இணைய இதழ் 102சிறார் இலக்கியம்

சிரிப்பு ராஜா சிங்கமுகன் 12; யுவா

சிறார் தொடர் | யுவா

12. வாள் உரிமை

‘’பெண்களுக்கும் வாள் உரிமை வேண்டும்… நட்சத்திரா தலைமையில் போராட்டம்… படியுங்கள் உரைகல்… பெண்களுக்கும் வாள் உரிமை வேண்டும்… நட்சத்திரா தலைமையில் போராட்டம்… படியுங்கள் உரைகல்’’

குழலனின் குரல் கேட்டு, ‘படார்’ என்று கண்களைத் திறந்தார் சிங்கமுகன்.

சட்டென கட்டிலை விட்டு இறங்கி வேகவேகமாக உப்பரிகை நோக்கி வந்தார். அதே வேகத்தில் அறை வாசலுக்கு வந்து வணங்கிய நல்லான், ‘’அரசே… அந்தப் பொடியனை…’’ என்று ஆரம்பிக்க…

‘’அடச்சீ… விலகு… நானே பார்த்துக்கொள்கிறேன்’’ என்றவாறு உப்பரிகையில் வந்து நின்று எட்டிப் பார்த்தார் சிங்கமுகன்.

கீழே அரண்மனை வாசலை ஒட்டி ஆங்காங்கே கூட்டம் நின்றிருக்க அவர்களுக்குள் புகுந்து புகுந்து கூவிக்கொண்டிருந்தான் குழலன்.

அவனது இடது பக்க தோள்பட்டையில் மூலிகைச் சாறு கட்டு போடப்பட்டிருந்தது. வலது கையில் சில உரைகல் ஓலைப் பத்திரிகையை வைத்திருந்தான்.

‘’அடேய் குழலா…’’ என்று ஓங்கி குரல் கொடுத்தார் சிங்கமுகன்.

அவன் நிமிர்ந்து பார்த்து, ‘’காலை வணக்கம் அரசே…’’ என்றான்.

‘’வணக்கம் இருக்கட்டும்… என்னடா அது?’’ என்று கேட்டார்.

‘’உரைகல் அரசே’’ என்றான் குழலன்.

‘’நான் அதைக் கேட்கவில்லை. நேற்றுதான் ஈட்டி குத்துப்பட்டு உயிரைக் காப்பாற்றி இருக்கிறோம். இன்று இப்படி காலையிலே உரைகல் உறைக்கா கல் என்று திரிகிறாயே…’’

‘’பிழைப்பு அரசே… என்னைப் போன்ற சாமானியன் குத்துப்பட்டேன் வெட்டுப்பட்டேன் என்று ஓய்வு எடுக்க முடியுமா? வீட்டில் நான்கு ஜீவன்கள் சாப்பிட வேண்டாமா?’’ என்றான் குழலன்.

‘’மடையா… காயம் பெரிதாகிவிடப் போகிறதடா!’’

‘’அதெல்லாம் ஒன்றும் ஆகாது அரசே’’ என்றான்.

‘’அதுசரி… வழக்கமாக வெள்ளிக்கிழமையில்தானே உனது உரைகல் வரும்… இன்று என்ன?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’இது சிறப்பு பதிப்பு அரசே… இரவோடு இரவாகத் தயாரித்தோம்.’’

‘’இந்த ஓட்டைக் கையை வைத்துக்கொண்டு இரவெல்லாம் உட்கார்ந்து ஓலையில் எழுதினியாக்கும்? அந்த உத்தமனை இதற்காகவே கைது செய்ய வேண்டும். டென்சேன்… டென்சேன்’’ என்று கடுகடுத்தார் சிங்கமுகன்.

‘’நான் எழுதவில்லை அரசே… அண்ணாவும் அக்காவும்தான்…’’

‘’சரி… அதென்ன இழவு வாள் உரிமை?’’ என்று சிடுசிடுத்தார்.

‘’இந்நேரம் உங்கள் மேசைக்கு உரைகல் வந்திருக்கும். படித்து தெரிந்துகொள்ளுங்கள் அரசே… எனக்கு வேலை இருக்கிறது’’ என்ற குழலன் மீண்டும் கூட்டத்தின் பக்கம் திரும்பினான்.

