
1. “நல்ல பாட்டு சார்” என்று சொல்லி ஒலியைச் சிறிது கூட்டி வைத்தான் சுமன். அது எனக்கு மிகவும் பிடித்த பாடல்தான். ஆனால் இன்று என் கவனம் அதில் செல்லவில்லை.
“முதல் சரணத்துக்கு முன்னாடி வர வீணை இசை என்னமா இருக்கு? இப்படி எல்லாம் எப்படி இசையமைக்க முடியுது?” என்றான் மீண்டும் என் கவனத்தைக் கோர. அவனும் இப்போதெல்லாம் பல்லவி, சரணம், இடையிசை, முகப்பிசை, ஆலாபனை என்று கொஞ்சம் பேசக் கற்றுக்கொண்டுள்ளான். ஆனால் அவனால் ஒலியைக் கொண்டு இசைக்கருவியை அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அவன் சொன்ன அந்தப் பாடலில் வந்தது வீணை அல்ல சித்தார் என்று நான் சொல்லி இருக்க வேண்டும். இப்போதிருக்கும் மனநிலையில் எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. காரில் பயணம் செய்யும் போது பாட்டு கேட்காமல் நான் செல்வதில்லை. ஒவ்வொரு பாடலைப் பற்றியும் சிலாகித்துக் கொண்டே பயணம் செய்வேன். குறிப்பாக இசைக்கருவிகள் மீது எனக்குத் தீராத ஆர்வம். ஒவ்வொரு இசைக்கருவியையும் துல்லியமாக அடையாளம் கண்டுகொள்வேன். சிறு வயதிலிருந்து என் காதுகளுக்குக் கொடுத்த பயிற்சி இது.
சுமனுக்கு நான் இப்படி இருப்பது ஆச்சர்யமாக இருந்திருக்க வேண்டும். அந்தப் பாடல் முடியும் வரை அவனும் எதுவும் பேசவில்லை. செங்கல்பட்டு தாண்டிச் சென்றுகொண்டிருந்தோம். நெடுஞ்சாலையின் விளக்கொளியில் சீரான வேகத்தில் கார் போய்க்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஒரு தேநீர்க்கடையில் வண்டியை நிறுத்தினான் சுமன்.
“டீ சாப்பிடலாமா சார்?”
“வேண்டாம் சுமன். நீங்க சாப்பிட்டு வாங்க.”
“இஞ்சி டீ இங்க நல்லா இருக்கும் சார். ரெண்டா சொல்லிடவா?”
அவன் விடுவதாக இல்லை.
“சரி சொல்லுங்க” என்றபடி காரிலிருந்து இறங்கி நின்றேன். இரண்டு இஞ்சி டீயுடன் வந்தான். ஒன்றை வாங்கிக்கொண்டேன். கையில் வைத்துக்கொண்டு சிறிது நேரம் அப்படியே நின்றேன்.
“இன்னும் ஒரு நாலு மணி நேரத்துல போயிடலாம் சார். டீ சாப்பிடுங்க சார்” என்றான். அப்போதுதான் கவனித்தேன் என்னால் அவனும் அருந்தாமல் இருக்கிறான் என்று. அப்போதும் நான் எதுவும் பேசாதிருந்தது நிச்சயமாய் அவனுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
“என்ன சார் ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றான்.
“ஒண்ணும் இல்ல சுமன். வாங்க கார்ல போய்கிட்டே பேசலாம்.”
2. ஜன்னலை ஏற்றிவிட்டு ஏ.சி.யைக் கொஞ்சம் அதிகமாக வைத்தான். பாடலை மெல்ல ஒலிக்க விட்டான். நான் ஏ.சி. வேண்டாமென்றும் ஜன்னலை இறக்கும்படியும் சொன்னேன். இரவுக்காற்று வேகமாக வீசியது.
“சுமன்… ஒரு மனுஷனுக்கு வீடுங்கறது எவ்வளவு முக்கியம்னு நினைக்கிறீங்க?”
“குடும்பத்தை சொல்றீங்களா? இல்ல வீட்டைச் சொல்றீங்களா?”
“வீடத்தான் சொல்றேன்.”
“குடும்பம்தான் சார் ஒரு மனுசனுக்கு ரொம்ப முக்கியம். வீடுங்கிறது வெறும் செங்கலும் சிமிண்டும் மட்டும்தான் சார். ஒருத்தன் தன்னோட குடும்பத்துக்காகத்தான் வீடு வாங்கனும்னே நினைக்கிறான்.”
“அந்த வீட்டோட நினைவுகள் அவனுக்கு எவ்வளவு தூரம் முக்கியம்?”
