இணைய இதழ்இணைய இதழ் 72தொடர்கள்

இபோலாச்சி; 08 – நவீனா அமரன்

தொடர் | வாசகசாலை

உண்மை / கற்பனை கதைகள் – 2

பெண் பிள்ளைகளை மணம் முடித்துக் கொடுக்கும் போது மணமகன் வீட்டாருக்கு வரதட்சணை கொடுக்கும் வழக்கம் இந்தியா முதலான பல நாடுகளில் நடைமுறையில் இருப்பதைப் போல, ஆப்பிரிக்கா முதலான பெரும்பாலான பிற தேசங்களில், பெண் பிள்ளைகளை மணம் முடிக்கும் போது மணமகன் வீட்டார் பெண் வீட்டாருக்கு அன்பளிப்பாக பணம், கால்நடைகள், கோலா கொட்டைகள் மற்றும் கசவா கிழங்குகள் போன்றவற்றைக் கொடுப்பதை Bride Price அல்லது மணமகளுக்கு வழங்கப்படும் வரதட்சணை என்று அழைக்கின்றனர். அவ்வாறு மணமகன் வீட்டார் அளிக்கும் அன்பளிப்பை மணமகள் வீட்டார் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்தான் அவர்களின் திருமணம் அங்கீகரிக்கப்பட்ட முழுமையான திருமணமாக அவர்கள் சார்ந்த சமூகத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படும். 

இவ்வாறு அன்பளிப்பாக கொடுக்க வேண்டிய பணம் அல்லது பொருள்களை மணமகனும் அவரது வீட்டில் உள்ளவர்களும் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருப்பர். திருமணம் முடிந்த மறுநாள் காலை மணமகன் வீட்டார் மணமகளுக்கு கொடுக்க வேண்டிய அன்பளிப்புகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, மணமகள் வீட்டில் சேர்ப்பிக்கும் சடங்கு இன்றளவும் நைஜீரியாவின் பல பகுதிகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் பொருள்களில் ஒன்றாக, திருமண இரவின்போது மணப்பெண்ணின் கன்னித்திரை கிழிந்து, அவளது உதிரம் தோய்ந்த ஆடையை மணமகன் இரு கைகளிலுல் போர்த்தி ஊர் பார்க்க எடுத்துச் செல்வதும் ஒரு வழக்கமாக நடைமுறையில் உள்ளது. இவ்வாறு அன்பளிப்பாகத் தரப்படும் பொருள்களையும் பணத்தையும், மணப்பெண் தனக்கான புதிய இல்லத்தை உருவாக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் தான் இத்தகைய கலாச்சாரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

மணப்பெண் கன்னித்தன்மை அற்றவள் என்று அறியும் பட்சத்தில் இந்த அன்பளிப்பு மறுநாள் மணப்பெண் வீட்டாருக்கு வழங்கப்படுவதில்லை. மாறாக இரத்தம் தோயாத வெள்ளைத் துணி ஒன்றை மணமகன் மணமகள் வீட்டிற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று மணப்பெண்ணை அவமதிப்பதுடன், அவளையும் அவளது பிறந்தகத்திற்கே அனுப்பிவிடுவார்கள். இவ்வாறான சில பிற்போக்குத்தனங்களை கொண்டதாக இருந்தாலும் Bride Price கொடுக்கும் வழக்கம், தனக்கு மனைவியாக வரவிருக்கும் பெண்ணைக் குறித்த கடமை உணர்ச்சியும், அவளுக்காக பொருளும் பணமும் ஈட்ட வேண்டும் என்ற அக்கறையும் ஒரு ஆணின் மனதில் உருவாகக் காரணமாக அமைகிறது. ஒரு பெண்ணுக்கும் தனது கணவனால் பொருளாதார ரீதியாக அவளைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஆண்கள் மட்டுமே பொருளீட்டி, பெண்கள் வெறுமனே அடுப்பூதிய காலகட்டத்தை சேர்ந்த சமூகத்தில் Bride Price உங்களுக்கு ஒரு நம்பிக்கை கீற்றாகவே இருந்திருக்கிறது. 

