கதைக்களம்

பேய்க்கொம்பன் – இராஜலட்சுமி

சிறுகதை | வாசகசாலை

“தாத்தோவ்..  ஏ..  தாத்தோவ்” என்று சரிவின் மேலிருந்து  கத்தும்  பேரன் மாரியை  நிமிர்ந்து பார்க்கிறார்   மாதன்  கிழவர்.  இரண்டு நாள்  தொடர்ந்து   பெய்த மழையில்  அந்த வனப்பிரதேசமே,  ’பச்சை பசேல்’ என்று  மின்னிக் கொண்டு இருக்கிறது.   சரிவில்,  அவர்  விளைக்க போட்டிருந்த  ஆல்வள்ளிக் கிழங்குகளைத்  தோண்டி  எடுத்துக் கொண்டிருந்த  நேரத்தில்,  சரிவுக்கு மேலே இருந்து  பேராண்டி அழைக்கவும் நிமிர்ந்து பார்க்கிறார்.  மாலை  நேர  சூரியன்  நேர் எதிரே இருந்ததால்,  அவன் முகம்  தெரியாத அளவுக்கு  வெளிச்சம் கண்களைக் கூச வைக்கிறது.  வலது கையை நெற்றிக்கு மேல் வைத்து  வெளிச்சத்தை அணை போட்டபடி, “ஓ..வ்..  என்றா  கண்ணு மாரி..”  என  சத்தமாக பதிலளிக்கிறார்.  “தாத்தோவ்.. விரசா வீட்டுக்கு போ.. அம்மா சொல்லி விட்டுச்சு..  கேக்குதா?”  என மறுபடியும் கத்துகிறான் பேரன்.

“ஏன் தங்கோ?  ஒறமுறை  யாருனாச்சும்  வந்துருக்காப்லயா?   ஏங்கண்ணு ..வெரசா  வரோணு?“ மறுபடியும் கேள்வி கேட்கும் தாத்தனுக்கு  வெகு நேரம் நின்று பதில் சொல்லும் மனநிலையில் இல்லாத  மாரி, “ ஐய! ஒன்னப்  பாக்க  உன் சம்பலூட்டு மச்சான்டாரு வருவாராங்காட்டியும்?.. மேற்கால வயலுப் பக்கம்  பேய்க் கொம்பன்  இறங்கிட்டானாம்.. மச்சு வீட்டு  மாணிக்கண்ணன்  பாத்துருக்கு.. சனமெல்லாம் ஒட்டுக்கா சேர்ந்து  போகோணும்..  அப்பத்தான்,  கொம்பன்   பொறத்தால  வராது.. வெரசா மேல வா.. நான் போய் இன்னும் எங்க அக்காள வேற தொளாவிக்  கூட்டியாரணும்” பதற்றத்துடன் சொல்லிவிட்டு,  தன் சைக்கிளில் ஏறி  வேகமாகப்  போகிறான் மாரி. 

சற்று தொலைவு சென்று அவன் குரல் எடுத்து, “அக்கோவ்..  செல்வியக்கோவ்..  எங்கிருக்கிற  நீயி..”  என்று தன் தமக்கையைக்   கூப்பிடுவது  கிழவர் மாதனுக்கும் நன்றாகக் கேட்கிறது.

கையில் வைத்திருந்த  ஆல் வள்ளிக் கிழங்குகளை,  வெள்ளை நிற சாக்குப் பை ஒன்றில் சேகரித்துக் கொண்டு  பக்கத்து மரத்தின் மேல் போட்டு இருந்த சிவப்புத் துண்டை உதறி தலையில் கட்டிக்கொண்டு, .. “கொம்பன்  எறங்குனா எறங்கட்டுமே..  அவனென்ன யாருடா  கெடப்பா  மிதிக்கென்ன அலையறான்?. அந்தாக்க​ ஒரு கொல பேயம் பழத்தை தொளிச்சி   தின்னு  போட்டு பொறத்தால போப்போறான்.   இந்த  சனங்க இத்தாச்சோடு  ரவுசு  என்னத்துக்கு  பண்ணுதுக?”  தனக்குள் பேசியபடி, மெல்லச்  சரிவில் ஏறத் துவங்குகிறார்.