“திரும்பவும் அதே பதில்தான் சார். அந்த வீட்டுக்குன்னு தனியா நினைவு எதுவும் இல்லை. அங்க இருக்கிற ஒவ்வொரு மனுசனும் ஒவ்வொரு நினைவைக் கொடுத்துட்டுப் போயிருப்பான். அந்த நினைவ ஏதோ ஒரு பொருள் மேல ஏத்தி வச்சிக்கிறோம்.”
“புரியலையே சுமன்.”
“என் வீட்டுல ஒரு பெண்டுலம் கெடியாரம் இருக்கு. அது என்னோட சித்தப்பா எங்க அப்பா வீடு குடி போகும்போது கொடுத்தது. அது இப்போ ஓடுறதே இல்லை. ஒடஞ்சு போச்சு. ஆனாலும் என் ரூம்ல அதை நான் பத்திரமா வச்சிருக்கேன். ஏன்னா அது என் சித்தப்பாவோட நினைவு. அது மாதிரிதான் ஒரு வீட்டுல ஹாலும் ரூமும். அங்க நின்ன மனுசங்கதான் நமக்கு அந்த எடத்த முக்கியமானதா மாத்துறாங்க.”
அவன் சொல்வது இப்போது எனக்குப் பிடிபடத் தொடங்கியது. நினைவுகள் வேகமாக மேலெழும்பின.
3. எங்கள் வீடு இருந்தது ஒரு அக்ரஹாரத் தெருவில். கூட்டுக் குடும்பமாகத்தான் இருந்தோம். எங்கள் வீட்டில் மொத்தம் ஐந்து குடும்பங்கள். நான், அம்மா, அப்பா, அக்கா – நாங்கள் நால்வரும் ஒரு குடும்பம். மூன்று சித்தப்பாக்கள், சித்திகள், அவர்களது பிள்ளைகள் தனித்தனி குடும்பம். தாத்தாவும் அப்பாயியும் ஒரு குடும்பம். ஆரம்பத்தில் நாங்கள் ஒன்றாகத்தான் ஆக்கிச் சாப்பிட்டோம். அப்பாவுக்கும் சித்தப்பாக்களுக்கும் நடந்த ஏதோ சண்டைக்குப் பிறகு தனித்தனி அடுப்பில் தனித்தனி சமையல் என்றானது. தாத்தாவுக்கும் அப்பாயிக்கும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு குடும்பம் என்று முறை வைத்து பொறுப்பை எடுத்துக்கொண்டனர். தாத்தா எப்போதும் வெளியில் சுற்றிக்கொண்டிருப்பார். அதனால் அவர் பற்றிய நினைவுகளும் குறைவு. அப்பாயி பைபிளை சுமந்துகொண்டு கையில் ஒரு ஜெபமாலையை உருட்டிக்கொண்டு எப்போதும் ஏசுவை ஜெபம் செய்தபடியே இருப்பார்.
எங்கள் வீட்டுக்கு எதிர்வீடு பாரியின் வீடு. ஐந்து கட்டு உள்ள பெரிய வீடு. பாரி, அவன் தாத்தா பாட்டி மூவர் தான் அந்த வீட்டில். அந்த வீட்டுக்கு வாத்தியார் வீடு என்று பெயர். பாரியின் தாத்தாவை நாங்கள் ‘வாத்தியார் தாத்தா’ என்றுதான் சொல்வோம். ஆனால் அவரிடம் நேரில் பேசியதே கிடையாது. வாத்தியார் தாத்தா ரொம்பவும் கோபக்காரர். எப்போதும் கடுகடுவென்ற முகத்துடனே இருப்பார். பாரியை அவர் திட்டுவது வெளியில் எங்கள் வீடு வரை கேட்கும். அவர் ஓய்வு பெற்று விட்டதால் எப்போதும் வீட்டிலேயே இருப்பார். பாரியை எங்களுடன் விளையாட அனுப்பவே மாட்டார். பாரியும் வெளியில் அதிகம் வரவே மாட்டான்.
பாரியின் அப்பாவுக்கும் அவன் தாத்தாவுக்கும் ஆகாது. அதனால் பாரி சிறு வயதிலிருந்தே அவன் தாத்தா வீட்டில்தான் வளர்ந்தான். அவனுடைய அம்மா, அப்பா, தம்பி மூவரும் வேறு வீட்டில் இருந்தனர். அவ்வப்போது அவன் அப்பாவும் தம்பி வல்வில் ஓரியும் இங்கு வந்து செல்வர். அவனுடைய அம்மாவை நான் ஒன்றிரண்டு முறைதான் பார்த்திருக்கிறேன். அவர் முகம் கூட இப்போது நினைவில் இல்லை. ஒல்லியாக இருப்பார் என்பது மட்டும் நினைவிருக்கிறது.
