இணைய இதழ் 101சிறார் இலக்கியம்

சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 11 – யுவா

சிறார் தொடர் | வாசகசாலை

11. பானை வழக்கு

ராணி கிளியோமித்ரா அறையில் இருந்த செவ்வந்திக்கு காவலாளி வந்து விஷயத்தைச் சொல்ல… சற்றும் பதற்றமின்றி அவனுடன் சென்றாள்.

அரச சபையின் விசாரணைக் கூட்டத்தின் முன்பு நின்று சிங்கமுகனைகைப் பார்த்து வணங்கினாள். ‘’அரசே… அழைத்தீர்களா?’’

‘’நட்சத்திராவுக்கும் குழலனுக்கும் ஏற்பட்ட தாக்குதல் பற்றி தெரியுமா?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’அரசியார் மூலம் அறிந்துகொண்டேன்’’ என்றாள் செவ்வந்தி.

‘’இந்தச் சதியில் உன் பங்கு இருப்பது அம்பலப்பட்டு விட்டதையும் சொன்னாரா?’’ என்று கிண்டலுடன் கேட்டான் கம்பீரன்.

அவன் பக்கம் திரும்பிய செவ்வந்தி, ‘’எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படிக் குற்றம் சாட்டுகிறீர்கள்?’’ என்று கேட்டாள்.

‘’ஆதாரம் வந்துகொண்டே இருக்கிறது. உன் கூட்டாளியான இவன் கையும் களவுமாக அகப்பட்டுவிட்டான். சற்று நேரத்தில் உன் லட்சணமும் தெரிந்துவிடும்’’ என்றான் கம்பீரன்.

அழுகையுடன் தலைகுனிந்து இருக்கும் நல்லானைப் பார்த்தாள். அவனது காலடியில் இருக்கும் பானையையும் அதில் இருக்கும் தங்கக் கட்டிகளையும் பார்த்தாள்.

‘’என்ன பார்க்கிறாய்? நட்சத்திராவும் குழலனும் பொன் மண்டபத்துக்கு வருகிற விஷயத்தை அந்தச் சுரங்கக் கொள்ளையர்களுக்கு உளவுச் சொன்னதற்காகப் பெற்ற வெகுமதி. இவன் வீட்டில் இருந்து கைப்பற்றினோம். உன் வீட்டிலும் இருக்குமே’’ என்றார் நிலாமதி சந்திரன்.

‘’அடேங்கப்பா… நீங்கள் இங்கிருந்தவாறே இவ்வளவு உறுதியாகச் சொல்வதைப் பார்த்தால் என் வீட்டில் எந்த மூலையின் பானை அடுக்குகளில் எத்தனையாவது பானையில் இருக்கும் என்பதையும் சொல்வீர்கள் போலிருக்கிறதே… பெரிய தீர்க்கதரிசிதான்’’ என்று மெல்லச் சிரித்தாள் செவ்வந்தி.

‘’பார்த்தீர்களா அரசே… குற்றவாளிக் கூண்டில் நிற்கும்போதும் இவளது கேலிப் பேச்சு குறையவில்லை. அந்த அளவுக்கு இங்கே இடம் கொடுத்துவிட்டீர்கள்’’ என்றான் கம்பீரன்.

‘’தளபதி… குற்றத்தை ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டுங்கள். அதை விடுத்து அதிகப்பிரசங்கி பேச்சு வேண்டாம். இதன்மூலம் என்ன சொல்ல வருகிறீர்? நானும் ராணியும் அறிவில்லாதவர்கள். ஆபத்தானவர்களை அருகில் வைத்திருந்தோம் என்கிறீரா?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’அ… அப்படி இல்லை அரசே…’’ என்று அமைதியானான் கம்பீரன்.

‘’அதோ… செவ்வந்தி வீட்டுக்குச் சோதனையிட சென்ற வீரர்கள் வந்துவிட்டார்கள்’’ என்றார் நிலாமதிசந்திரன்.

அந்த வீரர்களுடன் செவ்வந்தியின் தாய் மற்றும் தங்கை வந்தார்கள். இருவரின் முகங்களிலும் கலவரம். வீரன் ஒருவன் கையில் ஒரு பானை.

‘’வீரனே… அந்தப் பானையில் என்ன?’’ என்று கேட்டான் கம்பீரன்.

‘’தங்கக் கட்டிகள் தளபதியாரே’’ என்றான் ஒருவன்.

வேகமாக நெருங்கி அதை வாங்கிய கம்பீரன் எல்லோருக்கும் காண்பித்து, ‘’இப்போது என்ன சொல்கிறாய் பெண்ணே?’’  என்று கேட்டான்.