அவர்கள் இருவரும்  “பேய்க் கொம்பன்”  என்று பெயரிட்டு  பேசிக் கொண்டது,  அடர்ந்த காட்டுக்குள் இருந்து  உணவு தேடி  சில சமயங்களில் மலைவாழ் மக்களிருந்த குடியிருப்புப் பகுதிகளுக்கு விஜயம் செய்யும்  ஒரு  முப்பத்தியெட்டு  வயது  காட்டு யானையைப்  பற்றிதான்.  

கிழவர் மாதனும், அவரது மகள் மரிக்கொழுந்து,  மருமகன்  முனுசாமி,  மற்றும் அவர்களது பிள்ளை  மாரிமுத்து என்ற மாரி,    மகள் செல்வி  அனைவரும் வாழ்ந்து வந்தது “ஆனை பள்ளம்”  மலைகிராமத்தில்தான்.   குன்னூரில் இருந்து சுமார் எட்டு  கிலோமீட்டர் மலை உச்சி  ஏறிய பின்பு வரும் ‘பில்லூர் மட்டம்’ என்கிற சமதள பகுதியிலிருந்து,  பத்து கிலோமீட்டர்  மலைச்சரிவில் இறங்கினால்,  உலிக்கன் ஊராட்சியைச் சேர்ந்த  “ஆனை பள்ளம்”  என்கிற  பழங்குடி இன மக்கள் வாழும்  இந்த மலை கிராமம் அமைந்திருக்கிறது.

அந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகை  ஒரு நாளும் ஐநூறைத் தாண்டியதில்லை.  பழங்குடி இனத்தவரின் சிறிய குடியிருப்புகள் இருந்த அடர்ந்த வனப்பகுதி அது.  தொலைபேசி, பேருந்து,  இரு சக்கர வாகனங்கள்  போன்ற வசதிகள் ஏதுமற்ற  சிறு கிராமம். அரிசி, பருப்பு  போன்ற அத்தியாவசியப் பொருட்களை கழுதைகளில் ஏற்றிக்கொண்டு செல்லும் பாதையில் தான் அந்த கிராம மக்களும் பயணித்து அவ்வப்போது  பில்லூர் வட்டம் பகுதிக்கு வந்து  சிறிது நாட்டு நடப்பைப் பற்றி அறிந்து கொள்வார்கள். 

அவர்களது வீடுகள்  பெரும்பாலும் கொங்கு தமிழில் “சாளை வீடுகள்”  என்று சொல்லப்படும் ஓட்டு வீடுகளாகவே அமைந்திருந்தன.  குடியிருப்புப் பகுதியில்,  வீட்டு வாசல்களில் பிரியாணி இலை எனப்படும்  இலைகள் கொண்ட செடிகள்  இருந்தன.  கிராம்பு செடிகளில் கிராம்பு காய்த்துத் தொங்கும். வீடுகளின் முன்புறம் உள்ள மரங்களில் மிளகுக் கொடிகள் படர்ந்து காய்த்து இருக்கும். அவர்கள் வளர்க்கும் நாய்கள் பலாப்பழத்தை வெட்டி போட்டால் நன்கு கடித்து தின்றுவிடும்.. அவர்கள்  இயற்கையோடு  இயைந்து

எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் மக்கள் . என்னதான் இயற்கையோடு  இணைந்து இருந்தாலும்,  உணவு தேடி ஊருக்குள் வரும்  காட்டு யானைகள் அவர்களுக்குப் பெரிய சவாலாகவே இருந்தன. 

நன்கு வளர்ந்த நீண்ட  தந்தங்கள் கொண்ட ஆண் யானைகளைக் “கொம்பன்” என்றழைப்பது அவர்களது  வழக்கம்.  “அரிசிக் கொம்பன்”,  “சிகரெட்டு கொம்பன்’,  “வளைஞ்ச கொம்பன்”  என்று பல யானைகளுக்கு அப்பகுதியில் பெயரிடப்பட்டு இருந்தது.  ஆனால்,  இவை எல்லாவற்றையும் விட அதிக ஆபத்தானது “பேய்க் கொம்பன்”  என்ற வயதான ஆண் யானை தான். 

