இணைய இதழ்இணைய இதழ் 60சிறுகதைகள்

ஏரியம்மா – குமரகுரு 

சிறுகதை | வாசகசாலை

ட்லா மீன்களின் பிளாக்கள்* நீருக்குள் மின்னுவதை விட கூடையில் துள்ளுகையில் அதிகம் மின்னுவதாய் தெரியும் கண்களைப் பெற்றவன் நீருக்குள்ளிருந்து துள்ளியபடி நெளிந்தான்!!

வெயில் சுட்டெரித்தது. கோடை காலத்தில் தண்ணீர் சுண்டிப் போயிருந்த ஏரியில் ஆங்காங்கேத் திட்டுத் திட்டாய் நிற்கும் நீரில் தப்பித்துப் பிழைத்து வாழும் மீன்களைக் கருவாடாகும் முன் பிடித்து விட்டால் போதும். சூரியக் கதிர்கள் அவனுடலை ஒரு ஸ்டெயின் ஸ்டீல் பாத்திரத்தின் மீது விழுந்த மெழுகொளியாய் மின்னும்படி செய்தது.

அவனின் கருத்த உடல், நீந்தி நீந்தி மீனுடலைப் போல் வளைந்து நெளியப் பழகியிருந்தது. வெப்பத்தின் சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துளிகள் காயத் துவங்கியிருந்தன.

அவனருகிலிருந்த மூங்கில் மீன் கூடையின் இடுக்குகளை அடைத்துக் கொண்டிருந்த சாணத்தின் துகள்கள் லேசாய் நீரில் ஊறி ஒழுகியிருந்தன. அவன் அந்த கூடைகளுக்கு சாணம் பூசி சில மாதங்களிருக்கும். அதில் அரைக் கூடை ஜிலேபி மீன்களும் சிறு நறுவைகளும் ஒரு தடித்த கட்லா மீனும் ‘வாய் மூடித் திறந்து வாய் மூடித் திறந்த’படியிருந்தன. அவை எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம். 

அவன் தினமும் ஏரித் திட்டுக்களில் பிடிக்கும் மீன்களை வீட்டுக்கு கொண்டு செல்வதில்லை. அவன் மீன்களுக்கு கிராக்கி அதிகம். அவற்றைக் கொண்டு சென்று மார்க்கெட் வாசலில் வைத்ததுமே கனிந்த பழம் மீது மொய்க்கும் ஈக்களைப் போல் மொய்த்து மீன்களை அள்ளிச் சென்றிடுவார்கள்.

இத்தனைக்கும் அவன் அபூர்வமான மீன்களை விற்பவனில்லை, ஆனால், அவனிடம் உள்ள மீன்கள் அவ்வளவு சீக்கிரம் இறப்பதில்லை. பிடித்து முடித்த சில மணி நேரங்களில் விற்பனைக்கு எடுத்துச் சென்று விடுவதால், உயிருடனிருக்கும் மீன்களை ரத்தம் சொட்டச் சொட்ட அவனே நறுக்கித் தருவான். நறுக்குவதற்கும் பணம் பெற்றதில்லை. மீன்களுக்கு மட்டுமே பணம் வாங்குவான்.

பிள்ளை இல்லாத அவன் வீட்டில் அவனும் அவன் பொண்டாட்டியும் மட்டும்தான். அவளும் பெரிதாய் ஆசைப்படுபவளில்லை. எனவே அவர்களுக்கு அந்தந்த நாளுக்குத் தேவையான சம்பாத்தியம் மட்டுமே போதுமானதாயிருந்தது.

சுடுமணலில் அமர்ந்திருந்தவன் வெடுக்கென எழுந்தான். எம்.ஜி.ஆர் பாடலொன்றை முனுமுனுத்தபடியே கூடையைத் தூக்கித் தலையில் வைத்து கொண்டு அடுத்த திட்டுக்குச் சென்று மீன் பிடிக்கக் கிளம்பினான். உச்சி வெயில் ஏரியெங்கும் பரவிக் கிடந்தது. அவன் எப்போதுமே செருப்பணிந்ததில்லை. ஏரி மணலுக்கு அவன் கால்களைத் தெரியும். அவை அவன் கால்களுக்கு முத்தமிடுமே ஒழிய சுடாது!!!