‘’அரசரே… இந்தப் பானை எங்கள் வீட்டுக்குள் எப்படி வந்தது என்றே தெரியாது’’ என்று அழுதார் செவ்வந்தியின் தாய்.

‘’அம்மா… அழாதீர்கள்… நான் பேசிக்கொள்கிறேன்’’ என்று இப்போதும் நிதானம் மாறாத செவ்வந்தி அரசர் பக்கம் திரும்பினார்.

‘’அரசே… நான் குற்றமற்றவள்… நடந்திருப்பது சதி என்று நிரூபிக்க எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்’’ என்றாள்.

‘’சொல் செவ்வந்தி… என்ன உதவி?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’என் வீட்டுக்கு ஓரிரு வீரர்களையும் வண்டியையும் அனுப்பி அங்கே எஞ்சி இருக்கும் மற்ற பானைகளையும் கொண்டுவரச் சொல்லுங்கள்’’ என்றாள்.

‘’எதற்கு? எதற்கு?’’ என்று கேட்டார் நிலாமதிசந்திரன்.

‘’அவசரப்படாதீர்கள் மந்திரி… பானைகள் வரட்டும் சொல்கிறேன்’’ என்றாள் செவ்வந்தி.

தளபதியும் மந்திரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். வீரர்கள் அனுப்பப்பட்டார்கள்.

‘’தளபதி வழக்கம் போல இந்த முறையும் அந்தக் கொள்ளையர்கள் தப்பிவிட்டார்கள். அதேபோல அந்த மர்ம மனிதனும் யார் என்று தெரியவில்லை. அல்லவா?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’சம்பவ இடத்தில் இருந்த இந்தப் பெண்ணும் சிறுவனும்தான் அந்த மர்ம மனிதன் பற்றி விளக்க வேண்டும்’’ என்றான் கம்பீரன்.

நட்சத்திரா ‘விருட்’ என நிமிர்ந்தாள். ‘’என்ன விளக்குவது…? அதுதான் நூறு முறை சொல்லிவிட்டேனே… அவன் உடல் முழுவதும் கறுப்பு ஆடையைச் சுற்றியிருந்தான். கண்கள் மட்டும்தான் தெரிந்தன’’ என்றாள்.

‘’கேட்க வந்தது அதுவல்ல… அவன் அந்தக் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளான். அதற்கு அங்கே வந்த வீரர்களும் உயர்நிலைப் பாடசாலை அதிகாரியும் சாட்சி’’ என்றான் கம்பீரன்.

‘’அதையும்தானே நானே ஒப்புக்கொண்டேனே…’’

‘’அரசரைக் கொல்ல நினைத்த ஒரு மர்ம மனிதன் உங்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன? இருவருக்கும் என்ன தொடர்பு?’’ என்று கேட்டார் நிலாமதிசந்திரன்.

இப்போது சூர்யன் குறுக்கிட்டான்… ‘’அரசே… மந்திரியும் தளபதியும் சிக்கியவர்களை எல்லாம் குற்றவாளிகளாக மாற்றிவிட முயல்கிறார்கள். அந்த மர்ம மனிதன் நிஜத்தில் உங்களைக் கொல்ல முயன்றது போல் தெரியவில்லை’’ என்றான்.

‘’அப்படியானால்?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’அந்த இரண்டு சம்பவங்களையும் நானும் பல நாட்கள் யோசித்துப் பார்த்தேன். முதல் சம்பவம் நடந்த இரவில் கொள்ளையர்கள் உங்களைச் சுற்றிவளைத்தபோது மரத்தின் மீதிருந்த அவன் மயக்க புகை குண்டுதான் வீசினான். அது உங்களுக்கா… உங்களைத் தாக்க முயன்ற கொள்ளையர்களைத் தடுப்பதற்கா? கொல்லும் எண்ணம் இருந்திருந்தால் மேலே இருந்து கத்தியோ ஈட்டியோ எறிந்திருக்கலாமே’’ என்றான் சூர்யன்.

‘’அ… அதுவும் சரிதான்’’ என்றார் சிங்கமுகன்.

‘’அப்படியானால் பாடசாலை பின்புறம் அம்பு எய்தது?’’ என்று வேகமாகக் குறுக்கிட்டான் கம்பீரன்.

