
தலைமைச் செயலகம்.
காலை 9 மணிக்கு மேல் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்களுக்கு மத்தியில் திடீரென பதற்றம் அதிகரித்திருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காவலர்கள் மத்தியில் இருந்த பரபரப்பு எதுவுமின்றி ஊடகவியலாளர்களின் அறை அமைதியாக இருந்தது.
அறையின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பேசும் மின் உயிரி, மவுனமாக செய்திகளை உமிழ்ந்து கொண்டிருந்தது. தொலைக்காட்சி திரையில் ஓடிக் கொண்டிருந்த வரிச் செய்திகளை பார்த்துக் கொண்டே, செய்தியாளர்கள் வழக்கம் போல அரசு வட்டார போக்குகளை அசை போட்டுக் கொண்டிருந்தனர்.
“நவ்ரங்…வா ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்…” செய்தியாளர் ஐவணம் வற்புறுத்தினார். “இன்னிக்கு என்ன நியூஸ் இருக்கப் போகுது…? வா, டிஃபன் முடிச்சிட்டு, அப்படியே செல்ஃபி எடுத்துக்கலாம்…” – முகநூலில் செல்ஃபியை பதிவேற்றினார் நவ்ரங். அவரின் டைம் லைனில் இது மாதிரி உணவக செல்ஃபிக்கள் பிரபலம்.
காலை 10 மணிக்கு மேல், தலைமைச் செயலக ஊடக அறையில் இருந்த சில செய்தியாளர்கள் திடீரென தலைமறைவாகினர். நண்பர்கள் ஒன்றாக இருக்கும் போது, சிநேகிதியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் பாந்தமாக நழுவுபவனைப் போல அல்லாமல், எந்த ஜீவனும் அருகில் வந்து விடக் கூடாது என, இரையை கவ்விக் கொண்டு தனியாக மறைவிடம் தேடி ஓடும் உயிரினம் போல, செல்போனை எடுத்துக் கொண்டு சில செய்தியாளர்கள் மறைந்தனர். அவர்களுக்கு புது தகவல் கிடைத்திருந்தது. உடனே தங்கள் அலுவலகத்துக்கு பிரேக்கிங் நியூஸை ரகசியமாக சொல்லிக் கொண்டிருந்தனர். முதல்வர் அறையில் திடீர் ஆலோசனைக் கூட்டம். இதுதான் அந்த ஸ்கூப் நியூஸ். முதல்வர் ஆலோசனை என்பது சாதாரண நிகழ்வுதான். ஆனால், விடுமுறை தினத்தில் நடந்த அவசரக் கூட்டத்தில் பங்கேற்றவர்களால், இந்தச் செய்தி முக்கியத்துவம் பெற்று விட்டது.
சில நொடிகளில் செய்தியாளர்கள் அறையில் இருந்த தொலைக்காட்சித் திரையிலும் அந்த வரிச் செய்தி தவழ்ந்தது. செய்தியாளர் நவ்ரங் வேலை செய்யும் சேனல் அது. இதனைப் பார்த்த ஐவணம் சற்று துணுக்குற்றார். இருந்தாலும் ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல், செய்தியறையை விட்டு வெளியே வந்து தனது தகவலாளியை அழைத்து, “கன்ஃபார்மா சார்..?” என்று விஷயத்தைச் சொல்லிக் கேட்டார். “ஆமாம் மேடம்…” – அந்த காவல்துறை அதிகாரியும் ஐவணத்திடம் அந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.
“ஏன் சார் முன்னாடியே சொல்லல…முக்கியமான மீட்டிங்தானே…”
“திடீர்னு எதுக்கு இந்த மீட்டிங்னு தெரியல மேடம், டிஜிபி உள்ள வரும் போதுதான் எங்களுக்கே தெரியும்…”
PRO PEOPLE TV சேனலின் இளம் செய்தியளார் ஐவணம், அவசரப்படாமல், அந்த தகவலை ஊர்ஜிதப்படுத்தி விட்டு, தனது நிறுவனத்திற்கு தெரிவித்தார். ‘விடுமுறை தினத்தில் @CMOTamilNadu தலைமையில், டிஜிபி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை #SUNDAY_MEETING’ – ட்விட்டரில் செய்தியை பதிவிட்டார் ஐவணம்.
மீண்டும் செய்தியறைக்கு வந்த ஐவணம், நவ்ரங்–கை முறைத்துப் பார்த்தார். . “ஏன் சிஎம் மீட்டிங் பத்தி சொல்லல…?”
“சொல்லணும்–னு தோணல…” – நவ்ரங் சமாளித்தார்.
இருவரும் வெவ்வேறு சேனல்களில் வேலை செய்தாலும் தலைமைச் செயலக செய்தியாளர்கள் என்ற வகையில் நல்ல நெருக்கம்தான். தவிர இருவருமே, “முற்போக்கு ஊடகவியலாளர்கள் மையம்” என்னும் அமைப்பிலும் இணைந்து பணியாற்றுகின்றனர். இருந்தாலும் நிறுவனங்களின் தொழில் போட்டி காரணமாக நட்பு தொடரும் போதே கீழறுப்பு வேலையும் தொடரும். கீரியும் பாம்பும், எலியும் பூனையும் இணைந்து பணியாற்றும் துறைதான் ஊடகம். கீழ்த்தரமான அரசியலுடன், யார் எப்போது முந்திக் கொண்டு எதிரியை வீழ்த்துவது என்று அலையும் நிலழுலக அடியாட்கள் போலத்தான் செய்தியாளர்கள். முதல்வர், டிஜிபி ஆகியோருடன் தேசிய புலனாய்வு முகமை (NIA)அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். இதுதான் அந்தச் செய்தியின் முக்கியத்துவத்துக்கு காரணம். ஆனால், எதற்காக திடீர் ஆலோசனை, ஏன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வர், டிஜிபி–யுடன் விடுமுறை தினத்தில் ஆலோசனை செய்தனர் என்பதெல்லாம் உடனடியாகப் புலப்படவில்லை.
டிவி செய்தியாளர்கள் அத்துடன் அந்தச் செய்தியை மறந்து விட்டனர்.
***
முந்தைய தினம் ஐவணத்திடம் பேசிய அதே உளவுத்துறை அதிகாரி, தற்போது அவரை தொலைபேசியில் அழைத்தார்.
“என்ன மேடம் மவுண்ட் ரோட்ல பிரச்சினை…?” அவரது குரலில் வெளிப்பட்ட உணர்ச்சி, பிரச்சினை பெரியது என்பதைக் காட்டியது.
“ஆமா சார்… மவுண்ட் ரோட் பிளாக் ஆயிடுச்சி. கிண்டில இருந்து ஸ்பென்சர் வரைக்கும் பயங்கர டிராஃபிக் ஜாம். இன்னிக்கு மண்டே வேறயா…எல்லா வெகிக்கிளும் இன்ச் பை இன்ச்சா நகருது…” ஊர்ந்து செல்லும் காரின் இயக்கத்தால் கடுப்பான ஐவணம் போக்குவரத்து நெரிசலை விவரித்தார்.
