
கலைஞன் தன்னை ஓர்மை நிலையிலிருந்து எப்போது அறிந்து கொள்வான்?
அதற்கு எளிதில் தெளிவான பதிலை யார் ஒருவாராலும் முழு முற்றாக அளித்துவிட முடியவதில்லை. கலைஞன் தன்னிலை இழந்து இயற்கையின் போக்கில் செயல்படுகிறவனா? அப்படி அவன் இருக்க முடியுமா? தன்னை உணர்கிற நிலையில் அவனது கலைத் தன்மையின், படைப்பின் உச்சநிலையைக் குறித்து அவன் கவலைப்பட வேண்டாமா?
சிக்கலான கேள்விகள் எல்லாம் கலையைக் குறித்து பேசுகிறபோது தத்துவத்தை, அதன் சரடுகளை ஏற்றோ, அதற்கு அவசியம் இருந்தால் ஒழிய அல்லது அதனை உடைக்கவோ முயலும். “இன்னது, இப்படித்தான் இருந்தே தீர வேண்டும்” என்ற அடிப்படையில் இருந்து முற்றும் விலகிவிடவும் முடியாது. அவை படைப்பாக இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
கலைஞன் தன்னுடைய படைப்பின் உச்சநிலையை அடைவதற்கு தத்துவங்களை, பழமைச் சரடுகளை உடைத்துப் பார்ப்பதில்தான் எத்தனை மகிழ்ச்சி அடைகிறான். அதோடு அவன் தன்னுடைய பரிசோதனைகளை சமூகத்தை நோக்கிச் செலுத்த முயலும்போது பல்வேறு சிக்கல்களை அவன் சந்திக்கக் கூடும். அது பரிசோதனை. அவ்வளவே. அதன் முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித்துக் கொண்டு பரிசோதனைகளை எந்தப் படைப்பாளியும், படைப்பின் வழியே சமூகத்தின் நாடியை பிடித்துப் பாப்பதில்லை. அவனுடைய உணர்ச்சியின் வழி வெளிப்பாட்டு பரிசோதனையை மேற்கொள்ள முயல்கிறான். பரிசோதனை, அதன் தன்மை, அதன் இயங்குநிலை, அதனைச் சார்ந்த சமூகம், அச்சமூகத்தில் அந்தப் படைப்பு ஏற்படுத்தும் தாக்கம், இவைகளைக் கொண்டுதான் அப்பரிசோதனை வெற்றி பெற்றதா? இல்லை தோல்வி அடைந்ததா என்று கூற முடியும்.
பாரதியும் தன்னுடைய காலத்தின் பழமைச் சரடுகளை உடைக்கத்தானே பார்த்தான். உடைக்கவும் முடிந்தது அவனால். அதனால்தானே அவனுடைய படைப்பிலும் சமூகத்தை நோக்கிய பரிசோதனைகள் இருந்தன. அவை, இன்று வரையும் பேசப்படுகின்றன. படைப்பு மனதை யாரும் கட்டுப்படுத்திவிட முடியாது. இயக்கம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இருக்கும். படைப்பு மனநிலை இயல்பில் தொடர்நிகழ்வாக இருந்தால் ஒழிய படைப்பு, சோதனை ரீதியில் வெற்றியைப் பெற முடியாது.சோதனைக்கான காலம் என்ற வரையறை இல்லை. எனினும், தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் சோதனைக்கு விதையாக
ஆகின்றன.
சிறுகதையில் செய்யப்படுகிற பரிசோதனைகள் உருவ, வடிவ, உள்ளடக்கங்கள்,சொற்கட்டுகள் என இன்று தமிழில் தொடர்ந்து பரிசோதனைகள் நடக்கின்றன. அது தேவையும் கூட. இதில் உள்ளடக்கங்களாக எதை, எவைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. அதை படைப்பாளியும் அவனது படைப்பும்தான் தீர்மானிக்கும். அதுவே உன்னதமானதும், படைப்பு நிலையில் உச்சமாக நிலைத்திருக்கவும் முடியும். அப்படைப்பு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் இல்லை.
