1
மொட்டை மாடியின்
விளிம்பில் ஒரு புறா
நின்று கொண்டிருந்தது
மறுவிளிம்பில் இருந்த நான்
அதை என்ன செய்து
கொண்டிருக்கிறாயென வினவினேன்
சும்மா வேடிக்கை என்ற பின்
என்னைக் கேட்டது
தற்கொலைக்கு
முயற்சிக்கிறேன் என்றேன்.
அடுத்த வேளைச் சோறும்
அடுக்கு மாடி வீடும்
ஆட்கள் சுற்றியும்
வைத்துக் கொண்டபிறகும்
எதற்குத் தற்கொலை என்றது
நான் ஏதோ யோசித்து
பதில் சொல்ல முற்படுவதற்கு
முன் அது இரை தேடப் பறந்தது
மறுமுனையில் இருந்து…
***
2
நான் என்னை
உனக்குக் கொடுத்திருந்த பொழுது
திருப்பி வாங்கும் எண்ணமேதுமில்லை
நீ என்னை மீண்டும்
என்னிடம் குடுக்கும் பொழுதும்
எனக்குத் திருப்பி வாங்கும் எண்ணமேதுமில்லை
என்னை என்னாலேயே
வைத்துக் கொள்ள முடியாதொரு
பரிணாமத்தைத்தான்
நீ வைத்திருக்கும் பொழுது
மாற்றியிருக்கிறாய்
நேசத்திற்கு எந்த சட்ட திட்டமும்
இருப்பதில்லை தான்
இருந்தால் ஒன்றே ஒன்றை
வைக்கலாம்
அது
யார் உங்களை வேண்டாமென்று
சொன்னாலும்
எப்பாடுபட்டேனும் உங்களை
நீங்களே ஏற்றுக்கொள்வது
உங்களை
நீங்களே கைவிடும்
சூழ்நிலை தான்
உலகத்தில் கொடியது.
***
3
எதிர்த்த வீட்டுக்குப் பக்கத்தில்
ஏதோ சத்தம்
ஐந்து குட்டிகள்
அழகழகாய் நாய்குட்டிகள்
கருப்பு, வெள்ளை,சாம்பல் மற்றும் கலவையென
சோறுபோட ஆரம்பித்தோம் அம்மாவும் நானும்
ஒவ்வொரு முறை சோற்றைப் போடும் பொழுதும்
“உங்கம்மா விட்டுட்டுப் போய்ட்டாளா?
வாங்க சாப்பிடுங்க” என்பாள் அம்மா
“நீங்க இப்டி வளக்காதீங்க,
யாரையும் கடிச்சுரும்
உங்களைத்தான் சொல்வாங்க அப்பறம்”
என்றார்கள் தெருவில் சிலர்
அன்றோடு சரியென்று
உணவிடுவதை அப்படியே
நிறுத்திவிடச் சொன்னேன்
என்னைப் பார்க்கும்
பொழுதெல்லாம்
கத்திக் கூப்பாடு போடும்
செவியிரண்டையும்
அடைத்துக் கொண்டேன்
இரவெல்லாம் பசியில்
அவைகளின் அழுகுரல் கேட்கும்
நான் எதுவுமே கேட்காதவனைப்
போல் நடிக்கும் மனிதனாகியிருந்தேன்
ஒரு நாள்
இரவு மொட்டை மாடியில்
உலவிக்கொண்டிருக்கையில்
அம்மாவைத் தெருவில் கண்டேன்
அவள் பயந்து பயந்து
அந்த குட்டி நாய்களுக்குச் சோறிட்டுக் கொண்டிருந்தாள்
“யாராச்சும் எதுவும் சொல்லப் போறாங்க?”
எத்தனை நாளைக்கு இப்டி ஒளிஞ்சு போடுவியாம்”
என்றேன்.
“அதுங்க இருக்கிற வரைக்கும்
இல்லை
நானிருக்கிற வரைக்கும்” என்றாள்
அம்மா
அம்மாவுக்குத்
தெரிந்ததெல்லாம்
அம்மாவாக இருப்பது மட்டுந்தான்!