இணைய இதழ் 101தொடர்கள்

காலம் கரைக்காத கணங்கள்; 8 – மு.இராமனாதன்

தொடர் | வாசகசாலை

மாஸ்டரும் டீச்சரும் மலையாளிகளும்

இவ்வாண்டு ஓணத்தின்போது நான் எர்ணாகுளம் போயிருந்தேன். அப்போது எனக்குத் தெரிந்த, ஆனால் நான் மறந்து போயிருந்த ஓர் ஆளுமையின் படங்கள் உள்ளூர் நாளிதழ்களில் அடுத்தடுத்த நாட்களில் வெளியாயின. அவை எம்.கே.சானு மாஸ்டரின் படங்கள். இரண்டு நாட்களில் வெளியான படங்களும் இரு வேறு செய்திகளைத் தாங்கி வந்தன. அவை ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவை. வெவ்வேறு முகாம்களிலிருந்து வந்தவை.

முதல் நாள் திருச்சூர் பாஜக எம்.பி-யும் ஒன்றிய அமைச்சரும் திரைக் கலைஞருமான சுரேஷ் கோபி, சானு மாஸ்டரை அவரது இல்லத்தில் சந்தித்து அவருக்கு, ‘ஓணக் கோடி’ (புத்தாடை) வழங்கினார். சானு மாஸ்டருக்குப் பல முகங்கள் உண்டு. அவை, ஓய்வு பெற்ற பேராசிரியர், எழுத்தாளர், விமர்சகர், மனித உரிமைச் செயல்பாட்டாளர் என்பன. அவர் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். கேரளத்தில் ஒருவர் ஆசிரியராகப் பணியில் இருந்தாலும், ஓய்வு பெற்றாலும் மாஸ்டர் என்றுதான் அறியப்படுவார். அதுதான் வழமை. சானு மாஸ்டர் பயிற்றுவித்த மாணவர்களில் ஒருவர் சுரேஷ் கோபியின் தாயார். மாஸ்டரின் மீது அந்த அம்மையாருக்கு மிகுந்த மதிப்பு இருந்திருக்கிறது. அதனால் சுரேஷ் கோபி மாஸ்டரை அணுக்கமாக  அறிவார். அந்தத் தொடர்பில்தான் அவர் மாஸ்டரைச் சந்தித்து ஆசி பெற்றார்.


இரண்டாம் நாள் வெளியான செய்தி மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீத்தாரம் யெச்சூரிக்கான இரங்கல் கூட்டம் பற்றியது. மாஸ்டர் முன் வரிசையில் இருந்தார். அதில் வியப்பொன்றுமில்லை. மாஸ்டர் இடதுசாரிக் கருத்தியலுக்கு நெருக்கமானவர். நான் அவரை அறிந்ததும் அப்படித்தான்.

ஆண்டு: 1988. அப்போது நான் எர்ணாகுளத்தில் குடியிருந்த வீடு காரைக்காமுறிக் குறுக்குத் தெருவில் இருந்தது. தெரு என்று அதைச் சொல்வது ஓர் அடையாளத்தின் பொருட்டுதான். எதிரில் யாரும் வரவில்லையென்றால் ஒரு ஆட்டோ ரிக்‌ஷா போகமுடியும். அதே தெருவில்தான் சானு மாஸ்டரின் வீடும் இருந்தது. மாஸ்டர் அப்போதே ஓய்வு பெற்றுவிட்டார்.

அமெரிக்காவில் ஒரு முறை அதிபராக இருந்தவரை வாழ்நாள் முழுதும் அதிபர் என்றழைக்கும் சம்பிரதாயம் உண்டு. அதிபர் ஒபாமா, அதிபர் டிரம்ப்- இப்படி. மலையாளிகளுக்கும் இப்படியான சம்பிரதாயம் உண்டு. ஆனால் அவர்கள் மதிப்புடன் அழைப்பது அதிபர்களை அல்ல, ஆசிரியர்களை. ஆசிரியராகப் பணியாற்றிய ஒருவர் என்றென்றும் அவர்களுக்கு மாஸ்டர்தான். மாஸ்டர் என்று எழுதினாலும், மாஸ்டர், மாஷே,  மாஷர் என்று பலவாறாக உச்சரிப்பார்கள். பெண்பால் ஆசிரியர்களை டீச்சர் என்று விளிப்பார்கள். எழுதுவதும் உச்சரிப்பதும் டீச்சர் என்றுதான் இருக்கும்.

