கோவைத் தமிழ்
கோவை, சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. பாடல்கள் சங்கிலித் தொடர் போல ஒன்றன் பின் ஒன்றாய் கோக்கப்பட்டதால் அது கோவை எனப்பட்டது. இந்தக் கட்டுரை அந்தக் கோவையைப் பற்றியதன்று. ஆகவே அவசரப்பட்டு யாரும் விலக வேண்டாம். கோவை நகரம் தமிழுக்கு வழங்கிய கொடை மாணப் பெரிது. இந்தக் கட்டுரை அதைப் பற்றியதுமன்று. ஆகவே மற்ற ஊர்க்காரர்களும் விலக வேண்டாம். ஒரு காலத்தில் சில நல்லிதயங்கள் வாயிலாக கோவை எனக்குத் தமிழை சாலப் பரிந்து ஊட்டியது. அவர்களுள் இரண்டு ஆளுமைகளைப் பற்றியது இந்தக் கட்டுரை. அவர்தம் நினைவுகள் மேலெழும்ப ஒரு திருமணம் காரணமாயிற்று.
திருமணம் கடந்த மாதம் கோவையில் நடந்தது. மணமக்களின் தந்தையர் இருவரும் வகுப்புத் தோழர்கள். மணமகனின் தந்தை ரவி. மணமகளின் தந்தை கவிஞர் ஆறுமுகம். இருவரும் கல்லூரியில் எனக்கு ஒரு வருடம் மூத்தவர்கள். நாங்கள் மூவரும் கோவை தொழில்நுட்பக் கல்லூரி (CIT) மாணவர்கள். உ.வே.சா.வின் மொழியில் ஒரு சாலை மாணாக்கர்கள். இதற்கு ஈடாக இந்நாளில் college mates, alumni முதலான நற்றமிழ்ச் சொற்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன.
திருமணத்திற்கு என்னை அழைத்தவர் ரவி. கல்லூரிக் காலத்தில் கவிஞர் ஆறுமுகம் எனக்கு அணுக்கமானவராக இருந்தார். ஆனால் அவர் என்னை அழைக்கவில்லை. அவரால் அழைக்க முடியாது. புற்றுநோய் இரக்கமில்லாதது. ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை’ என்பதை மெய்ப்பிக்க அந்த நோய் ஒரு நெடும் பட்டியலை உருவாக்கி வருகிறது; ஒரு மாமாங்கம் முன்பே கவிஞர் ஆறுமுகத்தை அந்தப் பட்டியலில் சேர்த்துவிட்டது.
நாங்கள் படித்த காலத்தில் தமிழகத்தில் எட்டு பொறியியற் கல்லூரிகள்தாம் இருந்தன. அவற்றுக்குள் இரண்டு ஒற்றுமைகள் இருந்தன. ஒன்று, அவை பொறியியலைப் பயிற்றுவித்தன. இரண்டு, எல்லாக் கல்லூரிகளிலும் முதலாண்டு மாணவர்களை மூத்தவர்கள் பகடி வதை (ragging) மூலமாக வரவேற்றார்கள். இந்தச் சடங்கு ஒரு மாத காலம் நீடிக்கும். முன்னம் முதலாமாண்டு மாணவனின் பேர் கேட்பார்கள்; பின்னம் அவன் ஊர் கேட்பார்கள். உடன் அந்த ஊரைச் சார்ந்த மூத்தோருக்கு விவரம் தெரிய வரும். அவர்கள் தத்தமது ஊர்க்கார இளவலைக் கண்டுகொள்வார்கள். இவ்வண்ணமே விளையாட்டுகளில் ஆர்வமுள்ள புதியவர்களைத் தொடர்புடைய மூத்தவர்கள் அறிந்துகொள்வார்கள், பின் களத்தில் இறக்குவார்கள். இந்த வரிசையில் இயலும் இசையும் இருந்தன. நான் தமிழார்வலன் என்பது கண்டறியப்பட்டு, அது கவிஞர் ஆறுமுகத்திற்கு அறிவிக்கப்பட்டது. அவர் என்னைத் தேடி வந்தார். சம்பிரதாய உருட்டல்களுக்குப் பிறகு எனது தமிழைச் சோதிக்க விரும்பினார். அது புதுக்கவிதை