சிறுகதைகள்

தொற்று – புகழின் செல்வன்

நண்பகலில் தன் நிறத்தை முற்றிலுமிழந்து பரிதாபமாகக் காட்சியளிக்கும் வெய்யோன், அதிகாலையில் அழகிய ஆரஞ்சு வர்ணத்தில் காட்சியளித்துக் கொண்டிருந்தான். கடலுடன் புணர்ந்து சூரியன் எழுவதற்கும் பஞ்சுப் பொதியிலிருந்து அர்ச்சனா எழுவதற்கும் சரியாகயிருந்தது. குற்ற உணர்ச்சி தலையோங்கியதில் அவள் சிணுங்கத் தொடங்கியிருந்தாள். இன்றும் அடிக்கும் அலாரத்திற்கு முன்பே எழுந்து விட்ட களிப்பில் குளியலறை நோக்கி விரைந்து சென்றாள். தூவாலையைத் தன் புஜங்களில் சரியாக இரு மார்புகளையும் மெல்லிசாக உரசியவாறு கிடத்தினாள். கையில் சிணுங்கியவளை நோண்டிக் கொண்டே காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்.

 ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பிருந்த அர்ச்சனாவிற்கும் தற்பொழுது கண்ணாடி முன்னின்று தன்னையே ரசித்துக் கொண்டிருப்பவளுக்கும் குறைந்தது ஆறேழு வித்தியாசமாவதிருக்கும். அனைத்து பெருமையும் விலையுயர்ந்த கீரீம்களுக்கும் பவுடர்களுக்கும் லிப்கிளாஸ்களுக்குமே சேரும். தினம் தினம் இப்படி பல பேர் வாழ்க்கையில் மாயத்தை நிகழ்த்தி விட்டு எதுவும் தெரியாததுபோல் மேஜையில் நிலை கொண்டு காலத்தைக் கழிக்கின்றன ஆண்களால் சபிக்கப்பட்ட அப்பாவப்பிறவிகள்.

 ஏன் கார்ப்ரேட்களில் பணிபுரிகிறவர்களும் உயரிய மதிப்பு கொண்ட கல்லூரிகளில் பயில்பவர்களும் எப்பொழுதுமே தங்கள் ஐடி கார்டுகளை அணிந்தவண்ணமே திரிகின்றனர் என்பது எப்படி அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமோ அதேபோலத்தான் இளம் பெண் மருத்துவர்களும் மாணவிகளும் வெள்ளைக் கோட்டை அணிந்து கொண்டே செல்வதும்.

அர்ச்சனா சற்று மாறுபட்டு ஹாஸ்பிட்டலுக்கு சென்று கோட் அணிந்து கொள்வாள். அன்று இரு அதிர்ச்சிகள் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தன. ஒன்று இன்ப அதிர்ச்சி மற்றொன்று அதற்கு எதிர்மறையாகத்தானே இருக்க வேண்டும் என்பதுதானே காலயியல்பு.

வழக்கம்போல தனக்கு ஒதுக்கப்பட்ட நோயாளிகளைப் பார்த்து விட்டு தன்னறையில் கிஷோரைப் பற்றி நினைத்தவாறே அமர்ந்திருந்தாள். கதவைத் தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டவள் கையிலிருந்த பேப்பரை கீழே நழுவ விட்டாள். பின்பு சுதாரித்துக் கொண்டு,”Yes commin” என்றவள் வந்தவளைப் பார்த்த ஒருகணம் திகைத்து அருகில் சென்று ஆறத்தழுவிக் கொண்டாள்.

“ஹே கல்யாணி, எப்டி இருக்க?? இங்க எப்ப வந்த? இங்கயா ஜாய்ன் பண்ணிருக்க” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தாளேயொழிய கல்யாணியைப் பேச அனுமதித்தபாடில்லை.

எக்சைட்மென்ட் நிலையிலிருந்து சற்று இறங்கியவளின் கைகளைப் பிடித்தவாறே பேச ஆரம்பித்தாள் கல்யாணி.

