
முரகாமியின் படைப்புகளில் இடம்பெறும் மையக்கதாபாத்திரம் எதிர்கொள்ளும் சம்பவங்களில் காணக்கிடைக்கும் தவிர்க்கமுடியாத அம்சங்கள் தனிமை, கனவுகள், கனவுகளில் நிகழும் இயல்புமீறிய பாலுறவுகள், இழப்புகள், தேடல்கள், புதிர்வழிப்பாதைகள், நீரற்ற பாதாளக் கிணறு, எதிர்பாரா திருப்பங்கள் ஆகியவை. குறிப்பாக கதையின் இயக்கம் குறிப்பிட்ட ஒன்றின் தேடலை நோக்கியே முன்னகர்கிறது. தேடலின் மையத்தை நெருங்க நெருங்க ஒவ்வொரு அடியிலும் இலக்குகளின் திசைகளும் பாதைகளும் ஊகங்களும் மாறுகின்றன. தொலைக்கப்பட்ட அல்லது இழக்க நேர்ந்த ஒரு சந்தர்ப்பமோ, மனித உறவோ, அல்லது ஒரு செல்லப்பிராணியோ கூட மையக்கதாபாத்திரத்தை தொடர்ந்து இயக்கும் காரணிகளாக செயல்படுகின்றன. உதாரணமாக The Wind-up Bird Chronicle நாவலின் கதை இயக்கம் ஆரம்பமாகும் புள்ளி ஒரு பூனை காணாமல் போவதில் இருந்து துவங்கி அதுபற்றிய தேடலில் இறங்கும் மையப்பாத்திரமான Toru Okada விற்கு ஒரு கட்டத்தில் அவனது மனைவியும் காணாமல் போகிறாள், நாவலின் இறுதி வரை தனது மனைவி தொலைந்து போனதற்கான காரணத்தையும் சென்றுவிட்ட இடத்தை அறியவும் அவன் முன்னெடுக்கும் முயற்சிகளால் நீள்கிறது.
அதேபோல நாவலின் மையக்கதாபாத்திரத்தின் செயல்பாடுகளுக்கு திசைகாட்டிகளாகவும் அவனது முயற்சிகளுக்கு அடிகோலுபவையாகவும் அமைபவை நாவலில் வரும் உபகதாபாத்திரங்கள். அதிலும் குறிப்பாக மர்மமான மற்றும் இயல்புக்கு முரணான விசித்திரமான குண அம்சங்களைக் கொண்டிருக்கும் பெண் கதாபாத்திரங்கள். நாவலில் வரும் Malta kano மற்றும் Creta kano இதற்கு உதாரணங்கள். எதிர்காலத்தை முன்னுணர்ந்து Okada விற்கு உதவுவதாக கதையில் வரும் இக்கதாபாத்திரங்கள் மற்றும் எந்நேரமும் இறப்பு பற்றிய யோசனைகளில் சிந்தனைகளை உலவ விட்டபடி வாழ்தலுக்கும் இறப்பிற்குமிடையேயான அர்த்தங்களை தொடர்ந்து கேள்விகள் கேட்டபடி வரும் May Kashara என்ற பதின்பருவ பெண் கதாபாத்திரம் மற்றும் இளமை காலத்து போரின் நேரடிப்பாதிப்பிலிருந்து மனரீதியாக முழுமையாக விடுபட முடியாமல் வாழ்க்கையில் எந்தவித பிடிப்புமின்றி முதுமை வரை தனக்கென எந்த உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் காலத்தைக் கடத்திக் கொண்டு செல்லும் Lieutenant Mamiya என்ற கதாபாத்திரம் ஆகிய இவர்கள் கூறும் தத்தம் கதைகளோடு Okada வின் சொந்த வாழ்கையின் கடந்த கால நிகழ்வுகளின் நீட்சியாக அவனது தேடல் தொடர்கிறது.
