உனக்காக
உனக்காக நிலவைத் திருடி வந்தேன்
அதை யாருக்கும் தெரியாமல்
வானத்தில் ஒளித்து வைத்திருக்கிறேன்.
***
தரிசனம்
பூமிக்கு வெளியே திசைகள் இல்லை
வேற்று கிரகங்களில் காலங்கள் வெவ்வேறு
பெருவெளியும் சிறு புள்ளியின் நீட்சி
நானும் நீயும் இரு ப்ரபஞ்சங்கள்.
***
மகா தரிசனம்
ஆங்காங்கே எல்லை பிரித்து
தனித்தனிப் பெயர் சூட்டப்பட்டிருந்தாலும்
உலகில் இருப்பது ஒரே கடல்
கடல் வற்றினால் கண்டங்கள் தீவுகள் யாவும்
ஒரே நிலம் ஆகிவிடுமல்லவா
பெருங்கடலில் ஒரே ஒரு மழைத் துளி வீழ்கிறது
கப்பல்கள் தரை தட்டி நிற்கின்றன.
***
அன்பு வேணுமா அன்பூஊஊ…
“அன்பு வேணுமா அன்பூஊஊ…”
“பாசம் வாங்கலியோ பாசோஓஓ…ம்”
வீட்டுக்கு வெளியே கூவல் கேட்டது
வியப்பும் ஆவலும் மேலிட
வாசலுக்குச் சென்று பார்த்தேன்
வெறிச்சோடியிருந்தது தெரு
வாங்குவோர் யாருமில்லை
விற்போரும் தென்படவில்லை
மனிதரின் விற்பனைச் சரக்கல்லவே
வானவர்கள் விற்றுக்கொண்டு போகிறார்களோ
அண்ணாந்து நோக்கினேன்
வானத்தையே காணோம்
திகைத்துக் குழம்பியிருக்கையில்
தொலைவில் எங்கிருந்தோ இன்னொரு குரல்
“பழைய்ய்…ய கருணை, நேயம், மனிதம் வாங்கறதேய்ய்…”
***
கலைத் தேவதைக்கு
பித்தம் காலியான பிச்சைக் கபாலம் ஏந்தி
நான் உன்னிடம் யாசிப்பது
பசி பட்டினி அடைக்க மீந்த உணவல்ல
உனது உணவு மேஜையில் வேறென்ன இருக்கப்போகிறது
புதுமைப்பித்தன் கல்லீரல் சுக்கா
பாரதி குடல் க்ரேவி
ஆத்மாநாம் மூளை வறுவல்
வான்கோ கணையத் தந்தூரி
நீட்ஷே சிறுநீரக மஞ்சூரியன்
எனக்குத் தேவை கபாலம் ததும்பும் உன்மத்தம்
நீ மதுவெனப் பருகிக் கிறங்கும் அதை
எச்சிற் கோப்பையிலிருந்தேனும் எனக்குக் கொஞ்சம் ஊற்று
முடிந்தால் இன்னொன்றும் செய்
கடைசியாக என்னை டிக்கா கெபாப் செய்து தின்பதோடு
உன் வேட்டை விருந்தை நிறுத்திக்கொள்.