இணைய இதழ்இணைய இதழ் 70தொடர்கள்

இபோலாச்சி; 06 – நவீனா அமரன்

தொடர் | வாசகசாலை

அகோரப் பசியின் சாலை – 2

ங்கிலத்தில் எழுதப்படும் ஆப்பிரிக்க இலக்கியங்களின் வெற்றி, அவர்களின் மண் சார்ந்த கதைகளை அதன்வழி நின்று சொல்வதிலிருந்து துவங்குகிறது. சினுவா ஆச்சிபி, ஆப்பிரிக்காவில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வீசக்கூடிய ஹர்மடான் (Harmattan) காற்றை விவரிப்பதற்கு, அமெரிக்காவில் டொர்னாடோ (Tornado) என்று அழைக்கப்படும் பலத்த சுழற்காற்றுடன் வீசக்கூடிய சூறாவளியை ஏன் ஒப்புமை கூற வேண்டும் என்னும் கேள்வி எழுப்புகிறார். மேற்கத்திய ஆங்கில வாசகர்களின் புரிதலுக்காக, ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவற்றை ஒப்புமை கூறுவதிலிருந்து, ஆப்பிரிக்க இலக்கியங்கள் விடுபட்டு நெடு நாட்கள் ஆகிவிட்டன. நைஜீரியர்களின் தனித்துவத்தை, அவர்களின் வாழ்க்கை முறை பற்றிய புரிதல்களின் வழிநின்று அவர்கள் விளக்க முற்படுகிறார்கள். 

பென் வோக்ரியின் ‘அகோரப் பசியின் சாலை’ (The Famished Road) நாவலும், மண் சார்ந்த தொன்மங்களால் பிணைக்கப்பட்டு, முற்றிலும் நைஜீரிய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. மாய யதார்த்தவாதம், காலம் மற்றும் காலமற்ற நிலை போன்ற நைஜீரியர்களின் அடிப்படை நம்பிக்கைகள் மீது பென் தனது எழுத்துக்களை கட்டமைத்திருக்கிறார். அஜாரோ (Azaro) என்னும் நாவலின் நாயகன் அபிக்கு (Abiku) என்றழைக்கப்படும் ஒரு அமானுஷ்ய குழந்தை (Spirit Child). அஜாரோ ஆவிகளால் பிடிக்கப்பட்ட மனிதன். பிறந்த கணத்தில் இருந்தே, ஆவிகளின் உலகிற்கும் மானுடர்களின் உலகிற்கும் இடையிலான அவனுடைய போராட்டம் துவங்கிவிடுகிறது. ஆவிகள் அவனை அவற்றின் உலகிற்கு அழைத்துச் செல்ல முற்படும் போதெல்லாம், அஜாரோ தனது பெற்றோருடன் இருந்து விடவேண்டும் என்று அவைகளுடன் போராடி ஒவ்வொரு முறையும் ஜெயிக்கிறான். 

ஒருமுறை அஜாரோவை ஆவிகள் பீடித்து, உடலை விடுத்து அவனை அழைத்துச் சென்று விடுகின்றன. அஜாரோ இறந்துவிட்டதாக அவனது பெற்றோரும் உறவினர்களும் நம்பி அவனுக்கு ஈமக் காரியங்கள் செய்து, அவனை சவப்பெட்டியில் வைத்து குழிக்குள் இறக்கும்போது, அஜாரோ மீண்டும் உயிர் பெற்று சவப்பெட்டியில் இருந்து எழுந்து வருகிறான். இவ்வாறு வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் போராடும் வாழ்க்கைதான் அஜாரோவைப் போல் நைஜீரியர்களுக்கும் வாய்த்திருந்தது. அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தின் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கு அடிமைகளாக நாடு கடத்தப்பட்ட நைஜீரியர்களுக்கு வாழ்வின் பூரணங்கள் எதுவும் கிடைக்க விதி வகை செய்யவில்லை. அவர்கள் வாழ்நாள் முழுவதும் குழப்பத்திலேயே இருந்தார்கள். அவர்களது மொழி ஆங்கிலமா அல்லது நைஜீரிய பழங்குடி மொழிகளா? அவர்களது மதம் கிறிஸ்துவமா அல்லது நைஜீரியர்களின் பூர்வீக மதங்களா? அவர்களின் இருப்பு உண்மையா, பொய்யா? அவர்கள் பின்பற்ற வேண்டியது மேற்கத்திய கலாச்சாரமா அல்லது நைஜீரிய கலாச்சாரமா? இவ்வாறான கேள்விகள் அவர்களின் வாழ்வை பீடித்திருந்தன. 

