இணைய இதழ்இணைய இதழ் 58கட்டுரைகள்

ஊறுகாய்க்கும் உலக்கைக்குமான சிவந்த எல்லை – சேலம் ராஜா 

கட்டுரை - வாசகசாலை

வெளியூர் சென்று விட்டு திரும்பும் சமயங்களில் நமது ஊரை நமக்குப் பரிச்சயமான மனித முகங்களை கண்டதும் துளிர்க்கும் ஒரு ஆசுவாசத்தைப் போன்று வைஷ்ணவியின் கவிதைகளைப் படிக்கும் போது ஒரு குறுமகிழ்ச்சி கூடவே பயணித்தபடி இருந்தது. காரணம், அவர் சேலத்து நிலத்தாள். ஆகையினால் அவர் பாடிய கவிதைகளைப் படிக்கும் போது நமக்கு மிகப்பரிட்சயமான மனிதர்களின் வாழ்வியலை, எண்ணங்களை கூட இருந்து வாசிப்பது போன்றே தோன்றியது

பொதுவாக முதல் படைப்புக்குச் சொந்தக்காரர்கள் மிக லகுவான மொழியில் கவிதையென நம்பிக்கொண்டு தமது சிந்தனைத் தெறிப்புகளையே கோர்த்திருப்பர். ஆனால், இவரோ ஒரு பரபரப்பான நகரச்சந்தடியில் கேட்பாரற்று அமர்ந்திருக்கும் யாரோ போல அமர்ந்துகொண்டு, எல்லா நிகழ்வையும் கவனித்து காத்திரமான மொழி அடுக்கில் காட்சிகளாக கவி படைத்துள்ளார்

பெரும்பான்மை கவிதைகள் நிலத்தைப் பேசுகிறது. நிலமென்றால் தேமேவென கிடக்கும் மானாவாரி அல்ல; அதன் மேல் கூடாரமிட்டு தனக்கென, தத்தம் கூட்டத்திற்கென வரையறைகளை கட்டமைத்துக்கொண்ட மனிதக் கூட்டங்களின் அவலங்களையோ அல்லது துயரங்களையோ அல்லது அவர்களின் அழுக்குகளையோ பேசுகின்றது. அதற்கு, தொகுப்பின் முதல் கவிதையானமழை அதிகாரம்கவிதையில் வரும் இந்த வரிகளே சாட்சி

//சாதிப்பெயர்ப் பலகைகளை நுகர்ந்து
மூத்திரம் பெய்து நகரும் தெருநாய்கள்
தேங்கிய நீர் குடித்து பசியாறிக் கொள்கின்றன//.

இவ்வரிகள் வெறுமனே தெருநாய்களின் செய்கைகளாகவா அமைகிறது?!.

எங்கள் பகுதியின் வட்டார வழக்கு மொழி கொங்கிலும் சேராது; பல்லவத்தோடும் சேராது; மத்தியமாக தெக்கி நிற்கும் ஓர் மொழி. அதில் காலைக் கடன் கழிப்பதை வெளிக்குப் போறேன் / வெளிக்கிருக்க / ஓடைக்குப் போறேன் / காட்டுப் பக்கம் போறேன் என சொல்லவது வழக்கம். அதை, தனது நினைவுப் பேழையில் ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டேயிருக்கும் ஆற்றைப்பற்றிய ஒரு கவிதையில்

//ஒரு நாள் வெளிக்குப்போன புஷ்பலதா
கற்பிழந்த பிணமாக ஊர் முன் கிடந்தாள்//

எனக் குறிப்பிட்டிருப்பது வாசகனை பழைய காலத்திற்கே அழைத்துச்செல்வதாக இருந்தது

மேலும், ஊர்ப்புற மனிதர்கள் ஒரு புதிய விசயத்தை மற்றோருக்கு விளக்கும் போது முன்னொட்டாக பேச்சு வழக்கில் ஒரு சொலவடை போன்ற ஏதாவது ஒன்றைக் கூறி, பின் தான் சொல்ல வரும் செய்தியைச் சொல்வது வழமை.  ‘அக்கா வீட்டுக்கு தூரமாயிருக்கிறாள்எனும் கவிதையில் 

