‘ஓசூர் எனப்படுவது யாதெனின்’ நூல் வாசிப்பு அனுபவம் – பாலகுமார் விஜயராமன்
பாலகுமார் விஜயராமன்
ஒரு மலை தேசப்பகுதி, தொழில் வளர்ச்சி என்ற பெயரால் எப்படி மாற்றம் அடைந்திருக்கிறது அல்லது சிதிலமடைந்திருக்கிறது என்பதைப் பேசும் சிறு புத்தகம், “ஒசூர் எனப்படுவது யாதெனின்”.
’ஒச’ என்னும் சொல்லுக்கு கன்னடத்தில் புதிய என்று பொருள். அதாவது ஒசூர் என்றால் புதிய ஊர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரமுள்ள சிறிய மலைப் பிரதேசம். ஒரு காலத்தில் ஊரைச் சுற்றி ஏரிகளும், மலைகளும் நிறைந்திருந்ததற்கான சிதிலங்களை இன்றும் தாங்கி நிற்கிறது. சுற்றியுள்ள ஆதி கிராமங்களுக்கு வழித்தடமாக இன்று அறியப்பட்டாலும், இந்தப் பகுதி பூர்வகுடிகளுக்கும், பணியின் நிமித்தம் வந்து குடியேறிய மக்களுக்கும் இடையேயேயான பிணைப்பும், விலக்கமும் இன்னும் முழுதாய் ஆராயப்படாதவை. கன்னடம், தெலுங்கு, தமிழ் இவற்றோடு கணிசமான வடமாநில கூலித் தொழிலாளர்களின் வருகையால் இன்று இந்தியும் வீதியில் புழங்குமொழியாக ஆகியிருக்கிறது.
வெளியே இருந்து பார்க்கும் பெரும்பான்மையினருக்கு ஒசூர் என்பது பெங்களூருக்குச் செல்லும் வழியில், அதிகாலைக் குளிரில் தூக்கத்தோடு சிறுநீர் கழிக்க இறங்கி ஏறும் இடம் அல்லது காவேரிப் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் காலங்களில் இங்கே தமிழ்நாட்டுப் பேருந்துகளிலிருந்து இறங்கி மூட்டை முடிச்சுகளைச் சுமந்தபடி அரைக்கிலோ மீட்டர் தூரம் நடந்து அத்திப்பள்ளி செக்போஸ்ட்டைக் கடந்து, பின் கர்நாடகா பேருந்தில் ஏறிச்செல்லும் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதி என்பதாகவே தெரிந்திருக்கும்.
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், ஒசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தேன்கனிக்கோட்டை, மத்திகிரி, கெலமங்கலம் உள்ளடக்கிய நிலங்களுக்குண்டான பூர்வீகப் பண்புகள், அவை எவ்வாறு பூர்வகுடிகளின் கைகளில் இருந்து பிழைக்க வந்தவர்களின் தேசமாக மாறியது, முன்பு தங்கள் நாட்டின் தட்ப வெட்பத்துக்கு இணையாக இருந்தததால் ஆங்கிலேயர்கள் இவ்வூரை “லிட்டில் இங்கிலாந்து” என்று அழைத்தது, அதன் பொருட்டு தனது அரசு அலுவகங்களை இங்கே அமைத்தது, ஒருகாலத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் தலைநகராக ஒசூர் செயல்பட்டது, பின்பு கொடுங்குளிரின் காரணமாக உள்நாட்டு அரசு அலுவலர்களின் தண்டனைப் பகுதியாக மாறியது, தொழிற்பேட்டைகளின் வரவால் தீடீரென பெருத்து வீங்கி ஒரு புதிய நகரமாக உருப்பெற்றது, அதிகமான தொழிலாளர்களின் வருகைக்கு ஏற்றவாறு உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாமல் அவர்கள் தவித்தது, சலுகைகள் என்ற பெயரில் தொழிலதிபர்களுக்கு வசதியாக விதிமுறைகளைத் தளர்த்தி, அதனால் பணிப்பாதுகாப்பு, குறைந்தபட்ச பணியிட வசதிகள் ஆகியவைகூட கிடைக்காமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டது, அங்கே தொழிற்சங்கங்களுக்கான தேவைகள் ஏற்பட்டது, அதிலிருந்த ஆரம்பகாலத் தடைகள், பின்பு பொதுப்பிரச்சனைகளுக்காக சங்கப் பாகுபாடுகளை மறந்து தொழிலாளர்களும் அவர்களோடு ஒட்டுமொத்த மக்களும் கிளர்ந்து எழுந்தது போராடியது, உலகமயலாக்கலுக்குப் பிறகு சிறு, குறு தொழிலகளின் முடக்கம் அதனால் மூடப்பட்ட ஆலைகள், அவை தொழிலாளர்களை என்ன நிலைக்குக் கொண்டு நிறுத்தின எனற நேரடி அனுபவங்கள், வேலையிழப்புகள் நிரந்தரத் தொழிலாளர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றி அதே வேலையை குறைத்த சம்பளத்துக்கு அமர்த்தி பணிப்பாதுகாப்பின்மையை ஏற்படுத்திய சூழல், பின்பு ரியல் எஸ்டேட் தொழிலின் பூதாகர வளர்ச்சி, கடைசியாக தகவல் தொழில்நுட்பத் துறையின் வரவால் இன்று பெங்களூரின் புறநகர்ப்பகுதியாக நீண்டிருக்கும் இன்றைய ஒசூரின் சித்திரம் என்று ஒசூர் குறித்த ஒரு பரவலான அறிமுகத்தைத் தருகிறது இப்புத்தகம்.
