
இளையராஜாவோடு வாழ்தல்
எப்போதும்
இளையராஜாவோடு தொடங்கி
இளையராஜாவோடு முடிவதாய்
நம்பிச் சாகும் மனதிற்கு
உணர்ச்சிகரம் பொங்கும் ரகுமானிடம்
ஏதோ நிகழ்ந்துவிடுகிறது
தற்கொலைக்கு தூண்டும் யுவன் குரலிடம்
ஏதோதோ நிகழ்ந்துவிடுகிறது
சிலபோது சில மௌனங்களில்
சந்தோஷ் நாராயணனிடம் தப்பித்துவிட முடிவதில்லை
நிறைய சந்தர்ப்பம் இருந்து கொண்டேதான் இருக்கிறது
சில முடிவுகள் நம்மை எடுத்துக்கொள்ளும்தானே
எளிதில் என்னை உடைத்துவிடுகிற அனிருத்தும்
பிறிதொன்றில் ஏதோ காதல் காமத்தில்
ஏதோ கண்ணீர் முத்தங்களில்
ஏதோதோ பைத்திய கருணைகளில்
சில நியதிகள்
இளையராஜாவாகவே இருந்துவிடுகிறது
இருப்பதற்கென்றுதான் இருக்கிறாய்
எல்லாம் இளையராஜாவாய் இருந்துவிட்டால்
அத்தனை நலம்.
—
இல்லாமல் போகட்டும் எல்லாம்
இப்போதெல்லாம் நள்ளிரவில்
தவறிய அழைப்புகள் வந்துவிடுவதில்லை
எனக்கு இனியும் புரிந்துவிடபோவதில்லை
அது அத்தனை இயல்பானதல்ல
கனத்த முத்தங்களை
அது ஒருபோதும் கொண்டிருப்பதில்லை
என் இருளை
அது ஒருபோதும் மாற்றிவிடபோவதில்லை
என் கண்ணீரின் உப்பை
அது ஒருபோதும் நிறுத்திவிடபோவதில்லை
எனக்குத் தெரியும்
என் தேம்புதல் உன்னைச் சேர்ந்திடாதென
இவ்வளவு இல்லாமல் போகவா
அவ்வளவு இருந்து கொண்டிருந்தோம்