அப்பாயிக்கு நன்றாக சுளுக்கு எடுக்கத் தெரியும். தெருவில் யாருக்கு சுளுக்கு என்றாலும் அப்பாயியிடம் தான் வருவார்கள். இரண்டே நிமிடத்தில் சுளுக்கு எடுத்துவிடுவார். அதற்குப் பணம் எதுவும் வாங்க மாட்டார். ஒருமுறை பாரிக்கு சுளுக்கு என்று அவன் பாட்டி அப்பாயியிடம் அழைத்து வந்தார். அப்போதுதான் அவன் முதல்முறை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபடியால் அவனுக்கு வீட்டைச் சுற்றிக் காட்ட ஆசைப்பட்டேன். சுளுக்கு எடுத்து முடித்ததும் அவனை அழைத்துக்கொண்டு வீட்டைச் சுற்றிக் காண்பித்தேன். அவன் சிறிதும் ஆர்வம் இல்லாமல் பார்த்தான். அது எனக்கு கோபத்தை உண்டாக்கியது. தோட்டத்திலிருந்து இரண்டு எலுமிச்சையை பறித்து அவனிடம் கொடுத்தேன். அதை மட்டும் ஆர்வமாக வாங்கிக்கொண்டான். அவனுக்கு எங்கள் வீடு ஏன் பிடிக்கவில்லையென்று யோசித்துப் பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை. அவனிடமே ஒருநாள் கேட்டேன்.
“உங்க வீடு ரொம்ப இருட்டா இருக்கு ஜெயராஜு. எப்படி இவ்ளோ இருட்டுல இருக்கீங்க?” என்றான். எனக்கு கோபம் வந்தது. அவன் வீடு எப்படித்தான் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
வாத்தியார் தாத்தா வீட்டில் இல்லாத ஒருநாள் பாடத்தில் சந்தேகம் என்று சொல்லி அவன் பாட்டியை அழைத்தேன். அவர் உள்ளே அழைத்துப்போனார். நிலைக்கதவைத் தாண்டி சிறிய ரேழி. வலதுபக்கம் ஓர் அறை. ரேழியைத் தாண்டி முற்றம். எங்கள் வீட்டை விட பெரிய முற்றம் தான். முற்றத்துக்கு வலப்பக்கம் கூடம். மிக நீண்ட கூடம். அங்கே அமர்ந்து அவன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான். எப்போதும் வீட்டில் அவன் படித்துக்கொண்டே இருப்பான் என்று என் அம்மாவும் அப்பாவும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவன் அப்போது படிக்கவில்லை. இதை அம்மாவிடம் போய் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
ஆங்கிலத்தில் ஒரு சந்தேகம் கேட்டேன். பாரி மிகவும் ஆர்வமாக அதைச் சொல்லிக்கொடுத்தான். எனக்கு நன்றாகப் புரிந்தது. எனக்கு அப்போது அவனை மிகவும் பிடித்துப் போனது. ஆனாலும் நான் உள்ளே சென்றபோது அவன் தொலைக்காட்சி பார்த்ததை அம்மாவிடம் சொல்லத்தான் வேண்டும்.
“உன் வீட்டை சுற்றிக் காண்பிக்கிறாயா?” என்று கேட்டேன். சரி என்று சொல்லி அழைத்துப் போனான். கூடத்தைக் காண்பித்தான். சுவற்றில் நிறைய வள்ளலார் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அப்போது அவர் யார் என்று எனக்குத் தெரியாது. வாத்தியார் தாத்தாவின் அப்பா என்று நானாக நினைத்துக்கொண்டேன். பச்சை நிறத்தில் ஒரு பீரோ இருந்தது. அது அவனுடைய தாத்தாவின் பீரோ என்றும் அதில் முழுக்க முழுக்கப் புத்தகங்களாக அடுக்கி வைத்திருப்பார் என்றும் அதைத் திறப்பதற்கு அவன் பாட்டிக்கே அனுமதி இல்லை என்றும் சொன்னான்.
கூடத்திலிருந்து முற்றத்தில் இறங்க இரண்டு ஓரங்களிலும் படிகள் இருந்தன. கூடத்துக்கும் முற்றத்துக்கும் நடுவே சிறிய பூட்டிய அறை இருந்தது. அது அவனுடைய அம்மாவும் அப்பாவும் வரும்போது தங்குவதற்கானது என்றான்.
