ என்றான் சதீஸ். ‘முடி எல்லாம் கொட்டி, உடல் மெலிந்து, தங்கள் அழகு உதிரக் கிடப்பதைக் காட்டிலும் கொடுமை என்ன இருக்க முடியும்’ என்றான்.
ஹரிதா, ‘ உனக்கு வலியப் பத்தி முழுசா தெரியல. தீக்காயத்தோடு இருக்கிற யாரையும் இதுவரைக்கும் நீ பார்த்ததில்லனு நெனைக்கிறேன். பல்லாவரம் ஆஸ்பத்திரிக்கு நீ ஒரு முறை போய் பாரு. உடம்பு பூரா நெருப்பால வெந்திருக்கும் சதைகளோடு வலியால துடிக்கும் ஒரு மனிதனின் வலிய நீ கேக்கனும். வாழை எலைல இருக்கும் அவர்களின் தீய்ந்த சதையிலிருந்து வரும் முழுசா சீழ் கட்டாத நீர் வடியறத நீ பாக்கனும். வெந்தும் வேகாத உடம்ப பாக்கும்போதும் உன் முடிவை நீ மாத்திக்குவ’ என்றாள். அவள் சொன்ன விதத்திலிருந்தே அவளிடம் சரணடைந்துவிட்டான் சதீஸ்.
வார விடுமுறை நாட்களில் போன் செய்தால், பல்லாவரம் ஆஸ்பத்திரியில் இருக்கிறேன் என்பாள். அதற்கு மேல் அவளைச் சந்திக்கும் முடிவை மாற்றிவிடுவான். அன்றைய நாட்களில் ஹரிதா திடீரென்று சமூக சேவகியாகவும் அவதாரம் எடுக்கத் தொடங்கினாள். அவள் சொல்வது பொய்யா மெய்யா என்ற கேள்விக்குப் போனால் குழப்பம்தான் மிஞ்சும். அவளை பேசவிட்டுக் கேட்டுக்கொண்டு இருந்தாலே போதும்.
“நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது பூனை என்றவுடன் உங்களுக்கு என்ன உணர்வு உடனே தோன்றும்’’ என்றாள் ஹரிதா.
அவள் கை கொஞ்சம் சிறுத்துப் போனது. கூடவும் பூனைக் குட்டியைப் பொத்தி வைத்திருப்பது போல மேலும் கீழுமாகக் கையை வைத்திருந்தாள். எல்லோருக்கும் பூனைக்குட்டியைக் காண்பித்தாள். பூனையின் தலையைத் தடவி விட்டுக்கொண்டிருந்தாள். கைகள் பூனைத் தலையின் மேல் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. பூனை அவள் கைகளுக்கு லாவகமாகத் தலையைத் தூக்கியது. அவள் தடவும் சுகத்தில் அதன் கண்கள் மேலே போய் சொருகிக் கொண்டது. அவளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் கட்டுண்டு நின்றது. விளையாட்டின் அடுத்த கட்டத்திற்குத் தாவிவிட்டாள்.
இவளின் கதைகளை மனக்கண்ணில் அடுக்கிப் பார்த்தான். அவள் சொல்வதில் எதுவும் பொய் இருப்பதாகத் தெரியவில்லை.
“என்னுடைய அப்பா சாது. ஆனால், அம்மாவிடம் ராட்சசனாக இருந்தார். அம்மா திருமணமான புதிதில் வீட்டை ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தார். உயரமான தாழ்வாரங்கள் அவளுக்கு எட்டவில்லை. அருகிலிருந்த கடைக்குச் சென்று ஆரஞ்சு நிற ஸ்டூலை வாங்கி வந்தாள். வேலை முடிந்து வந்து இருந்த அப்பாவுக்கு அதைச் சொல்ல வேண்டும் என்ற நினைவு அவளுக்கு இல்லை. அப்பா ஸ்டூலைப் பார்த்துவிட்டு அமைதியாக இருந்தார். கொஞ்ச நேரம் கழித்து ‘என்ன இது?’ என்ற இரண்டு வார்த்தை மட்டும்தான் அவர் கேள்வி. அம்மாவின் பதில் என்ன என்பதைக் கூட கேட்காமல் அந்த பிளாஸ்டிக் ஸ்டூலை கொடுவா கத்தியால் கொத்தத் தொடங்கினார். ஆனாலும், அம்மாவை அடிக்கவில்லை. அவரின் கோபத்திற்குக் காரணம் அவரைக் கேட்காமல் அம்மா வாங்கியதுதான். இனியும் வாங்கக் கூடாது என்ற அர்த்தத்தில். அன்று பயந்து போன அம்மாவுக்குக் காய்ச்சல். அப்படியிருந்த இருந்த அம்மா தனது அதிக அதிகாரத்தைக் கையில் எடுக்க ரெண்டு குழந்தைகளைப் பெற வேண்டி இருந்தது. அம்மா படிக்கவில்லை. இருந்தும் படிப்படியாக வீட்டை அவள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டாள். என் அம்மாதான் என்னுடைய ரோல்மாடல்.