இதேபோல் மணமுடித்த இருவரும் மனமுறிவு செய்து கொள்ளும் போது, மணமகளுக்காக மணமகன் வீட்டார் கொடுத்த Bride Price என்னும் அன்பளிப்பை மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாருக்குத் திருப்பிச் செலுத்தி விட வேண்டும். நைஜீரியா போன்ற இறுக்கமான கட்டமைப்புகளைக் கொண்ட சமூகத்தில், மனமுறிவு செய்து கொள்வது என்பது மிகவும் துரதிர்ஷ்டமாகக் கருதப்பட்டது. ஒருவர் தானாக முடிவெடுத்து தன்னிச்சையாக மனமுறிவு செய்து கொள்வதைத் தவிர்ப்பதற்காக இவ்வாறான ஒரு பழக்கம் கடைபிடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய சூழலில் மனமுறிவு என்பது கொடுக்கப்பட்ட அன்பளிப்பை திருப்பிச் செலுத்த வேண்டிய பெற்றோரையும் கலந்தாலோசித்து எடுக்கப்பட வேண்டிய முடிவாக அமைகிறது. இவ்வாறான சூழலில் நைஜீரிய பெற்றோர் பெரும்பாலும் பெண்களை மனமாற்றி அவர்களது கணவன் வீட்டிற்கு மீண்டும் அனுப்பி வைத்து விடுவார்கள். இதன் காரணமாக பழங்கால நைஜீரியாவில் மனமுறிவு செய்து கொள்வது என்பது மிகவும் குறைவாக இருந்தது. 

புச்சி எமசேட்டாவின் The Bride Price என்னும் நாவலும் மணமகன் மணமகளுக்கு அளிக்கும் அன்பளிப்பான Bride Price என்னும் வழக்கத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். கதையின் நாயகியான அக்கூனா (Aku-nna) பள்ளிக்கல்வி பயின்ற ஒரு பெண். அக்கூனா வாழ்ந்த நைஜீரிய சமூகத்தில் பலதாரமுறை வழக்கத்தில் இருந்ததால், அவளது தகப்பனாரின் மறைவுக்குப் பின்னர், அவளது தாயாரை அவளது பெரியப்பா திருமணம் செய்து கொள்கிறார். இதன்படி அக்கூனாவிற்கு மணமகன் வீட்டிலிருந்து வந்து சேர வேண்டிய அன்பளிப்பை பெறும் உரிமை அவளது பெரியப்பாவிற்குச் சொந்தமாகிறது. பள்ளிப்படிப்பின் இறுதியாண்டில் இருக்கும் போது அக்கூனா பூப்பெய்துகிறாள். இந்த உண்மை வீட்டில் தெரிந்தால் அவளது பெரியப்பா படிப்பைத் தொடர அனுமதிக்கமாட்டார் எனத் தெரிந்து அக்கூனா உண்மையை வீட்டில் சொல்ல அஞ்சுகிறாள். இந்த சூழலில், அடிமை வம்சத்தைச் சேர்ந்த அவளது ஆசிரியரான சிக்கி (Chike) என்னும் இளைஞன் அவளுக்கு உதவுகிறான். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து அது அக்கூனாவின் குடும்பத்தாருக்கும் தெரிய வருகிறது. 

அக்கூனாவின் பெரியப்பா இந்த காதலை பொருத்தமற்றது எனக் கூறி, அவளுக்கு சொந்தத்தில் வேறொரு மாப்பிள்ளையை மணம் முடித்து வைக்கிறார். அந்த மாப்பிள்ளை, திருமணத்திற்கு மறுநாள் காலை அக்கூனாவை கன்னித்தன்மையற்றவள் என்று ஏளனப்படுத்தும் வகையில் வெள்ளைத் துணி ஒன்றைக் கையில் சுற்றி வந்து அவளுக்கான மணப்பெண் அன்பளிப்பைத் தர மறுக்கிறார். இதற்குள் அக்கூனா சிக்கியுடன் உடன்போக்கு விவாகம் செய்து கொள்கிறாள். சிக்கியின் பெற்றோர் மணமகளுக்கான அன்பளிப்பை அக்கூனாவின் பெரியப்பாவிடம் தர பலமுறை முயற்சித்தும், அவளது பெரியப்பா அந்த அன்பளிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டதோடு, அவர்களது திருமணத்தையும் நிராகரித்தார். 