“அது இருக்கட்டும் மேடம்… என்ன பிரச்சினை…?” – டிஜிபி அலுவலகத்தில் இருந்து, தன்னுடைய உளவுக் குழுவினர் தரும் தகவல்கள் வழியே நகரை கண்காணித்துக் கொண்டிருந்த அந்த உளவுத்துறை உயர் அதிகாரி, அவருக்கு கிடைத்த தகவலின் பின்னணியை அறிந்து கொள்ள செய்தியாளரிடம் விளக்கங்களை எதிர்பார்த்தார்.
சென்னை நகரின் தண்டுவடமான அண்ணாசாலையில், வாரத்தின் முதல் நாளில், அலுவலக நேரத்தில் ஏன் போக்குவரத்து நெரிசல் என்ற விவரம் அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் தொலைக்காட்சி செய்தியாளரிடம், தனக்கு கிடைக்காத தகவல் ஏதேனும் கூடுதலாக கிடைக்குமா என, ஐவணத்தின் வாயைப் பிடுங்கினார்.
இதனை நன்றாகப் புரிந்து கொண்ட ஐவணம் அரசுக்கு அந்தத் தகவல் தெளிவாகவே போய்ச் சேரட்டும் என, தனக்கு கிடைத்த உண்மைத் தகவலை கொடுத்தாள்.
“ஈபி ஸ்டாஃப் போராட்டம். உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்…”
“ஆமா… அவங்க ஆஃபீஸ் முன்னாடி ஆர்ப்பாட்டம் நடத்த பெர்மிஷன் வாங்கியிருந்தாங்க…”
“அதான் இல்ல… நேத்து நைட்டே சைலண்ட்டா தமிழ்நாடு முழுக்க இருந்து, மின் வாரிய ஊழியர்கள் வந்து அங்கங்க தங்கியிருந்தாங்க…சண்டேங்கிறதால போலீஸ் பெரிசா இத கண்டுக்கல. அவங்க பிளான் ஆர்ப்பாட்டம்லாம் இல்ல… இது தெரியாததால போலீஸ் புரடக்சன் கம்மியா போட்டிருந்தாங்க…”
“ஓஹோ…”
வள்ளுவர் கோட்டம், டிபிஐ அலுவலகம், எத்திராஜ் காலேஜ் வழியாக வந்த ஐவணத்தின் கார், அதற்கு மேல் செல்ல வழியில்லை. போனில் பேசிக் கொண்டே காரிலிருந்து இறங்கிய ஐவணம், கேமராமேனையும் இறக்கி, ஓட்டமும் நடையுமாக அண்ணாசாலையை நோக்கி இருவரும் விரைந்தனர்.
“இப்ப…ரோட்ல உக்காந்த்திட்டாங்க… மவுண்ட் ரோடு தர்காவுல இருந்து, ஸ்பென்ஸர் வரை கொஞ்சம் கொஞ்சமா ரோட்டுல உக்காந்திட்டாங்க… அப்படியே எல்லா சைடும் ரோட் பிளாக் ஆயிடுச்சி…” – மூச்சிறைக்க நடந்து கொண்டே பதிலளித்தார்.
“திடீர்னு இவ்வளவு பெரிய போராட்டம் பண்ண என்ன பிரச்சினை ஈபி ஸ்டாஃப்ஸ்க்கு…?”
“சார்… நான் குறுக்கு வழில ஸ்பென்ஸர் சிக்னலுக்கு நடந்தே வந்திட்டேன்… லைவ்ல நிக்கணும்… நியூஸ் முடிச்சிட்டு கூப்பிடுறேன்…சாரி சார்…”
“ஓகேம்மா… மறக்காம கால் பண்ணுங்க…”
அவர் இணைப்பைத் துண்டித்த நிலையில் மற்ற சேனல் செய்தியாளர்கள் 20 முறைக்கு மேல் ஐவணத்தை அழைத்திருந்தனர். எந்த நண்பருக்கும் ஐவணம் திரும்ப பதில் அளிக்கவில்லை. ஸ்பென்ஸர் சந்திப்பிலிருந்து அண்ணா சாலை தர்கா வரை, அப்படியே சாலை முழுவதும் தலைகளும், தலைக்கு மேலே கொடிகளும் தெரிந்தன. சிவப்பு வண்ணம் காற்றில் கரைந்து, சாலையின் மேல் அசைந்தாடும் சிவப்புக் கம்பளம் வரவேற்பது போல காட்சியளித்தது. கடைகள் அடைக்கப்பட்டும் பாதி மூடாமலும் இயல்பற்ற நிலையையும் அறிவித்தது. எதிர் திசையில் போக்குவரத்து ஸ்தம்பித்து சென்னையின் திங்கள்கிழமை வாழ்க்கை அடியோடு முடங்கி விட்டதையும் கவலையோடு அறிவித்தது அந்தக் கணம்.
பேருந்துகளில் இருந்து இறங்கிய பயணிகள், அருகிலுள்ள எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நடையைக் கட்டினர். ரயில் மூலம் வேலைக்கோ அல்லது வீட்டுக்கோ செல்லலாம் என அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் எந்த ஒரு முடிவுக்கும் வரத் தயாராய் இல்லை.
‘எதற்காக இந்தப் போராட்டம்?’ – பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்தன. அதுவே வரிச் செய்தியாக பல சேனல்களில் ஓடிக் கொண்டிருந்தது. களத்திற்கு ஐவணம் மட்டுமே சீக்கிரம் வந்திருந்தார். வேறு எந்த செய்தியாளரும் இன்னும் மின் வாரிய அலுவலகத்தை வந்தடையவில்லை. இந்தப் பக்கம், ஸ்பென்ஸர் சிக்னலுக்கு முன்பாகவே போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்ததை ஐவணம் கவனித்தார். எதிர்திசையில் இருந்த போராட்டக்காரர்களை 50 அடிகளுக்கு முன்பாகவே போலீஸார் தடுத்திருந்தனர். அந்தப் பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தை அவர் மொபைலில் பதிவு செய்து கொண்டார்.
நரம்பை அறுத்தவுடன் பீறிட்டு எழும் குருதி போல, திமிறி நின்ற போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி அடக்கி வைத்திருந்தனர். போராட்டக்காரர்கள் அப்படியே சாலையில் அமர்ந்து விட்டனர். ‘சென்னை அண்ணாசாலையில் தூத்துக்குடியா? @CMOTamilNadu நேற்று நடத்திய திடீர் ஆலோசனைக்கு எதிர்வினையா? #EB_STAFF_AGITATION’ – படங்களுடன் ட்விட்டர் பதிவை செய்தியாளர் ஐவணம் தட்டிவிட்டார்.