தஞ்சை ப்ரகாஷின் கதைகள் கூரிய நகங்களால் ரணத்தை ஏற்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. சமூகத்தில் ஆண்களுக்கு எதிரான கேள்விகளைக் கேட்கத் துணிந்த எழுத்து. தேர்ந்த சொற்கட்டினை அவருடைய கதைகளில் நாம் அவதானிக்க முடியும். உரையாடல்கள் கொச்சை மொழியில் சில இடங்களில் இழைந்து, எழுத்துகள் தஞ்சை ப்ரகாஷின் சொல் வன்மைக்கு வலுவை சேர்க்கின்றன. அடியாழத்தில் புதைந்து கிடக்கும் வன்மத்தின் குரூரமான அடங்கிவிடாத வெறித்தனத்தின் வெளிப்பாட்டையே தன்னுடைய எழுத்தில் கொணர்கிறார். நிதானமான கதைசொல்லும் முறையை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். இது அவருடைய எல்லாக் கதைகளிலும் அழுத்தத்தை ஏற்படுத்த முயல ஒரு காரணமாக இருக்கிறது.
‘மேபல்’ கதையின் மூலம்தான் தமிழ் வாசகர்களுக்கு தஞ்சை ப்ரகாஷ் நன்கு அறிமுகம் ஆகிறார். காரணம் அக்கதையில் அவர் எடுத்துக் கொண்ட கதைக் கருவும், அதன் பெண் கதா பாத்திரம் இழைந்தோடும் தன்மையும்தான். அலுத்துப் போன பழைய கதைகளுக்குப் பதில் காத்திரமான கதையாக அது இருந்தது. அதுவே அந்தக் கதையின் வெற்றிக்குக் காரணம். அவருடைய பாதிக்கக் கூடிய கதைகளில் மற்றொரு கதையும் உண்டு. ‘பூ கோஸ்’ என்கிற மற்றொரு உறவு சோதனை கதை.
1994-ல் ‘குயுக்தம்’ இதழில் வெளியானது ‘பூ கோஸ்’ கதை. தஞ்சை மராட்டிய குடும்பத்தின் பின்னணியில் நிகழ்கிறது இக்கதை. முக்கிய கதாபாத்திரங்கள் மீரா, வித்யாசாகர். “யாருக்கு யார் விடுதலை தரக் கூடும்? சுதந்திரம், விடுதலை போன்ற வார்த்தைகளை நம்பகிறவர் இல்லை” வித்யாசாகர் என்ற அறுபது வயதைக் கடந்த சிலை வடிக்கக் கூடிய சிற்பக் கலைஞன். உணர்ச்சிகள் இருந்தால் தானே அவன் கலைஞன்? பூரணமான உணர்ச்சியை தன் அனுபவத்தில் இருந்து தெரிந்து கொண்ட கலைஞன். இந்த வித்யாசாகர் கதாபாத்திரம்.
‘மீரா’. குடும்ப வன்முறைக்கு ‘பாரம்பரியமான’ கணவனிடம் தன்னை தாரைவார்த்துக் கொண்டு, தனக்கு இந்த வன்முறையிலிருந்து விடுதலை, அல்லது குறைந்தபட்சமான மரியாதையாவது கிடைக்குமா? என்று ஏங்குகிற ‘ஏகாப்ஜனா’ என்ற கணவனால் துன்புறுத்தலுக்கு ஆளாகிற மனைவிக்குரிய எல்லா விதமான ‘லட்சணங்களையும்’ கொண்டிருப்பவள். அன்றும் சரி, இன்றும் சரி, குடும்ப வன்முறை என்பது எவ்வித மாற்றமும் இன்றி தங்குதடையின்றி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதானே இருந்து வருகிறது. அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற சமூகத்தில் சடங்காக, சலித்துக் கொண்டு அதை ஏற்றுக் கொள்கிற பெண்களும் இன்று இருக்கிறார்களா? அதில் சிறிதளவு வேண்டுமானால் மாற்றம் நிகழ்ந்திருப்பதை ஏற்றுக் கொள்துகிறோம். இன்றைய நவீன கவிதைகளிலும், கதைகளிலும் மீறியவர்கள் ஏராளமாக படைக்கப்படுகின்றனர். அது தொடர் மாற்றத்தின் விளைவு. ‘பூ கோஸ்’ கதை நிகழ்கிற குடும்பத்தின் பின்னணியை இக்கதையில் கவனிக்கப்பட வேண்டியது அவசியம்.
மராட்டியர் காலத்தில் சிற்பக் கலைக்கும் ஒரு மதிப்பு உண்டு என்பதை வரலாற்றில் நாம் அறிகிறோம். ஒரு பெண்ணை ‘மாடலாக’ நிற்கவைத்து அவளை அங்குலம் அங்குலமாக படியெடுத்தாற் போல கோயில் சிலைகள் வடிக்கப்பட்டன. சிலை வடிவத்திற்கு படியெடுக்கும் அளவிற்கு அழகான பெண்காக மீரா சித்தரிக்கப்படுகிறாள்.
