கடலும் மனிதனும்; 31 – நாராயணி சுப்ரமணியன்

நினைவில் பனியுள்ள மனிதர்கள்
க்வானிகாக் – நிலத்தில் இருக்கும் பனி; நுடார்யுக் – புதுப்பனி; முருவானெக் – மென்மையான ஆழமான பனி; க்வானிஸ்க்வினெக் – தண்ணீரில் மிதக்கும் பனி; உடுக்வாக் – ஆண்டுகள் கடந்தும் நீடித்திருக்கும் பனி; குனிக் – துளைகள் உள்ள பனிக்கட்டி, செனாஸ் – புஸுபுஸுவென்றிருக்கும் பனி…..
பனிக்கு மட்டுமே 50க்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்டதாக சொல்லப்படும் இனூயிட்டுகளின் மொழியிலிருந்து ஒரு சிறு பட்டியல் இது. அழகியலுக்காகவும் கற்பனை வளத்தைப் பறைசாற்றவும் மட்டுமே இந்தப் பெயர்கள் வைக்கப்படவில்லை. ஒவ்வொரு விதமான பனியையும் ஒவ்வொரு விதமாக எதிர்கொள்ள வேண்டிய கடுமையான நிலப்பரப்பைச் சமாளிக்க, மொழி மூலம் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் எச்சரிக்கை இது. ஆழமான பனியில் பார்த்து நடக்கவேண்டும். தண்ணீரில் மிதக்கும் பனியில் வண்டி ஓட்ட முடியாது. நீடித்திருக்கும் பனியும் உருகத் தொடங்கினால் ஆபத்து. இப்படி சொல்லையே கையேடாக மாற்றி அவர்கள் வெள்ளை நிறத்தொரு நிலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இனூயிட் என்றால் புதுப்பெயராகத் தெரியலாம். ஆனால், பனியிலேயே இக்ளூ வீடுகட்டி வாழும் எஸ்கிமோக்களைப் பற்றி பள்ளிப்பாடங்களில் படித்திருப்போம். இவர்கள் இனூயிட்டுகள்தான். “எஸ்கிமோ” என்ற சொல்லைக் காட்டுமிராண்டிகள் என்ற பொருளில் காலனியவாதிகள் வசைச்சொல்லாகப் பயன்படுத்தினார்கள் என்பதால் அந்தப் பெயர் கூடாது என்று இனூயிட்டுகள் கண்டனம் தெரிவிக்கவே, இனூயிட் என்ற பொதுப்பெயர் புழக்கத்துக்கு வந்தது.
கடல்சார் தொல்குடிகள் என்றதுமே நமக்கு சிறு படகுகளில் போய் வெற்றிகரமாக மீன்பிடிக்கிற, தனது உள்ளங்கையை விடவும் அணுக்கமாகக் கடலை அறிந்த தீவு மக்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், பூமியில் உள்ள பனிக்கடல்களை நம்பியும் தொல்குடிகள் உண்டு. தென் துருவமான அண்டார்டிகாவில் தொல்குடிகள் யாரும் குடியேறாமல் தெற்குக் கடல் தடுத்துவிட்டது. ஆனால், வட துருவம் மற்றும் ஆர்டிக் பனிப்பிரதேசம் ஆகியவற்றில் பல பனிக்குடிகள் வசிக்கிறார்கள். கனடா, ரஷ்யா, சைபீரியா, அலாஸ்காவில் வசிக்கும் பனிப்பழங்குடிகள் பொதுவாக இனூயிட் என்று அழைக்கப்படுகிறார்கள். கிபி 1000-மாவது ஆண்டில் அலாஸ்காவிலிருந்த துலே இனமக்களின் வழி வந்தவர்கள் இந்த இனூயிட்டுகள். பனிக்காலத்தில் இக்ளூ பனிவீடு, வெயில் காலத்தில் டுபிக் என்ற கூடாரம் என காலச்சுழற்சிக்கு ஏற்ப வசிப்பிடங்களை மாற்றிக்கொள்பவர்கள். ஓரளவு நாடோடித்தன்மை கொண்ட semi-nomadic வாழ்க்கையை வாழ்பவர்கள். கயாக் (Kayak) என்ற சிறிய படகு தெரியுமா? அது இனூயிட்டுகளின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டதுதான். வேட்டை மற்றும் மீன்பிடித்தலை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் இனூயிட்டுகள். பனியில் வாழ்வது