“எழில் அண்ணா… போலீஸ், டிராஃபிக் எல்லாத்தையும் ஷூட் பண்ணி, உடனே ஆஃபிசுக்கு அனுப்பிடுங்க…” – ஒளிப்பதிவாளரிடம் சொல்லிவிட்டு, அங்கு சாதாரண உடையில் நின்றிருந்த உளவுத்துறை போலீஸிடம் பேச்சு கொடுத்த ஐவணம், எவ்வளவு போலீஸார் பாதுகாப்புக்கு வந்திருக்கிறார்கள், போராட்டக்காரர்கள் எவ்வளவு பேர் போன்ற எண்ணிக்கை சார்ந்த தகவல்களைச் சேகரித்தார். மின் வாரிய தொழிற்சங்க மாநில நிர்வாகிகள் இருக்கும் இடத்திற்கு, கூட்டத்தை பிளந்து கொண்டு வந்து விட்ட ஐவணம் உடனடியாக, நேரலைக் கருவியை, தனது தொலைக்காட்சி நிலைய அலுவலகத்துடன் இணைத்து விட்டு, நேரலை வழங்க கேமரா முன் தயாராக நின்றார். அவர் அருகில், தொழிற்சங்க மாநில தலைவர் ஏஜாஸ் பேட்டி கொடுக்கத் தயாராக இருந்தார்.
“வெல்லட்டும்… வெல்லட்டும்.. தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும்…”
“மாநில அரசே மாநில அரசே..தனியாருக்கு தாரை வார்க்காதே…”
“தனியாருக்கு தாரை வார்க்காதே…மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்காதே…”
– நேரலை வழங்க செய்தியாளர் தயாரானதை அறிந்த போராட்டக்காரர்களின் முழக்கங்களால் அந்தப் பகுதியில் பதற்றம் பற்றிக் கொண்டது. திடீரென வந்த சப்தத்தால் ஒட்டுமொத்த கூட்டமும் முழக்கங்களை உரத்து முழங்கியது. அவர்களை அமர்த்திய தலைவர் ஏஜாஸ், அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டார்.
“வெங்கட், இன்று காலை 9 மணி அளவில் அண்ணாசாலையில் உள்ள, மின் வாரிய அலுவலகத்தில் கூடிய தொழிற்சங்கத்தினர், பேரணியாக வந்தனர். திடீரென அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் உயரதிகாரிகள் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மணி நேரமாக இந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பதால், அண்ணாசாலையில் அதாவது கிண்டியிலிருந்து இந்தப் பகுதி வரையில் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. அதேபோல, வடசென்னைப் பகுதியில் இருந்து நகரின் மையப் பகுதிக்கு வருபவர்களும் எதிர் திசையில் காத்துக்கிடக்கின்றனர். காலையில் வேலைக்கும் செல்பவர்களும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் உரிய நேரத்துக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் வெங்கட்” – கேமராமேன் முன்பு நின்ற ஐவணம் செய்திவாசிப்பாளரோடு உரையாடத் தொடங்கியவுடன், அவர் நேரலையில் இணைந்து விட்டார் என்பதை உணர்ந்த போராட்டக்காரர்கள், கையில் வைத்திருந்த மொபைலில் PRO PEOPLE TV சேனலை ஆர்வமாக பார்த்தனர்.
“திடீரென இந்தப் போராட்டம் நடத்தக் காரணம் என்ன? அரசு சார்பில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா? விரிவாக சொல்லுங்க ஐவணம்…” – செய்தி வாசிப்பாளர் வெங்கட் கேட்டதை மொபைலில் பார்த்துக் கொண்டிருந்த மின் வாரிய ஊழியர்கள், இப்போது செய்தியாளரைப் பார்த்தனர்.
“மின் வாரிய தொழிற்சங்க மாநில தலைவர் ஏஜாஸ் நம்மோடு இருக்கிறார். ஏஜாஸ் சொல்லுங்க… திடீரென சென்னையின் மையப் பகுதியில் இவ்வளவு பெரிய போராட்டம் நடத்த என்ன காரணம்…?”
“சென்னைவாசிகள் இந்த சிரமத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும். இது எங்களுக்காக, மின் வாரிய ஊழியர்களுக்காக நடத்தப்படும் போராட்டம் இல்ல. மக்களுக்காக, தமிழ்நாட்டின் எதிர்கால நலனுக்காக நடத்தப்படும் போராட்டம் இது. சத்தமே இல்லாமல் தமிழக அரசு, முதலாளிகளுக்கு ஆதரவாக மக்கள் விரோத முடிவை யாருக்கும் அறிவிக்காமல் செய்திருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக மின் வாரியத்தை தனியார்மயமாக்கி வந்த தமிழக அரசு, இப்போது மின்சார வாரியத்தையே கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்து விட்டார்கள்.”
“கார்ப்பரேட், தனியார் மயம் போன்ற உங்களோட வழக்கமான வார்த்தைகளில் இல்லாமல், போராட்டத்திற்கான காரணத்தை விரிவா சொல்லுங்க ஏஜாஸ்…”
“போன வருஷம் சில மின் உற்பத்தி நிலையங்கள்ல பராமரிப்பு வேலைக்கு ஒப்பந்த ஊழியர்களைச் சேர்த்தாங்க. அதுவும் அவுட்சோர்சிங் முறையிலதான்… அப்பவே நாங்க அந்த முறைய கடுமையா எதிர்த்தோம். இப்ப, தமிழகம் முழுவதும் ஹைட்ரோ பவர் ஸ்டேஷன் உற்பத்தி முழுவதும், தனியாருக்கு கொடுத்திட்டாங்க. இது தொடர்பா எந்த முன்னறிவிப்பும் செய்யல. அதான் இவ்வளவு பெரிய போராட்டத்த நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கு…”
“நீர் மின் உற்பத்திய தனியாருக்கு கொடுத்ததால, உங்களுக்கு என்ன பிரச்சினை… பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு?” – ஐவணம் கேள்விகளை தொடர்ந்து முன் வைத்தார்.