கூடத்துக்கு பின்னால் அடுப்பங்கரை. அதுவும் பெரிதாகத்தான் இருந்தது. அங்கேயும் ஒரு முற்றம் இருந்தது. மேலே கம்பி வேலி போட்டு கட்டி இருந்தார்கள். அதற்குப் பின்புறம் கொல்லை. மாடு கட்டி வைப்பதற்காக மூன்று கற்கள் இருந்தன. ஆனால் மாடுகள் இல்லை. நடுவில் ஒரு பெரிய கிணறு. அதற்குப் பின்னால் குளியலறையும் கழிப்பறையும் தனித்தனியாக இருந்தன. அதற்கும் பின்னால் புதர் மண்டிய பெரிய கொல்லை. அதை அவன் ‘பப்பாளி கொல்லை’ என்றான். அங்கே பப்பாளி மரங்கள் நிறைய இருந்தன. ஆனால் உள்ளே நுழைய முடியவில்லை. தூரத்தில் ஒரு மரத்தைக் காண்பித்து அதுவரைக்குமானது அவர்கள் கொல்லை என்றான். எங்கள் தெருவில் எல்லோர் வீட்டிலும் பின்னால் கொல்லையும் சிறு தோட்டமும் இருக்கும். எங்கள் கொல்லையில் எலுமிச்சை, மாதுளை, நார்த்தை மூன்றும் வளர்த்து வந்தோம். ஆனால் பாரி வீட்டில் அப்படி இல்லை. அவர்கள் வீட்டுக்குப் பின்னால் மிகப்பெரிய கொல்லை இருக்கிறது. அதை எதற்கும் பயன்படுத்தாமல் போட்டு வைத்திருந்தனர்.
வரும்போது வேறு வழியாக அழைத்து வந்தான். கொல்லையிலிருந்து மூன்று ரேழிகள் தாண்டி முற்றத்துக்கு வந்து சேர்ந்தோம். அந்த மூன்று ரேழிகளிலும் சாக்கடைகள் அடைத்து எலிப்புழுக்கை வாடை அடித்தது.
அவன் சொன்னதுபோல அவன் வீடு எங்கள் வீடு போல இருட்டாக இல்லை. மிகவும் வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது. அங்கே இருந்தது போல பெரிய பெரிய உத்திரங்களும் தூண்களும் எங்கள் வீட்டில் இல்லை. அவனுடைய வீடு எனக்கு ரொம்பவும் பிடித்துப்போனது. அந்த வீடு எங்கள் வீடாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அப்போது ஆசைப்பட்டேன்.
4. நான் நான்காவது படித்துக்கொண்டிருந்த போது வல்வில் ஓரியையும் வாத்தியார் தாத்தா இங்கே அழைத்து வந்து விட்டார். ஓரி வந்த பிறகுதான் பாரியும் வெளியில் கொஞ்சம் வர ஆரம்பித்தான். ஓரிக்கு விளையாட்டில் மிகவும் ஆர்வம். எங்களுடன் கிரிக்கெட் ஆட வருவான். அவனுடன் பாரியும் வரத் தொடங்கினான். எங்கள் வீட்டு மாப்பிள்ளை திண்ணையில் செங்கமண்ணால் ஸ்டம்ப் வரைந்து விளையாடுவோம். வாத்தியார் தாத்தா தூங்கும்போது மட்டும்தான் அவர்கள் விளையாட வருவார்கள். எங்கள் வீட்டில் நாங்கள் நிறைய பேர் இருந்ததால் பொழுதும் விளையாடிக்கொண்டேதான் இருப்போம். அவ்வப்போது தாத்தா விழித்துவிட்டாரா என்று பார்த்து வரச்சொல்லி ஓரியை அனுப்புவான் பாரி. எங்களில் யாராவது சிக்ஸர் அடித்தால் சமயங்களில் பாரியின் வீட்டு முற்றத்தில் போய் விழும். பாரி சென்று எடுத்து வருவான். அவனுடன் சில சமயம் நானும் சென்றிருக்கிறேன். முற்றத்தின் சாக்கடையில் விழுந்த பந்தை சத்தமில்லாமல் எடுத்து வந்து ஆட்டத்தைத் தொடர்வோம்.