அப்பகுதியில் அதிகமாக விளைவிக்கப்பட்டு வந்த பேயன்  வாழைப்பழங்களை விரும்பி  தின்று வந்ததால், “பேயன் கொம்பன்”  என்று  வைத்த பெயர் நாளடைவில் ‘பேய்க்கொம்பன்’ என்று மாறிவிட்டது.

இப்போது அறுபத்தைந்து வயசாளியாக இருக்கிற மாதன், பேய்க்கொம்பனை முப்பது வருடங்களுக்கு முன்பு,  எட்டு வயது குட்டி யானையாக  அவன் தாயுடன்   தேவர் சோலை  எஸ்டேட் அருகில்  தன் கூட்டாளிகளோடு  தேன் எடுக்க போயிருந்த போதுதான் முதன் முதலில் பார்த்தார். அதற்குப் பிறகு பத்து வருடங்கள் கழித்து, அதே யானை  அதன் தாய் இறந்து போன பிறகு, அது காட்டிக் கொடுத்த வழித் தடங்களில் இருந்த வாழைத் தோட்டங்களுக்குத்  தனியாக வரத் தொடங்கியிருந்தது.  முதலில் மனிதர்களைப் பார்த்து சற்று பயந்த சுபாவமாகவே இருந்த கொம்பன்,  அவர்கள் நாலாப் புறமும் சூழ்ந்து கொண்டு  ஒலி எழுப்பி,  தீப்பந்தம் கொளுத்தி, பட்டாசு வெடித்து  அவனை விரட்ட விரட்ட,  கொஞ்ச நாளிலெல்லாம் மனிதர்கள் என்றாலே ஒரு வெறுப்பு கொண்டு,  வசமாக   தனியாக   எவரேனும் சிக்கிக் கொண்டால் தாக்குவது  என ஆரம்பித்து விட்டது.  பொதுவாக வனத்துக்குள்ளேயே தனக்குத் தேவையான  உணவு  கிடைத்து விடுவதால் அடர்ந்த காடுகளுக்குள்ளேயே சுற்றித் திரியும் பேய்க்கொம்பன், எப்போதாவது வாழைப்பழச் சுவை நினைவு வரும்போது இரவு நேரங்களில்,  ஆள் நடமாட்டம் இல்லாத  சமயங்களில்  வாழைக் கொல்லைகளையும்,  கரும்புத் தோட்டங்களையும் சூறையாடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டு இருக்கும். ஆனால் காட்டுக்குள் மிகுந்தஉணவு தட்டுப்பாடு  ஏற்படும் சமயங்களில்,  பகல் நேரத்திலேயே ஊருக்குள் இறங்கி விடுவது பத்து பதினைந்து வருடங்களாக நடந்து வருகிறது. 

அப்படித்தான்,  ஏழு வருடங்களுக்கு முன்பு,  எதிர்பாராத நேரத்தில் ஊருக்குள் இறங்கிய  கொம்பன்,  அப்பகுதியில் பெரிய மச்சு வீட்டுக்காரரான  சிலோன்  மாணிக்கம்  வைத்திருந்த இரண்டரை ஏக்கர் தனியார் பேயன் வாழை   மற்றும்  கரும்பு  தோட்டத்துக்குள்  புகுந்து விட்டது.  அங்கு வேலை செய்து கொண்டிருந்த வேலை ஆட்கள்,  தோட்டத்தில் கட்டி வைத்திருந்த  சிப்பிப் பாறை நாய் தொடர்ந்து குறைப்பதைப் பார்த்து  எச்சரிக்கை ஆகிவிட்டதால்,  ஓடி தப்பித்துக் கொண்டார்கள்.  ஆனால்,  காது சரியாக கேட்காத மாதனின் மனைவி  மையிலம்மா,  தான் பாட்டுக்கு  தனியாக  வாழை மரங்களுக்கு நடுவே வேலை செய்து கொண்டிருக்க,  பின்னால்  வந்த பேய்க்கொம்பனை கவனிக்கவில்லை.   