அவ்வளவு எளிதல்ல. எளிதில் கணிக்க முடியாத கடுமையான நிலப்பரப்பு அது. தங்கியிருக்கும் இடத்திலிருந்து நீண்டதூரம் சென்றுதான் வேட்டையாட முடியும் என்பதால் எதாவது பிரச்சனையில் சிக்கிக்கொண்டால்கூட அவ்வளவு எளிதில் யாரும் வந்து காப்பாற்றிவிடமாட்டார்கள். இவர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்காக இனூயிட் பகுதிக்குச் சென்ற எழுத்தாளர் ஹ்யூ ப்ரேடி இப்படி எழுதுகிறார் – “தொலைந்துபோய்விட்டேன் என்று தெரிந்தது. எப்படி கூடாரத்துக்குத் திரும்புவது என்று தெரியவில்லை. ஆனால், இங்கு என்ன நடந்தாலும் பதட்டப்படக்கூடாது என்பது முதல் பாடம். பதட்டப்பட்டால் வியர்வை வரும். வியர்வையில் உடைகள் நனையும். நனைந்த உடையால் குளிரிலிருந்து பாதுகாப்பு இருக்காது, அது பெரிய ஆபத்தாகிவிடும். என்னவாக இருந்தாலும் பதட்டப்படாமல் வழி கண்டுபிடிக்க வேண்டும்”.
இனூயிட்டுகள் இன்று பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனால், அந்த வரலாற்றைப் புரிந்துகொள்ள நீண்டகாலம் பின்னோக்கிப் பயணிக்கவேண்டாம். காலனியாதிக்க சக்திகளால் இவர்களுக்கு எந்த ஆபத்தும் வரவில்லை. இதற்கான காரணம் சுவாரஸ்யமானது. இனூயிட்டுகள் வழக்கமாக இணங்கி வாழும் நிலப்பரப்பில் அவ்வளவு சீக்கிரம் வெளியாட்கள் வந்து ஆக்கிரமித்து இவர்களை அப்புறப்படுத்திவிட முடியாது, இவர்களால் மட்டுமே வாழமுடிகிற, ஆபத்துகள் நிறைந்த இடம் அது. அதனாலேயே காலனியவாதிகள், “இந்த இடமெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுப்பா” என்று பச்சைப்பசுமை நிறைந்த நிலங்களை நோக்கிப் புறப்பட்டுவிட்டனர். அப்படியானால் இவர்களுக்கு யாரால் எப்போது அச்சுறுத்தல் ஏற்பட்டது?
பனித் தொல்குடிகளான இவர்களுக்குப் பிரச்சனை வந்தது பனிப்போர் காலத்தில். ஆர்டிக் பகுதியில் தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள விரும்பிய கனடா அரசு, 1950-களில் “High Arctic Relocation” என்ற ஒரு திட்டத்தை உருவாக்கியது. பெருநகரங்களில் பூர்வகுடிகள் அப்புறப்படுத்தப்படுவதைத் தொடர்ந்து பார்ப்பவர்களால் அடுத்தடுத்து நடந்ததை யூகிக்க முடியும். “இந்த இடம் உங்களுக்கு ஒத்துவரவில்லை என்றால் இரண்டு ஆண்டுகளில் வீடு திரும்பிவிடலாம்” என்ற உறுதியோடு குடும்பங்கள் இடம் பெயர்க்கப்பட்டன. அது நல்ல இடம் என்றும் அவர்களிடம் சொல்லப்பட்டது. புதிய இடத்துக்கு வந்த இனூயிட்டுகள் திகைத்துப்போனார்கள். அது எந்த வகையிலும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கவில்லை. சரி.. வேட்டையாடலாம் என்று பார்த்தால், “ஒரு குடும்பத்துக்கு ஒரு கரிபோ மான் மட்டுமே வேட்டையாட அனுமதி வழங்கப்படும்” என்று அரசு உத்தரவிட்டது. அங்கு நிறைய இருந்த கஸ்தூரிக்காளைகளை வேட்டையாடுவதும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட விலங்கினங்களை வேட்டையாடிய இனூயிட் இனம், ஒன்றிரண்டு இனங்களின் இறைச்சியோடு தன்னுடைய வாழ்வாதாரத்தை சுருக்கிக்கொள்ளவேண்டியிருந்தது.
