இஸ்லாமிய வாழ்வியல் மீதான சுழல் காமிராப் பதிவு – ஜனநேசன்
கட்டுரை | வாசகசாலை

தமிழ் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் குறித்து தோப்பில் முகமது மீரான், கழனியூரன், எஸ்.அர்சியா, ரசூல், கீரனூர் ஜாகிர்ராஜா, அ.கரீம், ஜவ்வாது முஸ்தபா, சல்மா, செய்யது போன்றவர்கள் தமது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வரிசையில் தற்போது அராபத் உமர் இணைந்துள்ளார்.
தேனி மாவட்டம், கம்பம் நகரைச் சேர்ந்த நாவலாசிரியரும், மக்கள் நல்வாழ்வியல் செயல்பாட்டாளுருமான அ.உமர் பாரூக்கின் துணைவியாரான மு.அராபத் உமர், தனது கணவரின் வாசிப்பைக் கண்டு வாசிப்புலகில் புகுந்தவர். தான் வாசிக்கும் கதைகளில் வரும் மாந்தர் போல் தனது கண்முன்னே உலாவும் துயருற்ற மனிதர்களின் பாடுகளை எழுதுவதன் மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதைச் சமூகக் கடமையாக உணரத் தலைப்பட்டு எழுதவும் தொடங்கினார். கருங்கல் காலநதி ஓட்டத்தில் உருண்டு உருண்டு பளிங்காக மிளிர்வது போல் எழுதியதைத் திரும்பத் திரும்ப எழுதிச் செழுமைப்படுத்தி தான் கண்ட வாழ்வியலை அராபத் பன்முக வைரமாக ஒளிரச் செய்துள்ளார். “நசீபு” எனும் முதல் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் சிறுகதை இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.,
ஒரு சமூகத்தின் வாழ்வியல் எதார்த்தம் எடுத்துரைக்கப் படும்போது உள்ளதை உள்ளபடி சொல்லுதல், விமர்சனத்தோடு சொல்லுதல், பகடி செய்தல், மிகைப்படக்கூறல் என பலமுறைகள் உண்டு..! இவற்றில் மு.அராபாத் உமர், உள்ளதை உள்ளவாறு உணர்ந்து சிந்திக்கத் தூண்டுமாறு சொல்லல் எனும் முறைமையைக் கையாளுகிறார். நசீபு எனும் இந்தக் கதை தொகுப்பில் ஏழு கதைகள் உள்ளன. இவை ஏழும் தேனி மாவட்ட இஸ்லாமிய பெண்களின் வாழ்வியல் பாடுகளை 7 x24 நேரச் சுழற்சியில் ஒரு சுழற் காமிரா கோணத்தில் பதிவு செய்துள்ளன.
வாழ்வுப் பெருவெளியை கடக்க உதவும் என நம்பிய மதமும் அதன் நடைமுறை வழக்காறுகளும் குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கு எப்படி கால்கட்டுகளாக , கழுத்துக் சுருக்குகளாக மாறுகின்றன என்பதை வாசக மனம் நெகிழ்வாக உணரும் வண்ணம் அராபத் வெளிப்படுத்துகிறார். அப்பாவின் கூடப் பிறந்த அத்தை மாமியாராக மாறியபின் ,மருமகள் தன் தந்தையின் பிணத்தைக் கூட பார்க்க மறுக்கப் படுவதை “ஷஜ்தா“ கதையிலும், மாமியார், நாத்தனார் மற்றும் வயதான கணவனது கொடுமைகளுக்கு இரையாகி தற்கொலை செய்துகொள்ளும் ஆயிசாவின் கதையை “க்யாமத்“ கதையிலும், சுபைதா பூட்டியான பின்னும் கூட ஆணாதிக்க நினைவுகளுக்கிடையே அல்லலுறுவதையும் , கணவனது மரணத் தருவாயில் செய்யாத தவறுக்கு மன்னிப்புக் கோர வைத்த கோர நினைவு வரும்போதெல்லாம் வெற்றிலை பாக்கை உரலில் இடித்து ஆறுதல் தேடுவதும் “நசீபு” கதையிலும் உருக்கமான உணர்வோட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது. இங்கு வெற்றிலை பாக்கு உரலில் இடிப்பது வாட்டும் ஆணாதிக்க கட்டுபாடுகளுக்கு எதிரான எதிர்வினை குறியீடாகக் காட்டபடுவது எழுத்தாளரின் கைவண்ணம். ரமலான் நோன்பைக் கடும் வறுமைக்கிடையில் கொண்டாட அகமது- பர்வீன் குடும்பம் படும்பாட்டை வாசகமனம் கண்ணீர் பெருக்க வாசிக்கும்படியாக அரபாத் தனது எழுத்தாளுமையைக் காண்பித்துள்ளார். ‘இத்தா’ எனும் விதவமை கட்டுப்பாட்டை மீறும் பரக்கத்தும் உண்டு. மத சடங்காச்சாரங்கள், வெளிப்படைத்தன்மையும் இல்லாமை ஆகியவற்றால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாதிக்கப்படுவதை “வெம்மை “ கதையில் அராபத் பகிர்கிறார். அராபத்தின் சுழற் காமிராப் பார்வை இஸ்லாமிய வீடுகளுக்குள் நிகழ்வதை, முக்கல் முனகல் பெருமூச்சுகளை மட்டுமல்ல, குறுகிய தெருவுக்குள்ளும் புதைந்துள்ள நுண்ணரசியலையும் வெளிப்படுத்துகிறது.
இந்த ஏழுகதைகளும் இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் அல்ல! மாறாக, மத பிடிமானங்களில் சிக்குண்ட மனிதர்களின் செயல்பாடுகள், குண திரிபுகள் ஆகியவை உளவியல் கோணத்தில், தேனிமாவட்ட இஸ்லாமிய மக்களின் புழங்கு மொழியில் வெளிப்படுத்துகின்றன . இந்தக் கதைகளை வாசிக்கிற இஸ்லாமியர் அல்லாதவரும் தம் சமுகத்தில் புரையோடிப்போன பழக்க வழக்கங்களை ஒப்பீட்டாக உணர்ந்து களைய முயல்வர். இதுவே அராபத்தின் கதை சொல்லலில் வெற்றி!
இத்தொகுப்பு அரபாத்தின் முதல் கதைத்தொகுப்பு. எனவே இதில் கதையாக்கலில் சிறு சிறு குறைகள் தென்பட்டாலும் நிறைவே அதிகம். இந்த வெளிப்பாடே அவர் இன்னும் சிறந்த படைப்புகளைத் தருவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இத்தொகுப்பை வாசிக்கும் வாசகர் ஒவ்வொருவரும் இதை உணருவர் இதையே அ.கரிமும் தனது அணிந்துரையில் முன்வைக்கிறார்.
நசீபு
சிறுகதைத் தொகுப்பு.
மு.அராபத் உமர் .
பக்கங்கள் – 103
விலை – ரூ.120/.
டிஸ்கவரி பப்ளிகேசன்ஸ், சென்னை.
தொடர்புக்கு: 99404 46650.
******