அடுத்த திட்டை நெருங்கியதும், நீருக்குள் இறங்கி நீரின் அளவையும் சேற்றின் அளவையும் அளந்துவிட்டு, கூடையை இறக்கி கரையில் வைத்துவிட்டு, தலையில் கட்டியிருந்த துண்டை மணலின் மீது விரித்து விட்டு கைலியில் மடித்து வைத்திருந்த இரண்டு கற்களை எடுத்து துண்டு மீது வைத்தான்.

மீண்டும் நீருக்குள் இறங்கியவன், நீரை அள்ளி இரண்டு தோள்பட்டையிலும் தெளித்துக் கொண்டு கைகளால் சேற்றைத் துழாவிக் கொண்டிருந்தான். சகதியும் கற்களும் பாசியும் முட்களும் கைகளில் சிக்கியபடியிருந்தன.

“ஓய்!!”

சன்னமான சத்தம் கேட்டு அங்குமிங்கும் திரும்பிப் பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெயில் படர்ந்த நிலத்தில் மரங்களும் புதர்களும் தான் தெரிந்தன..யாருமேயில்லை. மீண்டும் தன் வேலையில் மூழ்கலானான்.

“ஓய்!! மீன்காரா!!”

மீண்டும் சத்தம். எங்கிருந்து வருகிறதென்று தெரியாமல் நீரிலிருந்து வெளியேறி வந்தான்.

“யாருப்பா அது!! சத்தம் மட்டும் கேக்குது ஆளொன்னும் காணோமே?” என்று சத்தமாகக் கேட்டான்.

“என்னையா உனக்குக் தெரியல..இங்க பாரு!”

சன்னமான அந்த பதில் மூங்கில் துளையில் ஊதினால் வரும் “உஃப்” என்ற ஒலியைப் போல் அவ்வளவு மெலிதாக இருந்தது.

மேலே பார்க்காமல், தூரமாய் பார்க்காமல், கீழே பார்த்தான். அவன் துண்டின் மீதொரு கட்லா துள்ளிக் கொண்டிருந்தது. உடனே பிடித்து கூடைக்குள் போட்டுவிடலாமென்று பிடிக்கப் போனான்.

“கண்டுபிடிச்சிட்டியா? புடிச்சு கூடைக்குள்ளதான போடப் போற?”

ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றான். துள்ளிக் கொண்டிருந்த மீனா பேசுகிறது? இல்லை அடிக்கும் வெயிலில் என் மூளைக்குதான் எதோ கிறுக்குப் பிடித்து விட்டதா?

“ஏ கட்லா! நீயா பேசுற?” 

“ஏன் நான் பேசக் கூடாதா?”

இப்போது அவன் மனது மீன்தான் பேசுகிறதென்று ஏற்றுக் கொண்டது.

“ஆத்தாடி!”

“என்னை அந்த தண்ணிக்குள்ளாற போட்டுறேன், நான் இன்னும் கொஞ்ச நாள் வாழனும். என் வயித்த பாத்தியா..? உள்ளாற சினை நிறைய முட்டைங்க இருக்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல பெய்யப் போற மழையால இந்த ஏரியே நிரம்பி வழியும், அப்போ என்னோட முட்டையிலேயிருந்து வரும் குஞ்சுகள் எல்லாம் பிறந்து வளர்ந்து இன்னும் நிறைய மீன்களா பெருகும். அள்ள அள்ளக் குறையாத மீன்கள் உனக்கு கிடைக்கும். என்னை விட்டுறேன்..” என்று அந்த மீன் கெஞ்சியது.

மீன்காரன் சுற்றிலும் பார்த்தான். வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. மழை வரும் வாய்ப்பேயில்லை என்று அவன் மனம் சொன்னது. அதுவொன்றும் சாதாரண கணிப்பில்லை, அத்தனை வருட அனுபவத்திலிருந்து வெளிப்பட்ட துல்லியமான கணிப்பு.

