கட்டுரைகள்
Trending

செல்வம் அருளானந்தத்தின் ”சொற்களில் சுழலும் உலகம்” நூல் விமர்சனம் – சாம்ராஜ்

கண்ணீர் உறையும் கணங்கள்

கரிசல் முன்னோடி கி.ராஜநாரயணனின் கரிசல் காட்டுக் கடுதாசியில் ஒரு சம்பவம் உண்டு. கி.ராவும் மற்றொருவரும் ஒரு விவசாயப் போராட்டத்தின் பொருட்டு கைது செய்யப்பட்டு லாக்கப்பில் இருக்க, அவர்களுடன் லாக்கப்பில் ஒரு திருடரும் அடைக்கப்பட்டிருப்பார். கி.ரா திருடரிடம் முதன்முதலாகப் பிடிபட்ட, அடிப்பட்ட அனுபவத்தைக் கேட்க திருடர் சிரித்தபடி, ”இன்ஸ்பெக்டர் சாரு அன்னிக்கி அடிச்சாரு பாருங்க. நான் அப்படியே அந்தப் பக்கம் போய் விழுகிறேன்…” என்று ஆரம்பிக்க, கி.ரா தன் பக்கத்திலிருக்கும் நண்பரிடம் சொல்வார் “அடி வாங்கின அன்னிக்கி இவரு இவ்ளோ சந்தோசமா இருந்திருக்க மாட்டார். சொல்லி சொல்லி சொல்லி சொல்லி இந்த இடத்துக்கு வந்துட்டார்”.

செல்வம் அருளானந்தத்தின் ”சொற்களில் சுழலும் உலகம்” புத்தகத்தை இப்படிப் புரிந்து கொள்ளலாம். தழும்புகளை தடவிக் கொண்டே காயங்களைப் பற்றிப் பேசுகிறார். முன்பு கண்ணீர்; துயரம். இப்பொழுது கைப்பான அனுபவம். ”எழுதித் தீராத பக்கங்கள்” செல்வத்தின் முதல் அனுபவக் குறிப்பு நூல். தமிழில் பகடியும், கண்ணீரும், மகத்தான அனுபவங்களும், பேதமைகளும் கை கோர்க்கும் ஓர் அசாத்திய சாத்தியம்.

கைப்பு என்றால் மலையாளத்தில் கசப்பு. பாகற்காயை கைப்பாக்காய் என்றே சொல்வார்கள். தமிழில் ஒரு கைப்பு அனுபவத்தை அத்தனை பகடியோடு சொன்ன தலையாயப் புத்தகம் என்று எழுதித் தீராத பக்கங்களை உறுதியாக முன் நிறுத்தலாம். மொத்தம் 22 அத்தியாயங்கள். மகத்தான சிறுகதைகளாக ஆவதற்கு உண்டான எல்லா சாத்தியங்களும் அதில் உள்ளன. செல்வம் புனைவு இலக்கியம் கொடுக்கும் சாத்தியங்களை மறுத்து தன் அனுபவங்களாகவே எழுதுகிறார். Unsung Heroes என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற பாடப்படாத வீரர்களின் கதைகள் இவை. வீரர்கள் என்றால் வெற்றிதான் பெற வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. துரை சிங்கம் அண்ணன், பங்கிராஸ் அண்ணா, இம்மானுவேல், நாயகம், பெயர் சொல்லப்படாத ஒருவர் போன்றவர்களே அந்த பாடப்படாத வீரர்கள். நம்பிக்கைக்கும், பகுத்தறிவிற்கும் அப்பாற்பட்ட சம்பவங்கள். புனைவை மிஞ்சியதுதானே வாழ்வு? இந்த வாழ்வு அனுபவங்களை கலாசாரப் பின்னணியோடு, கலை நுட்பத்தோடு நம் முன் வைக்கிறார் செல்வம்.