அன்றைய நாளில் எங்களுக்கு எந்த மாற்றமும் தெரிந்திருக்கவில்லை. காலையில் எழுந்து எங்களுக்குச் சமைத்து வைத்து விட்டு பள்ளிக்கு அனுப்பினாள். அம்மா பக்கத்து வீட்டக்காவுடன் கதை அளக்கச் சென்றுவிட்டாள். அப்பா வழக்கம் போல வேலைக்குச் சென்று விட்டார். வீட்டிற்குத் திரும்பிய அம்மா தன்னுடைய துணிகளைத் தோய்த்து, காய வைத்து, எல்லாவற்றையும் அயன் செய்து தன் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினாள். அன்று வீட்டை நன்றாகக் கழுவினாள். பின் வீட்டு மாடிக்குச் சென்று காயவைத்திருந்த சிகப்பு மிளகாய்களை எடுத்துவந்து வாளியில் போட்டு வைத்தாள். வீட்டில் எல்லாமும் சரியாக இருக்கிறதா என்பதை ஆயிரம் முறை சிந்தித்திருப்பாள். பாத்திரங்களை எல்லாம் கழுவியாயிற்றா என்பதை மூன்று தடவையாவது உறுதி செய்திருப்பாள். அதில் சிறு பிசுக்கைப் பார்த்தாலும் மீண்டும் கழுவியிருப்பாள். பிசுக்கு மட்டும் அல்ல, அதன் சாயை இருக்கிறதென்று மனக்கண்ணில் தோன்றினாலும் மீண்டும் கழுவுவாள். பிறகு….”
நீண்ட இடைவெளி விட்டாள்
“பிறகு மேடம், மேல இருந்த உத்தரத்துல தூக்கு மாட்டி தொங்கிட்டாங்க” அவள் சொல்லச் சொல்லக் கண்களும் சேர்ந்து சிரித்தது. அவள் சிரிப்பு ஒரு இயந்திரத்தை ஓட விட்டது போல் ஓடித் தான் அடங்கியது. ‘சாவுரதுன்னு முடிவு செஞ்சதும் சாவ வேண்டியது தானே, எதுக்கு இத்தனை அலப்பறை. இத்தோட முடிஞ்சுதுன்னு நினைக்காத. அவள் ஒரு கடிதமும் சாவதற்கு முன் எழுதி வைத்திருந்தாள்.
“துணி எல்லாத்தையும் தோய்த்தாச்சு, பாத்திரங்களை எல்லாம் கழுவி விட்டேன். ப்ரிட்ஜில் பால் இருக்கிறது. சாய்ங்காலம் தனியாக பால் வாங்க வேண்டாம். பக்கத்து வீட்டுக் குமாரி எனக்கு 500 ரூபாய் தரவேண்டும். இன்றும் கேட்டுப் பார்த்தேன். தரவில்லை. தவணை சொல்கிறாள். எப்பொழுது தரப்போகிறாள் எனத்தெரியவில்லை. மறக்காமல் வாங்கிக் கொள்ளவும். மதியத்திற்கும் சமையலை முடித்து விட்டேன். இரவு சப்பாத்திக்கும் மாவு பிசைந்திருக்கிறது”
“பூனை மிருதுவானது” என்றாள் ஒரு பெண்.
“க்யூட்” என்றது இன்னொரு குரல்.
“திருடும்” எல்லாரிடமும் சிரிப்பு.
“நரித்தனம்” என்றவனை மற்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். “அது நரி இல்ல தம்பி. பூனை. பூனைனைனைனை ” என்று ‘னை’யை அழுத்தி கீச்சு குரல் காரன் சொல்ல அங்கு வெடிச்சிரிப்பு கிளம்பியது.