அஜாரோ, ஒரு அபிக்கு (Abiku). யரூபன் கலாச்சாரத்தை பொறுத்தவரையில், ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் கருவாக உருவான பின்பு, கருச்சிதைவினாலும் அல்லது குழந்தை பிறந்த பின் இறப்பதினாலும், அந்தக் குழந்தை முழு முற்றாக இறந்துவிடாது என்று நம்பப்படுகிறது. இறந்து போன அதே குழந்தை, இந்த உலக வாழ்வில் உயிர்பிடித்து இருக்கும் வரை, அதே தாயின் வயிற்றில், மீண்டும் மீண்டும் கருவாக வளர்ந்து, குழந்தையாகப் பிறக்கும் என்பது யரூபன் அபிக்கு தொன்மம். அத்தகைய அபிக்கு குழந்தைகளின் இறப்பிற்கு காரணமாக இருப்பது ஆவிகள் என்பது யரூபன் மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஒவ்வொருமுறை இந்த உலகில் அபிக்கு குழந்தைகள் பிறக்கும்போதும், அவர்கள் ஆவிகளால் பீடிக்கப்பட்டு, ஆவிகளின் உலகத்திற்கே மீண்டும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஏனெனில் அபிக்குகள் குழந்தைகள் ஆவி உலகத்திற்குச் சொந்தமானவை. யரூபன் கலாச்சாரத்தில் மிகப்பிரபலமான அபிக்கு தொன்மத்தை பயன்படுத்தி, பென் வோக்ரி தனது நாவலில் காலம் மற்றும் காலமற்ற நிலை என்ற இருவேறு காலநிலைகளில் நைஜீரியர்களின் வாழ்க்கை சிக்குண்டு இருப்பதை விவரிக்கிறார். 

நைஜீரியா விடுதலை பெற்ற 1960-ஆம் ஆண்டிற்கு முன், ஆங்கிலேயர்களிடம் முற்றிலும் அடிமைகளாக வாழ்ந்து வந்த நைஜீரியர்கள், விடுதலைக்குப்பின் தங்கள் வாழ்வு முற்றிலும் மாறிவிடும் என்று நம்பியிருந்தார்கள். இந்த அடிமைக் காலத்தை கடந்து விட்டால், எல்லையற்ற விடுதலையை வாழ்ந்து கழிக்கலாம் என்று எண்ணியிருந்தார்கள். ஆனால், நைஜீரியா விடுதலை பெற்ற பின்பு, நைஜீரியர்களின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. விடுதலைக்குப்பின் நைஜீரியா துண்டாடப்பட்டு சிதறடிக்கப்பட்டது. நைஜீரிய பொருளாதாரநிலை அதளபாதாளத்திற்குச் சென்றது. ‘பயாஃப்ரா’ என்னும் உள்நாட்டுப் போர் மூண்டது. நைஜீரிய விடுதலைக்குப்பின் உருவான இரண்டு புதிய கட்சிகளுக்கிடையிலான சண்டைகளையும் சச்சரவுகளையும் நைஜீரிய மக்கள் எதிர்கொள்ள வேண்டியதானது. அவர்களின் வேதனைகள், காலம் (Time) என்ற வரையறைக்குள் இருந்து காலமற்ற நிலை (Eternity) என்ற முடிவற்ற கால வரையறைக்குள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்படியானது. 

