
பாலக்காவும் கனியக்காவும் காக்கைகள். இணைபிரியாத நண்பர்கள். மனிதர்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத காட்டுப் பகுதியில் செழித்து நின்றது ஒரு புன்னைமரம். அங்கு அடுத்தடுத்த கிளைகளில் இருவரும் கூடு கட்டி வாழ்ந்துவந்தனர். அமைதி நிலவும் காட்டுப்பகுதியில் இருவருக்கும் கூடிருந்தாலும் அவர்களின் பொழுதுபோக்கு முழுவதும் நகர்புறத்திலேயே இருந்தது. விடிந்த பொழுது முதல் சூரியனை மேற்கு விழுங்கும் பொழுதுவரை இருவரும் நகர்ப்புறங்களில் பறந்து களித்துவிட்டு பின்னர் தங்களது கூடிருக்கும் புன்னை மரத்திற்குத் திரும்புவர். இருவரும் தங்கள் பெயரை சுருக்கமாக பாலா, கனி என்றே அழைத்துக்கொள்வர்.
அன்று அதிகாலை சூரியக்கீற்று உதயமாகும் வேளை இருவரும் கண்விழித்துக்கொண்டனர். “பாலா, இன்று எந்த திசையில் பறக்கலாம்”, என்று கேள்வியெழுப்பியது கனி.
“நேற்று வடக்கில் பறந்து திரிந்தோம், இன்று வா கிழக்கில் பயணிப்போம்”, என்று பதிலளித்தது பாலா. பாலாவின் பரிந்துரையின்படி இருவரும் சூரியன் உதிக்கும் கிழக்கு நோக்கி தங்கள் சிறகுகளை விரித்தனர். சிவப்பு ஆதவன் அவர்களை வரவேற்பதுபோலத் தன் கதிர்களைப் பரப்பிக்கொண்டு மேலெழுந்தான்.
சிறிது தூரம் பறந்ததும் கீழே கட்டிடங்கள் தென்பட்டன. “நகர்ப்புறம் வந்துவிட்டது கனி”, என்றது பாலா.
“ஆம் இனி கொஞ்சம் கீழிறங்கிப் பறப்போம்”, என்று கனி பதில் கூற. இருவரும் தாங்கள் பறக்கும் உயரத்தைக் குறைத்துக்கொண்டனர்.
“நேற்று ஒரு வீட்டு மாடியில் சுவற்றில் பொங்கல் பறிமாறி கா … கா … என்று நம்மை அழைத்தனர் நினைவிருக்கிறதா பாலா?”
“எப்படி மறக்கும் கனி, மிகவும் சுவையான பொங்கல்.”
“நான் ஒரு கவளம்தான் உண்டேன். நீ இரண்டு கவளங்கள் கபளீகரம் செய்துவிட்டாய்”, என்று கனி கூறியபொழுது குபுக்கென்று சிரித்துவிட்டது பாலா.
“சுவை என்னை அடிமையாக்கிவிட்டது கனி”, என்று அப்பாவியாக பதிலளித்தது பாலா.
“அதேபோல் இன்றும் சுவையான உணவைப் பறிமாறி நம்மை யாராவது அழைக்கிறார்களா என்று கவனி பாலா”, என்றது கனி.
காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டனர் இருவரும். எங்கிருந்தாவது கா … கா … என்று தங்களை அழைக்கும் குரல் கேட்கிறதா என்று கவனித்துக்கொண்டே மெதுவாகச் சிறகசைத்துப் பறந்துகொண்டிருந்தனர். அங்கே ஒரு மாடியில் ஒரு மனிதர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். கைப்பிடிச்சுவற்றில் அவர் அருந்துவதற்குக் குவளை நிறைய காஃபி வைத்திருந்தார். இதைக் கவனித்த பாலா கீழே இறங்கியது.
“பாலா, ஏன் கீழே இறங்குகிறாய்?”
“அங்கே பார், சுவற்றில் குவளையில் ஏதோ இருக்கிறது. எனக்கு அதை உண்ண வேண்டும் போல் இருக்கிறது”, என்றது பாலா.
“இருக்கட்டுமே … அதனாலென்ன … அவர்கள் நம்மை அழைக்கவில்லை”, என்று தங்களை அழைக்காதபோது அங்கே போகக்கூடாது என்ற உணர்வோடு பதில் சொன்னது கனி.
