‘சிந்து முதல் கங்கை வரை’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம்- அருண் கோமதி

சிந்து முதல் கங்கை வரை – நாவல்
ஆசிரியர் – ராகுல் சாங்கிருத்யாயன்
இந்த நூலைக் குறித்து எனக்கு ஒரு நண்பர் அறிமுகம் செய்யும் போது சொன்ன ஒரே ஒரு செய்தி என்னை இந்தப் புத்தகத்தை கட்டாயமாக வாங்கவேண்டுமென்ற உந்துதலுக்கு தள்ளிவிட்டது. பொதுவாக ஒரு நாவல் என்பது எழுத்தாளரின் கற்பனையிலிருந்து உருவாகும். ஆனால் இந்நாவல் உருவாகிய விதம் முற்றிலும் அதிசயமானது.
இந்த நூலை எழுதியவர் திரு. ராகுல் சாங்கிருத்யாயன். இந்த நூல் உருவான விதம் குறித்து அவரே விளக்குகிறார். தன் நண்பணின் வீட்டுக்கு விருந்தாளியாகச் சென்ற ராகுல்ஜி தன் தேகப் பயிற்சிக்காக நண்பரின் நிலத்தைத் தோண்டுகிறார். சிறிதளவு ஆழம் தோண்டிய உடனேயே அவருக்கு சில வித்யாசமான பழங்கால பொருட்கள் கிடைக்கின்றன. அதைக் கண்டு ஏற்பட்ட தீராத ஆர்வத்தினால் நண்பரின் உதவியோடு அந்த நிலம் இருந்த பகுதி முழுவதும் தோண்டுகிறார். அப்போது பல புராதாணப் பொருட்கள் கிடைத்ததோடு சில குறியீடுகள் மற்றும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சுட்ட செங்கற்கள் கிடைக்கிறது. அந்த செங்கற்களிலுள்ள எழுத்துக்களை மிகுந்த சிரமத்திற்குப் பின்னர் மொழிபெயர்க்கிறார்கள். அப்போதுதான் அந்த செங்கற்களில் இருந்த குறியீடுகள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதை அறிய முடிகிறது. மேலும் அவை வைசாலி மொழியில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எனவும் அந்த மொத்த செங்கற்களை ஒன்றாய் சேர்க்கும் போது அது ஒரு எழுத்தாளனின் தன் வரலாற்று நாவல் என்பதும் அவருக்குப் புரிகிறது. அந்த செங்கற்களில் எழுதப்பட்ட நாவலை மொழிபெயர்த்து திரு.ராகுல்ஜி அவர்கள் நமக்கு வழங்கியிருக்கிறார்.
இந்த 1600 செங்கற்களும் இன்னும் பாட்னா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக ஆசிரியர் கூறுவதும் இந்த நாவலின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது. இந்த நாவலில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மட்டும் வாசிக்கும் வசதி கருதி எழுத்தாளரால் மாற்றப்பட்டு இருக்கிறது.
நாவலைப் பொருத்தவரை, வைசாலி குடியரசைச் சேர்ந்த பிரதம சேனாதிபதி சிம்மன் (பெயர் மாற்றப்பட்டதாக ஆசிரியரே குறிப்பிட்டு இருக்கிறார்.) தன்னுடைய பயணங்களை, தங்கள் அரசின் பழக்க வழக்கங்களை மகத அரசிற்கும் வைசாலி அரசிற்கும் இடையில் நடந்த போர் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அவரே கூறுவது போல எழுதி இருக்கிறார். அதை ராகுல் சாங்கிருத்யாயன் அவர்கள் மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார். அந்த வகையில் இந்த நாவல் எழுதப்பட்ட காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு எனப் பொருள் கொள்ளலாம். பள்ளிக் காலங்களில் ஸ்பரிசித்த சாண்டில்யனின் நாவல்களை மீண்டும் வாசிப்பது போன்ற உணர்வை திரு. மாஜினி அவர்களின் மொழிபெயர்ப்பு எனக்குக் கொடுத்தது. கொஞ்சம் கூட சலிப்படைய வைக்காத மொழிநடையும் தகவல்களும் வைசாலியையும் தட்ஷசீலத்தையும் நம் கண் முன்னே நிறுத்துகிறது. புத்தருக்கும் மகாவீரருக்கும் சம காலத்தவரான சிம்மனுக்கும் அவர்களுக்குமான உரையாடல் நம்மை ஒரு மாய உலகத்திற்கே எடுத்துச் செல்வது போலிருக்கிறது.
நாவலின் மற்றொரு சாராம்சம் வெகு இயல்பாக நமக்கு பல வரலாற்றுத் தகவல்களை அள்ளி வீசிக்கொண்டு செல்வதுதான். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு ஆய்வு நூலாகவும் இந்த நாவலை எடுத்துக் கொள்ளலாம்.