“கடலில் இருந்து பெறும் உணவுகளை இரண்டாகப் பிரிக்கலாம் – ஒன்று டினின்னிமியூடெய்ட், அதாவது கடற்கரையோரமாகவே கிடைக்கும் உணவுகள். சங்கு, சிப்பி, கிளிஞ்சல், சிலவகை கடற்பாசிகள், மீன்கள் ஆகியவை இதில் அடங்கும். இன்னொன்று இர்காமியூடெய்ட். இது கடலின் அடியிலிருந்து, அதாவது நீருக்குள் மட்டுமே கிடைப்பது” என்று மூத்த இனூயிட் ஒருவர் பேசுவதோடு இவர்களுக்குத் தரப்பட்ட வாழ்க்கையை ஒப்பிட்டால் இனூயிட்டுகளின் இழப்பு புரியும். சீல் எனப்படும் கடல் பாலூட்டிகளின் வேட்டை, அவ்வப்போது கரிபோ வேட்டை என்று இனூயிட்டுகள் சுருண்டுபோனார்கள். இன்னும் பல இனூயிட்டுகளை அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே அனுப்புவதற்காக கனடாவின் காவல்துறை அவர்களின் ஹஸ்கி நாய்களைக் கொல்லத் தொடங்கியது. சும்மா செல்லப்பிராணியைக் கொல்வதாக இதை நினைத்துவிடவேண்டாம். ஒரு இனூயிட்டின் ஹஸ்கி நாய் படை என்பது அவரது வாழ்வின் அடித்தளம். ஹஸ்கி நாய்களால் இழுக்கப்படும் ஸ்லெட் வண்டிகள் இல்லாமல் பனியில் பிழைக்க முடியாது. நாய்களைக் கொன்றால்தான் இனூயிட்டுகளைப் பிரச்சனையின்றி இடம்பெயர்க்க முடியும் என்பதால் கனடா அரசு இவ்வாறு செய்ததாக இனூயிட் மக்கள் குற்றம் சாட்டினர். ஆயிரக்கணக்கில் நாய்கள் கொல்லப்பட்டதாகவும் இனூயிட்டுகள் கூறினர்.
முதலில் இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் நகம் கடித்தபடி இரண்டு ஆண்டுகள் முடிவதற்காகக் காத்திருந்தனர். ஆனால், குடும்பங்களின் வருகை அதிகரித்தபடியேதான் இருந்தது. இரண்டு ஆண்டுகள் முடிந்தபின்பு “வேண்டுமானால் நீங்களே செலவு செய்து வீடு திரும்புங்கள்” என்று அதிகாரிகள் கைவிரிக்க, இருந்த பொருளாதாரச் சூழலில் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே இருக்கவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த தொல்குடிகள், திடீரென்று பணம் சார்ந்த ஒரு பொருளாதாரத்துக்குத் தங்களையே தகவமைத்துக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.
