
உண்மை/கற்பனைக் கதைகள்
நைஜீரிய இலக்கியத்தைப் பொருத்தவரை மிகுந்த பாங்குடன் கொண்டாடப்படும் ஆண் இலக்கியவாதிகள் பலர் இருந்தாலும், பல பெண் எழுத்தாளர்களும் நைஜீரிய இலக்கியத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்து, இதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பிரிட்டிஷ் ஆட்சி கால நைஜீரியாவில், மிகவும் பிற்போக்கான மனப்பான்மையைக் கொண்டிருந்த ஒரு சமூகத்தில் இருந்து பெண்கள் எழுத வரும்போது, அவர்கள் கடந்து வரவேண்டிய பாதை மிகவும் கடினமானதாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இன்னும் சொல்லப்போனால், எழுத்துப் பணி என்பது வெர்ஜினியா ஊஃல்ப் (Virginia Woolf) போன்ற பதினெட்டாம் நூற்றாண்டு கால இங்கிலாந்தின் மேல் தட்டு வர்க்கத்தில் பிறந்த பெண்களுக்கே சவாலான காரியமாகதான் இருந்திருக்கிறது.
தன் சமூகம், குடும்பம், அலுவலகப் பணி, குழந்தைகள் என்று எல்லாவற்றையும் சமாளித்து எழுதுவதற்கான நேரத்தை சாத்தியப்படுத்திக் கொள்வதே மிகுந்த இடர்பாடாக இருக்கக்கூடிய சூழலில், நைஜீரியாவில் பிறந்து, இங்கிலாந்தில் குடியேறிய ஒரு கருப்பினப் பெண் எழுத வரும் போது, கூடுதலாக நிறவெறியையும், நிறத்தின் பால் அவர் மீது செலுத்தப்படும் வன்முறைகளையும் கடந்து எழுத வேண்டிய ஒரு சூழல் நிச்சயம் உருவாகி இருக்கும். இவ்வாறான எண்ணற்ற எதிர்ப்புகள் மற்றும் சவால்களுடன் தனது எழுத்து பயணத்தைத் துவக்கி, இன்று அனைவராலும் நினைவு கூறப்படும் மற்றும் கொண்டாடப்படும் ஓர் எழுத்தாளராக மாறி இருப்பவர்தான் புச்சி எமசேட்டா (Buchi Emecheta).

வரலாற்றில் பார்க்கும் போது, இலக்கியத்தில் கால் பதிக்க பெண்கள் எண்ணற்ற தியாகங்களைச் செய்ய வேண்டி இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மேற்கத்திய நாடுகளில் ஜார்ஜ் எலியட் (George Eliot) போன்ற பல பெண் எழுத்தாளர்கள், சமூகத்தின் கேள்விகளுக்கும் தாக்குதல்களுக்கும் அஞ்சி ஒரு ஆணின் பெயரை தனது அடையாளமாகக் கொண்டு எழுதினார்கள் (தமிழகத்தில் இந்த நிலை முற்றிலும் தலைகீழாக இருந்தது. சுஜாதா முதலான பல ஆண் எழுத்தாளர்கள் பெண்களின் பெயரை புனைப்பெயர்களாகக் கொண்டு எழுதி வந்தார்கள்). அந்த வகையில் எழுத்துக்காக புச்சி எமசேட்டா செய்ய வேண்டிய தியாகம் மிகப்பெரும் பொருளாக இருந்தது.