நான் காரைக்காமுறிக் குறுக்குத் தெருவிற்கு குடிபுகும்போது சானு மாஸ்டர் எர்ணாகுளம் எம்.எல்.ஏ-ஆகவும் இருந்தார். 1987இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டார். அதாவது, இடது பக்‌ஷ பின் துணையுடன் ஸ்வதந்திர ஸ்தானார்த்தியாக மல்சரித்தார். சட்டமன்ற உறுப்பினருமானார். அந்தத் தேர்தலில் அச்சுத மேனன், கௌரி அம்மா முதலான பொதுவுடமைக் கட்சித் தலைவர்களும், தோப்பில் பாசி, மலையாற்றூர் ராமகிருஷ்ணன் முதலான எழுத்தாளர்களும் மாஸ்டருக்காகப் பரப்புரை மேற்கொண்டனர். இலக்கிய ஆளுமைகள் அரசியல் அரங்கில் அறியப்பட்டவர்களாகவும் மதிப்பு மிக்கவர்களாகவும் விளங்கிய அதிசயத்தைப் பார்த்தேன். பாதிரிமார் சிலரும் கட்சி சார்பற்ற அறிவாளர் சிலரும் மாஸ்டருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர்.

அந்தத் தேர்தலில் எர்ணாகுளம் ஒய்.எம்.சி.ஏ, எல்லா வேட்பாளர்களையும் ஒரே அரங்கிற்கு அழைத்துப் பேச வைத்தது. அந்தக் கூட்டத்தை என்னால் மறக்க முடியாது.
ஏ.எல். ஜேக்கப் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர். எவெரெஸ்ட் சம்மணி, காங்கிரஸ் கட்சி டிக்கெட் மறுத்ததால் சுயேச்சையாகப் போட்டியிட்டார். இவர்கள்தான் மாஸ்டருக்குப் பிரதான எதிர்ப்பாளர்கள். வேறு சுயேச்சையரும் களத்தில் இருந்தார்கள். அன்று ஆறேழு பேர் பேசினார்கள். எல்லோரும் இவரை மாஸ்டர் என்று மதிப்புடன் விளித்தார்கள். ‘உங்களுக்கு அரசியல் சரிப்படாது’, ‘மார்க்சிஸ்ட் கட்சி உங்களைப் பயன்படுத்துகிறது’ என்கிற ரீதியில்தான் பலரும் பேசினார்கள். மாஸ்டர் எல்லோருக்கும் மிகுந்த கண்ணியத்துடன் பதிலளித்தார்.

எர்ணாகுளம் தொகுதியில் பொதுவாக காங்கிரஸ் வேட்பாளர்தான் வெற்றி பெறுவார். 1987க்கு முன்பும், அதற்குப் பின்பு  நாளது வரையிலும் அப்படித்தான் நடந்திருக்கிறது. 1987 மட்டும் விதிவிலக்காக அமைந்தது. அது மாஸ்டரால் நடந்தது.

ஆனபடியால், எல்லா மாஸ்டர்களும் எல்லா டீச்சர்களும் வெற்றி பெறுவார்கள் என்று சொல்வதற்கில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக எர்ணாகுளம், வடகரா, கண்ணூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் முறையே கே.ஜி. ஷைனி டீச்சர், கே.கே. ஷைலஜா டீச்சர், எம்.வி. பாலகிருஷ்ணன் மாஸ்டர் ஆகியோர். மூவராலும் வெற்றி பெற முடியவில்லை.