தேனி சீருடையான் ”நிறங்களின் உலகம்” என்றொரு நாவல் எழுதியிருக்கிறார். அவருடைய சொந்த வாழ்வுதான். எட்டு வயதில் ஏற்பட்ட காயத்தினால் பார்வை முற்றிலும் இல்லாது போக, பார்வையற்றவராய் பள்ளி, கல்லூரியை முடிக்கிறார். அதன்பின் ஓர் அறுவை சிகிச்சையின் வழி பார்வை மறுபடியும் கிடைக்கிறது. அரசுப் பணிக்கு முயற்சி செய்ய, சான்றிதழ்களில் பார்வையற்றவர் என இருக்க, பார்வையுடையவராய் தேனி சீருடையான் இருக்க, இந்தக் குழப்பத்தில் வேலை வாய்ப்புகள் அடிபட்டுப் போகின்றன. உலகத்தில் மிக அரிதாகவே நிகழும் ஓர் அனுபவம். வாழ்நாளின் இடையில் பத்தோ பணிரெண்டு வருடங்கள் முற்றிலும் பார்வையற்றுப் போய் மீண்டும் பார்வை பெற்று வாழும் வாழ்வு எத்தனை பேருக்கு நிகழ்ந்திருக்கும்!

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் இவற்றையெல்லாம் கூறி ஒரு முன்னுரை எழுதியிருப்பார். நம்மை அந்த முன்னுரை பரவசத்துக்குள்ளாக்கும். ஒரு மகத்தான அனுபவத்திற்கு ஆட்பட நாம் தயாராவோம். அந்த நாவலின் ஆகச் சிறந்த அத்தியாயம் ச.தமிழ்ச்செல்வனின் முன்னுரை மாத்திரமே. துயரப்பட்டதானாலேயே துயரத்தை அவர்களால் துல்லியமாக சொல்லிவிட முடியும் என்ற எந்த உத்திரவாதமும் இல்லை. செல்வம் இந்த நூலில் பிறருடைய துயரத்தைத்தான் கூறுகிறார். அது நடுப்பகலிலே நம்மிடம் கண்ணீரைக் கோருகிறது. வீட்டிலிருந்து எழுந்து எங்காவது ஒரு வெட்ட வெளியில் போய் நிற்கச் சொல்கிறது. எதிரே வரும் அறியா மனிதனை மிக நேசத்தோடு காணச் சொல்கிறது.

நுப்பது என்ற ஒரு இளைஞன் வருகின்றான். அவனது இயற்பெயர் சொரூபன். அவனுக்கு முப்பது என்று சொல்ல வராது. நுப்பது என்றே சொல்வான். ஊரில் அவனை நுப்பது என்றே அழைப்பார்கள். பிரான்சிலும் அவனை அப்படியேதான் கூப்பிடுகிறார்கள். அப்படி தன்னைக் கூப்பிடுவதை மாற்ற வேண்டும் என்பது நுப்பதின் தீவிர விருப்பம். செல்வம் அவனுக்கு இடையிடையே அறிவுரை சொல்வார். செல்வத்திடம் அவ்வப்போது கடனும் வாங்குவதுண்டு. சொரூபனின் சித்தப்பா செல்வத்திடம் சொல்வதுண்டு “அவனுக்கு கடன் கொடுக்காதீர்கள் அவன் உங்களிடம் ரேப்போ உருவாக்க பார்க்கிறான். அவன் இரண்டு விசயங்களுக்குத்தான் வாயைத் திறக்கிறான். ஒன்று சாப்பிட, மற்றொன்று பொய் சொல்ல.” செல்வத்திற்கு ஐநூறு டாலர் கடனை திருப்பித் தாராமலே எங்கோ போய்விடுகிறான். செல்வம் அந்த அத்தியாத்தை இப்படி முடிக்கிறார்.

//அது ஒரு பெரியவிழா. அதுக்குப் பிரதம விருந்தினரா ஒரு பெரிய தமிழ்த் தொழிலதிபர் வர இருப்பதாய்ச் சொல்லிச்சினம். அவரும் வந்து மேடையில பேசினார். ” நான் கனடாவுக்கு வெறுங்கையோடை வந்து இண்டைக்கு நுப்பத்திஏழு றக்குகளுக்குச் சொந்தக்காரனயிருக்கிறேன்” எண்டு தன்னைப் பத்திச் சொன்னார். என்ர கவனம் அங்க பெரிசா இருக்கேல்ல. ஆனா குரல் ஏதோ பரிச்சயமாக் கிடந்துது. உத்துப் பாத்தன். அட இவன் நுப்பது. கூட்டம் முடிய முதலே வெளிக்கிட்டு வெளியால வந்திட்டன். கண்டால் கட்டிப் பிடிப்பான். என்ன உதவியண்ண வேணும் எண்டு கேட்பான். இதெல்லாம் தேவையா? ஒரு சந்தேகத்தில நண்பரைக் கேட்டேன். இந்த பிரதம விருந்தினர் மேடையில் 37 றக் எண்டு சொல்லேக்க நுப்பத்தியேழு எண்டவரோ இல்ல. முப்பத்தியேழு எண்டவரோ?
தனக்கு இப்ப தமிழ் மறந்து போச்செண்டு சொல்லிக் கனக்க ஆங்கிலத்திலதானே கதைச்ச்வர் எண்டார் நண்பர்.கனடாவை நினைச்சு வியந்துதான் போனேன்.//

