காலை ஆறு மணிக்கெல்லாம் சாமிக்கண்ணு நுழைவு வாயிலில் நின்றிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி ஆவணங்களை காட்டி விட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் நுழைந்து வேரூன்றிய பெரிய ஆலமரத்தின் அடியில் சாய்ந்து அமர்ந்தார். ஆலமரத்திலிருந்த கூகை அலறியது,சாமிக்கண்ணின் மனவோட்டத்தில் தன் மகளின் நினைவு ஆக்கிரமித்தது. கண்களை மூடினார்.
சாமிக்கண்ணு மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பள்ளப்பட்டி எனும் கிராமத்தைச் சார்ந்தவர். ஐம்பது வயதான அவருக்கு ஒரே மகள் மலர்கொடி பத்தாம் வகுப்பு படிக்கிறாள். மலரின் அம்மா சிறு வயதிலேயே விபத்தில் இறந்து போனதால் சாமிக்கண்ணு மலரின் ஆசைகளைப் பூர்த்தி செய்ய உடனே முயல்வார். சாமிக்கண்ணு மேலூரில் செருப்பு தைக்கும் தொழிலாளி. காலையில் பழையதை சாப்பிட்டுச் சென்றால் இரவு எட்டு மணிக்கு வீடு திரும்புவார்.
ஒரு நாள் மலரின் தோழியான இந்துமதிக்கு அவளின் அப்பா ஜால்ரா கொலுசு வாங்கித்தர, அதைப்போட்டு மலரிடம் நடந்து நடந்து காட்டி பெருமிதம் அடைந்தாள். அதைப் பார்த்த மலர் தானும் கொலுசு போட்டு இந்துமதி முன்பு தம்பட்டம் அடிக்க எண்ணி, சாமிக்கண்ணிடம், அப்பா.. அப்பா.. எனக்கு கொலுசு வேணும் என்றாள்.
என்ன சாமி! திடீர்னு கொலுசு மேல ஆச என்றார் சாமிக்கண்ணு.
வேணும் பா!
என் காலு அளவ நூலால அளந்தேன்.. இந்தா என வெள்ளை நிற நூலை காட்டி அவர் கையில் திணித்தாள்.
மேற்கொண்டு சாமிக்கண்ணைப் பேசவிடாமல், நீ பட்ட புல்லு கணக்கா வாங்கிட்டு வராதப்பா. நல்லா ஜால்ரா கொலுசா மொத்தமா வாங்கிட்டு வா! – என்று ஆணையிடும் தொனியில் சொல்லிவிட்டு, படியில் அரிசியை அளந்து முறத்தில் கொட்டி புடைக்க ஆயத்தமானாள்.
மகளின் செல்ல அதட்டலை சிரித்துக் கொண்டே ரசிக்கும் பொழுது, ஐயா! ஐயா! என்று யாரோ உலுக்க, அதிர்ச்சியாகி கண் திறந்தார். தூய்மை பணியாளர் பெண்மணி, அய்யா கூட்டணும், எல்லா ரூமும் தொறந்துட்டாங்க. உள்ள போய் உட்காருங்க ஐயா என்றார். மூட்டு வலியைப் பொறுத்துக் கொண்டு மரத்தை பிடித்துக் கொண்டு எழுந்து மஞ்சள் துணிப்பை எடுத்துக்கொண்டு, துண்டை உதறி நடந்தார். அவர் முகம் மிகவும் இறுகிப் போயிருந்தது.
வழக்கறிஞர் விருமாண்டி அலுவலக அறையை நோக்கி சாமிக்கண்ணு நடந்து சென்றார்.
அவசர அவசரமாக வழக்கறிஞர்கள் கடிகாரத்தை பார்த்துக்கொண்டே வேகமாக நடப்பதும், சட்டக் கல்லூரி மாணவர்கள், பயிற்சி மாணவர்கள், இளநிலை வழக்கறிஞர்கள் போவதும் வருவதுமாக ஏதேதோ வழக்குகளை பேசிக்கொண்டே செல்வதுமாக மதுரை நீதிமன்றம் சற்றே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
சாமிக்கண்ணு விருமாண்டி அறையை அடைந்தார். விருமாண்டியின் இளநிலை வழக்கறிஞரான புவி, அய்யா! பெஞ்சுல உட்காருங்க. சார் இப்போ வந்துருவார் என வெளியே போடப்பட்ட நீண்ட பெஞ்சைக் காட்டினான் .
சாமிக்கண்ணு வராண்டாவில் உட்கார்ந்தார், பல்வேறு வகை மாந்தர்கள் வழக்கறிஞர்கள் நடப்பதும் போவதுமாக இருந்தார்கள். சாமிக்கண்ணு சுவற்றையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். சுவர் மறைந்து மலர் முகம் தெரிந்தது.