கடந்த காலம் என்பது Okada மற்றும் அவனது மனைவி Kumiko இரண்டு பேரும் ஒன்றாக வாழ்ந்த சமயத்தில் Kumiko அவனிடம் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளும் அவளது நினைவு தெரிந்த பால்ய வயது முதலே குடும்பத்தினரின் அரவணைப்பு கிடைக்கப்படாமல் தனிமையிலேயே வாழ்ந்து வந்த நாட்களைப் பற்றிய நினைவுகள். திருமணம் ஆன பின்னரும் கூட Kumiko விடம் தென்படும் எதிலும் அதீதப் பற்றற்ற அலட்சியமான தன்மைகளுக்கு ஆதாரமாக அவளது அந்த சிறுவயதுப் பாதிப்பே காரணமாக அமைகிறது. Okada Kumiko தம்பதியினர் திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்து வரும் போதும் அவர்கள் இருவருக்குமிடையே வெளிப்படையான பரஸ்பர புரிதல் எதுவுமில்லாமல் இருவரும் அவரவர் தனிமைகளின் கூட்டுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். எந்தவித முன்குறிப்பும் விட்டுச்செல்லாமல் திடீரென மறைந்து போகும் Kumiko வின் இருப்பு அப்போது வரை Okada கவனத்தில் கொள்ளாமல் இருந்து வந்த அவளது வெளிப்படையற்ற நடவடிக்கைகளை மீள்யோசனை செய்யத் தூண்டுகிறது.
அந்த யோசனைகளை பரிசீலித்துப் பார்க்க Okada தேர்வு செய்யும் இடம் பயன்பாட்டில் இல்லாத நீரற்ற ஆழமான இருள் சூழ்ந்த கிணறு!. கிணற்றின் தரையடியில் அதன் இருள் சூழ மண்வாசனை கலந்து எந்நேரமும் ஈரப்பதம் நிறைந்திருக்கும் அந்தப் பகுதி அவனது கவனங்களையும் சிந்தனைகளையும் புற உலக சப்தங்களிலிருந்து மட்டுமல்லாமல் ஒருவேளை கிணற்றடியில் இறந்து விட்டால் அவனது தொலைதலை கண்டறியும் சாத்தியங்களுக்கும் வாய்ப்பளிக்காத துரதிர்ஷ்டத்தையும் கொண்டிருக்கிறது. கிணற்றடியில் கண்களைத் திறந்து வைத்திருப்பதும் மூடி வைத்திருப்பதும் வேறுபாடுகள் அற்ற நீக்கமற நிறைந்திருக்கும் கடும் இருட்டு அவனது புலன்களை புதிர்வழிப்பாதைகள் சூழ்ந்த பாதாள உலகிற்கு இட்டுச் செல்கிறது. அங்கு அவன் காணும் காட்சிகள் கனவின் தோற்றப்பொலிவுகளையும் ஆழ்மனப்பிரக்ஞைகளில் தேங்கிக்கிடக்கும் நினைவுகளையும் கொண்டதாக இருக்கிறது. கனவிற்கும் நிஜத்திற்கும் இடைப்பட்ட கண்ணி அறுந்து போக நடப்பவை யாவும் எந்த அளவுக்கு நிஜம் எந்த அளவுக்கு மாயை என்னும் விசித்திரமான சுழல்பிடிக்குள் வாசகர்களாகிய நாம் சிக்கிக் கொள்கிறோம். Okada உணரும் அதே கும்மிருட்டும் தூரத்தில் மங்கலாகத் தெரியும் சிறு வெளிச்சமும் நமது கவனத்தையும் கவர்ந்து கொண்டு வெளிச்சத்தைக் கண்டுணரத் துடிக்க ஆரம்பிக்கிறது.
Colorless Tsukuru Tazaki And His Years of Pilgrimage நாவலில் வரும் மையக்கதாபாத்திரமான Tsukuru Tazaki தனது கல்லூரி இரண்டாம் வருட காலகட்டத்தில் நுழையும் தருணத்தில் அவனை முழுமையாக அட்கொண்டிருக்கும் சிந்தனை தற்கொலை பற்றியதாக இருப்பதாக நாவல் ஆரம்பமாகிறது. அதைத் தொடர்ந்து அவனது பள்ளி நாட்களில் நான்கு நெருக்கமான நண்பர்களோடு இருந்து வந்த நிகழ்வுகள் விவரிக்கப்படுகிறது.