 

ஈழத் தமிழருக்கும் மலையாளிகளுக்குமான ஒற்றுமைகள் நிறைய உண்டு. உணவு, உடை, கலாசாரம், நிலப்பரப்பு, உளவியல், தோற்றம், மொழி என இருவருக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இந்தப் புத்தகத்தில் வரும் சுயபகடி நிறைந்த மாந்தர்களை மலையாளச் சமூகத்தில் கண்டிருக்கிறேன். தனித்த அடையாளங்களோடு, தன்னைத்தானே கேலி செய்து கொண்டு கூரிய நகைச்சுவை உணர்வு கொண்ட மனிதர்களை மலையாளச் சமூகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

சின்னச் சின்ன சித்திரத்தின் வழி மனிதர்களின் ஆளுமை அபாரமாக வெளிப்படுகிறது.

//”சிவராசன் அண்ணனிடம் ’அண்ணை சாதி யாழ்ப்பாணத்துக்குத் திரும்ப வந்திட்டதாமே’ எண்டு நான் கதையைத் தொடக்கினன். கொஞ்சங்கூடத் தாமதிக்காம சிரிச்சுக்கொண்டு சட்டெண்டு சொன்னார்,  “சாதி எங்கையடா போனது. திரும்ப வாறதுக்கு… அது கொஞ்ச நாள் கள்ளன் பொலிஸ் விளையாட்டெல்லே விளையாடினது.’  ஆமி வன்னியிலை நிக்கேக்கை யாழ்ப்பாணத்திலை இயக்கம் இருக்கும். ஆமி யாழ்ப்பாணத்திலை நிக்கேக்கை இயக்கம் வன்னியிலை நிக்கும். சாதியும் அப்பிடித்தான் ஒளிச்சு திரியும். கொஞ்ச நாள் ஆட்கள் இடங்கள் மாறி மாறி ஓடித் திரிஞ்சதாலையும் பெடியளின்ரை தண்டனையாலையும் சாதி இல்லாத மாதிரி இருந்தது உண்மைதான். ஆனா அது இந்த மண்ணை விட்டு எங்கையும் போகேல்ல. இப்பவும் புத்தகக் கடையளில ஆறுமுக நாவலர் எழுதின, குறைந்த சாதியோடை ஒரே பந்தியில் இருந்து சாப்பிடப்படாது எண்ட சைவ வினாவிடை நல்லாய் விற்றுக் கொண்டுதான் இருக்கு, சொல்லிப்போட்டு எங்கேயோ பாத்தபடி ஒரு பெருமூச்சுவிட்டார்.”

”எங்கடை குறிச்சியிலை ஒரு 35-40 சனங்கள் தான் இருக்கினம். ஆனா கிட்டத்தட்ட 65-70 நாய்கள் இந்த வீடுகளில் நிக்குது. இது பழைய அரசாங்கத்தின் வேலை. அப்ப நாயைக் கொல்லப்படாது என்டு சட்டம் போட்டாங்கள். அது வாயில்லாப் பிராணியாம். அவங்கட ஆட்சிக்காலத்தில, வரையறை இல்லாம ஆட்கள் கடத்தப்பட்டிருக்கினம், பெண்டுகள் நாசப்படுத்தப்பட்டுதுகள் ஆள்வெட்டு, வாள்வெட்டுக்குக் குறைவில்ல, ஆனா நாயைக் கொல்லப்படாது, றோட்டிலை புகைக்கப்படாது, கண்ட இடத்தில் குடிக்கப்படாது என்றெல்லாம் சட்டங்கள் போட்டாங்கள்”
இந்தியன் ஆமி வந்திருந்தபோது ஒரு சுற்றிவளைப்பில் ஒழுங்கையாலை போன இவரையும் இவற்ரை நாயையும் நீண்ட நேரம் மறிச்சு வைச்சிருந்திருக்கிறாங்கள்.