கணியக்காவின் சொல்லைப் புறக்கணித்தது பாலக்கா. “அதனால் தவறில்லை, எனக்கு அதை உண்ணாமல் இருக்க முடியாது. அந்த உணவின் மணம் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது”, என்று கூறி மாடிச்சுவற்றில் இறங்கிவிட்டது பாலா. காஃபிக் குவளைக்கு அருகில் சென்று தன் அலகை நுழைத்து காஃபியை சுவை பார்க்க எண்ணியது ஆனால் தனது அலகு குவளையில் எட்டவில்லை. யோசனை செய்த பாலா, குவளையைத் தன் அலகால் மெல்ல முட்டித் தள்ளியது. குவளை சாய்ந்தது. சுவற்றின் மேற்பரப்பு முழுவதும் காஃபி கொட்டிப் பரவியது. கட்டிடம் சில ஆண்டுகாலப் பழமையானதாக இருந்ததால் சுவற்றின் மேற்பரப்பில் ஆங்காங்கே சிமெண்ட் பூச்சு உதிர்ந்து செங்கற்கள் தென்பட்டன மேலும் ஆங்காங்கே சிறு சிறு குழிகளும் இருந்தன. கொட்டிப் பரவிய காஃபி அந்தக் குழிகளை நிறப்பியது. குழிகளில் தேங்கிய காஃபியை தன் அலகால் சுவைத்தது பாலா. காஃபியின் சுவை பாலாவை அடிமையாக்கியது. “நான் இனி தினமும் இங்கே வந்து இந்த உணவை உண்ணப்போகிறேன்”, என்றது பாலா. பாலாவின் செயலுக்கு உடன்படாத கனி, “நீ சொல்வது சரியல்ல பாலா. நம்மை அழைத்து உணவு கொடுக்குமிடத்தில் மட்டும்தான் உண்ணவேண்டும். அழைக்காத இடங்களில் உண்ணக்கூடாது”, என்றது.
அங்கிருந்து புறப்பட்ட இருவரும் மீண்டும் மேல்நோக்கிச் சிறகடித்தனர். தொலைவில், “கா … கா …” குரல் கேட்டது. கனி சொன்னது, “பாலா அங்கே உணவு இருக்கிறது, வா போகலாம்”. குரல் வந்த திசையில் பறந்து சென்று இறங்கினர். அங்கே கொடுத்த உணவை உண்டு களித்த இருவரும் மேலும் சில இடங்களுக்குச் சென்றுவிட்டு மாலையானதும் கூட்டைத்தேடி புன்னை மரத்திற்கு திரும்பினர்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. இருவரும் தங்கள் பயணத்திற்கு ஆயத்தமாகினர். “பாலா நேற்று கிழக்கில் பறந்தோம் இன்று வா தெற்கில் பறப்போம்”, என்றது கனி.
“என்ன? மறந்துவிட்டாயா?”, என்றது பாலா.
“நான் என்ன மறந்தேன்?”
“கிழக்கில் சென்று அந்த மாடியில் நேற்று சுவைத்த உணவை நான் உண்ணவேண்டும்”, என்று காஃபியை நினைவுகூர்ந்தது பாலா.
கனி எத்தனை தடுத்துக் கூறியும் பாலா காஃபி அருந்துவதில் பிடிவாதமாக இருந்தது. வேறு வழியில்லாமல் பாலாவைப் பின்தொடர்ந்து பறந்தது கனி. அந்த மாடியை கச்சிதமாக நினைவில் கொண்டிருந்தது பாலா. மாடியைக் கடக்கும் சமயம் கீழே பார்வையைச் செலுத்தியது பாலா. முந்தைய தினத்தைப்போலவே மாடிச் சுவற்றில் காஃபி இருப்பதைக் கண்ட பாலா மகிழ்ச்சியில் வானில் வட்டமிட்டது. காஃபிக்கு அருகாமையில் முந்தைய தினம் உடற்பயிற்சி செய்த மனிதர் இன்று நாளிதழை வாசித்துக்கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவர் அறியாத வேளை வழக்கம் போல தனது அலகால் முட்டி காஃபிக் குவளையைத் தட்டிவிட்டது பாலா. காஃபியும் பாலா எதிர்பார்த்ததுபோல சுவற்றில் கொட்டிப் பரவி குழிகளை நிரப்பியது. தனது அலகால் குழிகளை நிறப்பிய காஃபியை சுவைத்து முடித்த பாலா, “ம்… வா போகலாம்”, என்றதும் இருவரும் விண்ணை நோக்கிச் சிறகு விரித்தனர். வழக்கம் மாறாமல் “கா … கா … ” குரல் கேட்குமிடங்களில் இறங்கி உணவருந்திவிட்டு மாலையானதும் புன்னை மரத்தை நாடினர்.