எதிர்பாராமல், மிக  அருகில்  வந்து  விட்டிருந்த யானையைப்  பார்த்ததும், பயத்தில் கை கால்கள் வேலை செய்யவில்லை அவளுக்கு.  ஏனைய வேலையாட்கள்  கூப்பாடு போட்டது, சிப்பிப்பாறை நாய் ஓயாமல் குறைத்தது,  ஆகியவை பேய்  கொம்பனுக்கு  ஆத்திரமூட்ட,  எதிரே  பயத்தில் அசைவின்றி நின்று கொண்டிருந்த மையிலம்மாவை தூக்கி ஒரே வீசாக விசிறி விட்டது.  வீசிய வேகத்தில்  தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே  இறந்து போனாள் மையிலம்மா.  அதன் பிறகு யானை  அவளை அடித்து வீழ்த்தியதைப் பற்றி பலரும் பல விதமான கதைகளை  அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார்கள்.  ஏதோ,  அந்த யானை மையிலம்மாவைத் தேடி வந்து பழி வாங்கியது போல சித்தரித்து விட்டிருந்தார்கள்.

ஆனால் அந்தக் காட்டையே தன் தாய் வீடாக எண்ணி, காட்டு விலங்குகளை  எதிரிகளாக நினைக்காத மனப்பான்மை கொண்டவர் மாதன். அவரது மகளே, “ஐயோ அந்த பாழாப்போன கொம்ப, பேயீ! எங்க ஆத்தாளை,  காவு வாங்கி  போட்டுச்சே..  அது விளங்குமா?   அதுங் காலுல கட்ட முளைக்க..” என்று ஒப்பாரி வைத்தபோது, மாதன், “ஏங்கண்ணு,  ஆனைய  குறை பேசுற?   அதென்ன  பண்ணும் அம்மிணி?  ஊர்க்காரங்க மொத்த பேரும் ஒட்டுக்கா சேர்ந்து இத்தச்சோடு  சவுண்ட்  உட்டாக்க,  அது என்ன பண்ணும்?  வாயில்லா சீவன்.. உங்க அம்மாளுக்கு  ஆய்சு  முடிஞ்சு போச்சு கண்ணு.. மனச தேத்திக்க சாமி“  என்று சொன்னதும், “வாய மூடு  அப்போவ்! சீமாறு  பிஞ்சு போகும்..  சம்பலுடு தாயை இழந்து தவிச்சுக் கிடக்குது.. ..பேத்திக்கு  உப்பு ஜவுளி   வாங்கோணும்னு ஆசை ஆசையா  பனிக்காட்டு  மாரி ஆத்தாளுக்கு  நோம்பி  வச்சு, முட்டு திங்காம,  கறி திங்காம,  நாள் முச்சூடும்   அந்த வாழைத்தோட்டத்தில சப்பத் தண்ணி  குடிச்சு,  மாடா உழைச்சு, அந்த  பேய் பிடிச்ச   ஆனகிட்ட மிதி வாங்கி செத்துப் போச்சு  எங்கம்மா..  உனக்கு  அந்த     கொம்பன் மேல  பாசம் பொத்துக்கிட்டு வருதோ? இன்னொரு  வார்த்தை பேசின அடி  தின்பே”   ஆவேசம்  வந்தவள் போல  கத்தினாள் மரிக்கொழுந்து.

அதன் பிறகு அவளுக்கு யானைகள் என்றாலே அதீத பயமும் வெறுப்பும் மனதில் குடி கொண்டு விட்டது.  ஏதாவது யானை காட்டில் இருந்து இறங்கியது பற்றி காதில் கேட்டுவிட்டால்  போதும்  பயந்து,   ஓயாமல் அழுது புலம்பித்  தீர்த்து விடுவாள்.  அவளுக்காகவேனும் வீட்டுக்கு  சீக்கிரம் திரும்பிப் போக வேண்டும் என்று நடையை எட்டிப் போடுகிறார்  மாதன்.  ஆனால்,  சரியான பாதை இல்லாத காரணத்தினாலும்,  மழையில்  மலைப் பாதை வழுக்குவதாலும்  வேகமாக நடப்பது சாத்தியமில்லை.   அதே சமயம்,   “அண்ணே!    மாதண்ணே..!” என்று அழைத்தபடி  பக்கவாட்டிலிருந்து   ஓடி வருகிறான் ஆறுச்சாமி.. “அண்ணே,  கேட்டீங்களாண்ணே?  பேய்க்கொம்பன் இறங்கிடுச்சாமே? இப்பதான் கொல்லையில வேலை முடிஞ்சு சாப்ட் போட்டு  கொஞ்சம் கண்  அசந்தேன்,  உங்க  பேரப் பையன்  சொல்லிப்போட்டு போச்சுங்கோ” என்று படபடப்புடன்  சொல்கிறான். “அட ஆமாப்பா..  வழக்கம்தானே..”  சாதாரணமாக பதில் சொல்கிறார்  மாதன்.. “ ஏனுங்கண்ணா..  நம்ம அண்ணியக் கூட இந்தப் பேய்க்கொம்பந்தான் அடிச்சு போட்டுதுங்களாமே..  அதுக்கு  அப்பாற்பட்டுமா  நீங்க இப்படி பேசுறிங்?”  ஆச்சரியத்துடன் கேட்கிறான் அவன்.  ஆறுச்சாமி அந்த ஊருக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகியிருந்ததால் அவனுக்குப் பழைய கதை தெரிந்திருக்கவில்லை.