“நேரம் நீண்டு போக தங்களுக்கு வந்த சாப்பாட்டில கொஞ்சத்தை ஆமி இவருக்கு கொடுத்திருக்கிறான். இதை என்ரை நாய்க்குப் போடு அது சாப்பிடுமோ என்று பார்ப்போம் எண்டு வாய் கட்டியிருக்கிறார். பக்கத்தில நிண்ட ஒரு தமிழ் இயக்கப் பெடியன் வஞ்சகமில்லாமல் அதை ஆமிக்கு சொல்ல அவன் இவருக்கு நல்ல சாம்பல் சாத்துச் சாத்தினான்”

“யாழ்ப்பாண வெளியேற்றத்தின்போது சில பெடியள் இவரை வெளியேறச் சொல்லியிருக்கிறாங்கள் தம்பி யாழ்ப்பாணத்துக்கு ஆமி வருகுது எண்டு வன்னிக்குப் போறம் வன்னிக்கு ஆமி வந்தால் கொழும்புக்கோ போறது? என்று வாய்த் தர்க்கப்பட்டு நாவற்குழி மட்டும் போய் நாலு நாளில திரும்பி வந்துவிட்டார்”.

பங்கிராஸ் அண்ணா வேறு மாதிரி ஆனவர்
’இந்தியன் ஆமி வந்து நிண்ட காலம் அது. இவர் நல்ல வெறியில வந்திருக்கிறார். ஆமி மறிச்சு ”ஐடி ப்ளீஸ் ஐடி ப்ளீஸ்” எண்டு கேட்டிருக்கு இவர் திருப்பி ”யுவர் பாஸ்போர்ட் ப்ளீஸ் யுவர் பாஸ்போர்ட் ப்ளீஸ்” எண்டு கேட்டிருக்கிறார். அவங்களுக்கு இவர் என்ன கேட்கிறார் எண்டு விளங்கையில்லை. ஒரு தமிழ் நாட்டு ஆமிதான் ”இவன் சரியாய் குடிச்சிருக்கிறான்” என்று மற்றவங்களுக்குச் சொல்லிப்போட்டு துவக்காலை இடிச்சுக் கலைச்சுவிட்டவன் என்றார்.//

செல்வம் துல்லியமாக அனுபவங்களை கடத்தக்கூடியவர். அவர் நம்மை சிரிக்க வேண்டுமென்றால் சிரிக்க வைப்பார். சிரித்துக் கொண்டே சிவாஜி கணேசனைப் போன்று அழவும் வைப்பார்.  அம்மாவைப் பற்றி ஒரு கட்டுரை உண்டு.

//அந்தக் காலத்திலை அம்மாட்ட நாலு சீலைதான் இருந்தது. கோயிலுக்கு இரண்டு, வீட்டுக்கு இரண்டு எண்டுதான் பாவிச்சவ. படுக்கேக்கை போர்க்கிறதுக்கு எனக்கு அம்மாவின்ரை சீலைதான் வேணும். வெங்காய வாசனை வாற அந்தச் சீலையைப் போர்க்காட்டி எனக்கு நித்திரை வராது.அம்மா சம்பளத்துக்கு வெங்காயம் ஆயப் போறவ எப்பிடித்தான்  தோய்ச்சாலும் அந்த வெங்காய மணம் போகாது. நித்திரை வரேக்க அந்த மணம் என்னை மயக்கும் கனகாலமா அதுதான் என்ர சொர்க்கம். நித்திரையில அந்த சேலைக்குள்ளே காலைச் செருகிச் செருகிப் படுக்கேக்க “தம்பி டேய் காலை அங்கயிங்க ஓட்டி சீலையக் கிழியாதையடா” எண்டு செல்லமாக கத்துவா. ஊரை விட்டு வெளிக்கிடும் மட்டும் அம்மாவின் இரண்டு மூன்று சீலைகளை மாத்திமாத்திப் போர்த்திக் கொண்டுதான் படுத்தேன்.