மறு நாள் விடிந்தது. கனி முன்னெச்சரிக்கையாகக் கூறியது, “பாலா உன் பழக்கத்தை மாற்று. இன்று நம்மை அழைக்குமிடங்களில் மட்டும்தான் நாம் உணவருந்த வேண்டும்”.
“அடடா, தினமும் உனக்கு என்னால் பாடம் நடத்த முடியாது”, என்று கனியின் மீது கோபம் கொண்டது பாலா.
“அப்படியானால் நான் சொல்வதைக் கேட்கமாட்டாயா?”
“மாட்டேன்”, என்று தன் எண்ணத்தில் உறுதியாக இருந்தது பாலா. வேறு வழி தெரியாமல் இன்றும் பாலாவைப் பின்தொடர்ந்தது கனி. இன்று அந்த மாடியைக் கடக்கும் சமயம் கீழே பார்வையைச் செலுத்தியது பாலா. சுவற்றில் காஃபியும் இல்லை மாடியில் மனிதரும் இல்லை. மாடியில் இறங்கினர் இருவரும். “இன்று தான் அந்த உணவு இல்லையே பின்னர் என் இறங்கினாய்?”, என்று கேட்டது கனி.
“ம் … இப்பொழுது இல்லையென்றால் என்ன கொஞ்ச நேரம் காத்திருப்போம் அந்த உணவைக் கொண்டு வந்து சுவற்றில் வைப்பார்கள்”, என்றது பாலா.
“அதுவரை என்ன செய்வாய்?”, என்று கேட்டது கனி.
“இதோ இந்தப் படிகளில் நிற்போம் வா?”, என்று மாடிப் படிகளைக் காட்டியது பாலா. இருவரும் சிறிது நேரம் படிகளில் நின்றிருந்தனர்.
பாலாவின் யூகம் பலித்தது. அந்த மனிதர் சிறிது நேரத்தில் மாடிக்கு காஃபியோடு வந்தார். வழக்கம் போல மாடிச்சுவற்றில் காஃபியை வைத்துவிட்டு இன்று அந்த மனிதர் தன்னுடைய மாடித் தோட்டத்திற்கு நீர் வார்க்கச் சென்றுவிட்டார். இப்படியொரு தருணத்திற்காகக் காத்திருந்த பாலா வழமைபோல் தன் அலகால் வேலையைக் காட்டியது. கொட்டிய காஃபியை அருந்தி மகிழ்ந்து அடுத்த இடம் நோக்கிச் சிறகை விரித்தது. கனியும் உடன் பறந்தது.
நான்காம் நாளும் காஃபிப் பயணம் தொடர்ந்தது. ஆனால் இன்று அந்த மாடியில் காஃபியும் இல்லை மனிதரும் இல்லை என்பதை உணர்ந்த பாலா, “நேற்றைப்போல படிகளில் நிற்போம் வா …”, என்றது.
பாலாவின் செயலில் கனிக்கு சற்றும் உடன்பாடு இல்லை. எனினும் நட்பின் காரணமாக பாலாவின் செயல்களை ஆமோதித்தது கனி. வெகுநேரம் காத்திருந்தார்கள் படிகளில். இன்னும் அந்த மனிதர் மாடிக்கு வரவில்லை. சந்தேகம் எழுந்தது கனிக்கு. “பாலா இது சரியாகப் படவில்லை. வா புறப்படலாம்.”
“இன்னும் சிறிது நேரம் காத்திருப்போம்”, என்றது பாலா.
“எல்லா நாள்களும் ஒன்றுபோல் நிகழாது. எனவே இன்று அந்த உணவு இல்லை என்று முடிவு செய்துவிட்டு வா. நம்மை அழைக்கு வீடுகளுக்குச் செல்வோம்”, என்றது கனி.
“முடியவே முடியாது, இன்றும் நான் அந்த உணவை ருசித்துவிட்டுத்தான் வருவேன். நீ வேண்டுமானால் புறப்படு”, என்று தீர்க்கமாக பதிலளித்தது பாலா.
இதற்கு மேல் பேசிப் பயனில்லை என்று புறப்பட்டது கனி. பாலா மனதில் மாற்றம் கண்டு தன்னுடன் வரலாம் என்றெண்ணி சற்று தூரம் தள்ளிச்சென்று நின்று பாலாவை நோக்கியது கனி. பாலாவின் செயலில் மாற்றம் இல்லை என்றுணர்ந்தது. “கா … கா …” குரல் வந்த திசை நோக்கிப் பறந்தது கனி.
