
“அழைத்தவுடன் வந்தமைக்கு நன்றி” என்றாள் மரியம்.
“எனக்கு இன்னும் மணமாகவில்லை. அதனால், அழைத்தவுடன் வர முடிந்தது” என்றேன் நான்.
“அவர்கள் எங்களிடமிருந்து எதையோ மறைப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். அது என்ன என்பதைக் கண்டுபிடிக்கத்தான் உன் உதவி தேவைப்படுகிறது.” என்றாள் மரியம்.
“அவர்கள் என்று நீங்கள் குறிப்பது?” என்றேன் நான்.
“ஆண்கள். இந்த கிராமத்தின் ஆண்கள்.” என்றாள் மரியம்.
“சென்ற வாரம் என் கணவர் மனோவை எடுத்துக்கொண்டு ஒரு மரம் ஹம்ரீ ஆனது. பொதுவாக, ஹம்ரீ மரங்கள் திடமான வீர்யமான மனித உடல்களைக் கோருபவை. ஆனால், நான் அறிந்தவரை என் கணவர் ஒன்றும் அப்படியானவர் அல்ல. நோய் எதிர்ப்பு சக்தி அவருக்கு குறைவே. அதுமட்டுமல்லாமல், ஒருமுறை ஒரு மூட்டை ஒன்றைத் தூக்கியதில், கழுத்துப்பகுதியில் ஒரு முதுகெலும்பு முறிந்து, உலோகத்தாலான எலும்பொன்று பொறுத்தப்பட்டது. அது அத்தனை எடை கூடிய மூட்டையும் அல்ல.” என்றாள் தொடர்ந்து.
“அதுமட்டுமல்லாமல், இந்த மரங்கள் மனித மருந்துகளைக் கேட்பது இந்தப் பகுதியில் சமீப காலங்களாக அதிகரித்திருக்கிறது. முந்தின மாதம் இரண்டு. சென்ற மாதம் நான்கு. இந்த மாதம் இன்னும் முடியவில்லை. ஆனால், இப்போதுவரை ஐந்து மனித மருந்துகள் அளித்தாகிவிட்டது. இதுவே நகரங்களுக்கும், நாடுகளுக்கும் பரவலாம்” என்றாள் மரியம் எச்சரிக்கை செய்யும் பாவனையில்.
துரதிருஷ்டவசமாக, என் வீடு பக்கத்து நகரத்தில் இருந்தது. அதுவே, எச்சரிக்கை உணர்வாக மரியத்தின் கணவன் குறித்து பீராய உந்தியது.
“உண்ண உண்ண, உண்ணப்படும் உணவிற்கு உடல் பழகிவிடுவதைப் போல இருக்கலாம்” என்றேன் நான்.
“ஆண்டுக்கு ஒரு மனித மருந்து என்றிருந்த போது எல்லாம் கட்டுக்குள் இருப்பதாகப்பட்டது. ஆனால், ஆண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இருந்தது, எப்படி மாதத்துக்கு ஐந்து என்கிற கணக்கிற்கு வந்திருக்கும் என்று தான் புரியவில்லை.” என்றாள் மரியம்.
வீட்டினுள் இருந்து எடுத்து வந்த சில கோப்புக்களை என் கைகளில் திணித்தாள். நான் கோப்புக்களைத் திறந்து பார்க்க, அதில் மனோ மேற்கொண்ட மருத்துவம் தொடர்பான முழுத்தகவல்களும் இருந்தது.
அவளுக்கு வந்தனம் சொல்லிவிட்டு ஹம்ரீ மரங்கள் இருந்த காட்டுப்பகுதியை அடைந்தேன் நான். அங்கே ஒரு மரத்தில் ‘மனோ’ என்று எழுதியிருந்தது.
நான், என்னிடம் இருந்த உலோகம் கண்டுபிடிக்கும் கருவியால் மரத்தை ஊடுகதிர் செய்து பார்க்க, அதில் தோன்றிய படத்தில் கழுத்துப்பகுதியில் ஒரு உலோகம் இருப்பதற்கான தடயமே இல்லாமல் இருந்தது. மாறாக, மரியம் தந்த கோப்பில் இருந்த ஊடுகதிர் விவரத்தில் அந்த உலோகம் தெளிவாகப் புலப்பட்டது. அதை வைத்து மரத்தினுள் இருந்த உடல், மரியத்தின் கணவன் மனோவினுடையது அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன் நான்.
