
அகோரப் பசியின் சாலை – 1
நைஜீரிய இலக்கியங்களைப் புரிந்து கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் நைஜீரிய கலாச்சார பின்னணியையும், அவர்களின் பூர்வ மற்றும் தொன்மக் கதைகளையும், நைஜீரிய இலக்கியங்களின் போக்கையும், அவர்களின் எழுத்துக்களில் விரவி வரும் படிமங்களையும் குறியீடுகளையும் இபோலாச்சியின் கடந்த பகுதிகளில் ஓரளவு தொட்டு எழுதி விட்டபடியால், நைஜீரிய இலக்கியங்களின் வாசிப்பைத் தூண்டும் நைஜீரிய இலக்கியக் கூராய்வுகளையும், எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் எழுத்துக்களில் உள்ள தனித்துவங்களையும் பற்றி இனி வரும் கட்டுரைகளில் விரிவாகப் பார்க்கலாம்.
சினுவா ஆச்சிபி (Chinua Achebe) மற்றும் வோலே சோயின்கா (Wole Soyinka) போன்ற நைஜீரிய இலக்கிய முன்னோடிகள் குறித்த பரிச்சயம் தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு குறிப்பிடத்தகுந்த வகையில் இருப்பதால், நைஜீரிய நாவலாசிரியரான பென் வோக்ரியின் (Ben Okri, b. 1959) எழுத்துக்களை முதலில் அறிமுகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றியது. பென் வோக்ரி நைஜீரியாவின் யரூபா (Yoruba) சமூகத்தை சேர்ந்தவர். ட்ரான்ஸ் அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தின் மூலம் பென் வோக்ரியின் மூதாதையர்கள் பிரிட்டனுக்கு நாடு கடத்தப்பட்டது, பென்னின் வாழ்க்கையில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்திய முக்கிய காரணியாக அமைந்தது. சிறுவயது முதலே பென் இங்கிலாந்திலும் நைஜீரியாவிலும் மாறி மாறி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார். இதனால் இருவேறு கலாச்சாரப் பின்னணிகளை வாழ்நாள் முழுவதும் பென் எதிர்கொள்ளும்படியானது.
பென்னின் இந்த சிக்கலான வாழ்க்கை முறை, இளம் பிராயத்திலேயே ‘காலம்’ குறித்த கேள்விகளை அவர் மனதில் எழுப்பத் துவங்கியிருந்தது. கிரேக்க தத்துவவாதி ஹெராக்லீடஸ் (Heraclitus), காலம் குறித்து அவரது சீடர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஒரே நதியில் இருமுறை நம்மால் இறங்க முடியாது” என்றார். ஓடும் நதிநீரில் எத்தனை முறை இறங்கினாலும், ஒருவர் ஒவ்வொரு முறையும் புதிய நீரில்தான் கால் வைக்கும்படியாகும், அதுபோல ஒருமுறை வாழ்ந்த எந்தவொரு ஒரு நொடிப் பொழுதையும் திருப்பி மீண்டும் அச்சு அசலாக அதே போல் எவராலும் வாழ இயலாது, இதுவே காலத்தின் தன்மை. இந்த உண்மை பென்னின் மனதை மிக ஆழமாக பாதித்திருந்தது.
இங்கிலாந்தில் கழித்த பல நாட்களை, பென் மீண்டும் நைஜீரியாவில் வாழ விரும்பினார். பென்னின் இந்த தேடல், அவரை காலம் மற்றும் காலமற்ற நிலை என்ற இரு பிரிவுகளுக்கு இடையில் கொண்டு சென்று நிறுத்தியது. மனித தேவைகளின் அடிப்படையில் நாம் காலத்தை நான்கு பிரிவுகளாக பிரித்து இருக்கிறோம். இந்தப் பிரிவுகள் அனைத்தும் சமூகக் காரணிகளாலானது. காலத்தை, முதலாவதாக, கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் காலம் என்றும், இரண்டாவதாக, கிறிஸ்து பிறப்பிற்கு முன், கிறிஸ்து பிறப்பிற்கு பின் என்றும், காலத்தின் ஒரு சிறு துண்டான ஒரு நாளினை கடிகாரத்தின் மணி நேரத்தைக் கொண்டும், காலத்தினால் நிகழும் வயது முதிர்வு, மூப்பு போன்றவைகளை உயிரியல் கடிகாரத்தைக் கொண்டும் தீர்மானிக்கிறோம்.