1944-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நைஜீரியாவில் பிறந்து, தனது 16-ஆவது வயதில், சில்வெஸ்டர் என்னும் நைஜீரியரை மணந்து கொண்ட புச்சி எமசேட்டா, தனது 22-ஆவது வயதில், ஐந்து குழந்தைகளுடன், தனது கணவரைப் பிரிந்து மணமுறிவு செய்து கொள்ள, அவரது எழுத்துப்பணி தான் முக்கியக் காரணமாக இருந்தது. இலக்கியத்தின் பொருட்டு எமசேட்டா தனது குடும்பத்தையே இழந்திருக்கிறார். அவரது இல்லற வாழ்க்கை விவாகரத்தில் முடித்ததற்கு காரணமாக இருந்தது அவர் எழுதிய ‘The Bride Price’ என்னும் நாவல் தான். இங்கிலாந்தில் வெள்ளை நிறத்தவர்களிடையே ஒரு கருப்பினப் பெண்ணாக, குடும்பம், அலுவலகம் மற்றும் பிள்ளைகள் என்று அனுதினமும் சக்கரம் போல் சுழலும் வாழ்க்கை எமசேட்டாவிற்கு வாய்க்கப் பெற்றிருந்தாலும், எழுதுவதை அவர் எப்போதும் ஒரு கூடுதல் சுமையாக நினைத்ததில்லை. தனக்குக் கிடைக்கும் மிகக் குறைந்த நேரத்தில், தினசரி அதிகாலை 4 மணிக்கு விழித்து எழுதத் துவங்கும் எமசேட்டா, இடைவிடாது சிறுகச் சிறுக எழுதிச் சேர்த்த பொக்கிஷங்கள் மொத்தம் இருபது நூல்களாக இன்று நைஜீரிய இலக்கியத்தை அலங்கரிக்கின்றன. குழந்தை இலக்கியம் முதல் நாவல், தன் வரலாறு என அவர் எழுதிய அனைத்து வகை நூல்களும் இதில் அடங்கும். எமசேட்டா தான் எழுதிய நூல்களை தனது பிள்ளைகள் என்று எப்போதும் வாஞ்சையோடு அழைப்பார். 2017-ஆம் ஆண்டு, அவர் இறந்தபின், அவருக்கான நினைவேந்தலில் அவரது மூத்த மகன், தனக்கு இருபத்து நான்கு சகோதர சகோதரிகள் என்று குறிப்பிட்டு, எமசேட்டா எழுதிய நூல்கள், அவரது தாயின் மனதிற்கு எவ்வளவு நெருக்கமானவை என்று நினைவு கூர்ந்தார். ஏறத்தாழ எழுத்துப் பணிக்காகவும் இலக்கியத்திற்காகவுமே வாழ்ந்தவர் எமசேட்டா.
அவர் எழுத்துக்களில் பெண் கல்வி, பெண் குழந்தை வளர்ப்பு, நைஜீரியாவில் பெண்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்துதல், இனவெறி தொடர்பான அடக்குமுறைகள் மற்றும் தாக்குதல்கள் மீதான எதிர்ப்பு, ஆண்-பெண் இன பேதங்களைச் சாடுதல் என அவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த அனைத்து சமூகக் குற்றங்களையும் தனது எழுத்தின் வழி எதிர்க்கும் ஒரு சமூகப் போராளியாக எமசேட்டா வாழ்ந்திருக்கிறார். மிகவும் அழகான சிக்கல் இல்லாத ஆங்கிலத்தை தனது மொழிநடையாக வசப்படுத்திக் கொண்டவர்.
இவர் எழுதிய ‘Second Class Citizen’ மற்றும் ‘In the Ditch’ ஆகிய நாவல்கள் இங்கிலாந்து வாசகர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ‘Destination Biafra’ என்னும் நாவலில் நைஜீரிய உள்நாட்டுப் போரின் அவலங்களையும், அதனால் ஏற்பட்ட ஆழ்மனக் கலக்கங்களையும் தெள்ளற விவரித்து இருப்பார். சொந்த ஊரை நேரில் சென்று பார்க்க முடியாத தனது குழந்தைகளுக்கு எமசேட்டா அவருடைய கதைகள் வழி நைஜீரியாவின் நில அமைப்பையும், வாழ்க்கை முறையும், மனிதர்களையும் அவர்களின் பழக்க வழக்கங்களையும் சொல்லும்போது, குழந்தைகள் நைஜீரியாவைப் பார்க்க வேண்டும் என்று ஆசையுடன் கேட்பார்களாம். குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்கள் பிறந்த மண்ணை நேரில் காட்ட இயலாத நிலையை நினைத்து வேதனையுற்ற எமசேட்டா, நைஜீரியாவின் வரைபடத்தை எடுத்து வைத்து, அதில் அவர்களது சொந்த ஊரைக் காட்டி அவர்களை ஆற்றுப்படுத்துவாராம்.