இந்தமுறை ஊருக்குப் போன முதல் நாள் இரவு படுக்க முதல்ல அவவின்ர அலுமாரியைத் திறந்து எஞ்சியிருந்த அந்த ரெண்டு சீலைகளை தொட்டுப் பாத்திட்டுப் போய் படுத்தன். பிரயாணக் களை உடனே அயர்ந்திட்டேன். அம்மா நடந்து வந்து என்னை எழுப்பி ”சாப்பிட்டுட்டுப் படடா” எண்டு செல்லமாகச் சொன்னா திடுக்கிட்டு எழும்பினேன். உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. மனிசி இன்னமும் வீட்டைச் சுத்திக் கொண்டுதான் திரியுது எண்டு நினைச்சுக்கொண்டு படுக்கையில குந்தியிருந்தன். தனியப் படுக்க பயமாயிருந்தது”.

நித்திரை வராமல் உடம்பு உழண்டு பிரண்டு கொண்டிருந்தது. தூரத்தில் மாதகல் பக்கமாய், “நதியில் விளையாடி கொடியில் தலை சீவி வளர்ந்த இளம் தென்றலே” எண்ட அம்மாவுக்குப் பிடிச்ச ”பாச மலர்” பாட்டு மெல்லிசாய்க் கேட்டுக் கொண்டிருந்தது. இப்ப இந்தப் பாட்டைக் கேக்க அம்மா இல்ல. அவ நேசிச்ச அண்ணன் என்ர மாமா இல்ல. பாடின சொந்தரராசன், எழுதின கண்ணதாசன், நடிச்ச சிவாஜி ஆருமில்ல. எல்லாரும் போயிட்டினம்.//

தமிழில் அம்மாவின் ஓர்மைகளைப் பற்றியான உணர்வுப்பூர்வமான கட்டுரைகளில் இதுவும் ஒன்று.  இம்மானுவேல் பற்றியான கதை வேறோரு இடத்திலிருந்து தொடங்குகிறது. யுத்தத்திற்கு பிறகு இயக்கத்திடம் இருந்த பணம் எங்கு போனது என்ற விவாதத்தில் அந்தக் கதை தொடங்குகிறது. இம்மானுவேல் பொறியாளராக கடலுக்கு நடுவே பிளாட்பாரம் போட்டு எண்ணெய் எடுக்கும் ஒரு கம்பெனியில் முக்கியப் பதவியில் இருந்தான். இம்மானுவேலின் அண்ணன் ராணுவத்துடன் நடந்த யுத்தத்தில் இறந்து போக, இயக்கத் தலைமையிடம் தன்னையும் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளும்படி மன்றாட, இயக்கம் ’இப்போதைக்கு வெளிநாட்டில் வேலை செய்துகொண்டு எங்களுக்கு உதவு. இக்கட்டான சமயங்களில் அழைக்கிறோம்’ என்று சொல்லி அனுப்புகிறார்கள்.
2006-ல் இயக்கத்திலிருந்து அழைப்பு வருகிறது. சண்டைக்குத் தேவையான ரசாயனப் பொருளை அந்த நாட்டில் வாங்கி படகில் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும். இம்மானுவேல் பொறுப்பேற்று அந்த நாட்டிற்குச் சென்று அந்த நாட்டில் உள் நாட்டில் சிலபேரைக் கண்டுபிடித்து, அதில் ஓர் இளம் கணவனும் இருக்கிறான். அவன் மனைவிக்கு அவன் இந்த வேலையில் ஈடுபடுவது பிடிக்கவில்லை. அந்த இளைஞனும் இன்னும் இரண்டுபேரும் ரசாயனம் ஏற்றிய படகில் புறப்படுகிறார்கள்.