மலர் ஆசையாக கேட்ட கொலுசை வாங்கித் தரவேண்டி அவள் கொடுத்த அளவு நூலை சட்டை பாக்கெட்டில் வைத்து நடந்தார். அன்றைய நாள் சாதி தலைவர் ஒருவரின் பிறந்தநாள் என்பதால் இளைஞர்கள் நடுத்தர வயது உள்ளவர்கள் மது அருந்திவிட்டு பஸ்சை மறிப்பதும், ஆட்டோவை மறித்து கும்பலாக ஏறி குலுக்குவதுமாக களியாட்டம் புரிந்தனர்.
சாமிக்கண்ணு பயந்து கொண்டு செருப்பு ஒட்டும் சொலுசன், ஊசி, அளவு கட்டை எடுத்து வைத்து உட்கார்ந்தார். அப்போது வெயில் காலம் என்பதால் சாமிக்கண்ணு செருப்புத் தைக்க பெரும் சிரமப்பட்டார்.
எதிர்பார்த்த அளவு அன்றைய நாள் வேலை வராததால் சொற்ப பணமே கிடைத்தது.
ஒரு நாள் முழுக்க செருப்பு தைப்பது, சொலுசன் போட்டு ஒட்டுவது என வேலை செய்தாலும் 200 ரூபாய்தான் கிடைக்கும். அன்று அதுவும் இல்லாததால் வாட்டமான முகத்தோடு வீடு திரும்பினார்.
அப்பாவை பார்த்ததும் ஆர்வத்தோடு ஓடி கையைப் பிடித்துக் கொண்ட மலர்கொடி மிகுந்த எதிர்பார்ப்போடு சாமிக்கண்ணின் கண்களைப் பார்த்தாள். அவர் தலையை குனிந்து கொண்டார். அவர் கொலுசு வாங்கி வரவில்லை என்பதைப் புரிந்து கொண்டு கோபத்தோடு திண்ணையில் அமர்ந்தாள்.
சாமிக்கண்ணு அவளை ஏறிட்டு, ஏஞ்….சாமி மூஞ்சிய தூக்கிவெச்சிட்டு இருக்க? கடையில கேட்டேன் சாமி. ஆயிரம் கணக்குல சொல்றாங்க வெள்ளி கொலுசு. அடுத்த மாசம் வரைக்கும் பொறுத்துக்க. சிறுகச் சிறுக சேர்த்து அப்பா நல்ல பெரிய கொலுசா வாங்கித்தரேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஜல்.. ஜல் என்ற சத்தத்தோடு இந்து வந்தாள்.
ஏ…புள்ள மலரு வெளிக்கு போணும் வரியா?
வேண்டுமென்றே காலை இருதரம் ஆட்டி பௌசி காட்டினாள்.
சாமிக்கண்ணை முறைத்துக் கொண்டே மலர், தோ.. வரேன் டி என்று வாசலை நோக்கி நடந்தாள்.
வெகுநேரமாக இருவரும் வீடு வராததால், இந்துவின் அப்பா நசையன் சாமிக்கண்ணிடம், என்னடா புள்ள வந்துச்சா? என்றார்.
இல்லையேண்ணே!
சரி வா! ஒரு எட்டு பார்த்துட்டு வருவோம். சாமிக்கண்ணு அரதப் பழசான செருப்பில் கால் நுழைத்து கொண்டு சட்டை அணிந்தார்.
புவி, சாமிக்கண்ணிடம் ஐயா சார் வந்துட்டாரு உள்ள வாங்க என்றார். விருமாண்டி, சாமிக்கண்ணை ஏறிட்டு ஐயா சாப்பிட்டீங்களா என்றார்.
சாமிக்கண்ணு இறுக்கமான முகத்தோடு உணர்ச்சியற்ற கண்களோடு எந்த பதிலுமின்றி நின்றார்.
விருமாண்டி மீண்டும், ஐயா 12 மணிக்கு ஜட்ஜ்மெண்ட். ஒன்னும் கவலைப்படாதீங்க நமக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று சொல்லிக்கொண்டே அறையை விட்டு வெளியேறி முதன்மை அமர்வு நீதிமன்ற பகுதியை நோக்கி நடந்தார்.
நீதிமன்றத்தின் பெரும் கடிகாரம் சத்தத்தோடு 12 மணியை அறிவித்தது சாமிக்கண்ணு நீண்ட வரிசையான பெரிய படிகட்டுகளில் நீதிமன்றத்தில் இருந்து கீழ்நோக்கி இறங்கி கொண்டு இருந்தார். ஆலமரத்திலிருந்த கூகை அவரைப் பார்த்தது.
சாமிக்கண்ணு நீதிமன்றத்தில் இருந்து வெளியேறி டீக்கடை அடைந்து.. டீ சொல்லிவிட்டு பெஞ்சில் அமர்ந்தார். நேற்றிலிருந்து சாப்பிடாத மயக்கத்தில் தள்ளாடும் நிலையில் இருந்தார்.
அப்பொழுது செய்தி சேனல் ஒன்றில், தமிழகத்தை உலுக்கிய மதுரை சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லாமையால் மூவரும் விடுதலை..