“வெயிலு பல்லை இளிச்சிக்கிட்டு கிடக்கு.. மழை வருமுங்குற. முதல்ல நீ எப்படி பேச ஆரம்பிச்சன்னு சொல்லு. அப்புறம் நீ சொல்லுறத நம்புறதா வேணாமான்னு நான் யோசிக்குறேன்” என்று அந்த கட்லா மீனை கையிலெடுத்துக் கொண்டு ஒரு உரையாடலுக்கான கொக்கியைப் போட்டான்.

“சரி! நான் சொன்னதை நீ நம்ப வேண்டாம்! உனக்கு கல்யாணமாகி 10 வருசமாச்சு. இன்னும் பிள்ளையில்லைல்ல. நீ என்னை இப்போ தண்ணியில் விட்டேன்னா உனக்கு அடுத்த கோடைக்குள்ள புள்ள பிறக்கும்” என்றது கட்லா.

“என்ன ஜோசியம்லாம் சொல்லுவியா நீ?”

“இந்த ஏரி உருவான காலத்துலேயிருந்து நான் இங்க தான் இருக்கேன். என்னை யாரு பிடிச்சாலும் நான் தப்பிச்சிருவேன். நான் பிடிபட்டேன்னு தெரிஞ்சதுமே மழை வந்துரும். ஏன்னா, நான்தான் இந்த ஏரியோட முதல் மூத்த மீன். ஏரி வறண்டு போய் நீரில்லாம கிடக்கும் காலமெல்லாம் நான் ஏரியோடவே ஒட்டிக்கிட்டு கிடப்பேன். இப்ப இருக்க வறண்ட காலத்தை விட மோசமான வறண்ட காலத்துலயெல்லாம் நான் யாரு கையிலேயும் அகப்படாம நழுவி ஓடியிருக்கேன். நீதான் என்னை முதல் முதல்ல பிடிச்சிருக்க. அதனால்தான், என்னோட விடுதலைக்குப் பரிசா உனக்கு பிள்ளைப் பேறு தரேன்னு சொன்னேன்” 

“எனக்கு சிரிப்பு வருது” என்றபடி கட்லாவை கூடைக்குள் போட போனான். அவன் கைகளிலிருந்து நழுவி விழுந்தது மீன்‌.

“ஓய்!! என்கிட்டயே உன் சாமர்த்தியத்தைக் காட்டுறியா?” – என்றவாறே மீனைப் பிடிக்க முயற்சித்தான். தனது துடுப்புகளைக் கைகளைப் போல் பயன்படுத்தியொரு கடல் சிங்கம் போல் நகரத் துவங்கியிருந்த கட்லா மீன் நீரை நெருங்க நெருங்க வானம் இருண்டது.

அதிசயமாய் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென்று நிதானித்து ஒரே தவ்வலில் கட்லாவைப் பிடித்துக் கொண்டு வந்து கூடைக்குள் போட்டுவிட்டு, கூடைக்கருகில் அமர்ந்தபடி கைலியை காலிடுக்கில் செருகிக் கொண்டு, “மாட்டிக்கிட்டியா?” என்றான். மேகமூட்டம் விலகி மீண்டும் வெயில் எரித்தது.

“எங்களையெல்லாம் பிடிச்சிக்கிட்டுப் போங்க, எங்க ஏரியம்மாவை மட்டும் ஏரிக்குள்ளேயே விட்டுருங்க” – என்று கூடைக்குள்ளிருந்த எல்லா மீன்களும் கெஞ்சியதைக் கேட்டதும், திடுக்கென்று அதிர்ச்சியில் உறைந்து தடுமாறி மணல் திட்டின்‌ மேல் சரிந்து விழுந்தான்.

ஒரு முறை அவன் வலது கை விரல்களால் இடது முன்னங்கைத் தோலைக் கிள்ளிப் பார்த்து கொண்டான். உண்மைதான், அவன் உண்மையாகவே பேசும் மீன்களைக் தான் பார்த்து கொண்டிருக்கிறான்.

“ஏ! மீனுங்களே!! இப்படியொரு அதிசயத்தை பாப்பேன்னு நான் ஒருபோதும் நினைச்சதே இல்ல. எதனால.. எப்படி..நீங்க என்னோடு பேசுறீங்க?”