‘’பெண்களுக்கும் வாள் உரிமை வேண்டும்… நட்சத்திரா தலைமையில் போராட்டம்… படியுங்கள் உரைகல்…’’

சிங்கமுகன் உப்பரிகையை விட்டு விலகி அறைக்கு வந்தார். பாதாம் பால் கோப்பையுடன் செவ்வந்தி வந்தாள். ‘’அரசே… பால்…’’

‘’ம்… அரசி எங்கே?’’ என்று கேட்டார்.

‘’அவர் அலங்காரம் செய்துகொண்டு இருக்கிறார்’’ என்றாள் செவ்வந்தி.

‘’மாலை பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அதிகாலையிலேயே அலங்காரம் ஆரம்பித்துவிட்டதா?’’

‘’இல்லை அரசே… இது காலை நிகழ்ச்சிக்கு.’’

‘’அதென்ன எனக்குத் தெரியாமல் காலை நிகழ்ச்சி?’’

‘’அ… அது…’’ என்று தயங்கினாள் செவ்வந்தி.

‘’என்ன செவ்வந்தி விழிக்கிறாய்? விஷயத்தைச் சொல்’’ என்றார் சிங்கமுகன்.

‘’பெண்களுக்கு வாள் உரிமை என்று நம் அரண்மனை வாசலில் பெண்களின் போராட்டம். அதற்கு ராணியாரை சிறப்பு விருந்தாளியாக தொடங்கி வைக்க வரச்சொல்லி அழைப்பு’’ என்றாள் செவ்வந்தி.

‘’ஓஹோ… அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு அரசியையே வரச்சொல்லி அழைப்பா?’’ என்று சிடுசிடுத்தார்.

‘’அரசியும் ஒரு பெண்தானே அரசே… அவருக்கும் அந்த உரிமை வேண்டுமல்லவா?’’

‘’அது என்ன இழவு வாள் உரிமை?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’அரசே… பெண்கள் வாள் பயிற்சியில் ஈடுபடக் கூடாது. வாள் சண்டையும் கற்றுக்கொள்ளக் கூடாது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு தடைச் சட்டம் கொண்டுவந்தீர்கள் அல்லவா?’’ என்றாள் செவ்வந்தி.

‘’அப்படியா?’’ என்று யோசனையுடன் பார்த்தார் சிங்கமுகன்.

‘’ஆம் அரசே… தளபதி சொன்னார் என்று நீங்கள்தான் அந்த தடைச் சட்ட வரைவோலையில் கையொப்பம் இட்டீர்கள்.’’

‘’ஆ… ஆமாம்…’’

‘’அடுப்பங்கரையில் சமைக்கும் பெண்களுக்கு வாள் எதற்கு? பெண்கள் வாள் வைத்திருப்பது வீண் பிரச்னையையே உண்டாக்கும். வீட்டில் நடக்கும் சிறு பிரச்னைகளுக்கு எல்லாம் வாளை உயர்த்திவிடுவார்கள். கணவன் உயிருக்குமே ஆபத்து என்றெல்லாம் ஏகப்பட்ட காரணங்களைப் பட்டியலிட்டு அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது’’ என்றாள் செவ்வந்தி.

சிங்கமுகன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘’அன்று முதல் பெண்களின் வாள்கள் பறிக்கப்பட்டன. அவர்கள் புதிதாகப் பயிற்சியில் ஈடுபட்டாலும் தண்டனை என்று கண்காணிக்கப்பட்டார்கள். தற்காப்பு தேவைப்பட்டால் சிலம்பம் மட்டும் கற்று சிலம்பு குச்சி வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.’’

‘’…..’’

‘’நேற்று நட்சத்திராவை அந்தச் சுரங்கக் கொள்ளையர்கள் தாக்கி கொல்ல முயன்றார்கள் அல்லவா? அப்போது கூட அவள் சிலம்பம் வைத்துதான் சமாளித்தாள்.’’