பக்கத்து மேசைப் பெண் “என் வீட்ல ரெண்டு பூனை இருந்தது. முதல இருந்தது சாம்பலும் வெள்ளையும் கலந்து இருக்கும். அது ரொம்ப துறு துறு. எங்க வீட்டில இருக்கிற எலிகளைப் பிடிக்கிறதும் இல்லாம பக்கத்து வீட்டு எலி, கிளி, பல்லி, ஒணான்னு எதையெதையோ பிடிச்சிட்டு வரும். அம்மா அதை படுத்துக்கும் போது சேத்துக்காத என்பாள். இரவில் என் மார்பில் அதன் உடற்சூட்டை உணர்வேன். இன்னொன்று ப்ரவுன் கலர்ல ரொம்ப வருசம் கழிச்சு வளர்த்தேன். பார்க்கிறதுக்குப் புலி நிறம்னு சந்தோசம் வேணா படலாம். ஆனா சுத்த சோம்பேறி. வீட்டில வைக்கிற சாப்பாட்டை சாப்டுட்டு நல்லா தூங்கும். அது குட்டியில கூட விளையாடி நா பாத்ததில்ல” அவரவர் பூனைகள் பற்றிய சர்ச்சைகள் தொடங்கியது.
சதீஸ் முன்பொருமுறை இதே இடத்தில் வைத்து ஏதோ ஒரு தைரியத்தில் குடிக்கப் போகலாமா என்று அவளிடம் கேட்டான். அவள் அவனை நக்கல் செய்வது போல் எதிர் திசையில் தன் தலையை அவனளவுக்கு கோணியபடி, ‘போலாமே என்றாள். முதல் முறை ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு குடிக்கப் போகும் குறுகுறுப்பு சதீஸிற்குள்.
இரவென்றாலும் பார்க்கிங் ஏரியாவில் இருக்கும் தன் ஸ்கூட்டரை நன்றாகத் துடைத்துக் கொண்டான். பெட்ரோல் பாதிக்குக் கொஞ்சம் மேலே அம்புக்குறியில் நின்றது. எங்கு போவது என்று முடிவு செய்யக் கூகிள் மேப்பில் தேடினான்.
அந்த விடுதியில் குடித்துக் கொண்டிருந்தவர்களில் அவள் மட்டுமே பெண். என்ன நினைத்தாளோ . எல்லார் கண்களும் அவளை உற்றுப்பார்ப்பது உறுத்தியதோ என்னவோ “ வா, என் அறைக்குப் போகலாம்” என்றாள். பரிமாற வந்தவனிடம் எல்லாவற்றையும் பார்சல் செய்து கொடுக்கச் சொன்னான்.
“அவளே தொடர்ந்தாள். சைட்டிஸ் மட்டும் வாங்கிக்கலாம். என்னோட அறையில் மாகி இருக்கு. பசிச்சா அதை ரெடி பண்ணிக்கலாம்.”
குரோம்பேட்டையிலிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் மாடியில் ஒற்றை படுக்கை அறை கொண்ட வீட்டில் தங்கியிருந்தாள். மெயின் கேட்டின் கதவிலிருந்து இடது பக்கமாகச் சுற்றி வந்தால் லிப்ட். பழைய வகை. லிப்டின் வெளிக் கதவை மூடிவிட்டு, உள்ளிருக்கும் கம்பிக் கதவை ஓங்கிச் சாத்தியவுடன், லிப்ட் மேலே கிளம்பியது.
கதவைத் திறந்தவுடன் உள்ளேயிருந்து கிளிச் சத்தம். அவள் அறையில் உள் நுழையக் கிளியின் சத்தம் இன்னும் கூடிக் கொண்டு போனது. வாசலைக் கடந்தவுடன் குட்டி சமையலறை தாண்டிய ஹாலில் ஒரு கட்டில், பீன் பை, ஒரு மூலையில் அவளின் லாப்டாப், ஹார்ட் டிஸ்க், ஹெட் செட், ப்ளு டூத் ஸ்பீக்க்கர், இன்னொரு மூலையில் அழுக்குக் கூடையில் அவள் ஆடைகள். மேற்கத்தைய வடிவில் ஒரு கழிப்பிடத்துடன் குளியலறை.
“விக்கி விக்கி” கிளியை கொஞ்சிக் கொண்டு தானியம் போல இருந்ததைத் தன் உள்ளங்கையில் வைத்தாள். அது பசியிலிருந்திருக்க வேண்டும். அவள் கையை கடித்துக் கொண்டு சாப்பிட்டது. அது கடிப்பது வலிக்காமல் கூசி இருக்க வேண்டும். ‘அவசரப்படாதடா’ என கண்களை வெட்டி வெட்டி திறந்தாள்.