தேர்தல் முடிவுகள் எப்படியானாலும் மாஸ்டர்களின் மீதும் டீச்சர்களின் மீதும் மலையாளிகள் வைத்திருக்கும் மதிப்பு அபாரமானது. அது எழுத்தறித்தவனையும் எழுத்தையும் போற்றுகிற சமூகம். மாநிலத்தில் 94% மக்கள் கல்வி அறிவு பெற்றவர்கள் (தேசிய சராசரி-74%, தமிழகம்- 80%). சமூகத்தில் கல்வி பெறும் முக்கியத்துவத்தைப் பரக்கக் காணலாம். மாஸ்டர், டீச்சர் எனும் விளிகள் சுட்டுவதும் அதைத்தான்.

முன் குறிப்பிட்ட மூன்று  வேட்பாளர்களில் கே.கே. ஷைலஜா டீச்சரைப் பற்றித் தனியே பேச வேண்டும். தற்சமயம் கேரளச் சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கொறடாவாக இருக்கிறார். அவர் அறியப்படுவது அதனால் அல்ல. கொரோனா காலத்தில் அவர் சுகாதார அமைச்சராக இருந்தார். கொரானோவைத் திறம்படக் கையாண்டார். அதற்கு முன்பு, 2018ஆம் ஆண்டில், கேரளாவில் பரவிய நிப்பா வைரஸோடு பொருதி வென்ற அனுபவமும் அவருக்கு உண்டு. அந்த வெற்றிக் கதை, ‘வைரஸ்’ (2019) என்று திரைப்படமாகவும் வந்தது. அதில் அமைச்சர் கதாபாத்திரத்தின் பெயர் சி.கே. பிரமீளா டீச்சர். ரேவதி நடித்திருந்தார். படத்தில் எல்லோரும் அமைச்சரை டீச்சர் என்றுதான் அழைப்பார்கள். ஷைலஜா டீச்சரையும் எல்லோரும் அப்படித்தான் அழைப்பார்கள். அரசாங்கத்தின் அதிகாரபூர்வ பெயர்ப் பட்டியலும், வேட்பாளர் பட்டியலும் அவர் பெயர் டீச்சர் என்கிற பின்னொட்டோடுதான் விளங்கியது. 2020இல் ஐ.நா.வின் சிறப்பு அழைப்பாளராக அமெரிக்கா சென்றார். அவ்வமயம் கார்டியன், டைம்ஸ், பி.பி.சி முதலான அயல் ஊடகங்கள் சிறப்புக் கட்டுரைகள் வெளியிட்டன. அவையும் அவரை டீச்சர் என்றே குறித்தன. 



ஷைலஜா டீச்சர் கண்ணூர் மாவட்டத்தில் ஒரு சிறு நகரத்தின் உயர்நிலைப் பள்ளியொன்றில் 23 ஆண்டுகள் இயற்பியல் பயிற்றுவித்தார். பின் விருப்ப ஓய்வு பெற்று அரசியலில் இணைந்தார். அவர் ஆற்றிய பணி மாறியது. ஆனால் டீச்சர் எனும் விளி நிலைத்தது.


டீச்சரைப் போலவே பள்ளி ஆசிரியராக இருந்து அரசியலில் இணைந்த இன்னொரு ஆளுமை ஆந்திரப் பிரதேச ஆளுநராக இருந்த கே.சி. அபிரகாம் மாஸ்டர் (1899-1986). நான் கொச்சியில் பணியாற்றிய கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் எம்.பி. குரியன். மாஸ்டர் அவரது அம்மாவன் (மாமா). அபிரகாம் மாஸ்டர் 30 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக இருந்தவர். தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றவர். பிறகு காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இயங்கியவர். வயசாளிகளுக்கு இவரை நினைவிருக்கும். 1969இல் காங்கிரஸ் கட்சி, ஸ்தாபன காங்கிரஸ் (காமராசர், நிஜலிங்கப்பா, மெரார்ஜி தேசாய் அணி)- இந்திரா காங்கிரஸ் என்று பிளவுபட்டபோது, இவர் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு (CWC) உறுப்பினராக இருந்தார். செயற்குழுவில் 21 உறுப்பினர்கள். இரண்டு அணிகள் சார்பாகவும் பதின்மர் இருந்தனர். மாஸ்டர் 21ஆவது நபர். அவர் ஸ்தாபன காங்கிரசுக்கு ஆதரவானவர். எனினும் சமரசத்துக்கு முயன்றார். நடக்கவில்லை. ஓட்டெடுப்பு நடந்தது. தனது நிர்ணாயகரமான வாக்கை ஸ்தாபன காங்கிரசுக்கு அளித்தார். 11  வாக்குகளைப் பெற்ற ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள், 10 வாக்குகளைப் பெற்ற இந்திரா காந்தியைக் கட்சியிலிருந்து வெளியேற்றினர். ஆனால் அவருக்குக் கட்சி எம்.பி-களின் ஆதரவு இருந்தது.  குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு (சஞ்சீவ ரெட்டி) எதிராக இந்திரா காந்தி நிறுத்திய வி.வி.கிரி வெற்றி பெற்றார்.