“தனியாருக்கு மின் உற்பத்தி சென்றால், வேலைக் குறைப்பு, ஊதியக் குறைப்பு செய்வாங்க… இதெல்லாம் எங்களுக்கு பாதிப்பு. ஆனா, இதைவிட பல மடங்கு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். மின் உற்பத்தி மட்டும்தான் இப்ப தனியாருக்கு விட்டுருக்காங்க. ஆனா, விநியோகம் அரசு கைலதான் இருக்கு. அவங்க நிர்ணயிக்கிற விலைல வாங்கி, அரசு மக்களுக்கு விற்கும். கூடுதல் விலை கொடுத்து அரசு மின்சாரத்த வாங்கினா, மானியத்தை கட் பண்ணிடும். இதனால விவசாயிங்க உடனே பாதிக்கப்படுவாங்க. தொடர்ந்து இந்த நிலை நீடிச்சா, மத்த சலுகைகள்லயும் அரசு கை வச்சிடும். ஒரு கட்டத்துக்கு மேல, மின் உற்பத்திய மட்டுமல்ல, மின் விநியோகத்தயும் தனியார்ட்டயே கொடுத்திட்டா?… அப்புறம் மின் கட்டணம்லாம் அவங்க நிர்ணயிக்கிறதுதான். நான் இப்ப சொன்னது எல்லாமே நேரடியான பிரச்சினை. ஆனா, மறைமுகமா இன்னொரு பெரிய ஆபத்தும் இருக்கு…”
ஏஜாஸை இடை மறித்த ஐவணம், “மின் உற்பத்திய தனியாருக்கு கொடுத்திருந்தாலும், மின் விநியோகம் பண்றது அரசிடம்தானே இருக்கு. மின் கட்டணத்தையும் அரசுதானே நிர்ணயிக்கும்? அதுல என்ன பிரச்சினை?”
“மேடம். நீங்க சொல்றது மாதிரி, மின் கட்டணத்தை அரசுதான் நிர்ணயிக்கும். அது மக்கள் மீது அக்கறை இருக்குறத காட்டுறதுதானே அப்டின்னு கேட்குறீங்க. அப்ப ஏன், உற்பத்தி செய்றத அரசு பண்ணல… ? இதை இத்தனை வருஷமா கவர்மெண்ட்டே பண்ணிட்டு வரும் போது, இப்ப மட்டும் மின் உற்பத்தி பண்ண முடியாதா? இப்ப மின் உற்பத்திய தனியார்ட்ட கொடுத்த இந்த கவர்மெண்ட் நாளைக்கே மின் விநியோகத்தையும் தனியார்ட்ட கொடுக்காதுங்கிறதுக்கு என்ன நிச்சயம்? பெரிய ஆபத்துன்னு சொன்னேன்ல… அதுவும் முக்கியமான பிரச்சினை. மின் உற்பத்திக்காக அணைகளையெல்லாம் தனியார் வசம் கொடுத்திட்டா, நாளைக்கு தண்ணியையும் அவங்க விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதிக்க மாட்டாங்களா? 20-க்கும் மேற்பட்ட அணைகள் அவங்களோட கட்டுப்பாட்டுல போயிடும்… இன்னிக்கு நாங்க போராட்டத்த ஆரம்பிச்சிருக்கோம். இது மின் வாரிய ஊழியர்களோட பிரச்சினை மட்டும் கிடையாது. தண்ணீர் பிரச்சினையும் இருக்கு. இந்தப் போராட்டம் எவ்வளவு வீரியமா தமிழகம் முழுவதும் மாறப் போகுதுன்னு பாருங்க…”
ஞாயிற்றுக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் இது தொடர்பானதுதானா என்ற சந்தேகம் ஐவணத்திற்கு வலுத்தது. தொழிற்சங்கத் தலைவரின் பதில்களை முடித்து விட்டு, இப்போது கேமரா முன்பு திரும்பினார்.
“மின்சாரத்துறை அமைச்சக செயலாளர் இன்னும் சற்று நேரத்தில் இங்கு வருவார். வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த முற்றுகையை முடிவுக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது, வெங்ட்.” – போராட்ட செய்தி நேரலையை ஐவணம் முடித்துக் கொண்டார்.
“நன்றி மேடம்… நீங்க களத்துக்கு சீக்கிரமே வந்திட்டீங்க…மத்த சேனல்லாம் வர்றதுக்குள்ள. ஆனா, ஒரு சின்ன மிஸ்டேக்.”
“என்ன சார், சொல்லுங்க…”
“துறைச் செயலாளர் இல்ல, மின்சாரத் துறை அமைச்சர் வந்தால்தான் பேச்சுவார்த்தையே… இத நியூஸ்ல சொல்லிடுங்க…” – தொழிற்சங்க தலைவர் திட்டவட்டமாகச் சொன்னார்.
‘பேச்சுவார்த்தைக்காக மின் வாரிய ஊழியர்கள், மின்சாரத்துறை அமைச்சர் வருகையை எதிர்பார்த்திருக்கின்றனர்’ – என்ற செய்தியை, வாட்ஸ் அப் மூலம் தனது அலுவலகத்திற்கு அனுப்பினார் ஐவணம்.
சென்னையின் பிரதான சாலையில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட போராட்டம், சமூக ஊடகங்களில், மெய்நிகர் தீயாகப் பரவியது. மின் வாரிய ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, எதிர்கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகள் அறிக்கை வெளியிட்டனர். அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தினர்.
அங்கிருந்து கிளம்ப தயாரான போது, “ஐவா… லைவ் முடிஞ்சிருச்சா” அப்போதுதான் போராட்ட இடத்துக்கு வந்த நவ்ரங் கேட்டார். மற்ற சேனல் செய்தியாளர்களும் அந்த இடத்தை அடைந்து விட்டனர். நிறைய சேனல்கள் வந்துவிட்டதால் அனைவருக்கும் ஒன்றாக பேட்டியளிக்கத் தயாரானார் ஏஜாஸ்.
“நவ்ரங் பேட்டிய முடிங்க. டீ சாப்பிட போகலாம்…”
“ஏன் நீ இந்தச் செய்திக்கு வர்றத சொல்லல ஐவா…?”
“சொல்லணும்னு தோணல…” – கண்களை மூடி தோள்களை உயர்த்தி நேற்றைய பிரேக்கிங் செய்தியை சொல்லாததற்கு இது பழிதீர்த்தல் என்ற தொனியில் பதிலளித்தார் ஐவணம்.
“எனக்கு தம் வேணும் மச்சி… ஸ்பான்சர் பண்ணிடு…” ஐவணத்திடம் நட்பை வழிந்தார் நவ்ரங்.
மீண்டும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு, ஸ்பென்ஸர் சந்திப்புக்கு கேமராமேனுடன் தட்டுத்தடுமாறி வந்து சேர்ந்தார் ஐவணம். அவர் வந்து சேர்வதற்கும், யாரும் எதிர்பாராத அந்த அதிரடி நிகழ்வதற்கும் சரியாக இருந்தது. ஸ்பென்ஸர் பக்கவாட்டுச் சாலையில் இருந்து, திடீரென நூற்றுக்கும் மேற்பட்டோர், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்களோடு போலீஸ் தடுப்பை உடைத்துக் கொண்டு முன்னேறினர். மின் வாரிய ஊழியர்கள் முன்னேறி விடக்கூடாது என, கண்காணிப்பு முழுவதும் சாலையை நோக்கியே இருந்ததால், போலீஸார் இதனை எதிர்பார்க்கவில்லை. பின்புறமாக பலத்த கூச்சல் கேட்டவுடன், சாலையில் அமர்ந்திருந்த போராட்டக்காரர்கள் எழுந்து முன்னேற முயல, ஓர் அசாதாரண சூழல் அங்கு உருவானது.