சூரியன் உச்சியைத் தொட்டான். பாலா இன்னும் காஃபிக்காகக் காத்திருக்கிறது. பறந்து சென்ற கனிக்கு ஆங்காங்கே உணவுகள் கிடைத்தது. நன்கு பசியாறி உல்லாசமாகச் சுற்றித் திரிந்தது கனி. உச்சியைத் தோட்ட சூரியன் மேற்கை நாடினான். காஃபிக்காகக் காத்திருந்த பாலாவிற்கு பசி உச்சத்தில் இருந்தது. பார்வை இருட்டியது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று உணர முடியாத நிலைக்கு ஆளானது பாலா. மயங்கிய நிலையில் மாடிப்படியில் நின்றுகொண்டிருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது. பறக்கவும் இயலாமல் நடக்கவும் இயலாமல் சிறிது நேரத்தில் முழுவதுமாகச் சுயநினைவிழந்தது பாலா. மாடிப்படிகளின் இடைவெளியின் வழியாக பொத்தென்று கீழே தரையில் விழுந்தது பாலா.
மாலைப்பொழுதாகிவிட்டதை உணர்ந்த கனி, தனது இருப்பிடமான புன்னைமரம் நோக்கிப் பறக்க எண்ணியது. தற்செயலாக பாலாவின் நினைவு கனிக்கு வரவே, அந்த மாடியை நோக்கிப் பறந்தது கனி. அங்கே மயங்கிக் கிடைக்கும் பாலாவின் நிலையைக் கண்ட கனிக்கு அச்சம் மேலிட்டது. என்ன ஆயிற்றோ என்று அருகில் சென்று தன் அலகால் பாலாவைத் தீண்டியது. பாலா தன் விழிகளை சிறிதளவு திறந்து மூடியது. பசியின் காரணமாக பாலா மயங்கிவிட்டது என்றுணர்ந்த கனி, பாலாவிற்க்காக உணவு தேடிப் பறந்தது. சற்று தொலைவில் ஒரு மாடியில் ஒரு குழந்தை கைகளில் வற்றல்களை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தது. கனியைக் கண்ட குழந்தை “கா … கா … ” என்று கையில் வைத்திருந்த வற்றலை நீட்டியது. குழந்தையிடமிருந்து ஒரு வற்றலைப் பெற்றுக்கொண்ட கனி மீண்டும் பாலா மயங்கிக்கிடக்கும் மாடி நோக்கிப் பறந்தது.
அங்கே பாலாவின் அலகைத் தன் அலகால் மெல்லத் தீண்டியது. கனத்த பசியில் மயங்கி கிடந்த பாலாவின் நாசியில் வற்றலின் வாசம் புகுந்தது. மெல்ல விழிகளைத் திறந்து கனியிடமிருந்து வற்றலைப் பெற்று மென்று விழுங்கியது பாலா. சிறிது பசியாறிய பாலா தன்னிலைக்குத் திரும்பியது.
“எழுந்திரு பாலா … உன்னால் பறக்க முடியுமா?”, என்று அன்பாய்க் கேட்டது கனி.
மெல்ல எழுந்த பாலா, “முடியும் கனி”, என்று பதிலளித்தது. தத்தி எழுந்து மெல்லச் சிறகுகளை விரித்தது பாலா. இருவரும் தங்கள் கூடுகளை அடைந்தனர்.
வழக்கம் போல ஐந்தாம் நாள் காலைப் பயணமும் இருந்தது. இன்றும் பாலா அந்த மாடிக்குதான் செல்லப்போகிறது என்றெண்ணிக்கொண்டே பாலாவைப் பின்தொடர்ந்தது கனி. அதே மாடி, சுவற்றின் மேல் இன்று காஃபி இருந்தது. மனிதர் நாளிதழ் வாசித்துக்கொண்டு அருகில் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
மாடியிறங்கப்போகிறது பாலா என்று கனி எண்ணிக்கொண்டிருந்த வேளையில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மாடியை இரண்டுமுறை வட்டமிட்டது பாலா. நேற்றைய நிகழ்வு நினைவில் வந்து போனது பாலாவுக்கு. அதற்குப்பின் நிகழ்ந்ததைத்தான் கனியால் நம்பமுடியவில்லை. ஆம் … காஃபி அங்கே இருந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் பாலா தங்களை அழைப்பவர்கள் இல்லம் தேடிப் பறந்தது. வியப்போடு பாலாவைத் தொடர்ந்து சிறகடித்தது கனி.
- nam.manikandan@gmail.com