Tsukuru வோடு சேர்த்து மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என மொத்தமாக ஐந்து நண்பர்களைக் கொண்ட அவர்களது குழுவில் Tsukuru வைத் தவிர்த்து மற்ற நான்கு பேரும் வணிகவியல், விளையாட்டு, பியானோ இசைக்கருவி மீட்டுதல், கற்றலில் புலமை பெற்றிருத்தல் என்று ஒவ்வொருவரும் ஒரு தனிச்சிறப்பில் தனித்துவமான மேதமை கொண்டவர்களாக இருக்க Tsukuru விற்கு மட்டும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தனித்திறன் ஏதும் அற்றவனாக தன்னை உணர்கிறான். அத்தோடு, அவர்கள் அனைவரது பெயரும் குறிப்பிட்ட வேறு வேறு வண்ணங்களை அடைமொழியாகக் குறிக்கும் வகையிலும் Tsukuru வின் பெயர் மட்டும் எந்தவொரு வண்ணத்தின் அடைமொழியையும் கொண்டதாக அல்லாமல் இருக்க பள்ளி இறுதி வகுப்பு நெருங்கும் சமயத்தில் நண்பர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டும் இத்தகைய வெறுமைகள் எல்லா விதத்திலும் மற்றவர்களிடமிருந்து தான் ஒரு தனியன் என்றொரு உணர்வை அவனுக்குள் ஏற்படுத்துகிறது.
கல்லூரி படிப்பைக் காரணமாகக் கொண்டு நண்பர்கள் வட்டத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறி வேறு நகரத்திற்கு செல்லும் Tsukuru ஆரம்பத்தில் அவ்வப்போது தனது சொந்த நகரத்திற்கு வந்து அவனது பழைய நட்புப்பிணைப்பை பேணி வந்தாலும் ஒரு கட்டத்தில் நண்பர்கள் நான்கு பேரும் முழுமுற்றாக அவனை துண்டித்துக் கொள்கின்றனர். காரணம் விளங்காத இந்த எதிர்பாராத துண்டிப்பு ஆரம்பத்தில் அவனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் கல்லூரி மேற்படிப்பிற்காக தான் அவர்களிடமிருந்து விலகி வந்ததன் விளைவு தான் இந்த திடீர் நிராகரிப்புக்கு காரணமாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் அவனது இளமை கால வாழ்க்கையைத் தொடர்கிறான்.
என்னதான் அந்த நிராகரிப்பின் தாக்கம் சற்று தணிந்து போயிருந்தாலும் அத்தனை ஆணித்தரமாக முழுமுற்றாக தான் ஒதுக்கப்பட்டுவிட்டதன் காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்ற பதில் விளங்காத நிலை கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக அவனது இளமைக்கால தனிமைகளை கசக்கிப் பிழிகிறது. அவன் ஒருபோதும் சிந்தித்திராதபடி நண்பர்கள் குழுவில் இருந்த இரண்டு பெண்களோடும் உடலுறவு கொள்ளும்படியான கனவுகளும் அடிக்கடி வருகின்றன. இந்த நடவடிக்கைகளை கவனித்து விடும் அவனது காதலி Sara அவனுக்கு ஒரு யோசனை தருகிறாள்.
அவனது பழைய நண்பர்கள் அனைவரையும் நேரில் சென்று சந்தித்துப் பேசி அவன் அத்தனை வலுக்கட்டாயமாக ஒதுக்கப்பட்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ளவில்லை எனில் அவனால் ஒருபோதும் இந்தச் சுமையிலிருந்து விடுபடவே முடியாது என்று அறிவுரை கூறுவதோடு, அவன் அவ்வாறு செய்யாமல் இருக்கும் பட்சத்தில் அவனோடு வசிக்க நேரும் தனது எதிர்காலமும் குழப்பங்கள் தொடர்ந்து நீடிக்குமாகையால் அவர்களது காதலையும் அதோடு முறித்துக் கொள்ள நேரும் என்றும் கூறுகிறாள்.
அதைத் தொடர்ந்து தனது பழைய நண்பர்களைத் தேடிச்சென்று பார்க்கும் Tsukuru விற்கு அவன் சற்றும் எதிர்பார்த்திராத கொடுமையான விளக்கங்கள் கிடைக்க அவற்றை எதிர்கொள்கையில் திகைத்துப்போகிறான். அவர்கள் உண்மை எனக்கூறும் சம்பவங்களுக்கும் தனது கனவில் அடிக்கடி நிகழ்ந்த வினோதமான பாலுறவுகளுக்குமிடையே ஒற்றுமைகள் இருப்பது போலப் புலப்படவே ஆரம்பத்தில் அவன் அடைந்த அதிர்ச்சி மெல்லிய குற்றவுணர்வாக அவனுக்குள் உருமாற ஆரம்பிக்கிறது.