ஆனால் தத்துவார்த்த சூழலில், காலம் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. மனிதன் உலகில் வாழும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பொழுதை காலம் (Time) என்றும், மனிதனின் உலக வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட, இறப்பு முதல் முடிவற்ற வாழ்க்கையை, காலமற்ற நிலை (Timelessness) என்றும் பல சித்தாந்த கொள்கைகள் ஏற்றுக்கொள்கின்றன. மேலும் காலம் இயல்பிலேயே மெதுவாகவும் வேகமாகவும் நகரும் தன்மை கொண்டது. நமக்குப் பிடித்தவர்களுடன் செலவிடப்படும் போதும், திரைப்படங்கள் பார்ப்பது, கேளிக்கையில் ஈடுபடுவது போன்ற பிடித்த விஷயங்களைச் செய்யும் போதும் அதிவேகமாக நகரும் காலம், ஓரிடத்தில் வரிசையில் நிற்கும் போதும், மனதிற்கு ஒப்பாத காரியங்களைச் செய்யும் போதும், ஆமை வேகத்தில் நகர்கிறது.
காலத்தின் இத்தகைய தன்மைகளை பென் நன்கு அறிந்திருந்தார். அதன் அடிப்படைக் கூறுகளை ஆழமாக உள்வாங்கி இருந்தார். பென் தனது மூன்று நாவல்களிலும், (The Famished Road, Songs of Enchantment and Infinite Richess) காலத்தையும், காலமற்ற தன்மையையும், கருப்பொருளாகவும், கதைகளின் மையப் புள்ளிகளை இணைக்கும் முக்கியக் கோடாகவும் பயன்படுத்தி இருக்கிறார். காலத்தின் தன்மைகள் மீது புதுமைகளைப் புகுத்தி அதனைப் பரிணமிக்கச் செய்திருக்கிறார். பென், காலம் மற்றும் காலமற்ற நிலை இரண்டையும், மனிதன் உலகில் வாழும் காலநிலையில் ஒருசேரக் கொண்டுவரும் முயற்சியைத் தனது நாவல்களில் மேற்கொண்டிருக்கிறார்.
காலத்தை அடிப்படையாகக் கொண்டு பென் தனது நாவல்களில் மாய எதார்த்தவாதத்தைக் (Magical Realism) கட்டமைக்கிறார். சல்மான் ருஷ்டி (Salman Rushdie) முதல் கேபிரியேல் கார்ஸியா மார்க்விஸ் (Gabriel García Márquez) வரையிலான பல உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்கள் மாய எதார்த்தவாதத்தை தங்களது எழுத்துகளில் கையாண்டிருந்தாலும், பென் தனது எழுத்துகளில் எடுத்தாளும் மாய எதார்த்தவாதம் மிகவும் வித்யாசமானது. மேலும், அது பென்னின் கதைகளுக்குள் முற்றிலும் ஒன்றி இருந்து தேவைப்படும் நேரங்களில் வெளிப்படுவது. மையக் கதைக்கருவை எந்த விதத்திலும் நிலைநெகிழ்த்தாதது.
பென் வோக்ரியின் நாவல்களின் வாசிப்பிற்கு, மாய எதார்த்தவாதக் கோட்பாட்டின் மீதான புரிதலும் மிகவும் அவசியப்படுகிறது. ஏனெனில் மாய யதார்த்தவாதத்தை பின்னணியாகக் கொண்டுதான் அவரது நாவல்கள் இயங்குகின்றன. மனிதன், குழந்தைப் பருவத்தை கடக்கும்போது, குழந்தைத் தன்மையையும் இழந்து விடுகிறான். ஆனால் இந்த இழப்பினை மனித மனம் முற்றிலுமாக ஏற்றுக் கொள்வது இல்லை. இளமைப் பருவத்தில் உலகின் எதார்த்தங்களை மனிதன் தன் வாழ்வில் சந்திக்க நேரும் போது, அவற்றைச் சந்திப்பதிலும், எதிர்கொள்வதிலும் இருக்கும் சிக்கல்களில் இருந்து விடுபட நினைக்கிறான்.