‘ஏகாப்ஜனா’. “இவளெ நான் வெச்சி வடிக்கிறதுக்கு இவப் பூப் போட்டு கும்புடணும். ஐந்நூறு ரூபாய் வாங்கிட்டுதான் கட்டிகிட்டேன். இவளெ அடிப்பேன், மிதிப்பேன், உதைப்பேன்” அசல் பழமையான முரட்டுத்தனமான கணவன். மீராவின் மீது ஆசை. கொள்ளை ஆசைதான். உடலோடு மட்டும். மீராவின் அழகை ஆள வேண்டும் ஏகாப்ஜனாவிற்கு. மீரா போன்ற அழகை ரசிக்கிற குணம் யாரிடம் இருக்கும்? மனிதனை நேசிக்கிறவனிடம்தான் இருக்கும். வித்யாசகரைப் போல கலைஞனா மீராவின் கணவன்? இல்லை. எந்த அக்கறையும், ஏன் தான் கட்டிய மனைவியையும் நேசிக்காதவன் அவளுடைய அழகையா ரசிக்கப் போகிறான். அவனைப் பொருத்தவரை ‘அதுக்கு’ மட்டும்தான் மீரா.
“நான் ஒரு ஆர்ட்டிஸ்ட். இந்த சாமி, பூதம் செலையெல்லாம் செய்கிற ஆசாரி. இப்ப எனக்கு ஒன் பொண்டாட்டியோட மாதிரி வேணும். அதாம்பா மாடல். நான் செல செய்யிறதுக்கு நின்னு, ஒரு நாலுமணி நேரம் காட்டுனா போதும். தினம் நாலுமணி நேரம்தான். வாரத்துக்கு ஐநூறு ரூபாய் தருவேன்- நீயும் வந்து கூடவே இருக்கலாம்.” வித்யாசாகர் என்ற ‘ஆர்ட்டிஸ்ட்’ கலையின் மீது தீராத தாகம் கொண்டவன். தன் படைப்பு எப்போதும் முழுமையோடு, தெய்வாம்சம் பொருந்தியிருக்க வேண்டும் என்று உழைக்கும் கலைஞன். கலையையே ஆத்மாவாக கொண்டுள்ளவன். ‘மீரா’வை அவன் தேர்ந்தெடுக்கக் காரணங்கள் சொல்லத் தேவையில்லை. அவள், அழகும், பூரண கலை வடிவ உடலமைப்பையும் பெற்றிருப்பதாக வித்யாசகரின் உள்ளத்தில் நிலை நின்றுவிட்டது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அவள் உடலமைப்பும், அழகும் அவனை ஈர்க்க, தான் வடிக்கும் சிலைக்கு ‘மாடல்’ஆக இருக்க ஏகாப்ஜனாவிடம் கேட்கிறான். அதற்கு ஆயிரம் ரூபாய்களை நீட்டவும் ஏகாப்ஜனா மடங்கித்தான் போகிறான்.
மீரா, குடும்பப் பெண்ணாயிற்றே. அவள் இதற்கு துளியும் சம்மதம் செய்கிறவள் இல்லை. எனினும் அவள் நிர்பந்தத்தின் காரணமாகவே தான் ‘மாடலாக’ நிற்க ஒப்புக் கொள்கிறாள். வித்யாசாகரின் கலையும், பார்வையும் அவளுக்கு ஒருவிதத்தில் பிடிபட்டுப் போய்விடுகிறது. மனம் அவனிடமும், அவனது கலையிடமும் லயித்துவிடுகிறது. அக்கலையின் மீதும், கலைஞன் மீதும் தன்னை உடல் அளவிலும் ஒப்புக் கொடுத்துவிடுகிறாள். விடுதலையை நாடும் ஒருவர் அதற்குரிய கலையின் மூலம் தன்னுடைய விடுதலை குறித்து வெளிப்படுத்துவது இயல்பு. மீரா, நாள்தோறும் தன் கணவனின் அன்புக்காக, மரியாதையான நடத்தையை எதிர்பார்க்கும் தருணங்களில் வன்முறைக்கு எளிதில் ஆட்படுகிற பெண். தன்னை மதிக்கும், தன் அழகை ஆராதித்து ஒரு தெய்வத்திற்கு ஒப்பாக ‘ஈஸ்வரி’ போல அவளது கலை வடிவான உடலை தெய்வாம்சமான பார்வையை அழகை, அகில லோகத்திற்கும் எடுத்துக் காட்டும் கலைஞன் வித்யாசகரிடம் அவள் தன்னை மனத்தால் இழப்பது அவள் அறியாமல் நடந்ததா என்பதைக் கதையின் போக்கில் புரிந்து கொள்ளலாம்.