அந்த சூழலில் சீல்களின் தோல் அவர்களுக்கு ஒரு நங்கூரமாக மாறியது. பழகிய பாதையில் பயணித்த இனூயிட்டுகள், தங்களது மூதாதையர்களின் சீல் வேட்டைக் கதைகளோடு களமிறங்கினார்கள். சீல் இறைச்சி அவர்களின் பசியைப் போக்கியது. சீல் ரோமங்களின் ஏற்றுமதி அவர்களுக்கான வாழ்வாதாரமாக மாறியது. எல்லாவற்றையும் தூரத்திலிருந்துதான் கொண்டு வரவேண்டும் என்பதால் விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமே கிடைக்கும் ஒரு ஊரில், வருமானத்துக்காக ஒரு கடைசி பிடிமானமாக இருந்தது சீல்வேட்டை. வாழ்க்கை என்பதிலிருந்து பிழைப்பு என்ற இடத்துக்கு அவர்கள் நெருக்கித் தள்ளபட்டனர். “சிறந்த, பரந்துபட்ட அறிவோடு உலகின் மிகக்கடுமையான சூழலிலும் வாழ்ந்து காட்டியதற்காக எந்த இனூயிட்டுகள் பாராட்டப்பட்டார்களோ, அதே இனூயிட்டுகள் சரியாக திட்டமிட்டப்படாத நெரிசலான சிறிய இடங்களுக்குள், ஐரோப்பிய வாழ்க்கை முறைக்குள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டனர்” என்று எழுதுகிறார் ஆஷிஃபா கான்.
சில ஆண்டுகள் உருண்டோடின. அவர்களுக்கு அரணாக இருந்த ஒரே ஒரு வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தல் வந்தது. சீல் வேட்டை என்பது மனிதத்தன்மையற்றது, குரூரமானது என்று விலங்கு நல ஆர்வலர்கள் குரல் எழுப்பத் தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் குரல் வலுப்பெற்றது. சினிமா நடிகர்களும் பாடகர்களும் சீல் வேட்டைக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினர். வெள்ளைத்தோல் (Whitecoats) என்று பொதுவாக அழைக்கப்படும் சீல் குட்டிகள் கொடூரமாகக் கொல்லப்படுவதாக உலகம் முழுவதும் கண்டனம் எழுந்தது. வளர்ந்த சீல்களையே பொதுவாக வேட்டையாடும் இனூயிட்டுகள் அடுத்து என்ன நடக்குமோ என்று கவனித்தனர்.உலகெங்கிலும் உள்ள விலங்குகள் நல அமைப்புகள் இதற்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டிருந்தன. “இதுபோன்ற குரல்கள் சும்மா உணர்வெழுச்சியில் வருபவை” என்று விமர்சித்தார் கடல்சார் அறிவியலாளர் ஜாக் கூஸ்டோ.
1983-ல் ஐரோப்பிய யூனியன் சீல் பொருட்களின் இறக்குமதியை முற்றிலுமாகத் தடை செய்தது. இனூயிட்டுகளின் சீல் வேட்டைக்கு எந்த நேரடித் தடையும் இருக்கவில்லை என்றாலும் சந்தை இல்லாமல் போனதால் அவர்களின் வருமானம் 50 மடங்கு குறைந்தது. 80% இனூயிட் கிராமங்கள் வறுமையில் மூழ்கின. வருமானத்துக்கும் வழியில்லாமல் இடப்பெயர்வின் துயரால் அலைக்கழிக்கப்பட்ட இனூயிட்டுகள் இன்னமும் ஒடுங்கிப்போனார்கள். இனூயிட்டுகள் இருக்கும் பகுதிகள் கனடாவிலேயே அதிகமான வேலையில்லாத் திண்டாட்டம் உள்ள இடங்களாக மாறின. உலகிலேயே தற்கொலை விகிதம் அதிகமாக இருப்பதும் இங்கேதான். இங்கு குடும்ப வன்முறையும் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 2010-ம் ஆண்டு, இனூயிட் தொல்குடிகளுக்கு தாங்கள் ஏற்படுத்திய கஷ்டங்களுக்காக கனடா அரசு அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டது. “ஆர்டிக் இடப்பெயர்வை நிகழத்தியதற்காக கனடா அரசு வருத்தம் தெரிவிக்கிறது. இவை கனடாவின் வரலாற்றின் துக்கமான பக்கங்களாக இருக்கும். இனூயிட்டுகளிடம் ஆத்மார்த்தமான முழு மன்னிப்பைக் கோருகிறோம். இது 60 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய காயங்களை ஆற்ற உதவும் என்று நம்புகிறோம்” என்று பேசினார் கனடாவின் பிரதமர்.