அந்தக் கணத்தை சமாளிப்பதற்குள், ஸ்பென்ஸர் பிளாசாவுக்கு நேர் எதிரில் உள்ள பக்கவாட்டுச் சாலையில் இருந்து, பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக கட்சிக் கொடியுடன் கட்டுக்கோப்பின்றி கூச்சலிட்டுக் கொண்டே முன்னேறினர். அவர்களைச் சமாளிக்க சில போலீஸார் முன்னேற, அந்தத் தொண்டர்கள் கையோடு கொண்டு வந்திருந்த முதலமைச்சர் உருவ பொம்மையை எரித்தனர். போலீஸார், பதற்றத்தோடு அதனை அணைக்க முயலும் போதே, நிறுத்தியிருந்த பேருந்தின் கூரைகள் மீது அந்தத் தொண்டர்கள் ஏறத் தொடங்கினர். அவர்களைத் தடுக்க சில போலீஸார் ஓடினர். நாலா பக்கமும் போலீஸார் சிதறியதால், கூட்டத்தை அவர்களால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை. இதனால் உருவான இடைவெளியைப் பயன்படுத்தி, சாலையில் அமர்ந்திருந்த மின் வாரிய ஊழியர்கள் முண்டியடித்து முன்னேறினர்.
கூட்டத்தின் போக்கை போலீசார் கட்டுப்படுத்தத் தவறியதால், அந்தப் பகுதி உச்சகட்ட பதற்றத்தில் போர்க்களம் போல காட்சியளித்தது. நிலைமை கை மீறிப் போனதால்,போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டத்தைக் கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தத் தொடங்கினர். மின் வாரிய ஊழியர்கள் மீது கடுமையான தாக்குதலை தொடுத்தனர். அதே போல ஐவணத்தின் மீதும் குறி வைத்து தாக்கினர்.
இந்தக் களேபரங்களை எல்லாம் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த ஐவணத்தோடு வந்திருந்த கேமராமேனின் காலில் லத்தியால் தொடர்ந்து அடித்தனர். நான்கு போலீஸார் சுற்றி நின்ற அடித்து, அவரிடமிருந்து கேமராவை பறிக்க முயன்றனர். இதற்கு கேமராமேன் எழில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அவர்களோடு வாக்குவாதம் செய்தார். கேமராவை பாதுகாக்க ஐவணமும் போராடினார். கேமராமேனை சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு சிறிது தூரம் சென்று, அவரையும் ஐவணத்தையும் பிரித்தனர். நான்கைந்து பெண் காவலர்கள் ஐவணத்தை சுற்றி நின்று, தலையில் லத்தியால் தாக்க, ரத்தம் கொட்ட ஐவணம் தரையில் விழுந்தார். அவரைச் சுற்றி நின்ற பெண் காவலர்கள், பூட்ஸ் காலால் மிதித்து, தலையை தரையோடு வைத்துத் தேய்த்தனர். சற்று தொலைவில் கிழிந்த சட்டையோடு கண்களில் ரத்தம் கட்டி, விழி பிதுங்க நின்றிருந்த எழிலிடமிருந்து, கேமராவைப் பிடுங்கிய காவலர், அதனை சாலையில் ஓங்கி அடித்து சுக்கல் சுக்கலாக உடைத்தார்.
என்ன செய்வதென்று திகைத்த கேமராமேன் எழில், செய்தியாளர் ஐவணத்தை தேடினார். தூரத்தில், சாலையில் கிடந்த ஐவணத்தைப் பார்த்து அங்கு ஓடி வந்தார். பெண் காவலர்கள் அவரை அருகில் செல்ல விடவில்லை. தடுத்தனர். பலம் கொண்டு அவர்களை மீறி, ஐவணத்தை எழுப்பி கைத்தாங்கலாகத் தாங்கி, ஓரமான ஒரு இடத்துக்கு கொண்டு சென்றார்.
இதற்கிடையில் கட்டுக்கடங்காத கூட்டத்தை, கடுமையான தடியடி நடத்தி, கையில் சிக்கியவர்களின் மண்டைகளை பதம் பார்த்து தெறிக்க தெறிக்க ஓட விட்டது போலீஸ் படை. லத்தியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முண்டியடித்ததில் கும்பலில் சிக்கி, சிலர் மூர்ச்சையடைந்து சாலையில் கிடந்தனர்.
பிரதான சாலையில் இருந்து பிரிந்து சென்ற சந்துகளின் வழியாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போரட்டக்காரர்கள் ஓடினர். கையில் சிக்கியவர்களை போலீஸார் கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ஐவணம், எழில் மற்றும் அந்தப் பகுதியில் ரத்தம் சொட்டக் கிடந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சில நிமிடங்களில் நிகழ்ந்த களேபரத்தால், போராட்டக்கார்கள் மீது நடத்திய தாக்குதலை செய்தியாக்குவதில் குறியாக இருந்ததால், ஐவணம், எழில் தாக்கப்பட்டது மற்ற செய்தியாளர்களுக்குத் தெரியவில்லை. இருவரும் வேறு பகுதியில் இருக்கலாம் என நினைத்துக் கொண்டனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்தவர்களின் மொபைல் போனை வாங்கி அலுவலகத்துக்கு சொன்ன பின்புதான், மற்ற செய்தியாளர்களுக்குத் தகவல் தெரிந்து பதறியடித்து மருத்துவமனைக்கு வந்தனர்.
ஐவணம் மற்றும் எழிலின் பேட்டி, கலவரம் போல் காட்சியளித்த அண்ணாசாலையில் போலீசாரின் தாக்குதல், பாதிக்கப்பட்டவர்களின் ஆவேச பேட்டிகள் என செய்தி ஊடகங்களில் மின் வாரிய ஊழியர்களின் போராட்டம், இந்திய அளவில் விவாதப் பொருளாகியது. எதிர்க்கட்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசையும் போலீசையும் கண்டித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அரசுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அனைத்து சேனல்களும் நேரலையில் அவர் பேட்டியை ஒளிபரப்பின. ஐவணத்தை பார்க்க வந்த நண்பர்கள், மொபைல் போனில் அமைச்சரின் பேட்டியை பார்த்தனர்.
