ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு – மதிப்புரை : பால பன்னீர்செல்வம்
கட்டுரை | வாசகசாலை
அயல் சமூகங்கள் படைப்பாளிகளைக் கொண்டாடுவதன் ஒரு சாட்சியமாக விளங்குகிறது லண்டன் ஷெர்லக் ஹோம்ஸ் அருங்காட்சியகம். அந்தப் பயண அனுபவத்தை இலக்கியச் சுவையோடு வழங்குகிறது இந்த நூலின் தலைப்புக் கட்டுரை.
பொறியாளர் மு இராமனாதன் தனக்கே உரிய எளிய நடை, சொற் சிக்கனம், சுவாரஸ்யம் ஆகிய நுட்பங்களை நுணுக்கி, தமிழ்த் தேனில் குழைத்து இந்த இலக்கியக் கட்டுரைகளில் வழங்குகிறார். இலக்கியம், திரை, ஆளுமை, அனுபவங்கள் என நான்கு தலைப்புகளில் 28 கட்டுரைகளைப் படித்து முடிக்கும்போது, பரந்துப்பட்ட இந்த உலகில் பல மொழிகளில் எழுதப்பட்ட சிறந்த பல படைப்புகளும் படைப்பாளிகளும் ஆளுமைகளும் நமக்கு அறிமுகமாயிருப்பார்கள்.
இந்த நூலில் இடம் பெறும் ஒவ்வொரு கட்டுரையும் தனித்துவமானவை.
அக்கினி வளர்த்து ஆகுதி செய்தும், ஆடிபெருக்கில் ஆற்றில் விட்டும், அகால மரணம் அடைந்த தமிழ் ஓலைச்சுவடிகளும் நற்றமிழ் ஏடுகளும் போக, மீதி நூல்களை மீட்டெடுத்தவர்களையும், மறைந்த படைப்பாளிகளின் வெளிவராத எழுத்துக்களைத் தொகுத்தளித்தவர்களையும் என்றும் நினைவில்கொள்ள வைக்கிறது ஒரு கட்டுரை.
அயலகம் சென்றாலும் அகதிகளின் அல்லல்கள் மட்டும் ஓய்வதில்லை என்பதை ‘தீபன்’ திரைப்படத்தின் வாயிலாக நிறுவுகிறது ஒரு கட்டுரை.
சின்ன சின்ன விஷயங்களால் பெரிய விஷயங்கள் கட்டமைக்கப்படுவதை அனுபவங்களால் உறுதிப்படுத்துகிறது இன்னொரு கட்டுரை.
ஒரு நல்ல கதை எப்படி இருக்க வேண்டும்? அவை என்னென்ன அம்சங்களைப் பெற்றிருக்க வேண்டும்? ‘இலக்கியச் சிந்தனை’க்காக மேற்கொண்ட சிறுகதைத் தேர்வில் இந்த வினாக்களுக்கு விடையளிக்கிறார் நூலாசிரியர். தெரிவான கதைகள் ஏன் நல்ல கதைகள் என்பதையும் விளக்குகிறார்.
காலத்தை வென்று நிற்கும் ஆளுமைகள் மீது இவர் பாய்ச்சும் வெளிச்சம் பல புதிய ஆளுமைகள் உருவாக ஊக்கமளிக்கும்.
ஒரு நிறைவான வாசிப்பை உறுதி செய்கிறது இலக்கியக் கட்டுரைகளின் தொகை நூலான ‘ஷெர்லக்ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’
ஷெர்லக்ஹோம்ஸ் வாழ்ந்த வீடு
இலக்கியக் கட்டுரைகள்
ஆசிரியர்: மு இராமனாதன்
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை, நாகர்கோவில்-1
தொலைபேசி: +91-4652-278525