வாத்தியார் தாத்தா வடலூர் போய்விட்டால் இரண்டு மூன்று நாள் கழித்துதான் வருவார். அப்போதெல்லாம் நாங்கள் பாரி வீட்டு வாசலில் விளையாடுவோம். கபடியும் கிரிக்கெட்டும் மாற்றி மாற்றி விளையாடுவோம். இரவு ஏழு மணிக்கு மேல் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். நான் எங்கள் வீட்டுக்கு வர ஒன்பது மணி ஆகிவிடும். ஏழாம் வகுப்புக்குப் பிறகு எங்களுடன் விளையாடுவதை இருவரும் நிறுத்திவிட்டனர். நாங்களும் சிலமுறை கேட்டுப்பார்த்து விட்டு விட்டோம்.
5. சொன்னதுபோலவே காலை 4:30 மணிக்கு கும்பகோணம் வந்து சேர்ந்தான் சுமன். முன்பதிவு செய்திருந்த ஹோட்டலுக்குச் சென்றோம். சுமன் காரிலேயே தூங்குவதாகச் சொன்னான். எடுத்திருப்பது இரண்டு சிங்கிள் பெட் ரூம் தான் என்றும் தாரளாமாக உள்ளேயே தூங்கலாம் என்றும் வற்புறுத்தி அவனை அழைத்துச் சென்றேன். ஏழரைக்கு எழுப்பி விடுவேன் என்று சொல்லி நானும் தூங்கினேன்.
விழித்தபோது மணி ஒன்பது. சுமனைப் பார்த்தேன். அவன் குளித்து முடித்து செல்போனில் ஹெட்செட் போட்டுக்கொண்டு எதையோ ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் “ஏழரைக்கு உங்களை எழுப்புனேன் சார். நீங்க இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்னு சொல்லி தூங்குனீங்க. சரின்னு அதுக்கப்பறம் எழுப்பல” என்றான் சிரித்துக்கொண்டே. எனக்கு அசிங்கமாகப் போய்விட்டது. அவனை நான் எழுப்புவதாகச் சொல்லி இருந்திருக்க வேண்டாம்.
அரை மணி நேரத்தில் தயாரானேன். மீண்டும் இருவரும் காரில் பயணமானோம். கும்பகோணத்திலிருந்து பாபநாசம் பதினைந்து கிலோமீட்டர். இருபது நிமிடங்களில் போய்விடலாம்.
“உங்களுக்கு பாபநாசம்லாம் தெரியுமா சுமன்?” என்றேன்.
“உள்ளப் போனது இல்ல சார். சில தடவை இந்த வழியாப் போயிருக்கேன். போறதுக்குத் தேவை வரல. இங்க ஒரு கோயில் இருக்காமே. கோயிலுக்குள்ள பெரிய நெற்களஞ்சியம் இருக்குமாமே?” என்று ஆர்வமாய் கேட்டான்.
“ஆமாம். திருப்பாலைத்துறைல இருக்கு. பாலைவனநாதர் கோயில்ன்னு பேரு. நாங்க தவளாம்பாள் கோயில்ன்னு சொல்லுவோம்” என்றேன்.
“பாக்கணும் சார் ஒருநாள்.”
“அதுக்கென்ன. இன்னைக்கே பாக்கலாம். வேலை முடியட்டும். இங்க ஒரு மாதா கோயில் இருக்கு. அதுவும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். அப்பறம் 108 சிவாலயம் கேள்விப்பட்டிருப்பீங்க. அதுவும் இங்கதான் இருக்கு.”
“நீங்க வந்த வேலையை முடிங்க சார். நேரம் இருந்தா பாப்போம்.”
“நான் இன்னைக்கு ஒரு வீடு வாங்கப் போறேன் சுமன்.”
“அட… சூப்பர் சார். அதுனாலதான் நேத்து வீட்ட பத்திப் பேசுனீங்களா?”
“நான் எங்கப் பேசுனேன்? நீங்கதான் பேசுனீங்க.”
“கொஞ்சம் அதிகப்படியா பேசிட்டேனோ சார்?”
“அதெல்லாம் இல்ல சுமன். நீங்க சொன்னது ஓரளவு உண்மைதான். மனுசங்கதான் வீட்டுக்கு நினைவுகளைத் தராங்க. ஆனாலும் சில சமயம் ஏதோ ஒரு வகையில ஒரு வீடு நமக்குக் காரணமே இல்லாம பிடிச்சுப் போயிடுது. சில வீடு பிடிக்காமலும் போயிடுது. நாங்க இருந்த வீட்டுக்கு எதிர்வீட்ட தான் நான் வாங்கப்போறேன்.”
“உங்க வீடு என்ன சார் ஆச்சு? சொந்த வீடுதான அது?”