“இன்னக்கி தான் ஜாய்ன் பண்ணேன். பிரசாந்தினி மேம்தான் வரச் சொன்னாங்க”என்று சொல்லி விட்டு மென்மையாக புன்முறுவலை அறையுள் படரச் செய்தாள்.

 பேச்சுவாக்கில் கல்யாணியின் வயிற்றைப் பார்த்து, தான் எதோ கண்டுபிடித்துவிட்டது போல் சந்தோசத்தில் அவளிடம் “எத்தனாவது மாசம்?”என்றாள் அர்ச்சனா.

தமிழ் பெண்ணாயிற்றே எங்கிருந்துதான் வந்ததோ அந்த வெக்கம், அதனோடே வயிற்றை லேசாகத் தடவிக்கொண்டு “5 1/2 மாசம்” என்றவளை முன்பு போலில்லாமல் கவனத்துடனும் அதிக பாசத்துடனும் கட்டிக்கொண்டாள் அர்ச்சனா.

 விடைபெற்றுக்கொண்டு தன் முதல் நாள் பணியைத் தொடரச் சென்றாள் கல்யாணி. அர்ச்சனா நோயாளிகளின் ரிப்போர்ட்களை மேஜை மீதமர்ந்து புரட்ட ஆரம்பித்திருந்தாள்.

நேரம் மாலையாகியிருந்தது. அடுத்த நாள் வார விடுமுறை என்ற சந்தோசத்துடன் ஹாஸ்பிட்டலை விட்டு வீடு நோக்கிய பயணத்தைத் தொடங்கியிருந்தாள் அர்ச்சனா. பராக்கு பார்த்துக் கொண்டே வண்டியோட்டும் வழக்கத்தையுடையவள் என்பதால் தினம் தினம் புதுப் புதுக் கடைகள் அவள் கண்ணில் தென்பட்டுக் கொண்டேயிருக்கும். அன்று ஒரு புதிய கறிக்கடையை கண்டுவிட்டாள். உள்ளூர ஒரே அங்கலாய்ப்பு. கறிக்கடை என்றால் யாரோ ஒருவர் முன்டா பனியன் அணிந்து கொண்டு கதறக் கதற கோழியையோ ஆடையோ அறுக்கும் கடை என்று எண்ணி விடாதீர்கள். இது முற்றிலும் குளிரூட்டப்பட்டு கறிகளைப் பதப்படுத்தி  வைத்திருக்கும் அழகிய கடை. அனைத்தும் இங்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் தானிருக்கும் ஆனால் ‘ஃப்ரஸ் ஃப்ரம் ஃபார்ம்’ என்பார்கள் பொய்க் கோழிகள். கறிகளை அள்ளிப் போட்டுக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.

வீட்டு உடைக்கு மாறி விட்ட அர்ச்சனா ஸ்பீக்கரில் தன் ப்ளே லிஸ்ட்டை அதிர விட்டுக்கொண்டே கறிகளுடன் சமையலறைக்குள் நுழைந்தாள்.

 “அர்ச்சனா, இந்த சவுண்ட கொறமா” என்று அன்பாகத் தன் அடக்கு முறையை அபலைப் பெண் மீது நிகழ்த்தி விட்டு அமைதியாக மாடி ஏறிச் சென்றார் மாடி வீட்டு ஆன்ட்டி.

 “யானிய எங்குட்டு தெரிய போது அந்தக் கால இசைஞானி ரசிகைக்கு” என்று முனங்கியவாறே சத்தத்தைக் குறைத்துக் கொண்டாள். ஒருவாறு ஆடிக்கொண்டே சமையலை முடித்து விட்டாள்.