நைஜீரியர்கள் சந்திக்கும் இன்னல்களின் காரணப் பின்னணியை பென் வோக்ரி தனது நாவலின் தலைப்பின் வழி குறிப்பாக உணர்த்துகிறார். ‘அகோரப் பசியின் சாலை’ (The Famished Road) என்னும் தலைப்பு இருவேறு முக்கிய காரணிகளாலானது. அகோரப் பசி என்பது முன்னாளில் ஆங்கிலேயர்கள் நைஜீரியாவில் கொழிக்கும் செல்வங்களையும் வளங்களையும் அகோரப் பசி கொண்டு, அவர்களின் நாட்டிற்கு எடுத்துச்செல்ல நினைத்ததையும், பின்னாளில் நைஜீரிய விடுதலைக்குப்பின், நைஜீரிய ஆட்சியாளர்கள் அதிகாரத்தின் மீதான அகோரப் பசியின் காரணமாக நைஜீரியாவைத் துண்டாடியதையும், பிரித்து ஆளுகை செய்ததையும், உள்நாட்டுப் போரின் காரணமாக மக்கள் பசியால் மடிந்ததையும் குறிக்கிறது. 

பென் தனது நாவலின் தலைப்பில் பிரயோகப்படுத்தியிருக்கும் இரண்டாவது சொல்லான ‘சாலை’ கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. சாலைகளிட முதலில் அழிக்கப்படுபவை காடுகள்தான். ‘நைஜீரியாவின் வளர்ச்சிக்காக’ என்னும் போர்வையில், ரயில் பாதைகள் மற்றும் சாலைகள் அமைப்பதற்காக அழிக்கப்பட்ட பெருவனங்களை, நாவலின் தலைப்பில் வரும் சாலை என்னும் சொல் குறிக்கிறது. உண்மையில், இந்த சாலைகள் அனைத்தும் நைஜீரியர்களை அடிமைகளாக நாடு கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டன. நைஜீரியர்களைக் கொண்டு இடப்பட்ட சாலைகளின் வழி, அவர்களையே அடிமைகளாக நாடு கடத்துவார்கள் என்று கொஞ்சமும் அவர்கள் எண்ணியிருக்கவில்லை. பிறந்த மண்ணை விட்டு, மக்களை விட்டு, செல்வ வளங்களை விட்டு, நாடுகடத்தப்பட்ட நைஜீரியர்கள் கடைசியாக கண்கள் அகல விரிய, விழிகள் வெறிக்க பார்த்த அல்லது பார்த்திருக்கக் கூடிய ஒரேயொரு விஷயம் அந்த சாலைகளாகத்தான் இருக்க முடியும். அந்த சாலைகளுடன் அவர்களுக்கும் நைஜீரியாவிற்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதை எண்ணி, கப்பல்களிலும் ரயில்களிலும் திணிக்கப்பட்ட நொடிகளில் நிச்சயம் மனம் சுக்குண்டிருப்பார்கள். அத்தகைய சாலைகளைத்தான் பென் வோக்ரி தனது தலைப்பில் நினைவூட்டுகிறார். அகோரப் பசியின் சாலை என்பதை வெறுமனே ஒரு நாவலின் தலைப்பாக மட்டும் பார்த்துவிட முடியாது, அது நைஜீரிய வேதனை வரலாற்றின் ஒரு பகுதி என பென் வோக்ரி தனது எழுத்துக்களின் வழி நிறுவ முற்படுகிறார். 

அஜாரோவைப் போல் நைஜீரியாவிற்கும் தேவைப்படுவது ஒரு புதுவாழ்வு, ஒரு மறுபிறப்பு. அது நைஜீரியர்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப எண்ணும் பூரண நிறை வாழ்வு. நைஜீரியர்கள் காலனியாதிக்கத்திற்கு முன் வாழ்ந்த செல்வ செழிப்பான வாழ்வு. நைஜீரியர்களின் இத்தகைய பெருங்கனவைச் சுமந்து வரும் ‘அகோரப் பசியின் சாலை’ காலமற்ற நிலை என்னும் காலவரையறைக்குள் என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய நைஜீரிய பேரிலக்கியங்களுள் ஒன்று என்பதை நிராகரிக்க முடியாது.

(தொடரும்…)

முந்தையது | அடுத்தது 

writernaveena@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button