“நான் நேரடியாக பேச்சுவார்த்தைக்குச் செல்லத் தயாராக இருந்தேன். இந்தப் போராட்டத்தில் எதிர்க்கட்சியினர் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதால்தான், அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் லேசாக தடியடி நடத்த வேண்டியதாகி விட்டது. மின் வாரிய ஊழியர்கள் திடீரென சாலையில் அமர்ந்த போது கூட அவர்களைக் கைது செய்யாமல், பேச்சுவார்த்தைக்கு நான் வரும் வரை போலீஸார் தாமதித்தனர். ஆனால், எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தோடு, கலவரத்தில் இறங்கினர். பேருந்துகளைத் தாக்கத் தொடங்கினர். இதற்கான ஆதாரம் உள்ளது…” – ஒரு படத்தை அமைச்சர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
“அடப் பாவிங்களா… அவங்க பஸ் மேல ஏற ட்ரை பண்ணினாங்க… அவ்ளோதான்… யாருமே பஸ்ச உடைக்கல்லாம் இல்ல…மினிஸ்டர் காட்டுற போட்டோவுலயும் அப்படித்தான் இருக்கு…” – ஐவணம் தெளிவுபடுத்தினார். அவரது தலையில் போடப்பட்டிருந்த கட்டு, அங்கு நிகழ்ந்த போலீஸ் அராஜகத்துக்கு சாட்சியாக இருந்தது. அருகில் கையில் கட்டுடன் எழுந்திருக்க முடியாமல் கட்டிலில் படுத்திருந்த எழில், “மேடம் எல்லா ஆதாரமும் நம்ம கேமராவுல இருந்திச்சி… உங்க மண்டையில அடிச்சத கூட நான் ஷூட் பண்ணியிருந்தேன்…”
“அதான் தடம் தெரியாம உடைச்சிட்டாங்களே… விடு எழில்… நீ ரெஸ்ட் எடு” – அவர்களைப் பார்க்க வந்திருந்த நவ்ரங் ஆறுதல் கூறினார்.
“எந்த மீடியாவும் இல்லங்கிறத தெரிஞ்சிக்கிட்டுத்தான், அவங்க பிளான் பண்ணி, உன்னைய அடிச்சி கேமராவ உடைச்சிருக்காங்க…”
“ஆமா நவ்ரங், நான் தனியா மாட்டிக்கிட்டேன்”
“நாளைக்கு ஈவ்னிங் நாலு மணிக்கு பிரஸ்கிளப்ல, நம்ம அமைப்பு சார்பா கண்டனக் கூட்டம் இருக்கு…”
“நானும் காலைல டிஸ்சார்ஜ் ஆகிடுவேன். வந்திடுறேன்…”
சென்னை அண்ணாசலையில் நடந்த கலவரமே அன்றைய இரவின், செய்தி சேனல்களின் விவாத நிகழ்ச்சிகளுக்கான விவாதப் பொருளாகி இருந்தது. ஆனால், அதற்கு முன்பே அரசின் மீது பொதுமக்கள் கடும் கோபத்தை சமூக ஊடகங்களில் காட்டத் தொடங்கியிருந்தனர். குறிப்பாக ஊடகவியலாளர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து, ஒற்றுமையை வெளிப்படுத்தினர். அரசின் சார்பில் நிதியமைச்சர், அரசு மருத்துவமனைக்கு வந்து ஐவணத்தையும் எழிலையும் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், பாதிக்கப்பட்ட மற்றவர்களையும் பார்க்க வேண்டும் என்பதால், இதனை தவிர்த்தனர். அதே சமயம் எதிர்க்கட்சித் தலைவர் பாதிக்கப்பட்ட அனைவரையும் சந்தித்தார்.
***
செவ்வாய்கிழமை மாலை.
முற்போக்கு ஊடகவியலாளர்கள் மையம் சார்பில் கண்டனக் கூட்டம், பத்திரிகையாளர் மன்றத்தில் தொடங்கியது. இதில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், நிறைய மூத்த செய்தியாளர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக இளம் செய்தியாளர்கள் அதிகளவில் பங்கெடுத்துக் கொண்டனர்.
ஊடகத்துறையில், எந்த நிறுவனத்தில் பணி செய்கிறோமோ அந்த நிறுவனத்தின் அரசியல் நிலைப்பாட்டுக்கு இயைந்தாற் போலவே மூத்த செய்தியாளர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால், இளம் செய்தியாளர்கள் நிறுவனத்திற்கு வெளியே, அதாவது பணியில் இல்லாத நேரங்களில், கட்டுப்பாடில்லாத சமூக ஊடகங்களில், தங்கள் அரசியல் கருத்துக்களை சுதந்திரமாக எழுதி வந்தனர். இது புது போக்காக ஊடகத்துறையில் வளர்ந்து வருகிறது. முற்போக்கு எழுத்தாளர்கள் மையத்தின் உறுப்பினர்கள் சற்று தூக்கலாகவே அரசை விமர்சித்தனர். அவர்களின் ஃபேஸ்புக், ட்விட்டர் கருத்துக்கள் சமூகத்திலும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
அமைப்பின் தலைவர் ஃபனான் ராமசாமி, அரசின் அராஜகப் போக்கை வன்மையாக கண்டித்து எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேச்சைத் தொடங்கினார்.
“மின் வாரிய ஊழியர்கள் போராட்டம் ஒரு காரணமே தவிர, போலீசுக்கு பத்திரிகையாளரைத் தாக்கும் திட்டம் ஏற்கனவே இருந்தது. அதுவும் பெண் பத்திரிகையாளரைத் தாக்கி, தங்களின் மோசமான ராஜ விசுவாசத்தைக் காட்டியிருக்கின்றனர். இந்த தாக்குதல் பத்திரிகையாளர்கள் மத்தியில் பீதியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துவதற்கான உளவியல் தாக்குதலாகவே நாங்கள் பார்க்கிறோம். ஏதோ வேலை கிடைக்காமல், உணவுக்காகவும் பெருமைக்காகவும் நாங்கள் ஊடகத்தில் வேலை செய்யவில்லை. நாங்கள் எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் எங்கள் குரல் மக்கள் குரலாகவே இருக்கும். எங்கள் பேனா மக்களின் குரலை எழுத்துக்களில் பிரதிபலிக்கும். எங்கள் முகம் அது மக்கள் முகமே.”
கரவொலி அரங்கத்தை அதிரச் செய்தது.
“பத்திரிகையாளர்கள் ஒற்றுமை ஓங்குக…” – கட்டுப் போட்டிருந்த கையைத் தூக்க முடியாமல், குரலை மட்டும் உயர்த்தி கத்தினார் எழில். அடுத்ததாக, ஐவணமும் எழிலும், முந்தைய நாள் நிகழ்வுகளின் தருணங்களையும் தாக்கப்பட்ட சூழலையும் மன அதிர்வுகளையும் பகிர்ந்து கொண்டனர். மின் வாரிய ஊழியர்கள் போராட்டத்தின் போது அங்கு செய்தி சேகரித்த நவ்ரங்கையும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அழைத்தனர்.