‘’அப்போதும் அம்பு காதருகே உரசிதான் சென்றது. அம்பு வந்த துல்லியத்தையும் அவன் தப்பிய வேகத்தையும் பார்க்கையில் குறி தவறியது போலில்லை. வேண்டுமென்றே உரசி செல்வது போல எய்துள்ளான். அவன் நோக்கம் வேறு ஏதோ?’’ என்றான் சூர்யன்.

நிலாமதிசந்திரன் சட்டென சிரித்தார்… ‘’ஏதேது சூர்யா… நீ கொடுக்கும் சான்றிதழைப் பார்த்தால் அவனை அழைத்துவந்து பாராட்டு விழா நடத்த வேண்டும் போலிருக்கிறதே. அரசே…. அந்த இரண்டு சம்பவங்களின்போதும் இந்த சூர்யன் அருகில் இருந்தான். இவன் மீதே சந்தேகம்’’ என்றார்.

நட்சத்திரா மெல்ல சிரித்து… ‘’மந்திரியாரே அவசரப்பட்டு வார்த்தையை விடாதீர்கள். அதே சம்பவங்களில் நீங்களும்தான் அரசர் அருகில் இருந்தீர்கள். சொன்ன சொல் உங்கள் பக்கமே திரும்பிவிடும்’’ என்றாள்.

‘’பார்த்தீர்களா அரசே… உங்கள் உயிர் விஷயத்தில் கேலி பேச்சு. எனக்கு என்னமோ இந்த சூர்யன், இவள், அதோ அவள்… எல்லாவற்றுக்கும் மேலாக உரைக்கல் என்று கிறுக்கிக்கொண்டு இருக்கிறானே அந்த உத்தமன் எல்லோரும் சேர்ந்து மிகப்பெரிய கூட்டுச் சதி செய்கிறார்கள் என்று கருதுகிறேன்’’ என்றான் கம்பீரன்.

‘’அடச்சீ… நிறுத்துங்கள்…’’ என்று கத்தினார் சிங்கமுகன்.

சட்டென ஒட்டுமொத்த அவையும் அமைதியானது.

‘’பட்டியல் பெரிதாகிக்கொண்டே போகிறது. இன்னும் என்னையும் அரசியையும்தான் குற்றம் சொல்லவில்லை. கொஞ்சம் விட்டால் என்னைக் கொல்ல நானே ஆளை நியமித்து இருப்பதாகச் சொல்வீர்கள் போல. சரியான டென்சேன் டென்சேன்’’ என்று கை விரல்களைக் குவித்து சீறினார் சிங்கமுகன்.

எல்லோரும் அவரையே பார்த்தார்கள்.

‘’என்ன பார்வை…? அது ஓர் ஆங்கில வார்த்தை. கிங்விங்சன் கற்றுத்தந்தது’’ என்றார்.

‘’அரசே… எனக்கு அந்த கிங்விங்சன் மீதே…’’ என்று நிலாமதிசந்திரன் ஆரம்பிக்க…

‘’மூடும் ஐயா மூடும்… மூடிக்கொண்டு இரும். ஷட்டேப் … ஷட்டேப்’’ என்று பெரிதாகக் கத்தினார் சிங்கமுகன்.

சில நிமிடங்களுக்கு அவையில் மயான அமைதி

‘’மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுக்குப் பிறகு வருவோம். இப்போது இந்த நல்லான், செவ்வந்தி விவகாரத்தை முடிப்போம்’’ என்றார்.

அதேநேரம் வீரர்கள் நான்கு பேர் வரிசையாகப் பானைகளுடன் உள்ளே நுழைந்தார்கள். வெவ்வேறு அளவுகளான பானைகள். அவற்றை சபையின் நடுவே சுற்றிலும் வைத்தார்கள்.

அவற்றைப் பார்த்ததும் இவ்வளவு நேரமாக செவ்வந்தி காலடியில் மூச்சுக் காட்டாமல் இருந்த வெற்றி சட்டென உற்சாகமாகி ஒரு பானை மீது தாவியது. அதன் கழுத்துப் பகுதியில் லாவகமாக அமர்ந்துகொண்டது.

‘’அம்மாடி செவ்வந்தி எதையோ நிரூபிக்கிறேன் என்றாயே? பானைகள் வந்துவிட்டன. என்ன அது?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’மன்னா… சற்று அருகில் வந்து பானைகளைப் பாருங்கள். அப்படியே குனிந்து முகர்ந்தும் பாருங்கள். தளபதி… மந்திரி நீங்களும்தான்’’ என்றாள் செவ்வந்தி.

மூவரும் குழப்பத்துடன் பானைகளை நெருங்கினார்கள்.