இந்திராவுக்கு மக்கள் ஆதரவும் இருந்தது. அது 1971 தேர்தலில் வெளியானது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றினார். ஆனால் நெருக்கடி நிலைக்குப் பிறகு 1977இல் நடந்த தேர்தலில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஜனதா கட்சி வெற்றி பெற்றது. ஸ்தாபன காங்கிரஸ் ஜனதாவில் ஐக்கியமாகி இருந்தது. மெரார்ஜி தேசாய் பிரதமரானார். அபிரகாம் மாஸ்டர் ஸ்தாபன காங்கிரசிற்கு ஆதரவாக செயற்குழுவில் வாக்களித்ததை மெரார்ஜி நினைவு வைத்திருந்தார். அதற்குப் பரிசாக அபிரகாம் மாஸ்டரை அழைத்து ஆந்திராவின் ஆளுநராக்கினார். ஆனால் ஜனதா கட்சியின் ஆட்சி வெகு காலம் நீடிக்கவில்லை. கட்சி உடைந்தது. 1980இல் மீண்டும் தேர்தல் வந்தது. இந்த முறை இந்திரா வென்றார். ஜனதா கட்சியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அனைவரும் வெளியேறினர். ஒருவரை மட்டும் பதவியில் தொடருமாறு இந்திரா கேட்டுக்கொண்டார். அவர் அபிரகாம் மாஸ்டர். தனக்கு எதிராக வாக்களித்தவராக இருந்தாலும் அவர் மீது இந்திராவுக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. அப்படியான பண்பு நலன் அக்கால அரசியலரிடம் இருந்திருக்கிறது. மாஸ்டர் தனது முழுப் பதவிக் காலமும் (1978-83) ஆளுநராக நீடித்தார்.


மாஸ்டரை 1985இல் ஒரு முறை சந்தித்திருக்கிறேன். காலரில்லாத தொய்வான சட்டையும் நான்கு முழ வேட்டியும் அணிந்திருந்தார். மென்மையாகப் பேசினார். அவரைப் பற்றிய முன் கதைகளை உடன் பணியாற்றிய மூத்த ஊழியர்கள் வாயிலாக அறிந்திருந்தேன். இல்லையென்றால்  அவரது எளிமை என்னை ஏமாற்றியிருக்கும்.

அபிரகாம் மாஸ்டர் ஆளுநர். ஷைலஜா டீச்சர் அமைச்சர். சானு மாஸ்டர்  அறிவாளர். இன்னும் பல மாஸ்டர்கள் இருக்கிறார்கள். குஞ்ஞுண்ணி மாஸ்டர் பள்ளி ஆசிரியர். நாடு போற்றும் குழந்தைக் கவிஞருங்கூட. குஞ்ஞுண்ணி மாஸ்டர் என்றே பிள்ளைகளாலும் பெரியவர்களாலும் அழைக்கப்படுகிறார். கொச்சுண்ணி மாஸ்டர் கொச்சி நகரின் முதல் மேயர். கே.ராகவன் மாஸ்டர் ஐந்து முறை வயநாட்டின் எம்.எல்.ஏ-ஆக இருந்தவர். பழங்குடியினரின் குரலை ஒலித்தவர்.

இவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் பிரபலமானவர்கள். ஆனால் கேரளமெங்கும் வாழும் எண்ணற்ற மாஸ்டர்களும் டீச்சர்களும் அவர்தம் ஆசிரியப் பணிக்காக மட்டுமே மதிக்கப்படுபவர்கள். முழுநேர ஆசிரியர்கள் மட்டுமல்ல, பகுதி நேரம், அதுவும் கல்வி வளாகங்களுக்கு வெளியே பயிற்றுவித்தோருக்கும் இந்த மதிப்பு மிக்க மாஸ்டர் விளி சாற்றப்படுவதுண்டு.

அவர்களில் ஒருவர்தான் செல்லப்பன் சேட்டன். நான் வேலை பார்த்த் கட்டுமானப் பணித்தலத்தில் கணக்காளர். இளம் வயதிலேயே மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அட்டை பெற்றவர். அவரது பகுதியின் கமிட்டிச் செயலர். அவரை விட வயதில் இளையவர்கள் அவரை சேட்டன் என்றழைப்பார்கள். மூத்தவர்கள் பெயர் சொல்லி அழைப்பார்கள். கட்சியில் அணுக்கமானவர்கள் சகா (தோழர்) என்றழைப்பார்கள். பணித்தலத்தில் இரண்டு பேர் மட்டும் அவரை மாஸ்டர் என்று அழைத்தார்கள். இருவரும் இளைஞர்கள். ஒருவர் தச்சர். மற்றவர் பிளம்பர். இருவரும் அவர் வாழ்ந்த பகுதியில் வசிப்பவர்கள். மார்க்சிஸ்ட் கட்சி அனுதாபிகள். ஞாயிறு தோறும் கட்சி அலுவலகத்தில் செல்லப்பன் சேட்டன் கொள்கை வகுப்புகள் எடுப்பார். இந்த இளைஞர்கள் அந்த வகுப்புகளுக்குப் போவார்கள். அதனால் இவர் அவர்களுக்கு மாஸ்டர் ஆயினார்.

ஒரு குடும்பத்தில் கணவனோ மனைவியோ அல்லது இருவருமே ஆசிரியராக இருப்பார்கள். ‘மின்னா மினுங்கிண்ட நுரங்கு வெட்டம்’ (1987) (மின்மினியின் கணநேர ஒளி) என்ற படத்தில்  நெடுமுடி வேணுவும் சாரதாவும் இணையர்கள், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள். ஒருவரை ஒருவர் மாஸ்டர் என்றும் டீச்சர் என்றும் அழைத்துக்கொள்வார்கள். ஊரும் உலகும் அப்படித்தானே அழைக்கிறது?


தங்கள் மாஸ்டர்களையும் டீச்சர்களையும் மலையாளிகள் போற்றும் விதம் சொல்லவும் பெரிதே! இந்தப் பின்னணியில் சுரேஷ் கோபி சானு மாஸ்டருக்கு ஓணக் கோடி வழங்கியதைப் புரிந்துகொள்ளலாம். சுரேஷ் கோபியின் விஜயத்திற்கு, சானு மாஸ்டர் வயது முதிர்ந்தவர், அறியப்படும் அறிவாளர் என்பதைவிட அவர் மாஸ்டர் என்பதுதான் காரணமாக இருக்க வேண்டும். அப்படியான ஒருவரை ஓணத்தன்று சந்தித்து ஆசி பெறுவதன் வாயிலாகத் தனது அடக்கம் மக்களால் அறியப்படும் என்றும், அதன் வழி அரசியல் ஆதாயம் பெறலாமென்றும் சுரேஷ் கோபி கணக்கிட்டிருக்கலாம். அந்தக் கணக்கிற்கு அவர் எதிர் நோக்கிய விடை கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். ஆனால் மலையாளிகள் மாஸ்டர்களின் மீதும் டீச்சர்களின் மீதும் வைத்திருக்கும் மதிப்பு ஈடு இணையற்றது.

அனுபவங்கள் தொடரும்…

Mu.Ramanathan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button