2005ஆம் ஆண்டு நிகழ்ந்த இக்கோர நிகழ்வில் ஏழு நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது ஏற்கனவே நான்கு நபர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் முதன்மை குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி முடியும் முன்னரே டீயைக் குடிக்காமல் பெஞ்சில் வைத்து விட்டு பல்பொருள் அங்காடியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
துண்டினை உதறிக் கொண்டே பல்பொருள் அங்காடியிலிருந்து வெளியேறி மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அடைந்து ஊருக்கு பஸ் ஏறினார் பள்ளப்பட்டிக்கு முன்னால் நிறுத்தமான சின்ன ஆனந்தவாடியில் இறங்கிக் கொண்டார் சிமெண்ட்டால் சாமி சிலை செய்து கட்டப்பட்ட நுழைவு வாயிலில் சின்ன ஆனந்தவாடி என எழுதப்பட்டிருந்தது.
நீண்ட தூரம் கருவேல மரங்களை உடைய பாதையில் நடந்து ஏரிக்கரையில் அருகே பெரும் கிளைகளை உடைய ஆலமரம் ஒன்றை அடைந்து தலை குனிந்து நின்றார்.
கூகை அலறியது!
சற்று நிமிடத்திற்கு பிறகு தலை நிமிர்ந்து ஆலமரத்தை அண்ணாந்து பார்த்தார்.
மலர்க்கொடி பிணமாக தொங்கிக்கொண்டிருந்த காட்சி மனதில் ஓடியது.
மனதிற்குள்ளேயே மலர்கொடியின் கால்களை கட்டி கதறி அழுதார் சாமிக்கண்ணு. அழுகை ஆலமரத்தை உலுக்கும் அளவு இருந்தது. அழுது முடித்து சற்று ஆசுவாசமாகி, தான் கொண்டுவந்த மஞ்சள் துணிப்பையைத் திறந்து அதிலிருந்து நகப்பூச்சை எடுத்து விசும்பி கொண்டே மலரின் கால் விரல்களுக்குத் தடவினார்.
கீழே குனிந்து பையில் இருந்து வலையல்களை எடுத்து மலர் கால் மேலே வைத்தார்.
மீண்டும் பையைத் திறந்து ஒரு வெள்ளை நிற பேப்பர் பொட்டலத்தை விரித்தார்.
வெள்ளி ஜால்ரா கொலுசு மின்னியது.
அதை மலரின் கால்களுக்கு போட்டு விட்டு.. உடைந்து.. தரையில் உருண்டு அழுதார்.. உயிர் போகும் அளவு அழுதார்.
நீண்ட நேரத்திற்கு பிறகு.. சற்று ஆசுவாசமாகி முட்டி போட்டு எழுந்து பையைத் திறந்து செருப்பு தைக்கும் மட்டை கத்தியை எடுத்தார்..
தன் வேட்டி, கால் சட்டையினை அவிழ்த்து விட்டெறிந்து கத்தியால் தன் ஆணுறுப்பை அறுத்து வீசி எறிந்தார்.
அதிலிருந்து பீறிட்டு எழும் ரத்தத்தை கையில் ஏந்தி வலியில் துடித்துக் கொண்டே மலரின் கால்களில் தடவி மன்னிப்பு கோரிக்கொண்டே இருந்தார்.
பலமுறை மன்னிப்பு கூறினார்.. சாமி மன்னிச்சிடு .. சாமி.. மன்னிச்சிடு தாயி.. என்று அழுதார்.
சாமிக்கண்ணிற்கு ஆணெணும் பாலின குறியீட்டை அறுத்து எறிந்ததன் மூலமாக, அதிகாரமிக்க பாலினத்திலிருந்து, விடுதலை மனதை அடைந்து நீதியைப் பெறமுடியாத குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபட்டு மலரிடம் மன்னிப்புக் கோரி கதறி அழுகிறார்.
இந்த மொத்த நிகழ்வையும் கூகை பார்த்துக் கொண்டிருக்கிறது.
அன்று சாதி தலைவனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குடித்துவிட்டு களியாட்டம் போட்டுக் கொண்டாடி இயற்கை உபாதைக்குச் சென்ற மலரை அதிகாரமிக்க மனிதர்கள் வன்புணர்ந்து கொன்ற போதும்..
அண்ணே இன்னும் இந்த முண்ட சாவல இழுத்துட்டு கிடக்கு உசுரு என்ற போதும்..
அப்ப கல்லை தூக்கி மூஞ்சில போடு என்ற போதும்..
அங்கிருந்து சிமெண்ட்டால் செய்யப்பட்ட சாமி சிலையை எடுத்து மலரின் முகத்தில் போட்டு சிதைத்து கொன்ற போதும்.
அந்த கோர நிகழ்வை பார்த்த ஒரே சாட்சி கூகைதான்..
அதிகாரமிக்க மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட இச்சாதி சமூகத்தில் கூகைகள் மௌன சாட்சி மட்டுமே!