வளர்ந்து வந்த காலம். என்றாலும் மரபுக் கவிதையின் ஆட்சி முற்றிலுமாகக் கலைக்கப்படவில்லை. கவிஞர் எனக்கு ஓர் ஈற்றடி வழங்கி வெண்பா எழுதச் சொன்னார். அந்த அடி: ‘புகழவோ புத்தூர் பொலிவு’. எனது பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்தார்கள். ஆதலால் புத்தூரின் பொலிவைப் புகழுமாறு பணித்தார் கவிஞர். அடுத்த நாள் முழுவதும் இயற்சீர், வெண்சீர் வெண்டளைகளோடு துவந்த யுத்தம் நடத்தினேன். வில்லிபுத்தூரார், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூன்று புலவர்களின் பெருமையை மூன்றடிகளில் பேசி, விதிக்கப்பட்ட ஈற்றடியில் முடித்தேன். கவிஞர் பாவைப் பரிசோதித்து தளை தட்டவில்லை என்று சான்றளித்தார். வாட்சப் இல்லாத காலத்தில் வாய்மொழியாகவே அந்தச் செய்தி பகிரப்பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்பா பின்னெப்போதோ கை நழுவிப் போயிற்று. தமிழன்னையின் மீதுள்ள மட்டற்ற அன்பினால் நான் அதை மீட்டுருவாக்க யாதொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
அப்போது CIT தமிழ் மன்றச் செயலராக இருந்தவர் மைக்கேல் அந்தோணி. நிறைவாண்டு மாணவர்கள்தான் செயலர்களாக இருப்பார்கள். ஆறுமுகத்தின் சான்றறிக்கை அவரை எட்டியது. முதலாம் ஆண்டிலேயே (1976) அவர் என் கைப்பிடித்து அனைத்துக் கல்லூரிப் பேச்சுப் போட்டிகளுக்கும் கவியரங்கங்களுக்கும் ஆற்றுப்படுத்தினார். தொடர்ந்து கல்லூரியின் சார்பாக பல அனைத்துக் கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொள்ள வாய்த்தது. அப்படித்தான், ‘விஜயா பதிப்பகம்’ நடத்திய மாணவர் கவியரங்கில் கலந்துகொண்டேன். ஒரு மாலை நேரம். மரக்கடை நிறுத்தத்திற்கு அருகில் உள்ள சே.ப.நரசிம்மலு நாயுடு பள்ளியின் வகுப்பறையொன்றில் போட்டி நடந்தது. போட்டியாளர்களும் அமைப்பாளர்களும் சில ஆர்வலர்களும் குழுமியிருந்தனர். அந்தக் கவியரங்கத்தை இரண்டு காரணங்களால் மறக்க முடியாது. முதலாவது, அந்தப் போட்டியை நடத்திய, ‘விஜயா பதிப்பக’ உரிமையாளர், வேலாயுத அண்ணன் போட்டியாளர்களின் கவிதைப் பிரதிகளை கல்லூரி நிர்வாகங்களின் வழியாக முன்னதாகவே வாங்கிக்கொண்டார். அவரும் நடுவர்களும் போட்டிக்கு முன்பாகவே கவிதைகளைப் படித்திருந்தனர். சில கவிதைக் கணங்களை மாணவர்கள் தங்கள் வாசிப்பில் தவறவிட்டாலும் நடுவர்கள் தவறவிடலாகாது என்பதற்காக அவர் இதைச் செய்திருக்கலாம். இரண்டாவது, இன்னும் முக்கியமானது. நிகழ்வின் இறுதியில் நடுவர்கள் போட்டி முடிவுகளை அறிவித்தார்கள். ஆனால் பரிசுகள் வழங்கப்படவில்லை. எனக்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டது. நாங்கள் கடைசிப் பேருந்தைப் பிடித்துக் கல்லூரிக்குத் திரும்பினோம்.
