
இறுதி ஊர்வலத்தில் இசைக்கப்படும் இசையால்
தன்னிச்சயாய் கால்களும் உடலதிர்வும் ரசனையைக் கூட்டின
வேண்டாம்! வேண்டவே வேண்டாம் இன்று நீ!
ஆடுவதில் உச்சத்திலிருப்பவனின் ஆட்டத்தில் பங்குபெறலாம்
ஊர்வலத்தினூடே வெளியேறும் வெறுமையில்
துடித்தடங்கும் இளமை தாண்டிய கூக்குரல்கள் கூத்தாடுவதில்
பங்களிப்பவனின் பனிச்சிகரத்திற்கு கேட்குமா?
*
கலைத்த தேன் கூட்டை விட்டு
வெளியேறும் ரீங்காரம்
அங்கே தொட்டு இங்கே தொட்டு
நெடிதுயர்ந்த மரம் தொட்டு
ஏறி அடைய முடியாத மலைப்பாறை அடியில்
தொட்டடைந்து
சிறைபட்டு பரிசோதனையின்
முடிவில் செயற்கையாய்
கண்ணாடிப் பெட்டிக்குள்
எப்பொழுதும் தொடும் தூரத்தில் என் கூடு.
*
எண்ணக் காடுகளின் குவிப்பை வன்ம நெருப்பாலிட்டு உருக்கி
வார்த்து வெறுப்பின் நஞ்சை
தடவி எய்ததால்
குறி நோக்கிப் பாயும்தோறும்
விரிசல்
செயலிழப்பு
அடர்ந்த இருளுக்குள் இருளாய் மிதித்து
விரிசலினூடே அமிழ்த்தப்படும் உண்மையின்
பல ரூபங்கள் வரும் காலங்களில்
தன்னிச்சையாக வெளியேறும் சமயங்களில்
மண்டியிட்டுக் கதறி என்ன பயன்?
*
காலைக்குள் வேலைகளை
முடித்துக்கொண்டால்
மாலையில் மீதமிருப்பதை
பார்த்துக் கொள்ளாலாமல்லவா?
உச்சமடைந்து கீழிறங்கத் தொடங்கும்போது
அதிகமாவதைக் கண்டு
கதவடைத்துப் புழுங்கி
அரைவேக்காடடைந்து மருகி
மின்விசிறிக் காற்றின் போதாமையால்
கைவிசிறியாகி
ஒற்றை உடையில் மாலைக் காற்றில்,
“அப்பாடா” என்றபோது
மாலைத் தென்றலைக் கண்மூடி அனுபவிக்கும் இன்ப வருடல்.
*
ஊரைச் சுற்றித் திரிகிறேன்
என்ற கெட்ட பெயர் எனக்குண்டு
நீ என்னையும் நான் உன்னையும்
சுற்றியதால்தானே அத்தனையும் உண்டானது
இதிலென்ன ரகசியம்
நீயும் உன்னைச் சுற்றி
நானும் என்னைச் சுற்றி
எல்லாமும் எல்லாவற்றையும் சுற்றி
பிரபஞ்சமே சுற்றுகிறது.
*