“நான் நாலாவது படிக்கும்போது என் தாத்தா போயிட்டார். நான் ஒன்பதாவது படிக்கும்போது என் அப்பாயியும் போயிட்டாங்க. அவங்க இருந்தவரைக்கும் நாங்க அஞ்சு குடும்பமும் ஒண்ணாத்தான் இருந்தோம். அதாவது ஒரே வீட்டுல. தனித்தனி ரேஷன் கார்டு, தனித்தனி அடுப்பு, தனித்தனி ஈ.பி., ஆனாலும் ஏதோ இருந்தோம். அப்பாயி போனதுக்கப்பறம் நாங்களும் தனித்தனி வீடு பாத்துட்டு போயிட்டோம். அப்புறம் ஒரு இரண்டு மூணு வருஷம் கழிச்சு அந்த வீட்டை எங்க அப்பாவும் சித்தப்பாவும் சேந்து வித்துட்டாங்க. எனக்குப் பெருசா விவரம் ஒண்ணும் தெரியாது. பத்து வருஷம் கழிச்சு இன்னைக்குதான் ஊருக்கு வரேன்”.
“ஓகோ… அப்போ இன்னைக்கு வீடு பேசிமுடிக்கப் போறீங்களா?”
“பேசுறதுக்கு ஒன்னும் இல்ல சுமன். போன்லயே பேசியாச்சு. இன்னைக்குப் பத்திரப்பதிவு தான்”.
“அவ்ளோ நம்பிக்கையான ஆளுங்களா சார்?”
“ஆமா. வாத்தியார் தாத்தான்னு ஒருத்தர். வாங்க. அறிமுகப்படுத்தறேன்”.
அக்ரஹாரத்துக்குள் கார் நுழைந்தபோது என்னை அறியாமல் உணர்ச்சி மேலிட்டது. அந்த அரச மரம் இன்னும் அப்படியே இருக்கிறது. அதன் எதிரேயுள்ள சிவன் கோயில் கூட. வீடுகள் எல்லாம் மாறியிருக்கின்றன. நிறைய வீடுகளை இடித்து மாடியாகக் கட்டியுள்ளனர். பலரும் புதிய முகங்களாக இருக்கின்றனர். எப்போதும் வாசலில் உட்கார்ந்திருக்கும் ஷோபா மாமியைக் காணவில்லை. பல வீடுகளின் திண்ணைகளை மறைத்து சுவர் எழுப்பியுள்ளனர். அதோ அதுதான் என் வீடு. இல்லை. என் வீடு இல்லை. இடித்துப் புதிதாகக் கட்டியிருக்கிறார்கள். மொத்தமாக மாறிவிட்டது. என் வீடு எங்கே? நினைவுகள் கிளம்ப எத்தனித்த போது… அதோ வாத்தியார் தாத்தா வீடு. வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினேன். அந்த வீடு இன்னும் அப்படியே இருக்கிறது.
பாட்டியை அழைத்தேன். வாத்தியார் தாத்தாவை அழைப்பதற்கு தைரியம் இல்லை. பாட்டி வெளியே வந்தார். என்னை ஞாபகம் வைத்து அழைத்தார். உள்ளே சென்றேன். தாத்தா ஈஸி சேரில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். திருவருட்பா தான். என்னைக் கண்டதும் புத்தகத்தை மூடி வைத்து எழ முற்பட்டார். நான் வேண்டாம் என்று கையமர்த்தி அவருக்கு எதிரே நானும் சுமனும் அமர்ந்தோம். சுமனை அறிமுகப்படுத்தினேன். பாட்டி காப்பி எடுத்து வந்தார்.
“தம்பி… உங்க வேலைலாம் எப்படிப் போகுது?”
“நல்லாப் போகுது தாத்தா”.
“வீட்ல சௌக்கியமா?”
“நல்லா இருக்காங்க தாத்தா”.
அதன்பின் என்ன பேசுவதென்று இருவருக்கும் தெரியவில்லை.
“சரி தம்பி. ஒரு பத்து நிமிஷம். ரெடி ஆகி வந்துட்றேன். போலாம்”.
“பொறுமையா வாங்க தாத்தா”.
வீட்டைப் பார்த்தேன். வெளியிலிருந்து பார்த்தபோது எதுவும் தெரியவில்லை. ஆனால் உள்ளே மிகவும் மோசமான நிலையில் இருந்தது. 130 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வீடல்லவா? மண் சுவர் என்பதால் பல இடங்களில் பெயர்ந்து சுவரே சாய்ந்து விடும்போல இருந்தது. இரண்டு மழைக்குத் தாங்காது. நிச்சயம் வீட்டை இடித்துக் கட்டினால் மட்டும் தான் சரி வரும்.