டீவியை ஒளிரச் செய்து சிக்கன் பௌலை மடியில் ஏந்தியவாறே சோஃபாவில் வந்தமர்ந்தாள். கொரியன் சீரீஸ் போல் ஏதோ ஒன்றைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஆக்ரோஷமான காட்சிகளாகயிருக்க வேண்டும் ரொம்பவே சிலாகித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஃபேனிலிருந்து காற்று வராமல் சத்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது. எப்போதும் ஏ.சி யை விரும்பாதவள் வேறு வழியில்லாமல் தைப் போட வேண்டியதாயிற்று. நாளை மறக்காமல் மூக்கையா தாத்தாவிடம் சொல்லி இதை சரி செய்ய ஆள் ஏற்பாடு செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

“கொலாம்பஸ் கொலாம்பஸ் விட்டாச்சு லீவே….கொண்டாட கண்டுபிடித்து கொண்டா ஒரு தீவே”

அலறிய கைபேசியை எடுத்தாள். அன்றைய நாள் இன்னும் முடியவில்லை, மீதமிருந்த அதிர்ச்சி. ஹாஸ்பிட்டலுக்கு விரைந்து சென்றாள். இம்முறை வெள்ளைக் கோட் அணிய மறந்திருந்தாள்.

உடன் பணிபுரியும் மருத்துவராகத்தானிருக்க வேண்டும், வந்ததும் ஓடிச் சென்று விபரீதத்தை அர்ச்சனாவிடம் கூறினார். தற்பொழுது மாறுப்பட்ட உடைக்குள் தன்னை புகுத்திக்கொண்டு ICUவினுள் நுழைந்தாள். அங்கு கண்ட காட்சி அவளைத் திடுக்கிடச் செய்தது. நண்பகலில் சிரித்துக் கொண்டிருந்தவன் இப்பொழு ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறான். ரத்த வாந்தி எடுத்து விட்டுத்தான் கீழே விழுந்து இறந்திருக்க வேண்டும். சுவரில் அவன் வாய் கொண்டு வரைந்த சித்திரத்தின் ஈரம் அதைப் பார்த்தவர்களை உறையச் செய்திருந்தது.

லேபிற்கு தொடர்பு கொண்டு நோயாளியின் பெயரைக் குறிப்பிட்டு ரிப்போர்டை உடனே அனுப்பும்படி கூறினான் அங்கு கூடியிருந்த மருத்துவர்களுள் ஒருவன். அம்மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் செய்தி போயிருக்கக்கூடும் அனைவரும் கான்ஃபரன்ஸ் ஹாலில் ஒன்று கூடியிருந்தனர். ரிப்போர்ட்டைக் காலையே அனுப்பி விட்டதாக அங்கிருந்து பதில் வந்திருந்தது.

 அர்ச்சனா தன்னறைக்கு ஓடிச் சென்று மேஜையின் கீழிருந்த ரிப்போர்ட்டை எடுத்துப் பார்த்தாள். வேறெங்கும் பார்க்காமல் நேராகக் கீழோரத்திற்கு சற்று மேலாக பார்த்தாள். பாஸிட்டிவ் என்றிருந்தது.

 அனைவர் முகத்திலும் பயம் தொற்றிக் கொண்டது. என்ன செய்வதென்று ஆளுக்கொரு வழியைப் பிதற்றிக் கொண்டிருந்தனர். பயம் மனிதனை எவ்வாறெல்லாம் ஆட்டுவிக்கும் என்பதை அவ்வறையில் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அர்ச்சனா கலக்கமுற்றிருந்தாள். கல்யாணி முகத்தில் கை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள். அர்ச்சனா கலங்கிய முகத்துடன் கல்யாணியின் வயிற்றை ஒரு முறை பார்த்துவிட்டு பிரசாந்தினியிடம் தன் விழியைச் செலுத்தளானால்.

  பிரசாந்தினி, ” அனைவரும் சற்று அமைதியாக இருங்கள்.யாருக்கும் எதுவும் ஆகாது”என்று பொய்யெனத் தெரிந்தும் ஒன்றைக் கூறி சமாதானப்படுத்த முயன்றாள். வாய்கள் மட்டும் சமாதானமடைந்தன மனங்கள் இன்னும் துடித்துக் கொண்டுதானிருந்தன.