வித்யாசாகர் தன் கலைப் படைப்பை தெய்வ நிலையில் பார்க்கும் மனநிலையை அனுபவத்தின் மூலம் பெற்றவர். மீராவின் உணர்ச்சி நிலையைப் புரிந்துகொண்டு விலக முயற்சித்தாலும், மீராவினால் ஆட்கொள்ளப்படுகிறார். மீராவின் உணர்ச்சிக் கட்டுகள் அனைத்தையும் உடைத்துவிட்டு ஒரு சுதந்திரமான மனநிலையை உணர்த்தியது, இக்கலைஞன்தான். வித்யாசாகரிடம் மூண்டுவிட்ட ‘அதனுடைய’ தாகத்தில் மூழ்கித் திளைக்கிறாள். ஆனால் அதே தாகத்தையும், உணர்ச்சியையும் ‘ஏகாப்ஜனா’விடம் அவளால் பெறமுடியவில்லை. அவனுடனான உறவு அருவெறுப்பு என்ற நிலையில்தான் அந்த உறவு அவளுக்கு ஏற்படுகிறது. அவனுடைய மிருகத்தனம், பெண்களை ‘அதற்கு மட்டும்தான்’ என்று உடலை மட்டுமே புணர்பவன். மற்றொரு நாளில் ஏகாப்ஜனாவுடனான புணர்ச்சியின் போது அவளின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் கசிகிற அளவிற்கு முரட்டுத்தனத்தைக் கொண்டவனாக இருக்கிறான்.
“உள்ளே ஆழத்தில் கை விரல்களோடு விரிந்து வரும் பூ கோஸ் போன்ற ஏதோ ஒரு சதை வெண்படலம் அங்கு முழுமையுடன் வியாபிக்கிற வெறியோடு முளைத்திருந்தது”.
மீராவிற்கு மேற்கொள்ளப்படுகிற மருத்துவப் பரிசோதனையின் பின் அவளுக்கு புற்றுநோய் வந்திருப்பதாக தெரியவருகிறது. அந்நிலையில் அவள், எதிர்பார்ப்பது எல்லாம், தன்னை அரவணைத்துக் கொள்ளும் மனதை. அது ஏகாப்ஜனாவிடம் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை துளியும் அவளிடம் இல்லை.
அவள் மனம், வித்யாசாகரின் ஆதரவையே நாடுகிறது. “இந்த ஒலகம் நம்ப ரெண்டு பேரையும் சம்மதிக்காது. சம்மதிக்காட்டி கூடப் பரவாயில்ல, வாழவுடாது நம்மளை பழிவாங்கிடும்.” என்பது வித்யாசகரின் கூற்று. குடும்பம் என்ற பற்றை பந்தத்தை வேண்டாமென விட்டெறிந்த துறவு நிலையை நோக்கி மனத்தை செலவிடுக்கத் துணிந்துவிட்டவர், கலைஞன் என்ற மேலான மனோநிலை விடுதலையை அளிக்க முற்பட வேண்டியது அவசியமா? வித்யாசாகர் மனத்திலும் மீராவை விடுதலையை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற அபத்த திட்டத்தைத் தீட்டவில்லை. “ஏகாப்ஜனாதான் உன் கணவன். உன்னை அவன் நேசிப்பான். உன்னை அவன் விட்டுவிட மாட்டான்” என்று கூறி மீராவிடம் இருந்து தன்னை விலக்கிக் கொள்ளவே முயற்சிக்கிறது அந்த கதாபாத்திரம். உளச்சிக்கல் மீராவை ஏற்றுக் கொள்ள மறுக்கவும், சமூகச் சிக்கலும் மீராவை ஏற்பதற்கு தடுக்க காரணமாகவும் இருக்கலாம். எனினும், மீராவின் மனது நாள்தோறும் தனக்கு மறுக்கப்பட்ட விடுதலையை அளித்தவன் இந்தக் கலைஞன் என்ற நம்பிக்கை உறுதிநிலை அவளுக்கு இருக்கிறது. நாளுக்கு நாள் மாறிவரும் நவநாகரிகங்களை நுகர்வதற்கு பெண்களுக்கு முழு சுதந்திரமும் ஏற்பட்டுவிடவில்லை இந்த தேசத்தில். அதற்கு நாம் இன்னும் பலநூறு ஆண்டுகள் முன்னோக்கி நகர வேண்டும், என்ற ‘மாறல்’ தன்மையையும் இக்கதையில் தஞசை ப்ரகாஷ் போதிக்க முற்படவில்லை. உணர்ச்சிப்பாங்கான மனநிலையையே மீராவின் பாத்திரம் வழி பிரதிபலிக்கச் செய்ய முயல்கிறார்.