6. பத்திரப்பதிவு முடிந்தது. என் பெயருக்கு வீட்டை எழுதி ஆயிற்று. மூலப்பத்திரமும் ஒரு ஐயரிடம் இருந்து வாத்தியார் தாத்தா வாங்கிய பத்திரமும் புதிய பத்திரமும் எல்லாம் சரியாக இருக்கின்றன. பதிவு அலுவலகத்துக்கு எதிரே இருந்த பெரிய அரசமர நிழலுக்கு வந்தோம். அவர் ஏதோ பேச வேண்டும் போல் தோன்றினார். கொஞ்சம் தைரியமாக நானாக பேச்சைத் தொடங்கினேன்.
“கேட்க வேண்டாம்னு தான் நினைச்சேன். ஏன் தாத்தா திடீர்ன்னு வீட்டை விக்க வேண்டிய சூழ்நிலை?”
“தம்பி… உங்களுக்குத் தெரியும்ல நான் இந்த ஊருல எவ்ளோ மதிப்போட இருந்தேன்னு. ஆனா எனக்குன்னு வந்து பொறந்தான் பாருங்க.”
பாரியின் அப்பாவைத்தான் சொல்கிறார்.
“அவன் ஆரம்பத்திலேர்ந்தே சரியில்லை. அவன் பொண்டாட்டியும் சரியில்ல. அதுனாலதான் பாரியை நான் வளர்க்க ஆரம்பிச்சேன். அப்புறம் ஓரியையும் நானே வளர்த்தேன். இவன் என்னமோ பண்ணிட்டு போட்டும் தம்பி. ஆனா எல்லார்கிட்டயும் கடன் வாங்கி அதை அடைக்க முடியாம இன்னொரு கடன் வாங்கி இப்படியே வாங்கி வாங்கி ஊரு முழுக்கக் கடன். எனக்கு எதுவும் தெரியாது தம்பி. ஆனா இன்னைக்கு என்கிட்ட வந்து எல்லாரும் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அசிங்கமாப் போச்சு தம்பி. ஏலு லட்ச ரூபா கடன் வாங்கியிருக்கான் தம்பி. நம்ப முடியுதா உங்களால? என்னால நம்பவே முடியல. அவனுக்கு எதுக்கு தம்பி அவ்ளோ கடன்? உருப்படியாவும் எதுவும் பண்ணலியே. கடன் கொடுத்தவ ஒருத்தி என்ன கேட்ட கேள்வியை என்னால சாகுற வரைக்கும் மறக்கவே முடியாது தம்பி. ஒருத்தன் என்னைக் கட்டையை ஓங்கி அடிக்க வந்தான் தம்பி” என்று சொல்லியபோது அவர் கண்கள் கலங்கியது. வாத்தியார் தாத்தாவின் கடுகடுவென்ற முகம் தொலைந்து சில மாதங்கள் இருக்கும்.
“இந்த வீடு என் சம்பாத்தியத்தில வாங்குன வீடு தம்பி. எனக்கு இந்த வீட்டு மேல பிடிப்புல்லாம் ஒன்னும் இல்லை. ஆனா இங்கேயும் எனக்கு நிறைய நினைவுகள் இருக்கு தம்பி. என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் பார்த்தசாரதிக்கும் (பாரியின் அப்பா) இந்த வீட்டுலதான் கல்யாணம் முடிச்சேன். பார்த்தசாரதியோட எத்தனையோ சண்டை, வருஷாவருஷம் தைப்பூசத்தபோ திண்ணையில இலை போட்டு அன்னதானம் பண்ணது, கிணத்துமேட்டுல உக்காந்து ராஜேந்திரன்கிட்ட அரசியல் பேசிகிட்டே முடி வெட்டிக்கிட்டது, ராத்திரி நேரத்துல முத்தத்துல உக்காந்து என் பொண்டாட்டியோட பேசுனது… இப்படி எத்தனையோ நினைவுகள் தம்பி. அந்த நினைவுகள் தான் என்னை இப்போ துன்புறுத்துது. அனாலும் இதைச் சீக்கிரமே கடந்துடுவேன்.”
“தம்பி… எனக்கு வீடு பெருசு இல்ல தம்பி. மானம் தான் பெருசு. வள்ளலார் சொல்றாரு ‘மானமெல்லாம் போன வழி விடுத்தேன்’னு. ஆனா எனக்கு இன்னும் அந்தப் பக்குவம் வரல தம்பி. என்கிட்ட இப்போ இருக்கிறது மானம் ஒண்ணுதான். நாளைக்கு என்னைப் பார்த்து ‘இந்த வாத்தியார்க்கு தன் பையன விட வீடு பெருசாப் போச்சுன்னு’ யாரும் சொல்லிடக்கூடாது தம்பி. அதுனாலத்தான் இதை விக்கிறேன்” என்று சொல்லி முடித்தபோது அவர் உடைந்து விடுபவர் போல இருந்தார்.