 மாவட்ட ஆணையருக்கு பிரசாந்தினி விவரத்தைக் கூறினாள். அரைமணி நேரத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சரிடமிருந்து பிரசாந்தினிக்கு அழைப்பொலி வந்தது. நிலைமையின் தீவிரத்தை அரசு உணர்ந்ததால் வந்த அழைப்பு. துரித கதியில் செயல்பட்டாக வேண்டும் என்று கூறி விட்டு இது மேலும் பரவாமலிருக்க என்ன வழி என்று பிரசாந்தினியிடம் கேட்டு விட்டு, செயல்படுத்துவதாகக் கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

அர்ச்சனா வீட்டிற்குச் செல்லாமல் கடற்கரையிலே தன் வண்டியின் மீதமர்ந்திருந்தாள். அன்றைய இரவு நீண்டு கொண்டே சென்றது. இரவு புதுவித எரிச்சலைத் தந்தது. பயம் சூழ்ந்து கொண்டு வாட்டியெடுத்தது. ஏன் இன்னும் சூரியன் எழவில்லை என்று காட்டமாக தன்னுள்ளே கடிந்து கொண்டிருந்தாள் அர்ச்சனா. சலிக்காத கடல் இன்று சலிப்புத் தட்டியது, அதை வாழ்வின் மீதான சலிப்பென்று கூடசொல்லலாம். கடலினூடே செலுத்திய தன் பார்வையை அகற்றி நடைபாதையில் எந்த வித கவலையுமின்றி உறங்கிக் கொண்டிருப்பவர்களைக் கண்டு பொறாமையுற்றாள். அவர்களுக்கு எந்தவிதக் கவலைகளும் இல்லை என்று சொல்ல இவளுக்கு என்ன உரிமையிருக்கிறது. எதுவுமற்று நடைபாதையில் வசிப்பவர்களுக்கு கவலைகள் கூட இருக்கக் கூடாது என்று நினைக்கும் கொடூரம் எப்படி மனிதனுள் நுழைந்திருக்கக்கூடும். அவளைப் பொறுத்தவரை எப்படியாவது அவர்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் இப்போதைய ஒரே கவலை.

பலவாறு யோசித்துக் கொண்டே வண்டியில் சாய்ந்த நிலையிலே கண்ணுறங்கிப் போனாள்  அர்ச்சனா.

எப்பொழுதும் போல ஒரு ஞாயிறில் ஞாயிறு தன் பணியைத் தொடங்கியது. கொழுப்பைக் கரைக்க ஓடுபவர்களும் கொழுப்பில்லாமல் எலும்புந்தோலுமாக இருப்பவர்களும் தத்தமது தினசரி வேலைகளைச் செய்யத் தொடங்கிருந்தனர். கடலின் ஆரவாரமும் வெயிலின் இளஞ்சூடும் அர்ச்சனாவை எழுப்பியது. வீட்டிற்கே செல்லவில்லை என்பதை அப்பொழுது தான் உணர்ந்தாள். வண்டியைக் கிளப்பிக் கொண்டு  வீட்டில் குளித்து விட்டு உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றாள்.

மேலும், இருவர் இறந்த நோயாளியினுடல் வெளிப்படுத்திய அறிகுறிகளைக் கண்டிருந்தனர்.அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர்.

பிரசாந்தினி சுகாதாரத் துறையிடம் விவரத்தைக் கூறினாள். மத்திய அரசிடம் பேசியதாகவும் அனைவரையும் தனிமைப்படுத்தும் எண்ணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப் போவதாகவும் கூறினார் அமைச்சர். பிரசாந்தினியிடம் கூறிய சில நொடிகளிலேயே தொலைக்காட்சியில் நேரலையில்  தோன்றிய அமைச்சர், அரசல் புரசலாக விவரங்களை அறிந்திருந்த மக்களுக்கு உண்மைகளை உரக்கச் சொன்னார். மக்களிடம் ஏதோ இன்றைக்குத்தான் உலகின் கடைசி நாள் என்பது போன்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவர் கூறிய செய்தியின் சாராம்சத்தை உணராத மக்கள் கூட்டம் கூட்டமாக கடைவீதிகளிலும் போக்குவரத்து நிறுத்தங்களிலும் குவிந்தனர். என்ன காரியம் செய்துவிட்டோமென்று அரசு குழப்பத்தில் புகைந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மறைமுகமாக பலரிடமும் அந்த நோய்த்தொற்று சென்று விட்டிருந்தது. நிலையின் தீவிரத்தை  அவர்களுணர சில நாட்கள் தேவைப்பட்டன.