‘’ம்…’’

‘’அவளுக்கு அற்புதமாக வாள் வீசத் தெரியும். இந்த தடைச் சட்டம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் வாளுடன் சென்றிருப்பாள். கொள்ளையர்களை வீழ்த்தி இருப்பாள். குழலனுக்கும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது என்று மக்களிடம் சொன்னாள் நட்சத்திரா…’’

‘’அ… அதற்கு?’’

‘’அதுதான் பெண்களுக்கு வாள் உரிமை கேட்டு இன்று அரண்மனை முன்பு போராட்டம் நடக்கப் போகிறது.’’

‘’எடுத்ததுமே போராட்டம் என்று வந்து நின்றால் என்ன அர்த்தம்? முதலில் உங்கள் கோரிக்கையை மனுவாக கொடுக்க வேண்டுமல்லவா?’’ என்று சீறினார் சிங்கமுகன்.

‘’அரசே மன்னிக்கவும்… மக்கள் கொடுக்கும் பல மனுக்கள் அரண்மனை வாசலைத் தாண்டி உள்ளேயே வருவதில்லை. மதில்சுவர் ஓரமாகவே போட்டு எரிக்கப்பட்டு விடுகின்றன. அதனால்தான் இந்த அதிரடி போராட்டம்.’’

சிங்கமுகன் அவளையே பார்த்தவண்ணம் இருந்தார்.

‘’அரசே… சீக்கிரம் பாலைக் குடித்துவிட்டு கோப்பையைக் கொடுத்தால்…’’

‘’கொடுத்தால்…?’’

‘’நானும் போய் தயாராகி…’’

‘’ஓ… நீயும் போராட்டத்தில் பங்கேற்கிறாயா?’’

‘’நானும் பெண்தானே அரசே’’ என்றாள் செவ்வந்தி.

கோபமுடன் கோப்பையை நீட்டிய சிங்கமுகன், ‘’போ… போய்த் தொலை… எல்லோரும் அரண்மனை வாசலில் நின்று கோஷமிட்டு என் உயிரை வாங்குங்கள். இன்று ராணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக என்னவெல்லாமோ திட்டமிட்டு இருந்தேன்’’ என்றார்.

‘’அது மாலையில் நடக்கும் அரசே…’’

‘’நடக்கும் நடக்கும்… என் மூடே போய்விட்டது… மூடே போய்விட்டது. போய்த் தொலை என்று சொன்னேன்’’ என்று சீற… செவ்வந்தி சட்டென விலகி வெளியேறினாள்.

அவளுடன் நடந்த வெற்றி, ‘’மிய் மிய் மியாவ்’’ (போராட்டம் அது இதுனு பிறந்தநாளைக் கெடுத்துடாதீங்க பெண்களே. விருந்துக்காக காத்திருக்கேன்) என்றது.

‘’நல்லா… அடேய் நல்லா’’ என்று கத்தினார் சிங்கமுகன்.

வேகவேகமாக வந்து நின்றான் நல்லான்… ‘’அ… அரசே…’’

‘’அழைக்காதபோதெல்லாம் வந்து நில்… இப்போது காட்டுக் கூச்சல் போட்டாலும் வராதே!’’

‘’அ… அதுதான் வந்துவிட்டேனே அரசே…’’

‘’போ… போய் அந்த தளபதியையும் மந்திரியையும் இன்னும் பத்து நிமிடத்தில்…’’

‘’பத்தா இருபதா அரசே…?’’

சட்டென நிமிர்ந்து முறைத்த சிங்கமுகன்… ‘’சரி… சரி… இருபது நிமிடங்கள் கழித்தே வரச்சொல்’’ என்றபடி எழுந்துகொண்டார்.

*****

அரண்மனை முன்பு பெருந்திரளாகப் பெண்கள் கூட்டம். அதில் முன்வரிசையில் நட்சத்திரா, செவ்வந்தி மற்றும் ராணி கிளியோமித்ரா. அனைவரின் கைகளிலும் வாள்.