கூடைக்கடியிலிருந்து முண்டியபடி மேலே வந்த நறுவை மீனொன்று பேசத் துவங்கியது, “ஏரியம்மா எப்போதும் அகப்படாதபடிக்குப் பார்த்து கொள்வதுதான் எங்கள் வேலை. அவள் அகப்படுவதைப் போல் தெரியும் போதெல்லாம் அவளைத் தள்ளிவிட்டு நாங்கள் அகப்பட்டு கொள்வோம். இந்த முறைதான் எதோ தவறு நிகழ்ந்து ஏரியம்மா சிக்கி கொண்டாள்” என்றபடி மெல்லிய குரலில் அழத் துவங்கியது. “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ஏரியம்மா!” என்று மன்னிப்பும் கேட்டது.

“நீ ஏன் மன்னிப்பு கேட்கிறாய்? நான் இங்கிருந்து வெளியேற என்ன நிகழ வேண்டுமோ அது தானாய் நிகழும். ஒவ்வொரு முறையும் நான் தப்பிக்கவென்று ஒரே அதிசயம் நிகழும். இந்த முறை அந்த அதிசயத்தின் பெயர் ‘கருணை’- இந்த மீன் காரரின் கருணை” என்றது ஏரியம்மா.

“இன்னும் நீ எப்படி பேசக் கத்துக்கிட்டேன்னு சொல்லவே இல்லையே…” என்று நினைவூட்டினான் மீன்காரன்.

“அதுவொன்றும் பெரிய அதிசயமில்லை மீன்காரரே! நீருக்கடியில் நாங்கள் அசரீரிகள் மூலமும் சமிக்ஞைகள் மூலமும் பேசிக் கொள்வோம். ஒரு மீன் இன்னொரு மீனிடம் பேசும் மொழியே வேறு. அதே வேளையில், எங்களுக்கு அந்நியமான மனிதர்களிடம் பேசவும் எங்களுக்குத் தெரியும். ஆனால், அதற்கான தேவை இன்றுவரை வரவில்லை.அதனால் நாங்களும் பேசவில்லை. எந்தவொரு மொழியும் தேவைப்படும்போது தானே பயன்படும். இப்போது நாங்கள் எங்களின் ஏரியம்மாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்திலிருப்பதால் தங்களிடம் உரையாடுகிறோம்” என்றதொரு ஜிலேபி கெண்டை.

“அது சரி! நான் தமிழ்லதான் பேசுவேன்னு உங்களுக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டான் மீன்காரன்.

“அது சரி!! இத்தனையாண்டு காலமாய் நான் வாழ்வதிந்த ஏரியில்தான். இந்த மொழியின் பெயர் தமிழென்று எனக்குத் தெரியாது. ஆனால், இங்கே குளிக்க வருபவர்கள், மீன் பிடிக்க வருபவர்கள், துணி துவைக்க வருபவர்கள், மலம் கழுவ வருபவர்கள் என்று எல்லோரும் பேசும் உரையாடல்களைக் கவனித்து கற்றுக் கொண்டதுதான். மற்றபடிக்கு இதிலொன்றும் கடினமில்லைப் பிழைக்க வேண்டுமென்றால் ஊரில் உரையாடும் மொழி தெரிந்திருக்க வேண்டும் தானே?” என்று அழகு தமிழில் பதில் சொன்னது ஏரியம்மா.

“எவ்வளவு விவரமாக இருக்கின்றீர்கள். அதற்கும் மேல் இன்னொரு கேள்வியிருக்கிறது. எதனால் நீ ஏரியம்மா? நானறிந்து அல்லது கேள்விப்பட்டது வரை கட்லா மீன்கள் எல்லாம் பண்ணை மீன்கள்.. ஆராய்ச்சியின் மூலம் உருவானவை என்றே!! அப்படியிருக்க நீயெப்படி இந்த ஏரி மீன்களின் மூத்த குடியாக இருக்க முடியும்?” என்று தானும் அவர்களைப் போன்றே இனிய தமிழில் இன்னொரு கேள்வி கேட்டான் மீன்காரன்.

சங்கைக் காது மேல் வைத்தால் ‘விட்டு விட்டு’ கேட்கும் காற்றொலி போல் சிரித்த கட்லா மேலும் சொல்லத் துவங்கியது, “உங்கள் தகவலுக்கு நன்றி!! ஆனால், நீங்கள் நினைப்பது போல் நான் சாதாரண மீனில்லை. எனக்கென்றொரு தனித் தன்மையுண்டு”

அமைதியாக கட்லா பேசுவதையே உற்று கவனித்தபடியிருந்தான் மீன்காரன்.