 மொத்த நாடும் முடங்கிய நிலையில் மக்களனைவரும் தத்தமது சொந்த ஊர்களிலும் வீடுகளிலும் தஞ்சம் புகுந்திருந்தனர்.

அர்ச்சனா நேரங்காலமில்லாமல் மருத்துவமனையே கதி என்றிருந்தாள்.

ஊரடங்கிய தனிமை அவளை வதைத்து சித்திரவதைக்குள்ளாக்கியிருக்க வேண்டும். தான் ரிப்போர்ட்டை பார்த்திருந்தால் இதனைத் தடுத்திருக்கலாம் என்னால் தான் இப்பொழுது நாடு முழுக்கப் பரவி விட்டது என்று எண்ணி குற்ற உணர்ச்சியில் துடித்துக் கொண்டிருந்தாள். மனம் விசித்திரமானது. எண்ணங்கள் கடலலைகள் போல் பிறந்து கொண்டே தானிருக்கும். 

பிரசாந்தினி, “அர்ச்சனா, யூ நீட் சம் ரெஸ்ட். டோன்ட் ஃபீல் கில்ட்டி. உனக்கும் கல்யாணி டெத்துக்கும் எந்த சம்மந்தமுமில்ல. இன்ஃபாக்ட் நான்தான் அவள அன்னக்கி ஜாய்ன் பண்ணச் சொன்னேன். யூ மஸ்ட் பீ ஸ்ட்ராங்” கண் கலங்கியவாறே தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கல்யாணியும் தொற்றால் பீடிக்கப்பட்டு இறந்து விட்டிருந்தாள். பிரசாந்தினியைக் கட்டிபிடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றாள் அர்ச்சனா.

 தூக்கத்தில் நாட்டமிழந்து பித்துப்பிடித்த நிலையிலிருந்தாள் அர்ச்சனா. மயானம் போல் காட்சியளிக்கும் தெருவீதிகள், கால் வைக்கவே இடமில்லாமல் வாகன நெரிசலாக இருக்கும் சாலையில் இப்பொழுது ஒரு கூட்டமே படுத்துருளும் அளவுக்கு எந்த ஒரு வாகனமுமின்றி வெறிச்சோடியிருந்தது. வரும் வழியெங்கும் மனிதத் தலைகளை காணாமல் வந்தவளை, தான் மட்டும்தான் இவ்வுலகில் இருக்கிறோமா, தனித்துவிடப்பட்ட கடைசி ஆள் தான் தானோ என்று பலவாறான எண்ணங்கள் சூழ்ந்து வதைக்கத் தொடங்கியிருந்தன.      

சலனமற்ற காலையை எதிர் கொள்ள மனம் இசையவில்லை, இருந்தும் தன்னால் முடிந்தளவு மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்றெண்ணி மருத்துவமனைக்கு விரைந்தாள். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அவர்கள் படும்பாட்டை பார்க்கவே பரிதாபமாகயிருந்தது. தன் பயத்தை மறைத்துக் கொண்டு நோயுற்றவர்களுக்கு தெம்பேத்திக் கொண்டிருந்தாள் அர்ச்சனா. ஏனைய மருத்துவர்களும் அதே நிலையில் தானிருந்திருக்க வேண்டும். யாரும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

 இந்த பத்து நாட்களுள் பவித்ரா என்ற ஒரு குழந்தையுடன் சற்று நெருங்கிப் பழகியிருந்தால் அர்ச்சனா. அன்று முழுவதும் அக்குழந்தையின் மரணம் அர்ச்சனாவை பாடாய்ப்படுத்தியெடுத்தது. மீண்டும் அவள் எண்ணத்துள் கல்யாணி புகுந்து கொண்டாள்.