 “ஆங்.. ஆமாங் தம்பி!  அது ஆய் போச்சு ஏழு வருஷம்..  அவ விதி முடிஞ்சு போச்சு.. அதுக்கு போய் ஆன  என்ன பண்ணும்?  நீ பயப்படாத கண்ணு..”  என்கிறார்  மாதன்.. “ அதி இல்லீங்..  உயிர் போற விஷயம் பாருங்க கொஞ்சம் பயந்து தானுங்க வருது”  என பயந்தபடி இருமருங்கும் திரும்பி பார்த்தபடியே வரும்  ஆறுச்சாமியிடம் “உயிர் போற விஷயம்  இந்த​ காட்டில​ ஆன மட்டும்  தானாக்கும்?” என்று கேட்கிறார் கிழவர். “ இது இல்லங்காட்டி.. பின்ன  வேற என்னங்?”  வியப்புடன் கேட்கிறான் ஆறுச்சாமி. “ இந்த காட்டுக்குள்ள இருந்து யாருக்காவது நோயி நொடின்னு வந்தா பன்னெண்டு குலோமீட்டர்  தூளிகட்டி  தூக்கிட்டுப்  போறோம்.  பாம்பு கடிச்சவங்க,  கர்ப்பிணி  பொண்ணுங்க  இப்படி பல பேரு  ஆஸ்பத்திரி  போறதுகுள்ளயே உசுர விட்டு போட்டாங்க..  போன வருஷம் கூட  ஒன்பது பேர் சின்னாலக் கோம்பை கிராமத்துல  கரண்ட் பட்டு  உசுருக்குத் துடிக்கையில,  போலீசு,  108,  பாரஸ்ட் ஆபீஸரு எல்லாரும் வந்து  பதினேழு மணி நேரம் படாத பாடு பட்டுல்ல உசுரக் காப்பாத்துனாங்க..  அதெல்லாம்  பயம் இல்லையாமாம்.. வாய் இல்லாத  யானை  மட்டும் தான்  உசுரக் கொண்டு போகுதா?”  ஆதங்கத்தோடு வருகிறது அவருக்கு வார்த்தைகள். 

“ஆனாக்கூடி,  காட்டு  யானங்க  ஊருக்குள்ற  வாரது  கொஞ்சம்  டேஞ்சர் தானேங்கண்ணா?”  என்று கேட்கிறான் ஆறுச்சாமி. மாதன் “அட போப்பா நீயி வேற, அதுக வாழுற காட்டுக்குள்ள மனுஷ பயலுக வந்து  குடி இருக்கிறோம். அதுக போற  வலச பாதைய ஒட்டுக்கா  மாத்திப் போட்டோம்.. காடயும் அழிச்சி போட்டோம்.. மழை குறைஞ்சு போச்சு,  காட்டுக்குள்ற  ஜீவாதாரம்  மட்டு பட்டு போச்சு..  அதுக என்ன செய்யும் பாவம்..  கடவுள் கொடுத்த மோப்ப சக்தியால,  தீனி கிடைக்கிற இடத்தை தேடி வருது.. ஆறுச்சாமி! ஒரு மனுசன் செத்தா,  இந்த பூமிக்கு பாரந்தான் குறையும்,  அவனால எந்த பிரயோஜனமும் இல்லை..  ஆனால் ஒரு யானை செத்தா அப்படியில்ல ஏன்னாக்க, அது தன் வாழ்நாளில  ஏகப்பட்ட  மரங்களை உருவாக்கி உட்டுபோட்டு போவுது.. என்னய கேட்டா,  பத்து மனுச உசுரு போனாலும் பரவாயில்லை,  ஒரு யானை உசுரு போவக்கூடாதுன்னு தான் நான் சொல்லுவேன்”  அந்த  பழங்குடி இன, படிக்காத கிழவன்  சொன்ன விஷயங்கள்   ஆறுச்சாமிக்கு  மிகவும் சரி என்றே பட்டது. ஊருக்குள்  சிறிதளவு படித்தவன் ஆறுச்சாமி தான்.  ஆனால்,  அவனுக்கே புரிபடாமல் இருந்த விஷயங்களை அந்தக் கிழவர் பேசுவதைக் கேட்டு அசந்து போகிறான்.