இம்மானுவேல் தலைமையோடும், படகில் இருப்பவர்களோடும் தொடர்பில் இருக்கிறான். படகு நடுக்கடலில் வெடிக்கிறது. மூவரும் இறந்து போகிறார்கள். பேய் பிடித்தவளாய் அவன் இளம் மனைவி அழுகிறாள். தலைமை உடனடியாக இம்மானுவேலை ஐரோப்பாவிற்கு திரும்ப சொல்கிறது. இம்மானுவேலால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவன் கனவில் அந்தப் பெண்ணும், குழந்தையும் வந்து கொண்டேயிருக்கிறார்கள். மறுபடியும் அந்த நாட்டிற்குச் சென்று அந்தப் பெண்ணைப் பார்த்து பணம் கொடுத்துவிட்டு வருகிறான். இரண்டாவது முறை கொடுக்கும்போது அந்தப் பெண் மறுக்கிறாள். முடிந்தால் என்னையும், குழந்தையும் ஐரோப்பாவிற்கு கூட்டிச் செல்லுங்கள் என்கிறாள். இம்மானுவேல் யோசித்து உங்களுக்கு விருப்பமென்றால் என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல அந்தப் பெண் சம்மதிக்க. திருமணம் செய்துகொண்டு ஐரோப்பாவில் நிம்மதியாக வாழ்கிறார்கள். வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்ததால் ஊர்க்காரர்கள் என்னென்னவோ பேச தன் நிலையைப் பற்றி தன் அப்பாவிடம் விளக்குமாறு செல்வத்திடம் சொல்கிறான்.

செல்வம் அவனுடைய கதையை அவனின் தந்தையை இலங்கையில் தேடிப்பிடித்து சொல்கிறார்,

//”இம்மானுவேலின்ர விசயங்கள் ஒவ்வொண்டாய்ச் சொன்னன். ஒண்டும் கதைக்காமக் கவனமாய்க் கேட்டார். என்ர கையப் பிடிச்சுக் கொண்டு மெல்லமெல்ல நடந்தார் திடீரெண்டு நிண்டார்.
மூத்தவனை அநியாயமாய் ஆமிக்காறங்கள் கொண்டாங்கள். அந்தத் துயர் முடிய முதல்ல உன்ரை சிநேகிதன் அது தான் என்ர இரண்டாவது மகன், போரிலை செத்ததைக் கேள்விப்பட்டபோது இரண்டு மூண்டு மாசம் துக்கம் தாங்கமுடியேல்லை. பிறகு அதே ஒரு பெருமையா போச்சு. இப்ப என்ர கடைசி ஆசை மகனைப் பற்றி நீ சொல்லேக்கை அதைவிடப் பெருமையாய் இருக்கு எண்டு சொன்ன பண்டிதர் எனக்காகக் காத்திருக்காமல் விறுவிறுவெண்டு நடக்கத்தொடங்கினார்”.//

இந்தக் கட்டுரையை கூர்ந்து அவதானிப்பவர்களுக்கு வேறொரு அர்த்தத்தைத் தரும்
நாயகத்தின் வாழ்வு வேறு விதமானது. அபாரமான திருப்பங்களைக் கொண்டது. வீட்டிற்குப் பின்னால் இருக்கும் ஆனைக்கோட்டை போலிஸ் ஸ்டேசன் போராளிகளால் தாக்கப்பட நாயகத்தின் அப்பா ராணுவத்திடமிருந்து தப்பிப்பதற்க்காக கொழும்பில் இருக்கும் அண்ணன் வீட்டில் விடுகிறார். நட்சத்திர ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்து அங்கு வந்த ஒரு பிரெஞ்ச் குடும்பத்திற்கு நெருக்கமாகி அவர்களால் தத்தெடுக்கப்பட்டு பிரெஞ்ச் குடிமகனாகி அங்கு ஓர் ஆங்கிலக் காதலி கிடைக்க பிரெஞ்ச் சரளமாகப் பேசுபவராக நாயகம் மாற, தற்செயலாக இயக்கத்தின் தொடர்பு கிடைக்க, இயக்கம் அவனை லெபனானுக்கு சில ஆட்களைக் கொண்டு சென்று விட்டுவரச் சொல்கிறது. பிரெஞ்ச் வளர்ப்புத் தாய் தந்தையிடம் இலங்கையிலிருக்கும் தந்தையை பார்க்கப் போவதாக பொய் சொல்லிவிட்டு லெபனான் போய் வெற்றிகரமாக அசைமெண்ட்டை முடிக்கிறார். மறுபடியும் டெல்லி போகச் சொல்கிறார்கள். டெல்லியில் இறங்கியவுடன் இயக்கத்தின் தலைமை இவருடைய பாஸ்போர்ட்டை வாங்கிக் கொள்கிறார்கள். சிலரை சென்னையில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். வெற்றிகரமாக நாயகம் இதைச் செய்கிறார். பாஸ்போர்ட்டை கேட்க, வந்துவிடும் என்கிறார்கள். இயக்கத்தில் உட்பூசல் வர சிக்கலாகிறது. பாஸ்போர்ட் ஒரு பொழுதும் கிடைக்காது என்ற நிலை வருகிறது. திருச்சியில் ஒரு நண்பர் வீட்டில் இருக்கிறார். பிரான்ஸ் வளர்ப்பு பெற்றோர்கள் தொலைபேசி எண் ஞாபகத்திலே கொண்டு வரமுடியவில்லை. ஒரு நாள் சினிமா பார்த்து வரும் போது துலக்கமாக எண் ஞாபகத்திற்கு வருகிறது. அவர்களை தொலைபேசியில் அழைக்க. நீ போதைப் பொருள் கடத்தினாய் என்று மூன்றுமுறை போலிஸ் வந்து சென்றது. இனி எங்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்கிறார்கள். இலங்கைக்குத் திரும்புவது என்று முடிவு செய்கிறார்.