“நான் கொல்லல. நா உன்ன கொல்லல. என்ன நம்பு கல்யாணி” என்று அன்றிரவு முழுவதும் தூக்கத்தில் உளறிக் கொண்டேயிருந்தாள் அர்ச்சனா.

  காலை ஏன் தான் விடிகிறதென்றிருந்தது அர்ச்சனாவிற்கு. மருத்துவமனையை அடைந்ததும் நேராக பிரசாந்தினியிடம் சென்றாள். இப்போதைக்கு அவள் மனமிளைப்பாற ஒரு இடம் இருக்கிறதென்றால் அது பிரசாந்தினி மட்டும்தான். பிரசாந்தினி சோகம் ததும்ப உட்காந்திருந்தாள். எதுவும் பேசாமல் பத்து நிமிடம் அவளருகில் தானும் உட்கார்ந்துவிட்டு எழுந்து சென்றாள் அர்ச்சனா.

   பவித்ரா இருந்த படுக்கையில் வேறொருவர் இருந்ததைக் கண்டதும் பிரசாந்தினியின் முகம் அர்ச்சனாவிற்கு நினைவு தட்டியது. அன்று முழுவதும் பவித்ராவின் இழப்பு அர்ச்சனாவைக் குடைந்து கொண்டேயிருந்தது. எதிலும் கவனம் செலுத்த முடியாமல் தவித்துப் போனாள். வெற்று சிரிஞ்சின் மூலம் தன்னையே சாகடிக்கவும் துணிந்து விட்டிருந்தாள். ஆனால் ஏனோ செயல்படுத்தவில்லை. கையாளாகாத நிலையில் கைவிட்டிருந்தாள்.     

வீட்டிற்குப் போக மனமில்லாமல் கடற்கரையில் அமர்ந்திருந்தாள். இயற்கை எந்த வித மாற்றமின்றி அதே எழிலுடன்தான் திகழ்கிறது. ஊரடங்கிற்குப் பின் ஒருவேளை மக்கள் பேச மறந்திருப்பார்கள் இல்லை நடக்க மறந்திருப்பார்கள் இரண்டுமில்லையென்றால் சகமனிதனைக் கொல்லவாது துணிந்திருப்பார்கள். ஆனால், ஒருபோதும் அலையெழுப்ப நான் மறக்க மாட்டேன் என்று அவளது கால்கள் மூலம் கடல் நினைவூட்டியது. மனிதர்கள் தன்னைத் தீண்டி நெடுநாட்கள் ஆனதை எண்ணி கடல் அழுவது போலிருந்தது. கடல் நடுவில் ஒரு உருவம். அது பவித்ராவை ஒத்திருந்தது. கடலின் தன்மையையும் வானின் நிறத்தையும் கடன் வாங்கிருந்தது அவ்வுருவம் உடுத்தியிருந்த ஆடை. தண்ணீரில் எப்படி மனிதனால் நடக்க முடியும். இது சாத்தியமா? இவளால் மட்டும் எப்படி முடிகிறது. குழந்தைகள் அற்புதம் படைப்பார்களென்று இது போன்ற செயல்களை வைத்துத்தான் சொல்கிறார்களோ என்று குழப்பத்துடன், “பவித்ரா இங்க வாம்மா. அங்க நிக்காத மா. மீனெல்லாம் இருக்கும் அதுங்க உன்ன கடிச்சிரும். இங்க வாம்மா”என்று கத்திக் கொண்டே உள்ளே சென்றவள் நீச்சல் தெரியாததால் மூர்ச்சையாகி முங்கியிருந்தாள்.

 கண் திறந்து பார்க்கும்பொழுது மருத்துவமனை படுக்கையில் வீற்றிருந்தாள். தனக்கும் தொற்று வந்துவிட்டதோ என்று அதிர்ச்சியில் இருந்தவள், “என்ன மேடம் கடலுக்குள்ள என்ன முத்தெடுக்க போனீங்களா?” என்றவாறே ஒருவன் தன்னை நோக்கி வருவதைப் பார்த்தாள். இல்லை மருத்துவமனை இல்லை மீனவர் ஒருவரின் வீடாக இருக்க வேண்டும். ஆம் மீனவரின் வீடுதான் என்ற பிரஞ்ஞை தட்டியது. தன்னைக் கேள்வி கேட்டதும் மீனவர்தான் என்ற நிலைப்பாடுக்கு வந்தாள். முன்தினம் தன்னால் நடந்த கிறுக்குத்தனத்தை உணர்ந்து சிரித்தாள். நன்றி சொல்லிவிட்டு வழக்கம் போல் மருத்துவமனைக்குச் சென்றாள்.