ஆதவன் தீட்சண்யா என்னும் கலகக்கார எழுத்தாளரின் ஆரம்ப கால தொழிற்சங்க வாழ்க்கையையும் அவரது தொழிற்சங்கப் பணிகளில் ஒசூர் என்ற ஊரின் பங்கு ஆகியவற்றையும் இப்புத்தகம் பதிவு செய்துள்ளது. அதோடு இந்த புதிய தொழில் நகரில் மிகக் குறுகிய காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பல தொழிற்சாலைகளில் பணிபுரிய வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெறவும் பாதுகாக்கவும் கட்டமைக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் வளர்ச்சி பற்றிய குறிப்புகளும் உண்டு.
ஆனாலும், ஆதவன் தீட்சண்யாவே சொல்வதுபோல, இது ஒசூரின் வரலாறல்ல. ஒசூரின் இன்றைய நிலை பற்றிய சித்திரமும் அல்ல. ஒசூர் பகுதிக்கும் தனக்குமுள்ள பொதுத்தொடர்புகள் சிலவற்றை இப்புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இந்நகரோடும் இதன் மக்களோடும் தன்னைப் பிணைத்திருக்கிற ஒரு சமூக செயற்பாட்டாளரின் அனுபவக் குறிப்புகள் என்ற வகையில் இப்புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒசூர் குறித்து அறிய விரும்புபவர்களுக்கும், எண்பதுகள், தொன்னூறுகளில் தொழிற்பேட்டைகளின் வருகைக்குப் பிறகான இந்நகரின் மாற்றங்களைத் தெரிந்துகொள்வதற்கும் இப்புத்தகம் சிறந்த கையேடாக இருக்கும். தொழிற்பேட்டைகளின் வருகைக்குப் பிறகு ஒசூர் அடைந்த மாற்றங்கள் ஒரு படி என்றால் அடுத்ததாக தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி பெருகிய இரண்டாயிரங்களுக்குப் பிறகான ஒசூரின் அசுர மாற்றங்கள் அடுத்த பரிணாமம். அதையும் யாரேனும் பதிவு செய்தாக வேண்டும்.
ஒசூரின் பெரும்பான்மையான சிறு வர்த்தகங்கள் தொழ்ற்பேட்டை சார்ந்த தொழிலாளர்களை மையமாக வைத்து இயங்கிக் கொண்டிருக்கும்போதே, அதற்கு சிறிதும் சம்பந்தமில்லாத விவசாயக் குடிகளையும் இங்கே பார்க்க முடிகிறது. இந்த இருதரப்பினருக்குமிடையே நிகழும் பரிவர்த்தனைகளாகட்டும், மனப்புரிதல்களாகட்டும் அவற்றிற்கு இடையே ஒரு பட்டும் படாத தன்மை இருப்பதை உணர முடியும். அதற்கான மூலக்காரணத்தையும் இந்தப் புத்தகம் தொட்டுக் காட்டி இருக்கிறது.
சமீபமாக பா.வெங்கடேசன் அவர்களின் புனைகதைகளில் வரும் ஒசூர் சார்ந்த பகுதிகள் வழியாகவும், புதுஎழுத்து மனோன்மணி அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் இப்பகுதியின் தொல்லியல் எச்ச சான்றுகள் வழியாகவும் இந்நிலம் பற்றி சற்று அறிய முடிகிறது. இப்போது ஆதவன் தீட்சண்யாவின் இப்புத்தகம் மூலம் ஒசூரின் தொழில் முகத்தையும் அறிகிறேன்.
ஒசூரைத் தாண்டிய இப்பகுதி ஆதிகிராமங்களான கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி, தொட்டமஞ்சி, ஜவலகிரி, அஞ்செட்டி, தக்கட்டி, மஞ்சுகொண்டபள்ளி, சனமாவு வனப்பகுதி என்று தனியே பழைய வரலாறும் ஒன்று. வெறும் அறுபது கிலோமீட்டர் இடைவெளியில் ஒருபக்கம் இத்தகைய ஆதி கிராமப் பகுதிகளையும், இன்னொரு பக்கம் நவநாகரிக பெங்களூருவையும் கொண்டு நடுவில் இருபக்கத்திற்கும் ஈடுகொடுத்துக் கொண்டிருக்கும் நகரம் ஒசூர். அருகே உள்ள கிராமங்களுக்கு சரியான போக்குவரத்து வசதி இல்லாமல், அவசர மருத்துவ உதவிக்காக டோலி கட்டி நோயாளிகளைத் தூக்கிக் கொண்டு ஓடிவரும் நடைமுறையும் இன்று இருக்கிறது. அதே நிலப்பரப்பில் அமர்ந்து கொண்டு, சிங்கப்பூரின், அமெரிக்காவின் ஆன்லைன் வர்த்தகத்தை நிர்ணயிக்கும் தொழில்நுட்பங்களும் வளர்ந்திருக்கிறது. ஒசூர் என்னும் மாயநிலத்தை அகழந்தால் புதையுண்டிருக்கும் ஏகப்பட்ட புனைகதைகளைத் தோண்டி எடுக்கலாம். அதற்கு இந்த நிலத்தின் அரசியல், பொருளாதார, சமூக வரைவியலை அறிந்திருக்க வேண்டும். அதற்குண்டான முதல்படியாக, “ஒசூர் எனப்படுவது யாதெனின்” என்னும் இந்த புத்தகம் ஒரு வழிகாட்டியாக இருக்குமென்று நம்புகிறேன். இந்த நிலம் அனுமதித்தால், இன்னும் இன்னும் இதனை எழுத வேண்டும், பார்ப்போம் !
******