
அம்மாவின் நினைவு(கள்) நாள்
1.
வலுக்கட்டாயமாக திசைதிருப்பப்பட்ட மனது
எங்கெல்லாமோ சுற்றியலைகிறது தன்னந்தனியே
‘ஒருநிமிடம் கூட சும்மா இருக்கப் போவதில்லை’
‘வெறுமையில் யோசித்து அழப்போவதில்லை‘
என்ற வைராக்கியம் எல்லா வேலைகளையும் செய்பித்தது
காகங்களற்ற ஊரில் எங்கிருந்தோ பறந்து வந்த காகம்
வீட்டு முற்றத்தின் முன்னமர்ந்து விளிக்கும் வரையில்
உணர்ந்திருக்கவில்லை அம்மாவின் நினைவுகளோடேதான்
அந்த நாளினைக் கடக்க முயன்று கொண்டிருக்கிறேன் என்று
உயிரில் கலந்த உன்னத நினைவுகளை…அம்மாவை…
எந்தப் பிரயாசைகளும் அசைத்திட முடியாது என்ற பின்முடிவோடு
மெதுவாக நகர்கிறது ஜன்னலின் வழியே மென்மேகம்.
2.
நீ காபி வேண்டும் எனக் கேட்டபொழுதே
கொஞ்சம் கொடுத்திருக்கலாம்தான்…
இல்லாத உனக்கு உன் புகைப்படத்தின் முன்
இட்டு நிறைத்து வைத்த காபியை
குடிக்கவும் மனமில்லை கலையவும் மனமில்லை.
3.
ஐம்பத்து மூன்றாம் வயதில் சிறுபிள்ளை போல
மிட்டாய் வேண்டுமென அடம் பிடித்தாய்
அன்பாகக் கொஞ்சமும்
கோபமாய் கொஞ்சமும்
பேசிப் புரிய வைக்க முயன்று தோற்கையில்
ஓர்மையில் உதிக்கிறது
‘நல்ல புள்ள ல்ல, ஒன்னே ஒன்னுதான்… இனி கிடையாது’ என்ற
புன்னகையுடனான உன் முற்கால முகம்
தன்னிச்சையாக ஒரு சாக்லேட் கைமாறியது
நான் உன் சாயலுக்கு மாறிக் கொண்டிருந்தேன்.
4.
இன்று என்ன செய்திட உத்தேசமென
என்னையே கேட்டுக்கொள்கிறேன்
எப்பொழுதும் போல விடிந்துவிட்டது
வழக்கமான செயல்களில் இருந்து எந்த விடுபாடும் இல்லை
நேரமானது மிக மெதுவாக கடக்க யத்தனிக்கிறது
ஞாபகங்களின் பாரத்தைத் தாங்கிய மூளை
கொஞ்சம் கொஞ்சமாய் கனக்கத் துவங்கியது
கால்கள் தளரும் நொடியில்
எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்,
எப்பொழுதும் போல இதுவும் சாதரணமாய் ஒருநாள்தான்
பதினோரு வருடங்களுக்கு முன்
இதே நாளில்தான்
அம்மை இறந்து போனாள் என்பதைத் தவிர!
5.
உனக்கு நினைவு தப்பிவிட்டதாய் நான் பயந்த நாளில்தான்,
நான் பிறந்த கதையை
சேனை வைத்த ஹார்பர் ஆச்சியை
சாவி தொலைந்த ஒரு சாயுங்காலத்தை
என அட்சரம் பிசகாமல் அழகாய் சொல்லிச் செல்கிறாய்
நீ நிஜமாக நீயாகத்தான் இருக்கிறாயா என்றறிய
பெயர் வைத்த உன்னிடமே
என் பெயர் என்னவெனக் கேட்கிறேன் விழிநீர் அடக்கி!
- md@pioneerpac.com