‘’மியாவ்… மியாவ்…’’ (இருங்கப்பா நான் போய்டறேன்) என்று தாவிச் சென்றது வெற்றி.

‘’பாருங்கள் மன்னா… பானைகளைச் சுற்றிலும் என்ன தெரிகிறது?’’ என்று கேட்டாள் செவ்வந்தி.

‘’கறுப்பு கறுப்பாக…’’ என்றார் சிங்கமுகன்.

‘’வட்ட வட்டமாக…’’ என்றார் நிலாமதிசந்திரன்.

செவ்வந்தி தலை நிமிர்ந்து கம்பீரனைப் பார்க்க… ‘’ம்… திட்டு திட்டாக’’ என்றான்.

‘’குனிந்து முகர்ந்து பாருங்கள்’’ என்றாள் செவ்வந்தி.

குனிந்தவர்கள் அதே வேகத்தில் மூக்கைப் பொத்தியவாறு விலகினார்கள்.

‘’என்ன நாற்றம் இது?’’ என்று முகம் சுளித்தார் சிங்கமுகன்.

‘’வெற்றி செய்யும் வேலை அரசே… உங்களுக்கே தெரியும், நான் வாரத்தில் ஓரிரு நாட்கள்தான் வீட்டுக்குச் செல்கிறேன். மற்ற நாளில் ராணியாரின் வசதிக்காக அரண்மனையிலேயே தங்கிவிடுகிறேன். ஆனால், வெற்றி தினமும் வீட்டுக்குச் சென்று விடியலிதான் திரும்பும்’’ என்றாள் செவ்வந்தி.

‘’ஆமாம்… அதற்கும் இந்த நாற்றத்துக்கும்…’’

‘’சம்பந்தம் இருக்கிறது. மற்ற எல்லாவற்றிலும் அறிவோடு இருக்கும் இந்த வெற்றி ஒரு விஷயத்தில் மட்டும் எவ்வளவு சொல்லியும் மாறுவதில்லை. வீட்டுக்குச் சென்றதும் சற்று முன்பு பார்த்தீர்களே… அப்படி பானை மீது படுத்துக்கொள்வான். அங்கேயே கடன்களைக் கழிப்பான். எத்தனை முறைதான் பானையைக் கழுவுவது? அலுத்துப் போய் விட்டுவிட்டோம். எங்கள் வீட்டுப் பானைகள் எல்லாவற்றிலும் இந்த வெற்றியின் கழிவுகளாலான கரையும் நாற்றமும் இருக்கும்’’ என்றாள் செவ்வந்தி.

சிங்கமுகன் திரும்பி வீரர்கள் முதலில் கொண்டுவந்த தங்கக் கட்டிகள் இருந்த பானையைப் பார்த்தார்.

‘’சரியாக நினைக்கிறீர்கள் அரசே… அந்தப் பானை மீது ஒரு கரையோ சிறு நாற்றமோ இல்லை. எனில், என்ன பொருள்?’’ என்று கேட்டாள் செவ்வந்தி.

‘’எ… என்ன பொருள்?’’

‘’அது சோதனையில் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கொண்டுவந்து வைக்கப்பட்ட பானை’’ என்றாள் செவ்வந்தி.

கம்பீரன் சட்டென முன்னால் வந்தான். ‘’அரசே… இவள் சொல்வதன் பொருள் என்ன? குற்றத்தில் இருந்து தப்பிக்க திசை திருப்புகிறாள். விட்டால் பானையை வைக்க ஏற்பாடு செய்தது நான்தான் என்பாளோ?’’ என்று சீறினான்.

‘’பொறு தளபதி… அவள் அப்படிச் சொல்லவே இல்லையே’’ என்றார் சிங்கமுகன்.

‘’அப்படியானால் யார் வைத்தது என்கிறாள்?’’ என்று கேட்டார் நிலாமதிசந்திரன்.

‘’அதை நீங்களும் தளபதியும்தான் கண்டுபிடிக்க வேண்டும். வேகவேகமாக எங்கள் மீது குற்றம் சுமத்தினீர்கள் அல்லவா? இப்போது வேறு யாரையாவது பிடியுங்கள்’’ என்று கேலியுடன் சொன்னாள் நட்சத்திரா.

‘’செய்வதை எல்லாம் செய்துவிட்டு சாதூர்யமாகப் பேசி தப்ப நினைக்கிறீர்கள்’’ என்று கம்பீரன் குரலை உயர்த்த, சிங்கமுகன் கையமர்த்தினார்.