நகரத்தின் காட்டிலாகாவைத் தொடர்பு கொண்டு, கடந்த இரண்டு வாரங்களில் அங்கே ஹம்ரீ ஆக்கப்பட்ட மனிதர்களின் தகவல்களை வாங்கிச் சோதனை செய்ததில், அந்த மனிதர்களும், மரங்களில் இருந்த உடல்களும் வேறு வேறு என்பதைப் புரிந்துகொண்டேன். ஒன்றில் உயரத்தில் வேறுபாடு இருந்தது, மற்றொன்றில், ஆண் உடலுக்கு பதிலாய் ஒரு பெண் உடல் இருந்தது.
புஜாரியிடம் ஹம்ரீ குறித்த தகவல்கள் ஏதேனும் கிடைக்குமென்று எண்ணி புஜாரியைச் சந்தித்தேன். புஜாரி தான் அந்தச் சடங்குகளைச் செய்பவர். அவருக்கு நிச்சயம் ஏதேனும் தெரிந்திருக்கும் என்பது என் அவதானமாக இருந்தது.
“மனிதர்கள் சிறுபான்மை இனங்களாகப் பார்க்கப்படாத காலகட்டம் அது. அப்போது விண்வெளியிலிருந்து ஒரு கல் பூமியில் விழுந்திருக்கிறது. இரண்டு தலைமுறைகளுக்கு முன்னானது. அந்த நிகழ்வுக்குப் பிறகு தான் மரங்கள் மனிதர்களை மருந்தாக எடுத்துக்கொள்வது துவங்கியிருந்திருக்கிறது. துவக்கத்தில் மனிதர்கள் காடுகளில் காணாமல் போகத் துவங்கியிருந்திருக்கிறார்கள்.அப்போது யாருக்கும் எதுவும் விளங்கவில்லை.அப்படி ஒரு தலைமுறையே கடந்து விட்டது. உணவுச் சங்கிலியில் ஒரு புதிய தொடர்பு. இது கிட்டத்தட்ட நோய்க்கு ஒரு பச்சிலையை, மூலிகையை மனிதர்கள் உட்கொள்வது போலத்தான். அவ்விதம் மனித மருந்து எடுத்துக்கொண்ட மரங்களுக்கு ஹம்ரீ என்று பெயர். மனித மருந்துகள் தரப்படாவிட்டால் அந்த நோய்மைக்கு பல மரங்கள் இலக்காகி, எல்லா மனிதர்களையும் அவைகள் மருந்தெனக் கொண்டு விடலாம். இப்போதைக்கு திடமான மனித மருந்துகள் அளிப்பது தான் இந்த நோய்மையை, ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் குறுக்கும் வழி. கடந்த ஒரு தலைமுறையாகத்தான் ஹம்ரீக்களை மேலாண்மை செய்யத் துவங்கியிருக்கிறோம். ஆதலால், இருக்கும் தகவல்களில் எத்தனை பயன் கிடைக்குமென்பது புதிர் தான்” என்றார் புஜாரி.
“ஹம்ரீக்கள் அதிக மனித மருந்துகள் கேட்பது குறித்து ஏதேனும் தெரியுமா?” என்றேன் நான்.
“அது கவலைக்குரிய விஷயம் தான் அல்லவா? ஒருவேளை, நாம் அதிக அளவில் மனித உயிர்களை உருவாக்க வேண்டுமென்பதற்கான சமிஞையோ?” என்றார் புஜாரி.
நான் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன். என்ன நடக்கிறது என்பது ஊர்ஜிதமாகும் வரை, நான் கண்டுபிடித்ததைப் பகிர வேண்டாம் என்று தோன்றியது.
“ஆனால் ஒன்று. ஹம்ரீக்கள் வலுவான மனித மருந்துகளைக் கோருகின்றன. அந்த விதமான மனித மருந்துகள் அவைகளுக்குத் தொடர்ந்து கிடைக்கிறது. ஒருவேளை அவைகளின் நோய்களின் தீவிரம் அதிகரித்திருக்கிறதோ என்னவோ?” என்றார் புஜாரி.