//“இங்கை இருந்தும் என்ன? ஏதேனும் சாதிக்கவா போறன்? ஊருக்குப் போறதெண்டு முடிவுக்கு வந்தன். அப்பாவுக்கும் தங்கச்சிக்கும் பொருளாதார பலத்தைக் கொடுக்கேலாது எண்டாலும் மனசுக்கு ஆறுதலைக் கொடுக்கலாம் எண்டு நினைச்சன்.
அடுத்த நாளே சில ஒழுங்குகளச் செய்து யாழ்ப்பாணக் கரையொண்டில போய் இறங்கினன். கனகாலத்துக்குப் பிறகு அந்த மண்ணில கால்பட்டதில் மனசில ஒரு மகிழ்ச்சி வந்தது. ஆசையா வீட்டை நோக்கி நடந்தன். வீடு வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு சொறி பிடித்த நாய் என்னைச் சுற்றிச்சுற்றி வந்துது. அதன் நிறத்தை உத்துப் பார்க்க, ஞாபகம் வந்தது. அது தங்கச்சிமார் ஆசையா வளர்த்த நாய். அப்ப அது அழகான குட்டி. இப்ப சாப்பாடும் இல்லாமல் கவனிப்பாரும் இல்லாமல் சொறிப் பிடிச்சு அலைஞ்சு திரியுது. எனக்கு என்ர வாழ்வுதான் ஞாபகம் வந்துது”//

 

***

செல்வம் துரைசிங்கம் அண்ணனிடம் கேட்கிறார்.

//”இந்த முப்பது வருச யுத்தத்தில உங்களை மிகவும் பாதித்த சம்பவம் எது அண்ணை?” என்றேன்.
“சொல்லுறேன் சொல்லுறேண்டா சொல்லுறேன்” எண்டார். கறுப்பு வேலை (black label) தொடங்கிட்டுது. இன்றுவரை விளங்காமலும் விளங்க முயற்சித்தால் அழுகை வருவதை தவிர்க்க முடியாமலும் இருக்கிற சம்பவம் அது. சம்பவத்தை முழுசா உள்வாங்குற மாதிரி கொஞ்ச நேரம் மெளனமா இருந்தார். பிறகு மெல்லத் தொடங்கினார்.