“நீங்கள் நினைப்பதிலொன்றும் தவறில்லை, ஜிலேபிகள், நறுவைகள், கெண்டைகள், விறால்கள் மற்றும் இன்னும் பற்பல மீன் வகைகளிருக்க நானெப்படி ஏரியம்மா என்றால், இந்த ஏரியிலுள்ள அனைத்து ஆண் மீன்களின் விந்துக்களுடன் என்‌ முட்டைகள் சேரும். என் முட்டைகளிலிருந்து கெண்டைக் குஞ்சுகள், ஜிலேபிக் குஞ்சுகள், விறால் குஞ்சுகள் என்று எல்லாம் பிறக்கும். அதே நேரம், தேவை ஏற்படும் பட்சத்திலே நானொரு ஆண் மீனாகவும் (Hermaphrodite) மாறுவேன். மாறி பிற பெண் மீன்களைக் கருவுறச் செய்வேன். அப்புறம், நான் பார்க்கத்தான் கட்லா போலிருப்பேன் ஆனால், நான் கட்லா இல்லை!” என்று விளக்கியது ஏரியம்மா.

“ஏயாத்தாடி!!! எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல. நீங்க எல்லாம் சொல்லுறதை நம்பாம இருக்கவும் முடியல. அப்புறம் அடுத்த கோடைக்குள்ள எனக்குப் பிள்ளைப் பிறக்கும்னு சொன்ன, அதெப்படி? முதல்ல எனக்குப் பிள்ளையில்லைன்னு உனக்கெப்படி தெரியும்?” – என்று தனது இயல்பு மொழிக்கு மாறி கேட்டான் மீன்காரன். 

“அதுவொன்னும் கம்பசூத்திரமில்லை. இத்தனை நாட்களாக உன்னைப் பார்க்கிறேனே.. நீயென்னைத் தண்ணியில விடு. மழை வரும் நேரம் நெருங்குதே!! தண்ணியில‌ விட்டதும் நான் உனக்கு எப்படிப் பிள்ளைப் பேறு கிடைக்குங்குற விசயத்தைப் பற்றி சொல்லுறேன்!” என்று சொல்லிச் சிரித்தது ஏரியம்மா.

சிறிது நேரம் யோசித்த மீன்காரன், சடாரென்று ஏரியம்மாவைக் கூடைக்குள்ளிருந்து அள்ளி எடுத்தான். பின்னர் ஏரி நீருக்குள் மெல்ல புதைத்து நழுவ விட்டான்.

ஏரியம்மா துள்ளிக் குதிக்காமல், அலுங்காமல் மெல்ல நகர்ந்து நீருக்குள் மூழ்கினாள். மேகம் கருத்தது. தூறல்கள் விழத் துவங்கின. மீன்காரன் பிடித்த மீன்களுடன் கிளம்ப ஆயத்தமானான்…

ஏரியம்மா நீரின் மேல்பரப்பிற்கு வந்து, “பதில் கேட்டுட்டுப் போ!” என்றாள்.

“இல்லை வேண்டாம்!! மழை வந்துருச்சு! நான் கிளம்புறேன். புள்ள பொறக்கும்னு நீ சொன்னதே எனக்கு சந்தோசம். மழை வந்ததைப் போல் அதுவும் நடக்கும்குற நம்பிக்கையோடு வாழ்ந்துட்டு போறேன்.” என்று சொல்லியவாறே, கற்களை எடுத்து கைலியில் முடிந்து கொண்டு, தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு நடக்கத் துவங்கினான்…

மழை பெருகத் துவங்கியது, கூடைக்குள்ளிருந்த மீன்கள் மழையில் நனைந்தபடி மீன்காரனோடு பயணப்பட்டன. கூடைக்குள் துள்ளிய மீன்களின் கொண்டாட்டமும் துக்கமும் மீன்காரனின் தலையிலிருந்து நீரூற்றாய் சிதறிக் கொண்டிருந்தது.

* பிளா-செதில் வழக்கு சொல்

******

yorkerguru@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button