ஒரு வாரம் கழித்து கல்லூரிக்கு ஒரு பொதி வந்தது. அதில், கல்லூரி முதல்வருக்கு வேலாயுத அண்ணன் எழுதிய நன்றிக் கடிதம், பரிசு பெற்ற கவிதையைக் குறித்த நடுவர்களின் கருத்துரை, சான்றிதழ், ஏழெட்டுப் புத்தகங்கள்-இத்தனையும் இருந்தன. இந்தப் பொதி அலுவலகக் கண்காணிப்பாளராக இருந்த சாமிநாதன் சாரிடம் வந்து சேர்ந்தது. அவர் வியந்து போனார். மாணவர்கள் போட்டிகளுக்குப் போவதும் பரிசு பெறுவதும் அவ்வப்போது நடப்பதுதான். ஆனால் இப்படி ஒரு பின்னூட்டமும் பரிசுப் பொதியும் புதிது. அப்போது தமிழ் மன்ற ஆசிரியப் பொறுப்பாளராக இருந்தவர் மானுடவியற்றுறைப் பேராசிரியர் ப. ஆறுமுகம் சார். அவரிடம் காட்டியிருக்கிறார். அவருக்கும் வியப்பு. இருவரும் குருசாமி சாரிடம் கொண்டு போனார்கள். குருசாமி சார் பின்னாளில் முதல்வரானார். அப்போது நிர்வாகப் பேராசிரியப் பொறுப்பாளராக (Professor In-charge of Administration) இருந்தார். அவர் நடுவர்கள் கருத்துரை, சான்றிதழ் இரண்டையும் அறிவிப்புப் பலகையில் போடச் செய்தார். புத்தகங்களை அவரே கைப்பட என்னிடம் வழங்கினார். மு.மேத்தாவின், ‘ஊர்வலம்’, சக்திக்கனலின், ‘கனகாம்பரங்களும் டிசம்பர் பூக்களும்’, அப்துல் ரகுமானின், ‘நேயர் விருப்பம்’ முதலான கவிதைத் தொகுதிகள் அந்தப் பொதியில் இருந்தன. அதற்கு முன்பும் பின்பும் அத்தனை புத்தகங்களை ஒருசேரப் பரிசாகப் பெற்றேனில்லை. இரண்டாண்டுகளுக்குப் பிறகு கல்லுரியில் இருந்து விடைபெறும்போது அந்தப் புத்தகங்களும் வழித்துணையாக வந்தன.
படிப்பை முடித்து பணிக்குப் போன பிற்பாடு வேலாயுத அண்ணனோடு எந்தத் தொடர்பும் இல்லாதிருந்தது. ஆனால் அவரைக் குறித்த செய்திகளை ஆர்வமாகக் கவனித்து வந்தேன். சமீபத்தில் ஒரு பொதுவான நண்பர் என்னை அண்ணனோடு தொலைபேசி வாயிலாக இணைத்து வைத்தார். அண்ணன் எனது பத்தி எழுத்துகளைத் தொடர்ந்து வாசிப்பதாகச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த உரையாடல் நடந்து ஒரு வாரமிருக்கும். அண்ணன் என்னை அழைத்தார். எனது இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பான, ‘ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’ (காலச்சுவடு, 2024) நூலைக் குறித்துப் பேசினார். குரலில் உற்சாகம் ததும்பியது. அவருடைய எண்ணங்கள் வெளிப்பட்ட வேகத்திற்கு அவரது பேச்சால் ஈடு கொடுக்க முடியவில்லை. ஆதலால் வார்த்தைகள் ஒன்றின் மீது ஒன்றேறி என் அலைபேசியை வந்தடைந்தன. அண்ணன் நூலில் உள்ள கட்டுரைகளில் தமக்குப் பிடித்தமானவற்றை எடுத்துச் சொல்லி பாராட்டினார். ஏ.கே.செட்டியாரைப் பற்றிய கட்டுரை அவரை மிகவும் கவர்ந்துவிட்டது. நான் விக்கித்துப் போயிருந்தேன்.
அடுத்த சில நாட்களில் நான் அண்ணனை அழைத்தேன். மேற்குறிப்பிட்ட திருமணத்திற்குக் கோவை வருகிறேன் என்றேன். அப்போது அவர் சொன்னார்: ‘தமிழின் தலை சிறந்த ஆளுமைகளை, ‘விஜயா பதிப்பகம்’ தனது யூடியுப் அலைவரிசை வாயிலாக நினைவு கூர்ந்து வருகிறது. நவம்பர் 4, ஏ.கே.செட்டியாரின் பிறந்த நாள். நீங்கள் கோவை வரும்போது, எங்கள் கடைக்கு வாருங்கள். அவரைக் குறித்துப் பேசுங்கள். நாங்கள் பதிவு செய்துகொள்கிறோம். நவம்பர் 4ஆம் நாள் வலையேற்றிக்கொள்கிறோம்’.