‘’வேண்டும் வேண்டும்…’’

‘’வாள் உரிமை வேண்டும்’’

‘’வளை கரங்கள் ஏந்தவும்…’’

‘’வாள் உரிமை வேண்டும்’’

‘’வேண்டும் வேண்டும்… வாள் உரிமை வேண்டும்’’

‘’வளை கரங்கள் ஏந்தவும்… வாள் உரிமை வேண்டும்’’

‘’அடுப்படி மட்டும் பெண்களுக்கா?’’

‘’ஆகாயம் முழுக்க ஆண்களுக்கா?’’

‘’பிள்ளைகள் சுமக்க பெண்களா?’’

‘’பதவிகளைச் சுமக்க ஆண்களா?’’

‘’வேண்டும் வேண்டும்… வாள் உரிமை வேண்டும்’’

‘’வளை கரங்கள் ஏந்தவும்… வாள் உரிமை வேண்டும்’’

‘’எங்கள் உயிர் கிள்ளுக்கீரையா?’’

‘’உங்கள் உயிர் தங்கக் கட்டியா?’’

‘’எங்கள் உயிரைக் காத்துக்கொள்ள…’’

‘’எங்களுக்கும் வாள் வேண்டும்’’

‘’வேண்டும் வேண்டும்… வாள் உரிமை வேண்டும்’’

‘’வளை கரங்கள் ஏந்தவும்… வாள் உரிமை வேண்டும்’’

அப்போது வாசலுக்கு வேகமாக வந்துநின்ற நல்லான்… ‘’ராஜாதி ராஜ…’’ என்று ஆரம்பித்தான். ஆனால் பெண்கள் தங்கள் கோஷத்தை நிறுத்தவில்லை.

‘’வேண்டும் வேண்டும்… வாள் உரிமை வேண்டும்’’

‘’ராஜ கம்பீர…’’

‘’வளை கரங்கள் ஏந்தவும்… வாள் உரிமை வேண்டும்’’

‘’ராஜ குல திலக…’’

‘’அடுப்படி மட்டும் பெண்களுக்கா?’’

‘’ராஜ மார்த்தாண்ட ஆகாயம் முழுக்க ஆண்களுக்கா?

ஐயையோ… மன்னிக்கவும் ராஜ… ராஜ…’’ என்று நல்லான் திணற…

‘’போதும் இஷ்டாப்… இஷ்டாப்… நிறுத்தடா’’ என்றபடி அங்கே வந்தார் சிங்கமுகன். அவருடன் கம்பீரன் மற்றும் நிலாமதிசந்திரன்.

‘’பிள்ளைகள் சுமக்க பெண்களா?’’

‘’பதவிகளைச் சுமக்க ஆண்களா?’’

‘’அமைதி… அமைதி’’ என்று கைகளை உயர்த்தினார் நிலாமதிசந்திரன்.

‘’எங்கள் உயிர் கிள்ளுக்கீரையா?’’

‘’உங்கள் உயிர் தங்கக் கட்டியா?’’

‘’அமைதி… அமைதி…’’

‘’வேண்டும்… வேண்டும்…’’

சிங்கமுகன் கோபத்துடன் தலையை உயர்த்தி மதில்சுவர் மாடத்தில் நின்றிருக்கும் முரசு கொட்டும் முகிலனைப் பார்த்தார்.

‘’அடேய்… அங்கே என்ன பூ பறித்துக்கொண்டிருக்கிறாயா? முரசு கொட்டடா’’ என்று சீறினார்.

‘தொம்…. தொம்… தொம்… தொம்’ என்று முரசு முழங்க…

கூட்டம் முழக்கத்தை நிறுத்தி அமைதியானது.

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்த சிங்கமுகன்… ‘’கூச்சல் போட்டு முடித்தாயிற்றா? நான் பேசலாமா?’’ என்று கேட்டார்.

‘’அரசே இது கூச்சல் அல்ல… எங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எழுப்பும் உரிமைக் குரல்’’ என்றாள் நட்சத்திரா.

‘’அபயக் குரல் கொடுத்தால் ஓடோடி வந்து காப்பாற்றத்தான் ஆண்கள் இருக்கிறோமே’’ என்று கேலியுடன் சொன்னான் கம்பீரன்.