வாங்கிய போத்தல்களைப் பைகளுக்குள் அடுக்கி, மேல் இருக்கும் கான்கீரீட் தண்ணீர்த் தொட்டியின் ஏணியில் ஏறச் சொன்னாள். அவள் கைகளில் ப்ளூ டூத் ஸ்பீக்கரும், விரல் இடுக்குகளில் சமைத்து வைத்திருந்த மாகியும்.
அதன் மேலிருந்து பார்க்கும் பொழுது சரவணா ஸ்டோர்ஸின் சிகப்பு மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. கூட்டம் குறைந்திருக்கும் இந்நேரம் சாலைகள் வெறிச்சோடியிருக்கும். வானம் இருள் நீலத்திலிருந்தது. வெண் மேகங்கள் இருளிலும் தனியே போய்க் கொண்டிருந்தது.
‘நகரம் நீ காதலிப்பவர்களைப் போல, அதன் அமைதியில் இன்னும் புலப்படாத தனிமை இருக்கிறது. யானை தொட்ட குருடன் போல் ஓரிடத்தில் வாழ்ந்து கொண்டு அதுவே முழு நகரத்தில் வாழ்வது போல் கற்பனை செய்து கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு பெண்ணிடம்/ஆணிடம் நெருங்க நெருங்க, அவள்/அவன் ரகசியங்கள் விலகுவது போல் அல்லது அவள்/அவன் ரகசியம் அற்றவர் போல் ஒரு புதிர்த் தன்மை விலகிக் கொண்டே இருக்கிறது.’
தத்துவவாதியாக மாறிக்கொண்டிருந்தாள். இருந்தும் அவள் பேச்சில் மிகையில்லை. மாடி, தனிமை, அவள், இருள், பீர் போத்தல். கடைவெளிச்சம். அவள் குரலில் ஓடும் சோகம். இதுவரை அவன் அனுபவித்திராத உணர்வு.
அவளுக்குக் காதலே இல்லை என்று சொல்லி வந்தாள். முதல் முறையாக அதைப் பற்றி வாய் திறந்தாள். அவன் கல்லூரியில் தான் அறிமுகம். முதல் முத்தம். முதல் தொடுதல். முதல் கூடல். எல்லாமும் நடந்த பின் அவனுடன் இருக்க வேண்டி ஹைதராபாத்தில் கிடைத்த வேலையைச் சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்தாள். ‘அவனப் பத்தி சொல்ல எனக்குள்ள நிறைய இருக்கு. அவனிடம் இருந்த டைரியில் என்னைப் பற்றி எழுதியிருந்தான். நான்கு அக்காக்களுக்குப் பின் பிறந்த அவனுக்கு ஊட்டி விடவும், உடை மாற்றவும், அவனைக் கொஞ்சி அதட்டி வேலை செய்யச் சொல்லவும், அவன் சோம்பல் நாட்களில் உடைகளைத் தோய்க்கவும், சமைக்கவும் நான் செய்யும் உதவிகளுக்குமாக எல்லாவற்றிற்கும் கடன் பட்டவனாக எழுதியிருந்தான். அவனுடைய பெயர் விக்னேஷ். அதான் என்னோட கிளிக்கும் பேர் விக்கி.
நான் நினைக்கிறேன், ரெண்டு பேருக்கும் ஒருவர் ஒருவரைச் சார்ந்து அதிக அன்பு இருந்துச்சு. அந்த அன்பு திகட்டத் திகட்ட மூச்சு முட்ட ஆரம்பிச்சுச்சு. எங்ககிட்ட இருந்த காமம் காதலா இருந்தாலும், இது நிரந்தரம் இல்லன்னு எங்ககிட்ட நாங்களே சொல்லிக்கிட்டு, நானும் அவனும் மற்றவர்களோட டேட் பண்ண ஆரம்பிச்சோம்.
அவனுக்கு ஒருத்தி கிடைத்தாளென்று அவளுடன் லிவிங் டு கெதருக்கு சென்று விட்டான். எனக்கு இன்னொருவனுடன் மீண்டும் சேரப் பிடிக்கவில்லை. என்னுடன் யார் வந்து சேர்ந்தாலும் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். உடலை ஊடுருவிக் கொதிக்கின்ற தனிமையில் அவனுக்கு போன் செய்வேன். அவன் இப்பொழுதும் அவளுடன் தான் இருக்கிறான். என் உறவுகளை நான் அவனிடம் மறைத்ததில்லை. ஒவ்வொருமுறையும் ஒருவனோடு சுற்றும்போது அவனுக்குச் சொல்வேன். அதுவே அவனைக் கிழிக்கும் கத்தியென எனக்குத் தெரியும்.’