இக்கதை தஞ்சை மராட்டியர்களின் பின்னணியில் சொல்லப்பட்டாலும், குடும்ப வன்முறையின் மூர்க்கத்தனத்தை ‘ஏகாப்ஜனா’ கதாபாத்திரத்தின் மூலம் தோலுரித்துக் காட்டுகிறார். எங்கேணும் சற்றுப் பிசகியிருந்தாலும் இக்கதையை சுத்த ‘போர்னோ’ வகையானது என்று புறந்தள்ள்ளி விட்டுவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது. ஆனால், ஆசிரியர் அத்தகைய அதல பாதாளமான நிலைக்கு கதையைக் கொண்டு
செல்லவில்லை. காப்பாற்றி விட்டார். அதில்தான் இக்கதையின் வெற்றியும் இருக்கிறது. ஏனோ தெரியவில்லை, தஞ்சை ப்ரகாஷ் வெகு காலம் கடந்துதான் தமிழ்ச் சிறுகதையில் தற்போது மீண்டெழ வேண்டியிருக்கிறது. பெண்களும் கூட தஞ்சை ப்ரகாஷின் கதைகளைப் படித்ததாகச் சொல்கிறார்கள். சிலர் இதை மேற்சொன்ன அப்பட்டமான ‘போர்னோ’ வகை, ‘எரோட்டிக்’ வகை என்று நினைத்து அவரது நூல்களையே எடைக்குப் போட்டதாகவும் ஒரு செய்தி கிடைத்தது. பெண்களின் மனநிலையை, ஒரு ஆணின் வன்முறைத் தன்மையில் இருந்து வெளிப்படுத்தும் போது ஏற்படுகிற உளச்சிக்கல்களுக்கு ஆட்பட்டு, படைப்பாளி பெரிதும் பாதிக்கப்பட வேண்டியிருக்கும். ‘பள்ளத்தாக்கு’ கதையில் வரும் மைதிலியும், இந்தக் கதையில் வரும் மீராவும் தனிததனியே ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய பாத்திரங்கள்.
பூ கோஸ் கதையின் சரிவு எங்கே தடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் கேள்வி. தேர்ந்த சொற்கட்டின் அமைப்பு, உறவுச் சிக்கலான கதைகளில் தத்துவங்களை ஆழமாகப் படரவிடவில்லை. கலைத் தத்துவத்தின் மீது தீவிரத்தன்மை கொண்ட பாத்திரம்தான் வித்யாசாகர். அவன் மீராவை அனுகும் விதம், அவளை எந்த விதத்திலும் பாலியல் தன்மையில் கீழே தள்ளிவிட முனையவில்லை. மீரா, தன்னை அடித்து உதைத்தாலும் தன் கணவனுக்கு அடிமையாக சமூகத்தின் நியதிப்படி வாழவிரும்பும் சராசரியான பெண். என்றாலும், மராட்டிய சமூகத்தின் மொத்த கலாச்சாரத்தையும் இக்கதை பிரதிபலிக்கவில்லை. அதற்கான அவசியமும் இக்கதையில் ஏற்படவில்லை. ஓரிரு இடங்களில் அதற்கு குறிப்புகள் இருக்கின்றன. உணர்ச்சி வெளிப்பாட்டில்தான் கதை பலமாய் நிற்கிறது. அதுதானே ஒரு கதைக்கு அடிநாதம். இக்கதையில் உணர்ச்சி வெளிப்பாட்டு முறை சரியாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.
