கடலில் மூழ்கும் சூரியன்
என்னால் கடந்து செல்ல முடியாத
ஒரு கடலின் கரையில்
உன்னிடம்
கடனாகக் கேட்ட இந்த மாலைப்பொழுது
மெல்ல மடிந்து கொண்டிருக்கிறது
நட்சத்திரங்களை மின்மினியாக்கும்
பேரிருளின் வாயிலில் நான்
நின்று கொண்டிருக்கிறேன்
மறந்து விடாதே!
இந்த மாலை மீதமிருக்கிறது
என்று நீ வந்தாலும்
நான் விட்டுச் சென்ற ஒரு நட்சத்திரம்
காத்திருக்கும்
சிறிது சிறிதாக இருளில் கரைந்து
நான் மறைந்ததை
அது உனக்குச் சொல்லும்.
***
மல்லிப்பூ வெள்ளிகள்
நிதம் ஒரு வானம்
நீ தேடிச் சென்ற மேகம்
கலையாத வானவில்
பூசிய உன் வண்ணம்
பாதரச நிலவில்
பாதம் வைத்த பொழுது
உன் கூந்தல் இருளில்
பூக்கும்
மல்லிப்பூ வெள்ளிகள்
மணக்கும் காற்றில்
மிதக்கும் கனவுகள்
மழையைப் பொழியும்
நிலவின் மேகங்கள்.
***
ஆணவத்தீ
தந்திரம் பற்றிக்கொண்ட
ஒரு மூளையின் கதவிடுக்கில்
கண் வைத்துப் பார்த்தேன்
எரியும் தீயில்
பொசுங்கும் உடலில்
என் கைகள்
என் கால்கள்
இதயம் உருகி வழியும் வேளையில்
மூளை சொன்னது
நான் பற்ற வைத்தேன்
நீ எரிகிறாய் என்று.
***
வாழ்வை கொண்டாடு
நாளைய மழைத்துளி
என் கைகளில் விழலாம்
அதற்கு முன் இன்று
என் கைகளில் ஏந்தியிருக்கும்
இந்த நீரை நான்
பருக வேண்டுமா?
இல்லை
சிந்த வேண்டுமா?
மன்னிக்கவும்
சேமிக்கவோ, கொடையளிக்கவோ
இது நேரமில்லை
அதை நான்
விரும்பவும் இல்லை.
******