மேலும் தொடரும் இந்த நாவலில் இழைத்து வரும் கற்பனைக் கதையின் விளைவாக நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவம் தான் எமசேட்டாவின் மணவாழ்வை புரட்டிப் போட்டது. புச்சி எமசேட்டா The Bride Price நாவலை எழுதி முடித்து அதன் கையெழுத்துப் பிரதியை தனது எழுத்து மேசை மேல் வைத்துவிட்டு பணிக்குச் சென்ற அன்றொரு நாளில், அவரது கணவரான சில்வெஸ்டர் அந்த கையெழுத்துப் பிரதியை எடுத்துப் படித்துப் பார்க்கிறார். உண்மையாகவே கதையில் வரும் சிக்கி என்னும் கதாபாத்திரம் தான் தான் என்பதை கதையின் வழி உணர்கிறார். எமசேட்டாவுக்கான Bride Price என்னும் மணமகள் அன்பளிப்பை இன்னும் அவரது குடும்பத்திற்கு கொடுக்காத ஒரே காரணத்திற்காக சில்வெஸ்டரை அவர் அடிமை வம்சத்தை சேர்ந்தவர் என்று கதையில் எமசேட்டா குறிப்பிட்டு விட்டதாக தனக்குத்தானே முடிவு செய்து கொள்கிறார். ஏனெனில், அவர்களது திருமணத்திற்கான மணமகள் அன்பளிப்பு எமசேட்டாவின் குடும்பத்தாருக்கு அப்போது வரை வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்தக் கோபத்தில், எமசேட்டாவின் நாவலின் ஒரேயொரு கையெழுத்துப் பிரதியையும் சில்வெஸ்டர் தீக்கிரையாக்குகிறார். பணி முடிந்து வீடு திரும்பிய எமசேட்டாவிற்கு எரிந்த சாம்பலாய் போன, தனது குழந்தையை போல் மதித்த நாவலைக் கண்டதும் அழுகை பீறிட்டு வந்தது. 

அந்த நொடிப்பொழுதிலிருந்து இருவருக்கும் இடையேயான விரிசல் மேலும் அகண்டு கொண்டே சென்று விவாகரத்தில் முடிந்தது. எரிக்கப்பட்ட கையெழுத்து பிரதியில் தனது நாவலுக்கான முடிவாக, அக்கூனாவும் சிக்கியும் சேர்ந்து பல ஆண்டுகள் வாழ்ந்ததாக எமசேட்டா எழுதியிருந்தார். ஆனால், அந்தப் பிரதி எரிக்கப்பட்ட கோபத்தில், எமசேட்டா மீண்டும் இந்த முழு நாவலையும் புதிதாக எழுதிய போது, அதன் முடிவில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பின் அக்கூனா இறந்து விடுவதாக முடிவை மாற்றி எழுதியிருந்தார். 

மாற்றி எழுதப்பட்ட முடிவில் உறைந்திருக்கும் அக்கூனாவின் இறப்பு, உண்மையில் எமசேட்டாவின் மணவாழ்க்கை மரணப்படுக்கையில் இருப்பதற்கான ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ளலாம். The Bride Price நாவலுக்குத் தரப்பட்ட முதல் முடிவின்படி, தனது கணவருடன் இணைந்து மகிழ்ச்சியாக வாழ நினைத்த எமசேட்டா, அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்ட பிறகு, திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் நோக்குடன் இரண்டாவது முடிவை எழுதுகிறார். புனைவும் வாழ்வும் ஒன்றாகிப் போன எமசேட்டாவிற்கு, தனது கதைகள் வழி, கதைமாந்தர்கள் வழி மட்டுமே உலகத்தோடு உரையாடத் தெரிந்திருக்கிறது போலும். அதனால்தான் புனைவோடு தன் வாழ்வை பொருத்திப் பார்த்து வந்த எமசேட்டா, இந்த நாவலின் இரண்டாம் பிரதியிலிருந்து தன் ஒட்டுமொத்த வாழ்வோடும் புனைவைப் பொருத்திப் பார்க்க பழகிக் கொண்டார்.

(தொடரும்…)

முந்தையது | அடுத்தது 

writernaveena@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button