//தூரமென்பது
ஊறுகாய்க்கும்
உலக்கைக்குமான
சிவந்த எல்லையே//

என்று எழுதியிருந்தது அதைப் போன்றே தோன்றியது. மேலும், இதை அவரின் சிந்தை பாடு எப்படி வேண்டுமானாலும் எழுதியிருக்கலாம். ஆனால், வாசிப்பவருக்கு இவ் உவமை பல்வேறு பொருள் தரக்கூடியதாக அமைகிறதுமேலுமிது ஒரு பெண்ணின் மாதாந்திர தினத்தை சொல்லக் கூடிய கவிதை தான். எனினும், இப்படியான சொல் அழகு இந்தக் கவிதையை தனித்துக் காட்டுகிறது. வீட்டுக்கு தூரம் என்பதும் கூட சேலம் மக்களின் வட்டார மொழி தான். இந்த தலைப்பையே கூட மொத்த தொகுப்பிற்குமானதாக சூட்டியிருப்பின் நன்றாகப் பொருந்திப்போயிருக்கும் என்பதில் மாற்றில்லை

நவீன கவிதைகளின் காலத்தில் நாம் இருந்தாலும் நவீன கவிதைகளில் பழைய அல்லது வழமையான சொற்களையே தான் பலரும் பயன்படுத்துகின்றனர் பாடு பொருளுக்கு. அதற்கு விதிவிலக்காக இந்த தொகுப்பில்கார்ப்பரேட் சேவகன்எனும் ஒரு கவிதையில் கவிஞரின் புலமை ஏகமாகத் தெரிகிறதை பாருங்கள். தற்கொலை தூதுகளின் / இரண்டு நிமிட நூடுல்ஸ் சட்டை உரித்தபடி இரவுக்காய் சென்று கூடைக்குள் படுத்துகொள்ளும் / பறக்கத்தயாராகும் மின்சார அட்டைப்பூச்சி / ஒற்றை மயிரில் அவனும் தொற்றிக்கொள்வான் / நடமாடும் கம்ப்யூட்டர் கம்பங்கள் / சிறு பெண்ணாய் தேம்பி ஓடும் ரயில் / கணினியின் அடிமடியில்உள்ளிட்ட நவீன பொருட்களை உவமை கலந்து புதிய பார்வையைத் தந்திருக்கிறார். இப்படி உதாரணமாகக் கூற இன்னும் நிறைய கவிதைகள் உள்ளன.

மூன்றாம் நாள் தலை குளித்தபின் நெருக்கம் தேடும் பெண்ணின் அக உணர்வை ஓர் அழகிய தவிப்பாககுறட்டை விடும் குறியொன்றுஎன புனைந்திருக்கிறார் கொஞ்சம் பிசகியிருப்பினும் கூட காலங்காலமாக இச் சமூகம் பெண்ணின் மீது கட்டமைத்துள்ள புனிதங்களை எள்ளி நகையாடிவிடும். ஆனால், அதைச் செய்யாது ஒரு பெண் தன்னுடைய மணாளனையோ, காதலனையோ எண்ணித் தவிப்பதாக மட்டுமே சொல்லிச்செல்வதில் சாமர்த்தியத்தை காணமுடிகிறது. நன்றாக யோசித்துப்பாருங்கள்.தலைப்பிலுள்ள குறியொன்றுஎன்பது குறிக்கு அல்லதுகுறிகளுக்கு என மாறியிருப்பின் எல்லாமே தலைகீழாக மாறியிருக்கும்

இப்படியாக இத்தொகுப்பு முழுவதுமாக தனது அகமனம் சார்ந்தும், பால்யம் சார்ந்தும், கற்பு எனும் கற்பனை கட்டமைப்புமாக பல கவிதைகளில் கவனிக்க வைக்கிறார் வைஷ்ணவிமேலும், மது பிளாண்ட், தொல்லை காட்சி போன்ற குறுங்கவிதைகளில் சாமர்த்தியங்களையும், ஏக்கங்களையும் இழையோட விடுகிறார். நாமெல்லோரும் இன்று கார்ப்பரேட் அடிமைகளாக மாறிவிட்டதயையும் மறக்கவில்லை

முதல் அடியிலேயே நறுக்கென கிள்ளிவிட்டு அதை நம்மை மனதால் தேய்த்துக்கொள்ள வைத்த கவிஞர் மேலும் பல நற் படைப்புகளை தர வாழ்த்துவோம்

வலசை போகும் விமானங்கள். 
கவிதைத் தொகுப்பு 
சாய் வைஷ்ணவி. 
விலை – 160₹
கடல் பதிப்பகம் வெளியீடு. 
தொடர்புக்கு – 8680844408

*******

rocketr754@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button