“நாம் கவனமாக வேலை செய்ய வேண்டும் என்பதை இந்தத் தாக்குதல் உணர்த்தியிருக்கு. போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற செய்திகளுக்கு செல்லும் போது, செய்தியாளர்கள், தனித்தனியாக செல்லாமல் ஒன்றாக இருப்பதுதான் சரியாக இருக்கும். அதுவும் ஃபீமேல் ரிப்போட்டர் கூட, எப்பவும் நாம இருக்கணும். தனியா விட்டுட்டு போயிடக் கூடாது. நாமதான் பாதுகாப்பு கொடுக்கணும்…”
நவ்ரங் பேச்சு, இளம் ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே சிலர் கேட்டும் விட்டனர்.
“இதுல ஜெண்டர் பார்க்குறதுக்கு என்ன இருக்கு நவ்ரங்? ஏன் கேமராமேன் எழில தாக்காம விட்டுட்டாங்களா?”
– மேடையில் இருந்த நவ்ரங், “நான் அந்த மீனிங்ல சொல்லல… நாம சேஃப்பா இருக்கணும்னுதான் சொல்றேன்…”
ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு நவ்ரங் மேடையிலிருந்து இறங்கினார்.
***
செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின் வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக போராட்டம் வெடித்தது. அதே போல சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான போக்கு கடுமையாக வெளிப்பட்டது. தூத்துக்குடி சம்பவத்தை ஒப்பிட்டு மீம்ஸ்கள் பரப்பப்பட்டு அரசுக்கு எதிரான கோபத்தை மெய் நிகர் வெளியில் மக்கள் தீர்த்துக் கொண்டனர். அன்று மாலை, மின் வாரிய ஊழியர்கள் போராட்டத்தை நசுக்கிய காவலர்களையும் அரசையும் விமர்சித்து முகநூலில் கருத்து பதிவிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
***
புதன்கிழமை காலை பதற்றத்தோடு பகலவன் உதித்தான்.
காலைப் பணிக்கு திரும்பியிருந்த ஐவணம் நேரலை வழங்கத் தயாரானார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அந்த மருத்துவமனையின் பிணவறை, பாலம் அமைந்திருக்கும் சாலையைக் கடந்து சற்று தூரத்தில் இருந்தது. பிணவறை முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. பிணவறையை ஒட்டிய சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் அங்கு நின்று நேரலை வழங்க முடியாமல், பாலத்தின் மேல் ஏறினார் ஐவணம். பாலத்தின் மேல், காலை நேரம் என்பதால் போலீஸ் கண்காணிப்பு இல்லை. 7 மணி செய்தியில் நேரலையில் இணைந்தார் ஐவணம்.
“நான் இப்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே உள்ள பாலத்தின் மேல இருக்கேன். அப்படியே மார்ச்சுவரி கட்டிடத்தை ஒளிப்பதிவாளர் இப்போது காட்டுவார். இன்று அதிகாலை 4 மணியளவில், இந்த பிணவறையில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் இந்த பிணவறையின் பழைய கட்டிடத்தில் குண்டு வெடித்துள்ளது. பின்புறம் உள்ள புதிய கட்டிடத்தில்தான் போஸ்ட்மார்ட்டம் நடப்பது வழக்கம். அந்தப் புது கட்டிடத்தில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. குண்டு வெடித்ததாகச் சொல்லப்படும் கட்டிடத்தில், அடையாளம் தெரியாத பிணங்களும், உறவினர்கள் பெற்றுக் கொள்ளாத அனாதைப் பிணங்களும் வைக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடித்த போது, அங்கு ஊழியர்கள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இரவுப் பணியில் இருந்த இரண்டு ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…”
குண்டு வெடிப்புக்கான காரணம் தொடர்பாக செய்தி வாசிப்பாளர் கேட்ட கேள்விக்கு, “ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வெடி குண்டு நிபுணர்களும் தடயவியல் துறை வல்லுனர்களும் குண்டு வெடித்த இடத்தில் கிடைத்த பொருட்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். அருகில் உள்ள கடைகளில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்” – என்று நேரலையை முடித்துக் கொண்ட ஐவணம் பாலத்தில் இருந்து இறங்கினார்.
‘சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் குண்டு வெடித்து சில ‘பிணங்கள்’ பலி. #குண்டு வைப்பதற்கு வேறு இடம் கிடைக்கவில்லையா ஜெண்டில்மேன்?’ – ட்விட்டரில் நக்கலாகப் பதிவு செய்தார் ஐவணம். அப்படியே முகநூல் பக்கத்தில் ஃபோட்டோவோடு ஸ்டேட்டஸை தட்டி விட்டார். அப்போதுதான் நவ்ரங்கின் முகநூல் பதிவு அவர் கண்ணில் பட்டது.
‘தீவிரவாதிகளின் கொலைக் களமாக மாநில தலைநகர் மாறி விட்டது. பிணங்களுக்கு கூட தமிழக அரசால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை. #FailCM’ – இப்படி நவ்ரங் பதிவு செய்திருந்தது ஐவணத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. செல்ஃபி தவிர வேறு எதுவும் பதிவு செய்யாத நவ்ரங் முகநூல் பக்கத்தில் அரசியல் பதிவா?
அந்தப் பதிவுக்கு நூற்றுக் கணக்கானோர் லைக்கிட்டிருந்தனர். நிறையப் பேர் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து கொண்டனர். செய்தியாளர்கள் அங்கு குவிந்தனர். அன்றைய பிரதான விவாதமாக குண்டு வெடிப்பு செய்தி மாறியது. “அந்த அமைப்பு காரணம்“, “இந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கைது” என அடுத்தடுத்து பிரேக்கிங் செய்திகள் முந்தியடித்தன. பிணவறைக்குப் பதிலாக அருகில் இருந்த மருத்துவமனையில் குண்டு வெடித்திருந்தால், இத்தனை உயிர்கள் பலியாகியிருக்கும் என்ற ரீதியில் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு கோணங்களில் குண்டு வெடிப்பு ஆய்வு செய்யப்பட்டது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பற்றிய கவலையும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
அன்று பிற்பகலில், ஊடகவியலாளர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பும் பதற்றமும் பரவியது. நவ்ரங்கை போலீஸ் கைது செய்து, டிஜிபி அலுவலகத்தில் வைத்து விசாரிப்பதாக வாட்ஸ் அப்பில் குரூப்கள் அலறின.
***
காவலர்களின் கடமையுணர்ச்சி நடையையும் வாக்கி டாக்கியின் சப்தத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார் நவ்ரங். உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவரின் அலுவலக வரவேற்பறையில் அவர் அமர வைக்கப்பட்டிருந்தார். எதற்காக அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்பது சொல்லப்படவில்லை. ஆனால், அவரது முகநூல் பதிவைக்காட்டி, அது உங்களுடையதுதானா என விசாரித்து விட்டே அவரை அழைத்து வந்திருந்தனர். முகநூல் பதிவுக்காக, விசாரணைக்காக டிஜிபி அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறேன் என ஊடகத்துறை நண்பர்களுக்கு நவ்ரங் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியிருந்தார்.