எதார்த்தங்கள் தரும் சிரமங்களில் இருந்து விடுபட மனிதனுக்கு இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்று எதார்த்தத்தில் இருந்து விலகியோடி முழு முற்றாக தன்னை யதார்த்தத்திலிருந்து விடுவித்துக் கொள்வது அல்லது அதனிடமிருந்து ஒளிந்து கொள்வது. இரண்டாவது, எதார்த்தத்திற்கு எதிர்மறையான கற்பனை உலகினைச் சித்தரித்து, அதில் வாழப் பழகிக் கொள்வது. எதார்த்தத்தை கண்டு பயப்படும், அதனிடமிருந்து ஓடி ஒளிந்து கொள்ளும், அதற்கு நேர்மறையான கற்பனை உலகைச் சித்தரிக்கும் கோட்பாடுதான் மாய எதார்த்தவாதம். மாய எதார்த்தவாதத்தில் மாயாஜாலம் மனிதனின் அனுதின வாழ்வின் ஒரு பகுதியாக மாறி விடுகிறது.

இலக்கியங்களில் மாய எதார்த்தவாதம் என்பது இலக்கியக் கதாபாத்திரங்கள் அனுதினமும் மாயங்கள் நிகழக் கூடிய சூழலில் வாழ்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கும். அந்த மாய நிகழ்வுகளை கதாபாத்திரங்கள் எதார்த்தத்தின் நிகழ்வுகளாக உள்வாங்கிக் கொண்டிருக்கும். அவை அனைத்தையும் உண்மை என்று நம்பும். ஆனால், வாசகர்கள் மட்டுமே கதையில் நிகழ்பவை எதார்த்தமல்ல, அவை வெறும் மாயை என்பதை உணர்ந்திருப்பார்கள். இத்தகைய மாய எதார்த்த வாதத்திற்கு எடுத்துக்காட்டாக பலர் ஹாரி பாட்டர் கதைகளை கூறுவார்கள். ஆனால், ஹாரி பாட்டர் கதைகள் முற்றிலும் மாயாஜால வகையைச் சார்ந்தவை.
மாய எதார்த்தவாதம் என்பது எதார்த்தத்தையும் மாயையையும் பிரிக்கும் ஒரு சிறு கோடு போன்றது. எடுத்துக்காட்டாக, பென் வோக்ரியின் The Famished Road நாவலில் வரும் முக்கியக் கதாபாத்திரம் ஒரு அமானுஷ்யக் குழந்தை (Spirit Child). முற்காலத்தில், கருவுறும் தாய்மார்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையின் காரணமாக அதிக கருச்சிதைவுகளை எதிர்கொள்வதும், ஊட்டச்சத்து குறைவான தாய்மார்களுக்குப் பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இறப்பதும் வழக்கமாக இருந்தது. நைஜீரிய தொன்மக் கதைகளின் படி இவ்வாறான கருச்சிதைவுகள் மற்றும் குழந்தை பிறந்து இறப்பது போன்ற காரியங்கள் அமானுஷ்ய சக்திகளின் வழியே நிகழ்வதாக நம்பப்படுகிறது. தமிழ் தொன்மக் கதைகளிலும் கூட, இவ்வாறான நம்பிக்கைகள் இருக்கின்றன.
இவ்வாறான இயற்கை நிகழ்வுகளை மாயையின் பின்னணியைக் கொண்டு நம்ப முற்படுவதே மாய எதார்த்தவாதமாகும். மாய எதார்த்தவாதத்தின் மீதான இத்தகைய புரிதலுடன், பென் வோக்ரியின் நாவலான ‘அகோரப் பசியின் சாலை’ (The Famished Road) குறித்த உரையாடலை இபோலாச்சியின் அடுத்த பகுதியில் தொடருவோம்.
(தொடரும்…)