என்ர வீட்டிலை செல் விழ நான் அந்த ஊரிலை போய்க் கொஞ்ச நாள் இருந்தனான் ”ஒரு பெடியனைப் பிடிச்சுச் சந்திக்குக் கொண்டு போறாங்கள்” எண்டு பரபரப்பா ஓடிக் கொண்டிருந்த ஒருவர் சொல்லிப் போட்டுப்போக எனக்கு மனம் கேக்கேல்ல. என்னவெண்டு பாக்குறதுக்கு நானும் சந்திக்குப் போனன். என்னை மாதிரி கொஞ்சப்பேர் அங்க நிண்டிச்சினம். விடுப்பு பாக்க நிக்கிறாங்களா? இல்ல விறைச்சுப் போய் நிக்கிறாங்களா எண்டு எனக்குத் தெரியேல்ல. அதில நானும் ஒருத்தனா நிண்டன் ஒரு சுவர் ஓரத்தில பிடிச்சுக் கொண்டுபோன பெடியனை நிப்பாட்டியிருந்தாங்கள். நெடுநெடுவெண்டு உசந்த பொடியன் நல்ல சடைச்ச தலைமயிரும் ஒளி நிறைஞ்ச கண்ணுமா பாக்க நல்ல அழகாய் இருந்தான். இவனை பிடிச்சுக் கொண்டு வந்தவங்கள் அவனை சுவரோட சாத்தி நிப்பாட்டினாங்கள். அவங்களில் ஒருத்தன் அந்த கும்பலுக்குத் தலைவனா இருப்பான்போல. பக்கத்தில நிண்ட தங்கள விடச் சின்னவன் ஒருவனை கூப்பிட்டான். அவனும் வேடிக்கை பாக்கவந்த பெடியன் மாதிரித்தான் இருந்தான். கூப்பிட்டவன் அவன்ர கையில துவக்கைக் குடுத்தான் ”இது உனக்கு ரெயினிங். எங்க இவனைச் சுடு பாப்போம்” என்றான். வேடிக்கை பாக்க வந்தவன் மாதிரியிருந்த சின்னவன் கையில துவக்க வாங்கினவுடன் உசாராகி வேற மாதிரியாயிட்டான். ஆரோ சொல்லிக் குடுத்ததை ஞாபகத்தில் வச்சு துவக்க லோட் பண்ணினான். சுவரோட நிண்டவனை பார்த்துக் குறி வைச்சான். அவனை இழுத்துக் கொண்டுவந்த கும்பலில ஒருவன் என்ன நினைச்சானோ தெரியேல்ல ”சுடாதை நிப்பாட்டு” எண்டு சின்னவனை மறிச்சுப் போட்டு ”சுட முதல்ல அவனிட்ட கேள், உன்ர கடைசி ஆசை என்னவெண்டு” எண்டு சொல்லிப்போட்டு பெருமையா நிண்டான். சின்னவன் படங்களில் பாத்திருப்பான் போல ஒரு ஜட்ஜ் மாதிரித்தான் கேட்டான் ”உன்ர கடைசி ஆசை என்னடா?” சாவுக்கான எந்தக் கலக்கமும் அவனிட்டத் தெரியேல்ல அவன் தயக்கமே இல்லாமல் கேட்டான் ”நான் ஒரு சிகரெட் பத்த வேணும்” சின்னவன் சீனியர்மாரைப் பாத்தான். சம்மதம் கிடைச்சிருக்கும் போல. பிறகு சுத்தி நிண்ட ஆட்களிட்டப் போய் ஒரு சிகரட் ஒண்டு வாங்கினான். இன்னுமொருவர் நெருப்புப் பெட்டி குடுத்தார். சுவரோட நிண்டவன் மிக இயல்பாய் சிகரட்டைப் பத்த வைச்சான். புகையை இழித்து மூக்காலையும் வாயாலையும் அனுபவிச்சு விட்டான். பாதி சிகரட் முடிஞ்ச பிறகு அதை எறிஞ்சான். ”இப்ப சுடுங்கோ” எண்டு சொல்லிப்போட்டு சிரிச்சான். சுத்தி நிண்ட எல்லாருக்கும் கேக்கிற மாதிரி சத்தமாத்தான் சிரிச்சான். ஒத்த வெடிக்கு பிறகு அவன்ர தலை கவிழேக்க நான் மனிசனாப் பிறந்ததுக்காக வெட்கப்பட்டன். எனக்குள்ள இருந்த வார்த்தைகளும் செத்துப் போச்சுது. இனி யாரோடையும் கனக்கக் கதைக்கப்படாது எண்டு வெத்தில பாக்கை குதப்பத் தொடங்கினன்” என்றார்.//

நான் செல்வத்தின் எழுத்துக்களை இப்படித்தான் சொல்வேன், வெற்றிலை இலையாக பச்சைதான். மென்று துப்பினால் சிவப்பு. ரத்தம். அந்த ரத்தம்தான் செல்வத்தின் எழுத்து.
குதப்பிய வாய்களுக்குள்தான் எத்தனை கூறாத சரித்திரம்!

********

சொற்களில் சுழலும் உலகம்
செல்வம் அருளானந்தம்
கட்டுரைகள்
ரூ.190
காலச்சுவடு பதிப்பகம்
டிசம்பர் – 2019

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button