“எனக்கும் அப்படி ஒரு எண்ணம் வந்தது. ஆனால், ஊர்ஜிதம் செய்ய மார்க்கமேதும் இருப்பதாகத் தெரியவில்லை” என்றேன் நான். இப்போதைக்கு அவர் போகும் வழியிலேயே போய் உண்மையைக் கண்டுபிடிப்பது தான் சாதுர்யம் என்று எனக்குத் தோன்றியது.
“சரி, இரவாகிவிட்டது. உணவு அருந்திவிட்டுச் செல்கிறீர்களா?” என்றார் புஜாரி.
எனக்குப் புரிந்துவிட்டிருந்தது. நாசூக்காக வெளியேறச் சொல்கிறார்.
“இல்லை. வீட்டிலேயே இரவு உணவு இருக்கிறது. வீணாகிவிடும். நான் கிளம்புகிறேன். வந்தனம்” என்று சொல்லிவிட்டு நான் எழுந்துகொண்டேன்.
அவர் வீட்டின் கதவு என் முதுகின் பின்னால் மூடிக்கொண்டது.
நான் இருளில் ஒரு மரத்தின் பின்னால் மறைந்தபடி புஜாரியின் வீட்டை ரகசியமாக அவதானிக்கலானேன். அவர் வீட்டிற்குள் விளக்கணைந்தது. தொடர்ந்து பின் பக்க கதவுகள் திறந்து அவர் வெளியேறினார். தன்னை ஒரு முக்காடுக்குள் மறைத்தபடி அவர் இருளில் எங்கோ நடப்பது தெரிந்தது. நான் அவர் பின்னாலேயே மறைந்து மறைந்து செல்லலானேன்.
காட்டினூடே அவர் வெகு தூரம் நடந்தார். நானும் அவர் அறியாதவாறு மறைவாய் அவரைப் பின்தொடர்ந்தேன். பல மைல்கள் காட்டின் வழியே குறுக்கில் நடந்து ஒரு கைவிடப்பட்ட சிறிய கட்டிடம் ஒன்றை அடைந்தார். ஒருமுறை திரும்பி தன்னை யாரும் பின் தொடர்கிறார்களா என்று பார்த்துவிட்டு, ஒரு வடிகால் கால்வாயின் கதவை தரையிலிருந்து பற்றி இழுத்துத் திறந்தார். பின் அவர் அதனுள் இறங்கினார். நானும் அதே வழியைப் பின் தொடர்ந்து நடந்தேன்.
அங்கே நான் மிகப்பல மனிதர்களைப் பார்த்தேன். மனோவையும் தான். அவர்கள் ஒரு பராமரிக்கப்பட்ட இடத்தில் மதுக் கோப்பைகளுடன் அமர்ந்திருக்க, சற்று தள்ளி கரிய மேனியுடன் கூடிய திடகாத்திரமான கூலிகள் எடுபிடி வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களின் உடற்கூடு, மரத்தினுள் தோன்றிய உடற்கூடுகளைச் சாயலில் ஒத்திருப்பதை நான் அவதானித்தேன்.
மனோ, புஜாரியைக் கண்ணுற்று அவரை அண்டினார். இருவருமாக ஒரு லாந்தர் விளக்கொளியில் அமர்ந்தார்கள். புஜாரி என்னைப் பற்றியும், நான் மரியத்தின் நிமித்தம் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகள் குறித்தும் பகிர்ந்தார். மனோ முதலில் எதுவும் பேசவில்லை. சற்று நேரம் அமைதியாக இருந்தார். சிந்தனையில் ஆழ்ந்திருப்பதாகப் பட்டது. பிறகு குரலை செப்பனிடும் ஒரு செருமலுடன் பேசலானார்.