“பாரி கொஞ்சம் உதவி பண்றான். ஆனா பத்தல. சென்னையிலதான் இருக்கான். உங்களை வந்து பாக்கச் சொல்றேன். நிறைய பேர் அவங்க குடும்பத்துக்காக வீடு வாங்குவாங்க. ஆனா நீங்க என் குடும்பத்துக்காக வாங்கியிருக்கீங்க. ரொம்ப நன்றி தம்பி” என்றார்.
அவர் சொன்னதில் பாதிதான் உண்மை. அவருக்காகத்தான் நான் அந்த வீடு வாங்க ஒப்புக்கொண்டேன். ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல. சிறு வயதில் அந்த வீடு என் வீடாக இருக்கக்கூடாதா என்ற அற்ப ஆசை நிறைவேறுகிறது என்பதும்தான்.
“நீங்க இப்போ எங்க சார் இருப்பீங்க? நீங்க வேணும்னா இந்த வீட்லயே இருங்க சார். நான் இங்கே இப்போ வரப்போறது இல்லை.”
“பரவாயில்லை தம்பி. எனக்கு இந்தக் கடனெல்லாம் முடிஞ்சாப் போதும். பக்கத்துத் தெருவுல ஒரு வீடு பாத்திருக்கேன். அங்கப் போயிடுவேன்.”
அதற்கு மேல் என்னாலும் பேச முடியவில்லை.
7. பழைய வீட்டை இடித்துப் புதிதாக மாடி வீடு கட்டி விட்டேன். வாசலில் இருந்த நீளமான திண்ணையையும் மாப்பிள்ளை திண்ணையையும் மட்டும் இடிக்கவில்லை. பின்னால் இருந்த கிணற்றையும் அப்படியே விட்டுவிட்டேன். பழைய வீட்டின் உத்திரங்கள், செங்கற்கள், ஆணிகள் எல்லாவற்றையும் கொத்து வேலை செய்தவர்களை எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டேன். ராஜநிலைக்கதவை கிணற்றுக்குப் பின்னால் வைத்திருக்கிறேன். பப்பாளிக் கொல்லையை சுத்தம் செய்து தோட்டம் அமைத்திருக்கிறேன். இவையெல்லாம் பாபநாசத்திலேயே வசிக்கும் என் நண்பன் சிவநேசனின் மேற்பார்வையில்தான் நடந்தன. நான் இரண்டொரு முறை மட்டும் வந்து போனேன். ஏனோ ஒரு மனவிலக்கம்.
சென்னைதான் நிரந்தரம். இங்கு எப்போதாவதுதான் வந்து போகப்போகிறேன். இதை யாரிடமாவது வாடகைக்கு விடலாம். வாத்தியார் தாத்தாவிடமே மீண்டும் கேட்டுப் பார்க்கலாம். ஒப்புக் கொள்வாரா என்று தெரியவில்லை.
வருகிற வெள்ளிக்கிழமை புதுமனை புகுவிழா வைத்திருக்கிறேன். கடைசி நேர பணிகளுக்காக இப்போது வந்திருக்கிறேன்.
“வீடு ரொம்ப அமைப்பா இருக்கு சார். நல்ல காத்தோட்டமாவும் இருக்கு.” என்று சுமன் சொன்னபோது “ஆமா. எல்லாத்துக்கும் சிவநேசன் தான் காரணம்” என்றேன்.
“ஆனா முன்னாடி இருக்கிற இந்த ரெண்டு திண்ணைதான் கொஞ்சம் பொருந்தாத மாதிரி இருக்குது” என்றான்.
“இல்ல சுமன். இந்த வீட்டுக்கு அடையாளமே இந்தத் திண்ணைதான். இதுதான் நல்லாயிருக்கு” என்றேன்.
மாப்பிள்ளைத் திண்ணையில் வந்து உட்கார்ந்தேன். எதிரே பார்த்தேன். என்னுடைய வீடு இப்போது எதிர்வீடாகி இருந்தது.
நான்கூட என் பெற்றோர்களிடம் பலதடவைகள் சொல்லவேண்டும் என்று நினைப்பேன் ராகுவும் டிவி பார்ப்பதை ( பழைய நினைவுகளை நினைவு படுதியதர்க்கு நன்றி) சிறுகதை அழகு