பேசிக்கொண்டே எட்டி நடை போட்டுக்கொண்டு இருந்தாலும்,  மாலை மயங்கி  இருள் சூழத்  தொடங்கி விட்டதைப் பார்த்து  ஆறுச்சாமிக்குள் பயம்  அதிகரிக்கத்  தொடங்கி விடுகிறது.  அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த மேடான பகுதியில் இருந்து கீழ்ப்பக்கம்  மெல்ல எட்டிப் பார்க்கிறார்  மாதன். “ ஏனுங்கண்ணா?  என்ன பாக்குறீங்”  என்கிறான்.  “ஒன்னும் இல்ல,  கீழ  மாணிக்கம்  வாழை  தோட்டத்து கிட்ட எட்டு பத்து ஆளுங்க நின்னு ஏதோ வேலை செஞ்சுட்டு இருக்காங்க.  அதான் இந்நேரத்தில என்ன வேலை செய்றாங்கன்னு பார்த்தேன்”  யோசனையோடு சிறிது தூரம் நடந்தவர்,  சட்டென்று  பொட்டிலடித்தார் போல் நிமிருகிறார் “ஐயோ!  அடப்பாவிங்களா!  யானை  உள்ற வராம தடுக்க  கரண்ட் வேலியில்ல போடுறானுங்க!  அது சட்ட விரோதம் இல்ல..  யானை கம்பில பட்டா செத்தில்ல போகும்! “ அதிர்ச்சியில் அவரது முகம் வெளுத்து  வியர்த்துப் போய் விடுகிறது.  ஆனால்,  அவரது தவிப்பு புரியாத ஆறுச்சாமி, “ அதுக்கு என்ன  பண்றதுங்கண்ணா.. எட்டு மாசமா விளைஞ்ச  வாழையும் கரும்பும் கிடைக்கல.. பாடுபட்டு பயிர் விளச்சவீங்க, அவங்க  அவங்க பொருளை காப்பாத்திகிடறாங்க..”  என்கிறான். “அப்படி இல்ல  ராசா!  யானையை விரட்ட வேற வழி இருக்கு”  என்கிறார்  மாதன்.. “ என்ன வழிங்கண்ணா?”  என கேட்கிறான் ஆறுச்சாமி. “ தோட்டத்துக்கு நாலு பக்கமும் அகழி வெட்டி வைக்கலாம்..  இந்த தோட்டத்தில ஏற்கனவே   இருக்குது ஆனா தூர் வாராம வச்சிருக்காங்க..  அது அவங்க தப்பு தானே தவிர யானையோட தப்பா என்ன? அதுவும் இல்லன்னா அரசாங்கத்து கிட்ட சொல்லி கும்கி யானை வர வச்சு,  காட்டு யானையை காட்டுக்குள்ள தாட்டி விடலாம்.. தேவர் சோலையிலே  கலீல்னு ஒரு கும்கி யானை இருக்கு..  நூறு காட்டு யானைங்கள காட்டுக்குள்ள  தாட்டி விட்டுருக்கு..  இல்லைனா  கூடி,  ஆனைமலை ரிசர்வ்  பாரஸ்ட்ல மாரியப்பன்னு ஒரு  கும்கி இருக்குது..   அதையுங்கூடி  கூடியாரலாம்..  அதையெல்லாம் விட்டுபோட்டு இப்படி கரண்ட் வைக்கிறது  பெரிய பாவம்..  தப்பு..”  சொல்லிக்கொண்டு தலையை வேகமாக இப்படியும் அப்படியும் அசைக்கிறார் மாதன். அதற்குள் அவர்கள் இருவரும்  ஆனைப் பள்ளம் பழங்குடியினர்  வசித்த  சிறு கிராமத்தின் வெளிப்பகுதியை அடைந்து விடுகிறார்கள். 