நைஜீரியாவை குழந்தைகள் நேரில் காண முடியாத துயரத்தை எமசேட்டா எழுதித் தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இந்த காரணத்தினாலேயே எமசேட்டாவின் நாவல்களை வாசிக்கும் போது நைஜீரியாவிற்கு நேரில் சென்று வந்த அனுபவம் கிடைக்கும்படி, நைஜீரியாவின் நிலஅமைப்பு துவங்கி, மக்களின் கலாச்சாரம், பழக்கவழக்கம் வரையிலான அனைத்தையும் காட்சிகளாய் கண்முன் நிறுத்தும் வகையிலான கதை சொல்லல் முறையைக் கையாண்டிருப்பார். இது மிக இலகுவாகக் கைகூடி வரக்கூடிய காரியமல்ல. எண்ணவோட்டத்தில் ஒவ்வொரு காட்சி அமைப்பையும் நிறுத்தி, அதை எழுத்தில் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும். தன்னைச் சுற்றி இருக்கும் எதையும் கூர்ந்து நோக்கும் பார்வையும், எழுத்தில் மனவேகத்திற்கு ஈடு கொடுக்கும் வலிமையும் இருக்கும் போது தான், இவ்வாறு எழுத்துக்களில் வாசகரின் மனக்கண் முன் காட்சிகளை சித்தரிக்க முடியும். அது எமசேட்டாவிற்கு நேர்த்தியாக கைகூடி வந்திருக்கிறது.
எமசேட்டாவின் நாவல்கள் பெரும்பாலும் Domestic Type என்று சொல்லக்கூடிய குடும்பப் பாங்கான பின்னணியைச் சேர்ந்த நாவல்கள்தான். இவரின் நாவல்களில் பெரும்பாலும் நாயகிகளே நாயகர்கள். பெண் மையக் கதைகளைக் கருவாகக் கொண்டு எழுதப்படும் நாவல்கள் இவருடையவை. எமசேட்டாவின் நாயகிகள் அனைவரும் அடித்தட்டு சமூகப் பெண்களாவர். நாம் அன்றாடம் சந்திக்கும், சமூகத்தில் கடையடுக்கு பணிகளைச் செய்யும் பெண்களை எமசேட்டா தனது நாவல்களில் நாயகிகளாகக் கொண்டாடுகிறார். இது இன்று நாம் வாழும் சமூகத்தின் எதார்த்தங்களில் ஒன்றாகத் தோன்றினாலும், எமசேட்டா இவர்களை எழுதிய காலத்தில் இது ஒரு அசாதாரணமான காரியம்.
இப்படியான அசாதாரண கதைக்கருவை கொண்ட நாவல்களை, அனாயாசமாக எழுதிச்சென்ற எமசேட்டாவின் எழுத்துக்களை உலகம் முழுவதும் புகழ்ந்து பாராட்டும் போது, அவரது கணவரான சில்வெஸ்டருக்கு மட்டும் எமசேட்டாவின் எழுத்துக்கள் மீது கடுங்கோபமும், வெறுப்பும் தோன்றக் காரணமாக அவர் எழுதிய ஒரு நாவல் அமைந்துவிட்டது. எமசேட்டாவின் எழுத்து அவரது கணவர் மனதில் அப்படி ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் சிறிதும் நினைக்கவில்லை. இலக்கியம் வேறு நிஜ வாழ்க்கை வேறு என்று எமசேட்டா ஒரு போதும் நினைத்ததில்லை. ஒருவேளை இந்தக் காரணத்தின் அடிப்படையில், அவரது கணவரும் எமசேட்டாவின் எழுத்தையும் அவர் வாழ்க்கையையும் வேறுவேறாக பார்க்கவில்லை போலும். ஐந்து குழந்தைகளுடன் தனித்து விடப்பட்டும், இலக்கியத்தை இறுகப் பற்றி கொண்ட எமசேட்டாவின் நாவலில் வரும் கற்பனைக் கதையையும், அதன் பின்னணியில் இருக்கும் உண்மைக் கதையையும் தொடரின் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
(தொடரும்…)