உணர்ச்சி நிலையை எழுத்தில் கொண்டுவருவதில்தான் ஒரு எழுத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. மீரா-வித்யாசாகர் இடையேயான உடையாடலில் உணர்ச்சிநிலையானது இழைந்து, மெல்ல மெல்ல வாசிப்பவரின் மனத்தைத் தாக்க முயற்சிக்கிறது. ஒரேயடியான தாக்குதல் சில நேரத்திற்கு பின் சட்டென காணாமல் போய்விடும். இக்கதையில் மீராவின் உணர்ச்சி, மருளும் தன்மையையும், ஒரு தெய்வாம்சம் மிக்கவளாக நிலைநிற்கிறாள். வித்யாசகர் மீராவின் உணர்ச்சிக்கு ஆட்படாமல் விலக முயற்சிக்கும் மனநிலையை அழகாகவே சித்தரித்திருக்கிறார்.
மீராவைப் போன்ற சாதாரண பெண்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். ஏகாப்ஜனா போன்ற ஆண்களும் இருக்கின்றனர். அவர்களின் பாலியல் சார்ந்த துயரங்களை வெளிப்படுத்துவது தஞ்சை ப்ரகாஷின் எழுத்தின் தனிச் சிறப்பு. பாலியல் குறித்த பேச்சுகளை இன்றைய காலத்தில் நாம் வெளிப்படையாக பேசுகிறோம். எழுத்தில் சிறுகதையில் அதைக் கொண்டுவருவது சவாலான விஷயம்தான். இன்று பாலியல் கதைகள் எழுதப்படுகின்றன. என்றாலும் தஞ்சை ப்ரகாஷின் கதையில் வரும் பெண்கள், ஆண்களின் பாலியல் உலகம் சிக்கல் தன்மைகொண்டு இருப்பது. சமூகத்திலும் பல தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது. சமூகத் தாக்கத்தை கலைஞன் நேரடியாகச் செய்ய வேண்டியது இல்லை. அவனது படைப்பு, அது சார்ந்து இயங்கும் சூழல், இயங்கக் கூடிய நிலம், தாக்கத்திற்கு ஆட்படும் சமூகம் சந்திக்கிற பாதிப்பை மறுக்க முடியாது. அது எதிர்மறையானதா? அல்லது நேர்மைறயானதா என்பது பாதிப்பின் தன்மையைக் கொண்டுதான் கூறமுடியும்.
மீரா, குடும்பச் சூழலில் தோல்வியடைந்தவளாகக் கருதப்பட்டாலும், தன்னுடைய விடுதலை எதில் இருக்கிறது? வித்யாசாகரின் தெய்வாம்சமான கலைத் தன்மையில், ஸ்பரிசத்தில் இருப்பதாக உணர்கிறவள். அதை அவள் தேர்ந்து கொள்வதில் முற்றிலும் அவளுக்கு ‘உரிமை’ என்று சொல்வது பொருந்துமா? வித்யாசாகர் என்ற கலைஞனிடம் இருந்தே அதைக் கருணையோடு பெற வேண்டியவளாகவும் இருக்கிறாள். அது துயர நிலை என முற்றாக முடிவு கட்டிவிடவும் முடியாத சிக்கல். ஏனெனில் வித்யாசாகரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலையில் இல்லை. ஏகாப்ஜனாவின் முரட்டுத்தனத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள பரிதவிக்கவே செய்கிறாள் மீரா.
தஞ்சை ப்ரகாஷின் கதைகள் பெரும்பாலும் தோற்றவர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. முரண் நிலையிலிருந்து எதையும் தெளிந்து கொண்டு வாழ்க்கையை வாழமுடியும் என்று தன்னுடைய பாத்திரங்கள் வழியே வெட்டவெளியில் மிகக் குரூரமான முறையில் சொற்களால் தாக்குண்டு மீள முடியாத அவமானங்களை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களாவும்தான் இவருடைய கதாபாத்திரங்கள் அமைந்திருக்கின்றன. தோல்வி அடைந்தவர்களின் வாழ்க்கையை தஞ்சை ப்ரகாஷ்
வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. அதுவும் வாழ்க்கை குறித்த பரிசோதனைதானே? மீராவும், தஞ்சை ப்ரகாஷின் எழுத்து வன்மையோடு இக்கதையில் கலைவடிவாக வடிக்கப்பட்டிருக்கிறாள். வாசகர்கள் தஞ்சை ப்ரகாஷை கொண்டாடும் காலம் தற்போதுதான் தொடங்கியிருக்கிறது. இது காலத்துக்கும் தொடரும் என எதிர்பார்ப்போம்.