நான் வாய்ப்புக்கு நன்றி சொன்னேன். அந்த உரை அவ்விதமே பதிவாகியது, வலையேறியது. இப்போது அந்தக் காணொலி பரவலாக பார்க்கப்பட்டும் வருகிறது (https://youtu.be/cYDC0t17eIc?si=g1XWo93lrz27jmAP).
மணிக்கூண்டுக்கு அருகே ராஜ வீதியில் இருக்கும் விஜயா பதிப்பகம் கோவை வாசகர்களுக்கு தாய் மடி மாதிரி. அந்நாளிலேயே CIT தமிழ் மன்றத்தில் விருந்தினருக்கு மலர் மாலைகளோ பொன்னாடைகளோ அணிவிப்பதில்லை. புத்தகங்களைத்தான் அன்பளிப்பாக வழங்குவோம். அனைத்து வகுப்பு, அனைத்துக் கல்லுரிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் அப்படியே. இந்தப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிற வேலையில் கவிஞர் ஆறுமுகம் என்னை மட்டும் சேர்த்துக்கொள்வார். நிகழ்ச்சிக்கு சில நாட்கள் முன்னதாகவே பரிசுப் புத்தகங்களை வாங்கி வந்துவிடுவோம். இதில் ஒரு சின்ன சதித் திட்டம் இருந்தது. இடைப்பட்ட காலத்தில் பக்கங்களைக் கசக்காமல் புத்தகங்களைப் படிக்கலாம்.
அந்நாளில் CITயிலிருந்து டவுன் ஹாலுக்கு (இப்போது மாநகராட்சியின் அவைக்கூடம்) பேருந்துக் கட்டணம் 40 காசுகள். புத்தகங்களின் விலையும் குறைவாகத்தான் இருக்கும். பாதல் சர்க்கார் எழுதிய புகழ் பெற்ற வங்க நாடகமான, ‘பிறகொரு இந்திரஜித்’ (அன்னம், 1979) நூலின் விலை ஐந்து ரூபாய். ஆனால் புத்தகங்களை வாங்கிப் படிக்கிற வசதி அன்று பெரும்பாலான மாணவர்கட்கு இருந்ததில்லை.
எம் கல்லூரி நாட்களில் விஜயா பதிப்பகத்தின் விற்பனையகம் ஒரு தளம் மட்டுமே இருந்ததாக நினைவு. இப்போது இரண்டு தளங்கள். புத்தகங்கள் பதிப்பக வாரியாக, நூலாசிரியர் வாரியாக சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மூன்றாவது தளத்தில் கூட்ட அரங்கு. தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், நூலகர்களின் படங்கள் அரங்கை அணி செய்கின்றன.
இப்போது புத்தகக் காட்சிகள் மாவட்டந்தோறும் நடக்கின்றன. பபாசி இருக்கிறது. அரசு உதவுகிறது. இவை எதுவுமில்லாத 1979இல் அண்ணன் தனியாளாக புத்தகக் காட்சி நடத்தினார். அதற்கு, ‘வாசகர் திருவிழா’ என்று பெயர் வைத்தார். டவுன் ஹாலில்தான் புத்தகக் காட்சி நடந்தது. தமிழகத்திலேயே அப்படியான புத்தகக் காட்சி அதுதான் முதலாவதாக இருந்திருக்கக்கூடும். அந்த ஆண்டு சுஜாதா, பாலகுமாரன், ஜெயந்தன் முதலான எழுத்தாளர்களை வாசகர் திருவிழாவுக்கு அழைத்திருந்தார்.
அடுத்த சில மாதங்களில் டவுன் ஹாலில் சுஜாதாவின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா ஒன்றையும் அண்ணன் நடத்தினார். ’கடவுள் வந்திருந்தார்’, ’கரையெல்லாம் செண்பகப்பூ’, ’ஜன்னல் மலர்(?)’ ஆகிய நூல்களைக் குறித்து முறையே கவிஞர்கள் புவியரசு, மு.மேத்தா, சக்திக்கனல் ஆகியோர் பேசினார்கள். வேளாண் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் இல.செ.கந்தசாமி தலைமை தாங்கினார்.