கனவிற்கும் நிஜத்திற்கும் இடைப்பட்ட பிரக்ஞை இடைவெளி சூன்யமாகிப் போனது போன்ற திகிலடையச் செய்யும் இதேபோன்றதொரு பகுதி Wind-up Bird Chronicle நாவலிலும் வருகிறது. நாவலின் ஒரு கட்டத்தில் Okada விற்கு வேலை வாய்ப்பு வழங்கும் Nutmeg என்ற பெண் அவனுக்கு அவளுடைய மகனான Cinnamon ஐ அறிமுகம் செய்து வைக்கிறாள். சிறுவயதில் ஒரு நாள் இரவுக்குப் பிறகு அவன் ஏதோ ஒரு விபரீதமான தாக்கத்தால் அவனது பேச்சுத்தன்மையை இழந்து விட்டதாகச் சொல்கிறாள். Cinnamon பேச்சுத்தன்மையை இழந்த அந்த குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய நாள் இரவு அவனுக்கு ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவில் அவன் தனது சுயபிம்பத்தையே காண்கிறான். கனவிலிருந்து வெளியேறும் முயற்சியில் தன்னால் இயன்ற அளவு முயற்சி செய்து கத்த முயல்கிறான் ஆனால் அவனது குரல் தொண்டைக்குள் அடைபட்டுக்கொண்டு வெளிவர மறுக்கிறது. அதன்பின் கனவிலிருந்து விழித்தெழுந்தாலும் கூட முந்தைய நாள் இரவு தான் கண்டவை கனவு அல்ல என்ற திட்பமான நினைவுகளாக அந்த சம்பவங்கள் அவன் மனதில் படிந்து போயிருக்கிறது. அதோடு அவனது குரலும் அந்தக் கனவுக்குள்ளேயே சிக்கிக்கொண்டு விடுகிறது.
கதையை அதன் இயல்புத்தன்மையோடு நகர்த்திக் கொண்டு செல்லும் முரகாமி கதை நிகழும் களத்தின் சித்தரிப்புகளில் ஒருவித மாயத்தன்மையை உருவாக்குகிறார். ஒவ்வொரு அசைவுகளும் சித்தரிப்புகளில் நமக்கு சொல்லப்படுவதைத் தாண்டி வேறொரு இயக்கத்தை புகைமறைவாக மேற்கொள்கிறது என்பது வாசகர்களாகிய நமக்கு மங்கலாகத் தோன்றியபடியே இருக்க வெளிப்படையாக சொல்லப்படும் எந்த நிகழ்வை உண்மை எனத் தீர்க்கமாக நம்புகிறோமோ அது ஒரு கட்டத்தில் பொய்யாகவோ அல்லது கனவில் நிகழ்ந்து மறையும் ஒரு மாயை போலவோ மாற்றமடைந்து நம் புலன்களோடு கண்ணாமூச்சி ஆடுகின்றன.
இயல்பிலேயே முரகாமி ஒரு தீவிரமான இசைப்பிரியர் என்பதால் கதைப்பரப்பில் அனேக இடங்களில் ஊடுரும் இசையின் பின்னணிகள் சூழலுக்கு இயல்புத்தன்மையையும் நமது புனைவுலக பிரவேசத்திற்கு நெருக்கத்தையும் வழங்குகின்றன.
முரகாமியின் தனிச்சிறப்புகளில் மிக முக்கியமாக குறிப்பிடத்தகுந்தவைகளுள் ஒன்று அவர் கட்டமைக்கும் வாக்கியபாணி. ஒரு வாக்கியத்திலிருந்து ஒரு வார்த்தையை நீக்கிவிட்டாலோ, ஒரு பத்தியிலிருந்து ஒரு வாக்கியத்தை நீக்கிவிட்டாலோ கூட கதையின் பிற்கட்ட சம்பவங்களின் ஆதாரமுடிச்சு சிதைக்கப்பட்டுவிடும் என்ற கூர்மையான நேர்த்தியுடன் ஒவ்வொரு வார்த்தைகளும் அதன் அத்யாவசியத் தேவையோடு பயன்படுத்தப் பட்டிருக்கிறது. எளிமையான வார்த்தைகளைக் கொண்டும் நீளமற்ற குறுகலான வாக்கியங்களிலேயே எளிதில் புலப்படாத மந்திரசக்தியை அவை வெளிப்படும் அர்த்தங்களுக்குள் புகுத்தும்விதமான முரகாமியின் கைதேர்ந்த படைப்பாற்றல் அநேக இடங்களில் திறம்பட வெளிப்படுகிறது.
