கவிதைகள்

 கவிதை – வழிப்போக்கன்

குழம்பிப்போன கடவுள்

வான்கோவின் சூரியகாந்திப் பூவை

சூடிக்கொள்ள மறுக்கிறாள்

அவன் காதலி.

காதறுத்துக்கொள்வதற்கு பதிலாக

வண்ணங்களை எடுத்து

அவள் முகத்தில் ஊற்றிவிட்டு

வரைவதை நிறுத்திக்கொள்கிறான்

வான்கோ.

 

ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவ

கோட்பாட்டுக் காகிதத்தில்

மலம் துடைக்கிறாள்

ஹீரோஷிமாவின் கதிரியக்கத்தால்

பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தி.

அவமானத்தால் செய்வதறியாது

தலை கவிழ்ந்தபடியே

உலகைச் சுற்றி வருகிறான்

ஐன்ஸ்டீன்.

பீத்தோவானின் இசைக் குறிப்பு

அவனைத் தூங்க வைக்க மறுக்கிறது.

இசைக் கருவி யாவற்றையும்

உடைத்துப் போட்டுவிட்டு

அதன் மேல் படுத்துக்கொள்கிறான்.

ஏனோ இசைக் குறிப்பு குறித்தான 

சிந்தனையின் இடையூறின்றி

அவனுக்கு ஆழ்ந்த தூக்கம் வருகிறது.

 

 

பாபர் மசூதி கலவரத்தில் இறந்தவர்கள்

உலக வர்த்தக மையக் கட்டிடத்தில்

இறந்தவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்

மறுமையின் உலகத்தில்.

ஞாபகச் சின்னமாய்   

கலவரத்தில் கருவறுத்து இறந்த 

குழந்தையின் கைகளால் 

நரகத்தில் நடப்படுகிறது

ஒரு பூச்செடி.

 

நியூட்டன் தவறவிட்ட

கைபேசியின் தொடுதிரை

உடைந்துவிடுகிறது.

புவியீர்ப்பு விசையை மறந்து ஏனோ

தனது தலைவிதியை நொந்துகொள்கிறான்.

இம்முறை விவாகரத்துக்குப் பதில்

ஐ லவ் யூ சொல்கிறாள்

அவன் மனைவி.

 

எல்லாம் தவறாக நடப்பதை

உணர்ந்த கடவுள் பூமியை

மறுசீரமைக்க நேரம் பார்க்கிறார்

அவர் கைக்கடிகாரம் 

சில மணி நேரங்களுக்கு முன்பே

நின்று போயிருக்கிறது.

 

குழம்பிப்போன கடவுள்

அவர் அஸ்திரத்தில் ஒன்றை

உபயோகப்படுத்தப் பார்க்கிறார்

கொள்ளை நோயால்

இறந்தவர்களின் சாபத்தால்

அசைக்க முடியாதபடி பக்கவாதத்தால்

அவர் கை செயலிழந்திருக்கிறது.

 

தொலைவில் கை வீசி நடந்து வரும்

ஸ்டீபன் ஹாக்கின்ஸை

அழைக்கிறார் காரணம் கேட்க

அவன் கடவுளைப் பார்த்து கைதட்டி

கேலி செய்து சிரிக்கிறான்.

 

எல்லாவற்றையும்

வேடிக்கைப் பார்த்த பூமி

தானும் தனது

அச்சுப் பாதையிலிருந்து விலகி

சுழற்சி வேகத்தைக் கூட்டிக்கொண்டு

மாற்றுத் திசையில் சுழல்கிறது.

 

காலம் கவனமாய்

பின்னோக்கி வேகமாய் நகர்கிறது

ஹாக்கின்ஸின் டைம் மிஷின்

இம்முறை சரியாய்

வேலை செய்யத் தொடங்குகிறது.

***********

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button