வேலாயுத அண்ணனின் கதை தனித்துவமானது. 1955இல் தனது 14ஆவது வயதில் எடுபிடி வேலை செய்யும் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் துணிக் கடையில், மளிகைக் கடையில் வேலை பார்த்தார். பிறகு தானே ஒரு பல்பொருள் அங்காடி தொடங்கினார். அதை வளர்த்தெடுத்திருந்தால் இன்று அது நவீன மோஸ்தர் மால் ஒன்றாக வளர்ந்திருக்கும். இயல்பிலேயே வாசகராக இருந்த அவரின் தேட்டம் புத்தகங்களின் மீதுதான் இருந்தது. ஆகவே அந்த அங்காடி மெல்ல புத்தகக் கடையாக மாறியது.
அவரது மூத்த மகன் டாக்டர் அரவிந்தன். நா.பார்த்தசாரதியின், ‘குறிஞ்சி மலர்’ நாயகனின் பெயரது. மகளுக்கும், பிற்பாடு தனது புத்தகக் கடைக்கும் அவர் தேர்ந்த பெயர் விஜயா. அது நா.பா.வின், ‘பொன் விலங்கு’ நாயகியின் பெயர். மூன்றாவது மகன் சிதம்பரம். அது அவர் மாமனாரின் பெயர். சிதம்பரம் இப்போது அப்பாவுக்குத் துணையாக பதிப்பகத்தையும் புத்தகக் கடையையும் பார்த்துக்கொள்கிறார்.
வேலாயுத அண்ணன் எழுத்தாளர்களை எந்நாளும் கொண்டாடி வந்திருக்கிறார். கண்ணதாசன், நா.பா, தி.க.சி, வல்லிக்கண்ணன், கோமல், சுந்தர ராமசாமி போன்ற முந்தைய தலைமுறைப் படைப்பாளிகள் தொடங்கி, எல்லா நவீனப் படைப்பாளிகளையும் அழைத்து விழா எடுத்திருக்கிறார். 1984இல் கி.ராஜநாராயணனுக்கு மணி விழா எடுத்தார். 2020 முதல், ‘விஜயா வாசகர் வட்டம்’ சார்பில், ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு, ‘கி.ரா. விருது’ வழங்கி வருகிறார். பரிசுத் தொகை ரூ.5 இலட்சம். தமிழகத்தில் இப்போது வழங்கப்படும் இலக்கியப் பரிசில்களில் அதிகபட்ச பரிசுத் தொகை இதுவாகவே இருக்கக்கூடும். இவ்வாண்டு விருது பெற்றவர் நாஞ்சில் நாடன். முந்தைய ஆண்டுகளில் விருது பெற்றோர் கண்மணி குணசேகரன், கோணங்கி, அ.முத்துலிங்கம், எஸ்.வி.ராஜதுரை ஆகியோர்.
ஏ.கே.செட்டியாரைக் குறித்த உரை பதிவு செய்யப்பட்டதும் வேலாயுத அண்ணனின் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ‘உங்களைப் பற்றி ஓர் அறிமுகம் வேண்டுமே’ என்று கேட்டார். அவரது மேசையில் எனது புத்தகமொன்று இருந்தது. அதிலுள்ள நூலாசிரியர் குறிப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாமே என்றேன். உடன் அண்ணன் அந்தக் குறிப்பை வாசித்தார். ‘நீங்கள் CIT மாணவர் என்பது இதில் இல்லையே’ என்றார். எனக்குச் சுருக்கென்றது. தொடர்ந்து, அவரே, ‘பரவாயில்லை, நான் சேர்த்துக்கொள்கிறேன்’ என்றார். மேற்படிக் காணொலியின் அறிமுகக் குறிப்பில் அதைச் சேர்த்துமிருக்கிறார்.