“அவர்கள் கிராமத்துப் பெண்கள். அவர்களின் கவலைகள், அக்கறைகள் புராணக்கதைகளை, அவைகளில் உள்ள மதிப்பு மிக்க வழமைகளை, அதன் சிறப்பம்சங்களை உணராதவை. நம்மை விட இந்த அடிமைகள் பன் மடங்கு திடமானவர்கள் என்று தெரிந்தால், அவர்கள் நம்மைத் தேர்வு செய்யமாட்டார்கள். ஹம்ரீக்களுக்கு நாம் தான் முதலில் இரையாவோம். நாம் தான் முதலில் அழிவோம். நாம் பிழைக்க வேண்டுமானால், ஆள்மாறாட்டம் மட்டுமே நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு. இப்படி யோசித்துப் பாருங்கள். ஒரு தலைமுறையை உருவாக்க நம்மில் சிலர் வாழ்நாள் சிறையை, இது போன்ற நிலவறைகளில் கடத்தவும் தயாராக இருக்கிறோம். இது எப்பேற்பட்ட தியாகம்? கூலிகளின் உடல் என்பது ஒரு விதமான வலு என்றால், நம்முடைய மனம் அதற்கு ஈடான அல்லது அதைவிடவும் வலுவான ஒன்றாகத்தானே இருக்க முடியும்? ஆனால், இத்தியாகம் அவர்களுக்கு விளங்கவே போவதில்லை.” என்றார் மனோ. அவருடன் அமர்ந்திருந்தவர்கள் ஆமோதிப்பாய் தலையசைத்து தங்கள் ஒப்புதலை உணர்த்திக்கொண்டிருந்தார்கள்.
“இப்போது நம் பிரச்சனை அது அல்ல. கடந்த இரண்டு மாதங்களாக, நாம் இனி குழந்தை பெறத் தகுதியை இழந்துவிட்ட நம்மவர்களையே தான் மரங்களுக்கு மருந்தாக அளித்துக்கொண்டிருக்கிறோம். ஏனெனில், நம்மிடம் உள்ள கூலிகள் எண்ணிக்கை அதிகமாக இல்லை. கூலிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்த அவர்களைப் பிள்ளை பெற அனுமதிக்கவேண்டும். அதற்கு காலமாகும். இந்தக் கூலிகளை மருந்தாகக் கொண்டவரையில் மரங்கள் பல மாதங்களுக்கு ஒரு மருந்தென எடுத்துக்கொண்டிருந்தன. நம்மை மருந்தெனக் கொள்வதால், மாதம் ஒன்றுக்கு நான்கைந்து மருந்துகள் தேவைப்படுகின்றன. நாம் நம்மை அனுப்புவதைத் தொடர்ந்தால் நம் எண்ணிக்கையும் குறைய வாய்ப்பாகும். இது ஒரு இக்கட்டான சூழல் தான்” என்றார் புஜாரி.
“கூலிகள் வலிமை மிகுந்தவர்கள். இவர்களை அனுப்பிவிட்டால் இந்த வேலைகளை யார் செய்வது? “ என்றார் மனோ.
“புரிகிறது. அதில் மாற்றுக்கருத்தில்லை. நாம் கூலிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்” என்றார் புஜாரி.
“அதற்கு வேலை நடக்கிறது. சென்ற ஆண்டுகளில் பிள்ளை பெற்ற கூலிகளின் குழந்தைகள் இப்போது வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆயினும் இன்னும் பெரியவர்களாக ஆகவில்லை. அதற்குக் காலமாகும். அதுவரையில் நாம் இந்த ஒட்டுமொத்த நாடகத்தின் வேகத்தையும் சற்று குறைக்க வேண்டும்” என்றார் மனோ.
“எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், கூலிகளின் வலு கூடக் கூட மரங்கள் இவர்களை மருந்துகளாகப் பயன்படுத்தும் காலம் நீளும். அந்த வகையில் நாம் இந்த ஒட்டு மொத்த நாடகத்தின் வேகத்தையும் மட்டுப்படுத்தலாம்.” என்றார் புஜாரி.
“கூலிகளின் வலுவை எப்படிக் கூட்டுவது? உடற்பயிற்சி செய்ய வைக்கலாமா? சத்தான புரதங்கள் தரலாமா?” என்றார் மனோ.
