இணைய இதழ்இணைய இதழ் 58கட்டுரைகள்

’வராஹ ரூபம்’ – காந்தாரா திரைப்பட விமர்சனம் – ர. பிரியதர்ஷினி

கட்டுரை | வாசகசாலை

டம் பார்த்து விட்டு இரண்டு நாட்கள் ஆனாலும் இன்னும் காதுக்குள் அ.. ஆ.. உ… ஏ என்று ஒலித்து கொண்டு இருக்கிறது. ஒரு படம் பார்த்துவிட்டு அந்தப் படத்தின் தாக்கம் பற்றி பேசுவதற்குள் மற்றொரு படம் வெளியாகிவிடுகிறது. அதையும் மீறி ஒரு படம் வெளியாகி பெரிய ஒரு அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அது தான் காந்தாரா.

ஒரு ஊரில் ஒரு ராஜா என்று தொடங்கி கண் இமைக்காமல் உட்கார வைத்தது இந்த திரைப்படம். சினிமாவில் மாஸ் என்று விவரிக்கப்படும் அத்தனை கோட்பாடுக்களுக்குள்ளும் இந்தப் படம் அடங்குகிறது. அத்துடன் அந்த படத்தில் எடுத்துக்கொண்ட மையப் பிரச்சனையையும் எந்தவித சோர்வும் இல்லாமல் நகர்த்தி செல்கிறது.

“The more regional the more universal”

கர்நாடகாவில் பல கலை வடிவங்கள், பல கலாச்சார வழிபாடு முறைகள் உள்ளன. அவை இப்போது திரைமொழியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருப்பது மிகவும் வரவேற்கதக்க ஒன்று. இந்த திரைப்படம் கேராடி (keeradi)  என்னும் கடலோர பகுதியில் நடைபெறுகிறது. அதுவே அந்த கதைக்கு பலமாக உள்ளது. உபதேவதையை வழிபடும் ஒரு பழங்குடி இனம். அந்த இனமக்களுக்கு கொடுத்த ஒரு சத்தியம் வழியாக கதை நகர்கிறது. 

ஒரு தலைமுறை அந்த சத்தியத்தை மீறப்படும் பொழுதில் நடந்த ஒரு சம்பவம் பெரிய கொடுங்கனவாக நாயகனுக்குத் தொடர்கிறது. அது போன்ற மீறல் மீண்டும் நடக்கும் பொழுது என்னவெல்லாம் நடக்கிறது என்பது கதை. இதற்கிடையில் காதல், ஊர் மக்கள், அவர்களின் வாழ்வியல், உணவுமுறை, தொழில், பேச்சுவழக்கு, நட்பு, அம்மா-மகன் உறவு, மோதல், துரோகம் என பல்வேறு உணர்ச்சி அடுக்குகளையும் பேசியிருக்கிறது இந்த படம்.

பாரம்பரியமாக நடைபெறும் கம்பாளா என்னும் எருது விடும் பந்தயத்தில் இருந்து நிகழ்காலம் தொடங்குகிறது. அனைத்து காட்சிகளிலும் பிராந்திய தாக்கமும் அதற்கான உழைப்பும் தெரிகிறது. இந்த படத்தில் சிறு சிறு கதாபாத்திரமும் தாக்கத்தை விட்டுச் செல்கிறது. அது முதலில்  வரும் பழங்குடியினர் தொடங்கி ஊர் மக்கள் வரை. மனிதர்களைத் தாண்டி அந்த நிலபரப்பு, விலங்குகள், இயற்கைச் சூழல் என மற்றவையும் காதபத்திரமாக  மாறியிருக்கின்றன. 

சிவா என்னும் பிரம்மாண்டம்:

சிவாவாக நடித்துள்ளார் படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி. திரைக்கதையில் எந்தவித சலனமும் இல்லை. பெரிய தர்கப் பிழையும் இல்லாததால் அதுவே கதை நகர்விற்கு ஒரு பாதையை தருகிறது. அவரின் உருவமே ஒரு மலைப்பைத் தருகிறது. திரையில் அவரது அசைவுகள் நம்மை மீறி பல இடங்களில் புல்லரிக்கச் செய்கிறது. இயல்பான காட்சிகள் கூட இவரது நடிப்பினால் கைத்தட்டல் பெறுகின்றன என்றால் மிகை ஆகாது.  

நடிக்கும் அனைத்து கதாபாத்திரத்திலும் அந்த நபராகவே தன்னைப் பொறுத்திக்கொள்பவர் கிஷோர் இந்த படத்தில் வனத்துறை அதிகாரியாக  நடித்துள்ளார். படத்தில் ஒரு வலிமையான திரையை மொத்தமாக ஆக்கிரமித்துக் கொள்கின்ற ஒரு கதாபாத்திரம் இருக்கும் பொழுது அதை மீறி திரையில் தெரிகின்ற அளவிற்கு நடிப்பது அவ்வளவு எளிதல்ல. அந்த வகையில் கண்டிப்பான வனத்துறை அதிகாரியாக ஆரம்பித்து அந்த ஊர் மக்களோடு ஒன்றாக நின்று போராடும் வரை மிகவும் சிறப்பான கலைஞனாக வெளிப்பட்டுள்ளார்.

படத்தில் முதன்மையான பெண் கதாபாத்திரங்களாக இருவர் உள்ளனர். ஒன்று லீலா (சப்தமி கௌடா), சிவாவின் காதலியாகத் தோன்றி பின் ஒரு வனத்துறை அதிகாரியாக கதைக்குள் பயணிக்கிறாள். இரண்டு, சிவாவின் தாய் கமலா, பிள்ளை மீதும் ஊர் மீதும்  அக்கறை கொண்டு கோபம் கொள்கின்ற தாய். இருவரும் அவர்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.

வழக்கமான சினிமாக்களில் பெரிதும் பரிட்சையமான ஊர் தலைவர் கதாபாத்திரம்தான் இப்படத்தில் தேவேந்திரன் கதாபாத்திரம். ஆனால் அதற்குள் இருக்கின்ற பல மனநிலைகளை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் அச்சியூத் குமார். 

ஒளியும் ஒலியும்:

படத்தில் சிறு சிறு சத்தங்களில் (பன்றி, பறவைகள், பாத்திரங்கள், மரம்) தொடங்கி  பின்னணி இசை வரை மிரட்டி இருக்கிறார்கள். பூட்ட கோலா என்னும் பண்டைய கலையை திரையில் பிராமண்டமாக காண்பித்ததில் இவர்களின் பங்கு அளப்பறியது. ஒவ்வொரு காட்சியிலும் கவனிப்பதற்கும் ரசிப்பதற்கும் அவ்வளவு உள்ளது. குறிப்பாக இரவுக் கட்சிகளில் அந்த காட்டின் அடர்த்தியையும் ஒரு சில நேரங்களில் அங்கு ஏற்படும் பதட்டத்தை அப்படியே கடத்தியிருக்கிறார் அரவிந்த் எஸ் கேஷப்.

வராஹ ரூபம் பாடல் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கின்றது.

இந்த படம் பல்வேறு நிலைகளில் பயணித்து கடைசி  பத்து நிமிடம் இருக்கையின் நுனியில் அமர்ந்திடச் செய்கிறது.

உண்மையில் இந்த படம் ஒரு பெரிய திரை அனுபவம் என்று தான் சொல்ல வேண்டும். படத்தில் முரண்கள், கேள்விகள் இருந்தாலும் நம்மை அனைத்தையும் மறக்கச் செய்து திரையின் முன்னால் சரண் அடைய செய்கிறது

*****

priyadharshinir283@gmail.com -. 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button