‘’நேற்று நீங்கள் காப்பாற்றிய லட்சணத்தைதான் நாடே அறிந்துகொண்டதே’’ என்று அதே கேலியுடன் சொன்னாள் செவ்வந்தி.

‘’நீங்கள் யாரும் வந்து எங்களுக்கு அபயம் அளிக்க அவசியமில்லை. எங்கள் கையில் வாளைக் கொடுங்கள். நாங்களே பார்த்துக்கொள்கிறோம்’’ என்றார் கிளியோமித்ரா.

‘’கிளியோ… நீயுமா அந்தப் பக்கம் நிற்கிறாய்?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.

‘’நான் இப்போது ராணி அல்ல… நாட்டின் பெண்களில் ஒருத்தி’’ என்றார் கிளியோமித்ரா.

‘’சரி… எடுத்ததுமே போராட்டம், முழக்கம் என்று கிளம்பி வருவது என்ன நியாயம்? ஒரு சட்டம் கொண்டுவந்தோம். அதில் சிக்கல் என்றால் பேசி ஆராய்ந்து பிறகுதானே திருத்தம் செய்ய முடியும்?’’ என்றார் நிலாமதிசந்திரன்.

‘’ஐயா மந்திரியாரே… பெண்கள் வாள் ஏந்தக் கூடாது என்கிற சட்டத்தைக் கொண்டுவரும் முன்பு எங்களிடம் பேசினீர்களா? ஆய்வு நடத்தினீர்களா என்ன? ஒரே இரவில் கொண்டுவந்தீர்தானே?’’ என்று கேட்டாள் நட்சத்திரா.

மந்திரி வாயை மூடிக்கொண்டார்.

‘’நேற்று இரு உயிர்கள் போயிருக்கும். ஆண்டவன் அருளால் பிழைத்தன. எப்போதும் அந்த அதிர்ஷ்டம் இருக்குமா?’’ என்று கூட்டத்தில் ஒரு பெண் சீறினாள்.

‘’ஆமாம்.. ஆமாம்… இன்றே தடைச் சட்டம் ரத்தாக வேண்டும். பாதுகாப்புக்காக அனைவரும் வாள் ஏந்தும் உரிமை வழங்கப்பட வேண்டும். அதுவரை இந்த இடத்தை விட்டு அசைய மாட்டோம்’’ என்று இன்னொரு பெண் முழங்கினாள்.

‘’வேண்டும்… வேண்டும்… வாள் உரிமை வேண்டும்’’

சிங்கமுகன் கைகளை உயர்த்தி, ‘’சரி சரி… மீண்டும் ஆரம்பிக்காதீர்கள்… இன்றே அந்த தடைச் சட்டம் விலக்கிக்கொள்ளப்படும் போதுமா?’’ என்றார்.

உடனே பெண்கள் கூட்டம் உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தது.

மந்திரி பக்கம் திரும்பிய சிங்கமுகன், ‘’போங்கள்… கையோடு எழுதி எடுத்து வாருங்கள். இங்கேயே கையொப்பமிட்டு அளிக்கிறேன்’’ என்றார்.

நிலாமதிசந்திரன் வணங்கிவிட்டு வேகமாக உள்ளே ஓடினார்.

கம்பீரன் கூட்டத்தில் இருக்கும் நட்சத்திராவையும் செவ்வந்தியையும் முறைத்தான். அவர்கள் அலட்சியமாக அவனைப் பார்த்து புன்னகைத்தார்கள்.

‘’இவன்தானே அந்தச் சட்டம் வருவதற்கு மூலக் காரணம்?’’ என்று கிசுகிசு குரலில் கேட்டாள் செவ்வந்தி.

‘’ஆமாம்… எந்தப் பெண்ணிடமோ போய் வால் ஆட்டி இருக்கிறான். அவள் வாளை உயர்த்தி காண்பித்திருக்கிறாள். அடுத்த நாளே மன்னரிடம் வேறு ஏதோ சொல்லி தடைச் சட்டத்தைக் கொண்டுவந்து விட்டான்’’ என்றாள் நட்சத்திரா.