“உள்ளேயிருக்கிற கிளி ஆஸ்திரேலிய வகை வெளிர் மஞ்சள் கிளி. அதற்கு அவன் பெயரைத் தவிர வேற ஒன்னும் தோணல. அதை அவனுக்குச் சொல்ல வேண்டி ஒரு அவா. அவசரம். அன்றைக்கு அவன் மேல் எங்கிருந்தோ எழும் பாசம் உடலெங்கும் தகித்திருந்தது. அவனை அழைத்தேன்.
‘விக்கி நான் ஒரு கிளி வளக்கிறேன். அதுக்கு உன் பெயர் தான் வைச்சிருக்கேன்’ சிரிக்கத் தொடங்கியவன் நிறுத்திய பாடில்லை. அந்தச் சிரிப்பு என்னைச் சீண்டுவதாக இருந்தது.”
“இதே மாதிரி , நீ வளர்க்கிற ஒவ்வொரு பிராணிக்கும், உன்னோட உறவு கொள்கிறவர்களின் பெயரை வைச்சன்னா, நீ ஒரு மிருக காட்சி சாலையே உருவாக்க வேண்டி வரும்” அவன் சிரிப்பதை நிறுத்தி விட்டான்.
“அப்படி ஒரு மிருகக்காட்சி சாலை வச்சிருந்தாலும், அதில் எனக்கு மிகவும் பிடிச்ச மிருகத்துக்கு உன் பெயரைத் தான் வைப்பேன்” என்றபடி போனை துண்டித்துவிட்டேன் என்றாள்.
அதன் பின் மௌனம். சரவணாஸ் ஸ்டோர்ஸ் மின்னும் சிகப்பு விளக்கு, பீரின் மெல்லிய போதை, ப்ளூ டூத் ஸ்பீக்கர் இசை,மாகியின் நெடி. கால் நிலவு, குளிர், அவள் அன்பு.
பூனை பற்றி அனைவரும் தங்கள் கருத்தைச் சொல்லி முடித்திருந்தனர் போலும். ஹரிதா என்னை உலுக்கிச் சொன்னாள்.
“இப்போ உன் முறை சதீஸ்” .
“நல்ல வேள நீ என்ன மறக்கல. வெறுப்பு” என்றான் சதீஸ்.
“ஆர் யூ ஸ்யூர்?” என்றாள் ஏமாந்தவளைப் போல்.
“அப்படிதான் இப்போ தோணுது”.
“ஒகே சதீஸ்” என்றவள் மற்றவர்களிடம் திரும்பி. “இப்பொழுது அவரவர்
பதில்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நான் புதிரை விடுவிக்கிறேன்
என்றாள்.
“நாய் பற்றிய உணர்வு என்பது, உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஆழ் மனதில் பதிந்திருக்கும் எண்ண ஓட்டம். பூனை என்பது உங்கள் பார்ட்னரைப் பற்றிய ஆழ்மன எண்ணத்தின் பிரதிபலிப்பு” புதிரை அவிழ்த்த பின் எழுந்து தன் வலது கையால் கற்பனைத் தொப்பியை நீக்கி இடதுகையை நெஞ்சுக்குக் கொண்டு சென்று சிரம் தாழ்த்தி ஒவ்வொருவரையும் வணங்கினாள்.
“ஓ ஓ ஓ ஓ” என்ற கோர்வையான வாய் தாளத்துடன் எல்லோரும் கைதட்டினார்கள். வாய் நிறையப் புன்னகை. எல்லோரும் விடை பெற்றார்கள்.
“என்ன சதீஸ் உனக்கு உன் மேல பயம். உனக்கு பாட்னர்னு ஒருத்தி இருந்தால், அவ மேல வெறுப்பு. கொஞ்சம் எம்பரேசிங்காத் தான் இருக்கு. வாட் டு டூ ” என்றால் நாக்கை வெளியே நீட்டியபடி. பின் நெடு நேர மெளனம்.
பிறகு கேட்டாள்.
“என்னப் பத்தி நெனைச்சா உனக்குள்ள என்ன உணர்வு வரும்”
’’உன்னைப் புணர ஒரு வாய்ப்பு’’ என்பதைக் கொச்சையாகச் சொல்லி முடித்தான்.