  “அர்ச்சனா, அர்ச்சனா” என்றவாறே பிரசாந்தினி அவளருகே விரைந்து வந்தாள்.

 “இந்தத் தொற்றால பாதிக்கப்பட்டவுங்க நெறய பேர் குணமாகிட்டு வராங்களாம்” என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றாள்.

 இச்செய்தி அர்ச்சனாவிற்கு சந்தோசத்தைத் தந்ததாக தெரியவில்லை. அவள் வைரஸ் தொற்றை விட பயங்கரமான மனநோய்க்கு உள்ளாகியிருந்தாள். இதில் அர்ச்சனாவிற்குத் துணையாக பலர் உருவாகியிருந்தனர்.     

வீட்டிற்கு செல்லும் வழியில் தன்னை யாரோ பின் தொடர்வது போலுணர்ந்து திரும்பிய போதெல்லாம் வெறும் இருளும் வெறுமையும் மட்டுமே இருந்தன. தன் நிலையை இழந்தவள் போல் திரிந்தாள். நிசப்தத்திற்கும் நிச்சலனத்திற்கும் நடுவில் நின்று கொண்டு வதங்கிக் கொண்டிருந்தாள். வெறுமை தன்னை அந்நியமாக்கி விட்டதாக எண்ணி எண்ணிப்  புழுங்கினாள். இதனால்தான் மருத்துவமனையே கதி என்றிருந்தேனோ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள்.

மருத்துவமனையை விட்டுக் கிளம்பும் போதிருந்த வண்டி வீட்டிற்கு வந்த போதில்லை.

“எனக்கு நோய் தொற்று வந்துரவே கூடாது. நா சுத்தமா தான் இருக்கேன். இன்னும் சுத்தமாகுறேன். நல்லா சோப்புத் தேச்சி குளிக்க போறேன். நான் செத்தாலும் பரவால்ல. என்னால யாருக்கும் பரவிட கூடாது” என்று திரும்பத்திரும்ப மனப்பிறழ்வு நேர்ந்தது போல் சொல்லிக் கொண்டே குளியளறைக்குள் ஷவரின் கீழ் நின்றாள் பின் அமர்ந்தாள்.       

“கதவ இப்டி காலங்காத்தால தொறந்து போட்டு எங்க போனா இவ. வண்டிய வேற காணோம். பாவம் வேலைக்கு போய்ருப்பா. எத்தன உசுர காப்பாத்துற பொறுப்பு” என்று அணிந்திருந்த மாஸ்க்கை சரி செய்து கொண்டே உள்ளே சென்ற மாடி வீட்டு ஆன்ட்டி கத்திக் கொண்டே வெளியே ஓடி வந்து ரோட்டில் நின்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள்.

அக்கம் பக்கத்தினர் தொற்றால் எதாவது நிகழ்ந்திருக்குமோ என்ற அச்சத்தில் தயங்கித் தயங்கி அர்ச்சனா வீட்டிற்குள் சென்றனர். 

நிம்மதியாக குருதி சூழ அனைத்தையும் துறந்த ஜென் நிலையில், வறண்டு தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் ஷவரை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.     

கூட்டத்தில் நிற்கும் ஒருவனைத் தலையில் தட்டி “இதெல்லாமாடா ஃபோட்டோ எடுப்ப பாடே”என்று திட்டியவாறே தன் தோள் மேலிருந்த துண்டை அர்ச்சனாவின் அங்கங்கள் மறைவது போல கிடத்தினார் பால் விற்கும் மூக்கையா தாத்தா.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button