‘’இனி இவன் வால் எங்கும் ஆடாது’’ என்று சிரித்தாள் செவ்வந்தி.

புதிய சட்டம் எழுதப்பட்ட ஓலையுடன் நிலாமதிசந்திரன் வந்து அரசரிடம் நீட்டினார். அதை வாங்கிய சிங்கமுகன் சத்தமாக வாசித்தார்.

‘’இதனால் அரிமாபுரி மக்களுக்கு அறிவிப்பது… பெண்களின் பூ போன்ற கரங்கள் பாதிக்கக் கூடாது என்கிற அக்கறையில் வாள் ஏந்த தடை என்கிற சட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவந்திருந்தோம். ஆனால், அது நம் நாட்டுப் பெண்களுக்குப் பிடிக்கவில்லை என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் அறிந்தோம். ஆகவே, இனி பெண்களும் பாதுகாப்புக்கு வாள் வைத்துக்…’’

‘’ஹேய்ய்ய்ய்ய்ய்’’ என்று பெண்கள் ஆர்ப்பரித்தார்கள்.

‘’…கொள்ளலாம். வாள் பயிற்சி நடக்கும் மையங்களில் இனி பெண்களும் சேரலாம். பயிற்சி பெறலாம் என்று அறிவிக்கிறேன்… இப்படிக்கு…’’ என்ற சிங்கமுகன் குனிந்து அந்த ஓலையில் கையொப்பம் இட்டார்.

பெண்கள் அனைவரும் கைகளைத் தட்டினார்கள்.

நிமிர்ந்த சிங்கமுகன்… ‘’கிளியோ… இப்படி வா… இந்த ஓலையை உன் கையாலே பெற்றுக்கொள்’’ என்றார்.

கிளியோமித்ரா புன்னகைத்து, ‘’இல்லை அன்பே… இதற்கு மூலக்காரணம் நட்சத்திரா… அவள்தான் பெறவேண்டும்’’ என்றார்.

‘’அரசியாரே… இன்று உங்கள் பிறந்தநாள்… இந்த நாளில் பெண்களின் உரிமை மீட்கப்பட்டுள்ளது. ஆகவே, நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள்’’ என்றாள் நட்சத்திரா.

‘’அட… இருவருமாகச் சேர்ந்துதான் வாங்கிக்கொள்ளுங்களேன்’’ என்றாள் செவ்வந்தி.

‘’எனில் நீயும் வா செவ்வந்தி… மூவருமாகப் பெற்றுக்கொள்ளுங்கள்’’ என்றார் சிங்கமுகன்.

அவர்கள் அரசரை நெருங்கி அந்த ஓலையைப் பெற்றுக்கொள்ள மீண்டும் பெரும் கைத்தட்டல்.

‘’எங்கள் அரசர் சிங்கமுகன்…’’

‘’வாழ்க… வாழ்க…’’

‘’மக்கள் அரசி கிளியோமித்ரா’’

‘’வாழ்க… வாழ்க…’’

மேலே இருந்து ‘தொம்… தொம்… தொம்…’’ என்று முரசு கொட்டினான் முகிலன்.

‘’சரி… இன்று மாலை நடக்க இருக்கும் என் அன்பின் அரசி… இதய ராணி கிளியோமித்ரா பிறந்தநாளில் அனைவரும் வந்து பங்கேற்றுக்கொள்ளுங்கள்’’ என்றார் சிங்கமுகன்.

‘’பங்கேற்கிறோம் அரசே… உங்கள் கவிதையைக் கேட்கவும் ஆவலுடன் இருக்கிறோம்’’ என்று சொன்னாள் நட்சத்திரா.

‘’ஆஹா… இந்த விஷயம் உனக்கு எப்படி தெரிந்தது?’’ என்ற சிங்கமுகன் தலையை செவ்வந்தி பக்கம் திருப்பி… ‘’உன் வேலைதானே? ராஜ ரகசியங்களை எல்லாம் வெளியே கசியவிடுகிறாய்’’ என்றார்.

செவ்வந்தி சிரித்தாள்.

தொடரும்…

iamraj77@gmail.com

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button