“திடம் என்றால், உடல் ரீயிலான திடத்தன்மை தான் என்றல்ல. கடினமான புறச்சூழல்கள் அவர்களை மென்மேலும் கஷ்டப்படுத்தும். கஷ்டங்கள் கூடக் கூட அவன் மென்மேலும் திடமாவான். அவனின் வலு மென்மேலும் கூடும். அவன் பிள்ளைகளிடமிருந்து அவனைப் பிரிக்கலாம். அவனின் மனைவியை அவன் கண் முன்னே புணரலாம். அவனது சகோதரனை, அவனை விட்டே கொலை செய்ய வைக்கலாம்.” என்றார் புஜாரி.
“புரிகிறது. ஆவன செய்கிறேன். இது ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்குமென்று தோன்றுகிறது” என்றார் மனோ மெலிதான புன்னகையுடன்.
அங்கே என்ன நடக்கிறது என்பது புரிந்துவிட்டபிறகு அதற்கு மேலும் அங்கிருப்பது சரியல்ல என்று தோன்றி நான் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். மீண்டும் காட்டுக்குள் கிராமத்தை நோக்கிப் பயணித்தேன்.
தன் உதிரத்தைப் பிழைக்கச்செய்ய ஒரு மனிதன் வாழ் நாள் சிறையில் தன்னையேப் பூட்டிக்கொள்ள முன்வருவதை என்னவென்பது? உலகின் கடைசி நாளில் இருக்க நேர்பவன் இத்தகைய தயாரிப்புகளில் இறங்குவானா? பூமியில் மனித வாழ்க்கை மீது எத்தனை ஆராதிப்பு இருந்தால், அவன் இந்த பூவுலகை அதன் சுகங்களை, வழிகளை, அழகியல்களை, தன் மகன் வாயிலாக, அவனின் பிள்ளைகள் வாயிலாக, அந்தப் பிள்ளைகளின் பிள்ளைகள் வாயிலாக தரிசிக்க முயல்வான்?
அடிமைகள் உடல் அளவில் திடமானவர்களாக இருந்தார்களே ஒழிய, மனதளவில், அறிவளவில் பலவீனமாக இருந்தனர் அல்லது அப்படி இருத்தி வைக்கப்பட்டனர். முதலாளிகள், அறிவு இருந்தால் போதுமென்று அமைந்து, எந்த வேலையையும் சுயமாகச் செய்யாமல் வலு குறைந்து நோய்களுக்கு எளிதாக ஆட்கொள்ளும் மனிதர்களாகிப் போயினர்.
எப்படியாகினும், நாளையே ஒரு பேரழிவு வரின், இப்பூவுலகின் கடைசி உயிர் தன் பிழைப்புக்கான எல்லாவற்றையும் தானே செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக இருப்பதற்குத்தான் உச்சபட்ச சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்கிற அடிப்படையில் எனக்கு, பூமியில் அதியுயர் உயிரினமான மனித உயிர்களின் இருப்பு என்பது அத்தனை உச்சபட்ச சிறப்பு வாய்ந்ததாகத் தோன்றவில்லை. ஏனெனில் அது பல நிலைகளிலும் தன்னிச்சை, தன்னிறைவு போன்ற பண்புகள் இல்லாமல் தான் இருக்கிறது.
முதலாளியாகவோ, அடிமையாகவோ இருந்து, ஒரு குறை இனமாக இருப்பதற்கு பதிலாக ஹம்ரீக்களாக நீடித்துவிடுவதில் ஒரு லாபம் இருப்பதாகத் தோன்றியது.
மரியத்தை சந்தித்தேன்.
“கண்டுபிடித்துவிட்டாயா?” என்று தான் துவங்கினாள்.
“ஆம். நாம் எல்லோரும் ஹம்ரீ ஆவது நலம். நமக்கு ஒரு சலுகையாவது கிடைக்கும்”
“என்ன சலுகை? எதற்கு சலுகை?”.
“பிரபஞ்ச ஆளுமை அற்று இருப்பதற்கு” என்றேன் நான்.
மரியம் புரியாமல் குழம்பியவளாய் என்னையே பார்த்தாள்.
*****
கதை நீதியும் சொல்கிறது! வாழ்த்துகள்!