கதாபாத்திரங்களின் உருவாக்கத்தில் இரண்டு நாவல்களிலும் வரும் மையக்கதாபாத்திரத்தில் ஒருசில ஒற்றுமையான சாயல்கள் தென்படுகிறது. இரண்டு நாவல்களில் வரும் மையக்கதாபாத்திரங்களும் தங்களுக்கு நேரும் இழப்புகளுக்கு தத்துவார்த்தமான காரணகாரிய விளக்கங்களை அறிய முயல்வதில்லை. தங்களுக்கு நிகழும் துரதிர்ஷ்டமான விதிகளுக்கு எந்த வகையிலும் தாங்கள் பொறுப்பாளிகள் அல்ல என்பதை உணர்ந்திருந்தும் அவர்களுக்கு யார் மீதும் வெறுப்போ, வன்மமோ, பகையுணர்ச்சியோ அறவே ஏற்படுவதில்லை. அதேபோல இரண்டு மையக்கதாபாத்திரங்களும் தங்கள் மனநிலை சிக்குண்டு கிடக்கும் போது ஜனநெரிசல் மிகுந்த பகுதியில் அமர்ந்து கொண்டு எவ்வித யோசனைகளுமின்றி வருவோர் போவோரின் முகங்களை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதில் ஆறுதல் அடைகின்றனர்.
வெகுஜன வாசகர்கள் முதல் தீவிர இலக்கிய வாசகர்கள் வரை முரகாமி பரவலாக விரும்பி வாசிக்கப்பட்டு வரும் எழுத்தாளர் என்ற போதும் பொதுத்தளங்களில் முரகாமியின் படைப்புகளில் மானுட மேன்மைகளுக்காக கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது என்ற கேள்விகள் எழக்கூடும். ஆனால் முரகாமியின் தனித்துவமான அம்சம் அவரது படைப்புகளை ஆராய்வதால் கண்டடையப்பட வேண்டியதில்லை. மாறாக அவற்றை அனுபவிப்பதில் கிடைக்கும் ஏகாந்தமான தனிமை நம்மை வழிநடத்திச் செல்லும் பாதைகள் நாம் அன்றாடம் வாழும் இந்த எதார்த்தச் சூழலின் நரம்புகளைக் கொண்டிருப்பவை. அதேசமயம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் அடர்த்தியும், தொழில்நுட்ப வளர்ச்சியும், அதனால் துரிதப்படுத்தப்பட்ட அவசர வாழ்க்கை முறைகளும் வாழ்தலின் அத்யாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள உறவுகளுக்கிடையே பேண வேண்டிய இணக்கவுணர்வில் விரிசல் கண்டு மனித மனங்களை எவ்வாறு தனிமைப்படுத்துகிறது, அந்தத் தனிமைக்கான காரணத்தை கூட அறிய விடாத அளவுக்கு எந்த அளவுக்கு நமது புறச்சூழல் நமது புரிதல்களில் அந்நியத்தன்மையைக் கொண்டிருக்கிறது என்பதையும் ஆழமாகப் பதிவு செய்கிறது. திரளான குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் எப்போதும் தங்களுக்குள் தான் ஒரு தனியன் என்றொரு பீடிகையான மனநிலையில் உழல்வதை பதிவு செய்வதில் இருக்கும் அடர்த்தியே முரகாமியின் மீதான உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. அந்த வகையில் முரகாமியின் படைப்புகள் சிதறிக் கிடக்கும் மனித மனங்களின் தனிமையை அவை எங்கிருந்து துண்டிக்கப்பட்டது என்பதை கண்டறிய வழிவகுக்கிறது என்பதே உண்மை.