உயர் அதிகாரி வருவதற்குள், இன்னொரு இளம் அதிகாரி நவ்ரங்கை அறைக்குள் அழைத்து விசாரிக்கத் தொடங்கினார்.
“ஏன் அப்படி போஸ்ட் போட்டீங்க ஃபேஸ்புக்ல…?”
“அதுல என்ன சார் பிரச்சினை?”
“அரசுக்கு எதிராக மக்களத் தூண்டி விட்டிருக்கீங்க… அதனால பப்ளிக் போராட்டத்துல இறங்கி சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்திருக்கு… ‘ஃபெயில் சிஎம்’ னு போட்டு, அவர இழிவு படுத்தியிருக்கீங்க… இந்தக் குற்றச்சாட்டையெல்லாம் கேஸா பதிவு செய்ய முடியும். தெரியும்ல?”
“சார்… என் ஃபேஸ்புக் பதிவுதான் சிஎம் சாரோட பேர டேமேஜ் பண்ணிடுச்சா? கேஸ் போடறதுன்னா போட்டுக்குங்க?”
“என்ன தம்பி… சின்ன வயசா இருக்கீங்க… அந்தத் திமிர்ல பேசுறீங்களா?” முறைத்த போலீஸ் அதிகாரி, “ஏம்ப்பா, மவுண்ட் ரோட் பிரச்சினைல அடி வாங்கின அந்த ரிப்போர்ட்டர் மேடம் இப்ப எப்டி இருக்காங்க?”- நவ்ரங்கை அசைத்துப் பார்க்க, அங்கிருந்த காவலரிடம் இப்படிக் கேட்டு விட்டு. தன்னுடைய ஷூ கயிற்றை நேர்த்தியாக கட்டினார்.
“தம்பி, இனிமேல் இந்த மாதிரி ஃபேஸ்புக்ல போஸ்ட் போட மாட்டேன்னு எழுதிக் கொடுத்திட்டு போங்க.”
“அதெல்லாம் முடியாது சார்…” – சடாரென சப்தம் போட்டு அடாவடியாக பதில் சொல்லி விட்டு இருக்கையில் இருந்து எழுந்து புறப்பட எத்தனித்தார் நவ்ரங்.
“தம்பி… பிரஸ் பீப்பிளே இப்படித்தான். உங்க மரியாதைய காப்பாத்திக்க மாட்டீங்க. அதான் கட்டம் கட்டி தாக்குறோம். எழுதித் தர முடியுமா? முடியாதா?” – அதிகாரியின் குரல் தொனி வேறு விதமாக மாறி, தனது முகத்தில் தாக்குதல் நடத்த தயாராகி விட்டதற்கான சமிக்ஞையை உணர்ந்தார் நவ்ரங்.
அதனால் கலங்கிய நவ்ரங் கொஞ்சம் இறங்கி வந்து, “சார்… நான் அந்தப் போஸ்ட்ட போடல…”
புருவத்தை உயர்த்தி கருவிழிகளை மேலே நகர்த்தி வில்லில் இருந்து பாய்ந்த அம்பைப் போல பார்வையைச் செலுத்தினார் அந்த அதிகாரி.
“நான் அட்மின் இல்ல… அந்த போஸ்ட்ட நான் போடவும் இல்ல…” – இதுவரை எகத்தாளமாக பதில் அளித்த நவ்ரங், தற்போது தன்னை கேலி செய்வதாக உணர்ந்து, பளாரென நவ்ரங் கன்னத்தில் அந்த இளம் அதிகாரி ஒன்று வைத்தார்.
அப்போது உளவுத்துறை உயர் அதிகாரி அறைக்குள் நுழைந்தார். கன்னத்தில் கை வைத்து கண்களில் நீர் கசிய நின்றிருந்த நவ்ரங்கை பார்த்து அந்த உயர் அதிகாரி, “என்ன சார் இங்க வந்திருக்கீங்க? ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா? எனக்கு கால் பண்ணியிருக்கலாம்ல…?”
அதற்கு பதில் சொல்ல நவ்ரங் வாய் திறப்பதற்குள், இளம் அதிகாரி குறுக்கிட்டார். “சார், நான்தான் விசாரிச்சிக்கிட்டிருந்தேன். எழுதிக் கொடுத்திட்டு போய்யான்னா, நான் அட்மின் இல்லன்னு என்னைக் கலாய்ச்சிக்கிட்டுருக்கான் சார்…”
“ஹாஹாஹாஹா….”
அந்த உயர் அதிகாரி விஷமத்தனமாகச் சிரித்தார்.
“யோவ்… அந்த ரிப்போர்ட்டர் சரியாத்தான் சொல்லியிருக்காரு… ஒரு வகையில அவர் அட்மின் கிடையாதுதான்…அவர போகச் சொல்லுங்க… இனிமே அவரக் கூப்பிடாதீங்க… அவரப் பத்தி எதுவும் கம்ப்ளெயிண்ட்டுன்னா முதல்ல என்ட்ட கேளுங்க…”
“என்ன சார் சொல்றீங்க?” நவ்ரங்கை அறைந்த இளம் அதிகாரி குழப்பத்தில் கேட்டார்.
“சண்டே மீட்டிங் முடிஞ்சதில்ல… அப்ப எடுத்த முடிவின் படி…என்னோட ஸ்பெஷல் டீம்ல இந்த ரிப்போர்ட்டர் இருக்காரு… நவ்ரங் நீங்க போங்க…”
அறைந்த அதிகாரி வாசல் வரை வந்து நவ்ரங்கை வழியனுப்பி வைத்தார்.
***
வியாழன் அன்று வெளிவந்த ஜூனியர் விக்கி வாரம் இருமுறை பத்திரிகையில் “நரியார் ஊளையிடுகிறார்” பகுதியில் நரி இப்படி ஊளையிட்டிருந்தது:
‘தமிழகத்தில் ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்களைக் கண்காணிக்க, தமிழக போலீஸில் புதிய துறையை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் டிஜிபி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சமூக வலைதளங்களைக் கண்காணிக்க சைபர் கிரைம் பிரிவு இருந்தாலும், ஊடகவியலாளர்கள்தான் சமூக வலைத்தளங்களில் கருத்துருவாக்கத்தை செய்வதால் அவர்களை பிரத்யேகமாக கண்காணிக்க இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சில ஊடகவியலாளர்களே உளவாளிகளாகவும் செயல்படுகின்றனர்.
இந்தப் பிரிவுக்கு ‘Fifth Column in Fourth Estate’ அதாவது, ‘ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்தில் ஐந்தாம் படை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அணியை, சுருக்கமாக FiCoFe என போலீஸார் தங்களுக்குள் அழைத்து கொள்கின்றனர்.
******