அவர்கள் நின்று கொண்டிருந்த  இடம் கும்மிருட்டாக மாறி விட்டிருந்தது.  அங்கிருந்து  பார்த்தபோது    ஊருக்குள் சிறு சிறு மண்ணெண்ணெய் விளக்குகள்  கண் சிமிட்டிக் கொண்டிருப்பது தெரிகிறது. “அப்பாடா!  வந்துட்டோஞ்சாமி!  இனி வீட்டு உள்ளார போயிட வேண்டியது தான்.  நான் வாரேங்ண்ணா” சொல்லிவிட்டு  பத்தடி நடந்து போகும் ஆறுச்சாமி,  மாதன்  உடன் வராமல் அதே இடத்தில் நின்று கொண்டிருப்பதை பார்த்து, “ஏனுங்கண்ணா..  அங்கேயே  நின்னுட்டீங்?  வீட்டுக்கு போகலையா?”  என்று கேட்கிறான்.  “இல்ல  ஆறுச்சாமி!  இந்த ஆளுங்க  கரண்ட் வைக்கிற விஷயத்தை  ஃபாரஸ்ட் ஆபீஸ்ல போய் தகவல் சொல்லிட்டு வந்துடறேன்.  அவங்க  ரோந்து வந்து  கொம்பன  விரட்டி போடுவாங்க..  அதுக்கு முன்னால,  இந்த மாணிக்கத்துக்கு ஃபோன போட்டு,  கரண்ட்  ஆஃப் பண்ண சொல்லுவாங்க..  நீ போ..  எங்க வீட்டுல போய்,  என் மக கிட்ட  தாக்கல் சொல்லிடு..  நான் வெரசா சொல்லி போட்டு  ஓடி வாரேன்”  அவசரமாக சொல்லிவிட்டு அவன் பதிலுக்காக கூட காத்திருக்காமல்,  வந்த வழியே திரும்ப இருளில் கலந்து விடுகிறார்  மாதன். 

ஒரு வினாடி,  என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துப் போய் நிற்கிறான் ஆறுச்சாமி..  ஃபாரஸ்ட் ஆபீஸ் போகும் வழியில்,   துரைசாமி தோட்டம்  என்று இன்னொரு சிறு வாழைத்தோட்டம் இருப்பது  அவனுக்கு நினைவுக்கு வருகிறது.. “ ஐயோ! இந்த  கும்மிருட்டுல  இந்த வயசாளி  தனியா போறாரே!  பேய்க்கொம்பன்  அந்த தோட்டத்துப் பக்கம் இருந்தா என்ன செய்வது என்ற பயம்  சொரேர் என்கிறது அவனுக்கு..  இரண்டு அடி “அண்ணே!  போகாதீங்க அண்ணே!”  என்று சொல்லி எடுத்து வைக்கிறான்.  ஆனால்,  அந்த கும்மிருட்டும் கொம்பன் பயமும்  அவனைக் கோழையாகி விடுகின்றன​. செய்வதறியாது இங்குமங்கும் பார்க்கிறான்,  பிறகு,  மாதனுடைய வீடு இருக்கும் பக்கம் நோக்கி, “ஐயோ!  அடேய், மாரி, முனுசாமி, எங்கடா இருக்கீங்க? வாங்கடா!..   டேய்  மாரி, உங்க தாத்தன் இருட்டுல தனியா கொம்பன் இருக்குற பக்கமா  போறாருடா  வாங்கடா..”  என்று அலறிக்கொண்டு ஓடுகிறான். அவன் மனதுக்கு “பத்து மனுச உசுரு போனாலும் பரவாயில்லை,  ஒரு யானை உசுரு போவக்கூடாது” என்று மாதன் கிழவர் சொன்ன​ வார்த்தைகள் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

*

‘உதிரிகள்’ சிற்றிதழில் பரிசு பெற்ற சிறுகதை

– rajitamilartist@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button