‘’போதும்… விசாரணையின் முடிவில் செவ்வந்தி குற்றவாளி இல்லை என்று எனக்கு நிரூபனம் ஆகிவிட்டது. செவ்வந்தி நிரபராதி என்றால் இதே வழிமுறையில் சிக்கியுள்ள நல்லானும் நிரபராதி என்றாகிறது. யாரோ திட்டமிட்டு இவர்களைச் சிக்கவைத்து இருக்கிறார்கள். அந்தக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வேலையைப் பாருங்கள்’’ என்றார் சிங்கமுகன் அதட்டலான குரலில்.

‘’நன்றி மன்னா’’ என்று வணங்கினாள் செவ்வந்தி.

‘’நன்றி அரசே… நன்றி செவ்வந்தி’’ என்று வணங்கினான் நல்லான்.

கம்பீரனும் நிலாமதிசந்திரனும் முகம் இருண்டு நகர்ந்து நின்றார்கள்.

‘’போங்கள்… அடுத்த விபரீதம் நடக்கும் முன்பு சுரங்கக் கொள்ளையர்களையும் அந்தக் கறுப்பு ஆடை ஆசாமியையும் கண்டுபிடியுங்கள். நாளை ராணியின் பிறந்தநாள். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். நானும் சென்று இரவுக்குள் ஒரு கவிதை எழுத வேண்டும். அது எப்படி எனக்கு வராமல் போகும்? விடுவதாக இல்லை’’ என்றபடி நடக்க ஆரம்பித்தார் சிங்கமுகன்.

*****

‘’சே… அந்த நட்சத்திரா, குழலனைக் கொல்லும் திட்டம்தான் பலிக்கவில்லை. உளவு சொன்னவர்கள் என்று நல்லான், செவ்வந்தி மீது குற்றம் சுமத்தும் மறுபாதியாவது நடக்கும் என்று பார்த்தோம். கடைசியில் பூனையின் கழிவை வைத்து வழக்கையே ஒன்றுமில்லாமல் செய்துவிட்டாளே அந்தச் சின்னப் பெண்’’ என்று அலுத்துக்கொண்டார் நிலாமதிசந்திரன்.

இடம்… கம்பீரனின் மாளிகை. முகம் முழுக்க வெறுப்பு மண்டியிருக்க வெறித்து அமர்ந்திருந்தான் கம்பீரன்.

‘’நல்லவேளை… நம் மக்கு அரசர் மேற்கொண்டு கிளறாமல் ராணியின் பிறந்தநாள் கவலைக்குப் போய்விட்டார். இல்லாவிட்டால் பானைகளை வைத்தது யார் என்று துருவி இருந்தால் நாம் சிக்கியிருப்போம்’’ என்றார்.

‘’ச்சூ… வாயை மூடும் கிழவரே… நீரே போய்ச் சொல்லிவிடுவீர் போலிருக்கிறது’’ என்று கம்பீரன் சீற, மந்திரி அமைதியானார்.

‘’அந்த சில்வண்டு செவ்வந்தியை நான் கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன். மகா சாமர்த்தியசாலி. அந்த நட்சத்திரா… அந்த உரைக்கல் உத்தமனைவிடப் பெரிய அறிவாளியாக இருக்கிறாள். விட்டால் உம் பதவிக்கே வந்துவிடுவாள் போலிருக்கிறது’’ என்றான் கம்பீரன்.

‘’ஐயையோ…’’ என்று பதறினார் நிலாமதி சந்திரன்.

‘’அலறாதீர் ஐயா… அப்படி நடக்க விடுவேனா? நான் போட்ட பல திட்டங்களை வெற்றிக்கரமாக முடித்துள்ளேன். சிலவற்றில் தோற்றுள்ளேன். ஆனால்… இந்த அளவுக்கு அவமானகரமான ஒரு தோல்வியைச் சந்திப்பது இதுதான் முதன்முறை. என் நிழலே என்னைப் பார்த்து நகைப்பது போன்ற கேவலமான தோல்வி… சே… ச்சீ’’ என்று தன் கன்னத்தில் அடித்துக்கொண்டான் கம்பீரன்.

நிலாமதிசந்திரன் அமைதியாகப் பார்த்தார்.

‘’விடமாட்டேன்… என் மூளை ஒருமுறைதான் தவறு செய்யும். அடுத்து ஒரு பெரிய திட்டம் போடுகிறேன். அத்தனை பேரையும் ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் திட்டம் தீட்டுகிறேன்’’ என்ற கம்பீரன் கண்களில் குரோதம் ஒளிர்ந்தது.

தொடரும்…

  • iamraj77@gmail.com
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button