
ஓரியும் அஷியும்
கதைகள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தவை. மனதிற்கு மிக நெருக்கமானவை. எவ்வளவு கடினமான கருத்துகளையும் கதை வழியே மிக எளிமையாக எடுத்துக் கூறக்கூடிய தன்மை கதைகளின் முக்கியத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறது. கதைகளைக் கேட்கும்போது மட்டும் எவ்வளவு பெரிய மனிதர்களும் குழந்தையாகி விடுகிறார்கள். கதைகள் வழியே சொல்லப்படும் கருத்துக்கள் மனதில் ஆழப் பதியக் கூடியவை. கதைகள் அந்தமும் ஆதியுமற்ற நீட்சியும் தொடர்ச்சியும் கொண்டவை.
ஆனால், கதைகளைக் கேட்பதில் இருக்கும் எளிமை, அவற்றை எழுதுவதில் இருப்பதில்லை. மனித மனங்களில் உள்ள அத்தனை கதைகளையும் எழுத்து வடிவில் அனைவராலும் எழுதி விட முடிவதில்லை. அவ்வாறு எழுதுவதில் உள்ள தடைகளையும் தயக்கங்களையும் சிக்கல்களையும் சிரமங்களையும் நைஜீரிய தொன்மங்கள் விவரிக்கின்றன. நைஜீரிய கதைகள் அடிப்படையில் இரண்டு வகையானவை. அவை ஓரி (Ori) மற்றும் அஷி (Ase) என்றழைக்கப்படுகின்றன. நைஜீரிய இலக்கியங்களை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள இவ்விரு தொன்மங்களைப் பற்றிய புரிதல்களும் அவசியமாகிறது.
நைஜீரிய நிலம் கதைகளால் நிரம்பியது. பிறப்பு முதல் இறப்பு வரையிலான அத்தனை மனித செயல்பாடுகளுக்கும், கதைகளாலான காரணங்களையும், கதை வடிவிலான கருத்தியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய காரணிகளையும் வைத்துதான் நைஜீரியர்கள் அர்த்தங்களைத் தேட முயலுகின்றனர். இயல்பில் நம் அனைவரிடமும் ஒரு கதை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நமக்கு மட்டுமே தெரிந்த, நம்மை மட்டுமே மையமாகக் கொண்ட கதை அது. ஆனால், நைஜீரிய தொன்மங்கள் ஒவ்வொரு மனிதனிடமும் இரண்டு கதைகள் இருப்பதாகக் கூறுகின்றன. அதில் ஒன்றைக் கதை என்றும் மற்றொன்றை ரகசியக் கதை என்றும் தொன்மங்கள் குறிப்பிடுகின்றன.
கதை என்பது புறக்காரணிகளால் உந்தப்பட்டு, மனிதச் செயல்பாடுகளை கோர்வையாக்கி, புறவயமான நிகழ்வுகளைச் சித்தரிக்கும் தன்மையுடையது. இதையே நைஜீரியர்கள் ஓரி என்று குறிப்பிடுகின்றனர். ரகசிய கதை என்பது அகவயமானது. இது மனிதனின் உள்ளுணர்வுகள், இறுக்கங்கள், உளச்சோர்வுகள்போன்ற அகவய காரணிகளை சித்தரிக்கும் தன்மை கொண்டது. இதை நைஜீரியர்கள் அஷி என்று அழைக்கிறார்கள்.
ஒரு மனிதன் புறவயமான ஓரியையும் அகவயமான ஆஷியையும் உணரும் போது மட்டுமே அவனால் கதைகளை எழுத முடியும் என்று நைஜீரியர்கள் நம்புகின்றனர். மேலும் ஒரே கதையில் ஓரியும் அஷியும், மேலோட்டமாக ஒரு அர்த்தத்தையும், ஆழமாக நோக்கும் போது வேறு ஒரு அர்த்தத்தையும் கொடுக்கக்கூடியவை. எடுத்துக்காட்டாக, ஆங்கிலேயர்கள் உலக நாடுகளை காலனிகளாக்கியதன் பின்னணியில் உள்ள கதையில், மேலோட்டமாக அவர்கள் வாணிபம் செய்வதற்கும், கல்வி அறிவு புகட்டுவதற்காகவும் காலனிகளை உருவாக்கியதாகச் சொல்லப்பட்டாலும், அதில் விரவி வரும் உள்ளர்த்தங்கள் வேறொன்றாக இருக்கிறது.
ஓரி மற்றும் அஷி தொன்மங்கள், கனவுகளைக் கதைகளாக எழுதுவது குறித்தும் பேசுகின்றன. அவற்றைப் பொருத்தவரை கனவுகள் என்பது யதார்த்தத்திற்கு நேர் எதிரானவை அல்ல. அவை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமானவை. கனவுகளை கண்ணால் பார்த்த காட்சிகளோடு பொருத்தி, ஆழமாக உள்வாங்கிக் கொள்ளக்கூடிய சாத்தியங்களற்ற கனவுகளையும், சாத்தியக் கூறுகள் கொண்ட எதார்த்தங்கள் நிறைந்த கதைகளாகச் சொல்ல முடியும் என்று நைஜீரிய தொன்மங்கள் எடுத்தியம்புகின்றன.
கதைகள் மற்றும் ரகசியக் கதைகள் என இரண்டையும் உள்வாங்கி, புரிந்து கொள்ளும் போது மட்டுமே எழுத்து சாத்தியப்படுகிறது. உலகம் நமக்கு கற்பிக்கும் பாடங்களான கதைகளையும், மனதின் எண்ணவோட்டங்களின் வழி எழும் ரகசிய கதைகளையும் எழுதுவதை மனித குலத்திற்கும் தனக்கும் செய்யும் கடமையாக ஆதிகாலம் முதலே நைஜீரியர்கள் கருதி வந்திருக்கின்றனர் என்பதற்கு நைஜீரிய தொன்மங்களான ஓரியும் அஷியும் சான்று பகர்கின்றன.
(தொடரும்…)