அண்ணன் CITயைப் பற்றிக் குறிப்பட்டது நியாயமானது. ஏனெனில், CIT பொறியியலை மட்டுமல்ல, எம்மில் பலருக்குத் தமிழையும் பயிற்றுவித்தது. விடுதி வாசிப்பறையில் ஜனரஞ்சக இதழ்கள் மட்டுமல்ல, கணையாழி, தீபம், கண்ணதாசன் போன்ற இலக்கிய இதழ்களும் வரும்.
1979இல் தமிழ் மன்றம் ஓர் ஆண்டு மலரை வெளியிட்டது. ஆசிரியர் குழு சார்பாக கவிஞர் ஆறுமுகம் மலரின் முகப்புரையில் இப்படி எழுதியிருந்தார்:
‘மாணவர்களை ஆயிரம் இரண்டாயிரம் சம்பாதிக்கிற பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், வக்கீல்களாகவும், குமாஸ்தாக்களாகவும் மட்டுமே சந்திக்க ஆசைப்படுகின்ற இந்தச் சமுதாய அமைப்பில் மாணவர்களால் சரியாக சிந்திக்க முடிவதில்லை என்கிற கருத்தை சாகடிப்பதற்காக- எம்மால் முடிந்த அளவு- இங்கே குடங்குடமாகத் தமிழ் அள்ளி வீசப்பட்டிருக்கிறது.’
இந்த மலரை வெளியிட்டவர் ஐ.ரவி ஆறுமுகம் IPS. அப்போது தமிழ்நாடு சிறப்புக் காவற்படை, கோவைப் பிரிவின் தளவாயாக இருந்தார். பின்னாளில் காவல்துறை கூடுதல் இயக்குநர் (ADGP) ஆனார். அவரும் பொறியாளர். கோவை அரசுத் தொழில்நுட்பக் கல்லூரி (GCT) மாணவர். அவர் விழாவில் மேற்குறிப்பிட்ட பத்தியை வாசித்தார். பிறகு சொன்னார்: ‘இந்த மலரில் குடங் குடமாகத் தமிழ் அள்ளி வீசப்பட்டிருக்கிறதென்றால், இந்தக் கல்லூரியிலும் இந்த நகரிலும் தமிழ் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றுதானே பொருள்? அப்போதுதானே உங்களால் குடங் குடமாக முகர முடியும்?’
உண்மைதான். CITயிலும் கோவையிலும் தமிழ் ஆறாகத்தான் ஓடியது. அதைக் குடங்களில் முகர்ந்து எனக்கு அளித்தவர்களில் கவிஞர் ஆறுமுகமும் வேலாயுத அண்ணனும் முக்கியமானவர்கள்.
“என் ஆத்ம யாழின் நரம்புகள்/ பிறரை மகிழ்விப்பதற்காகவே மீட்டப்படட்டும்” என்பது கவிஞர் ஆறுமுகம் எழுதிய கவிதை. அவர் அன்பாலும் நட்பாலும் மீட்டிய இசையால் தன் மறைவிற்குப் பிறகும் எம்மை மகிழ்விக்கிறார்.
“நூலாயுதம் ஏந்தி வேலாயுதம் வந்து/ நுட்பங்கள் தெளிய வைத்தார்” என்பது அண்ணன் வேலாயுதத்தைக் குறித்து குழந்தைக் கவிஞர் செல்லகணபதி எழுதிய கவிதை. பள்ளிக் கல்வியை முடிக்காத வேலாயுத அண்ணன், வாழ்நாள் முழுதும் கற்கும் வாசகராகவும், வாசகரையும் எழுத்தாளரையும் போற்றிப் பாராட்டும் பதிப்பாளராகவும் வணிகராகவும் உயர்ந்து நிற்கிறார்.
அனுபவம் தொடரும்…
திரு. மு. இராமநாதன் அவர்களின் எழுத்து நடை பூந்தென்றலைப்போன்று இதம்.
எங்கள் கவிஞர் ஆறுமுகம் (நண்பரும், சமகாலத்தில் CIT ல் படித்த வரும்) பற்றிய செய்திகள் நல்ல நினைவலைகளைக் தோற்றுவித்தன.
திரு. வேலாயுதம் அவர்களின் தமிழின் பால் உள்ள பற்றும் அவர்தம் சேவைகளும் நன்றி மற்றும் பாராட்டுதலுக்குறியவை. நன்றி இராமநாதன்.