சீல் வேட்டைக்கெதிரான தன்னுடைய பிரச்சாரத்தில், மரபுசார் உரிமைகளையும் சீல் வேட்டைத் தடையால் ஏற்படும் பொருளாதார மற்றும் கலாச்சார இழப்புகளையும் புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டதாகவும், அதற்காக இனூயிட்டுகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும் க்ரீன்பிஸ் நிறுவனம் 2014-ல் அறிவித்தது. “சீல்வேட்டைக்கு எதிரான பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது இதுபோன்ற அமைப்புகள் தொல்குடியினரிடம் கடுமையாக நடந்துகொண்டதாகக் கூட ஒரு குற்றச்சாட்டு உண்டு. மன்னிப்பு மட்டுமே போதுமா? எங்களுக்கு இவர்கள் இழப்பீடு தரவேண்டும்” என்று இனூயிட் மக்கள் குரல் எழுப்பினர். சீல் வேட்டைத் தடையை ஆர்வமாக முன்னெடுத்த பிற அமைப்புகள் இந்த மன்னிப்பைக் கூடக் கேட்காமல், “அதாவது பார்த்தீங்கன்னா நாங்கள் வணிகரீதியான சீல் வேட்டையைத்தான் எதிர்க்கிறோம்….” என்று நீட்டி முழக்கிக்கொண்டிருந்தன. இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் பிடுங்கப்பட்ட வாழ்வாதாரங்களுக்கும் பதிலாகக் கையில் வெறும் மன்னிப்புக் கடிதங்களோடு இனூயிட்டுகள் விடப்பட்டார்கள்.
இப்போது தொல்குடிகளுக்கு மட்டும் வேட்டை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே உலக அளவில் கடல் பாலூட்டிகள் அழிந்துவரும் நிலையில் வேட்டையை அனுமதிக்கவேண்டுமா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது. ஆனால், ஒரு இடத்தின் தன்மையை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல் விலங்குகளைப் பாதுகாக்கவேண்டும் என்று மட்டும் குரல் கொடுப்பது தட்டையானது. விலங்குகள் நல்வாழ்வில் ஆர்வம் காட்டுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றல்ல. சூழலைப் பாதுகாக்கிறோம் என்று தொடங்கி இறுதியில் உங்கள் உணவுத்தட்டில் குறுக்கிடுவதுவரை போகக்கூடிய ஒரு பிறழ் செயல்பாடாகவே அது பெரும்பாலும் இருக்கிறது. “வேட்டையாடவும் பிழைத்திருக்கவும் எங்களுக்கு உரிமை உண்டு” என்ற இனூயிட்டுகளின் குரலுக்கு இவர்களிடம் என்ன பதில் இருக்கிறது? தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த இனூயிட்டுகள், ஒரு அதிகாரம்சார்ந்த பிரச்சனையால் வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எறியப்படுகிறார்கள், புதிய இடத்தில் அவர்கள் தேடிக்கொண்ட வாழ்வாதாரத்துக்குக் குறுக்கே நிற்பதற்கு முன்னால் வரலாற்றைப் படித்திருக்கவேண்டாமா?
இத்தனை பிரச்சனைகளுக்கும் மீறி மெல்ல தங்களை நிலைநிறுத்திக்கொள்ள விரும்பிய இனூயிட்டுகள், புதிய இடங்களில் கலாச்சார மையங்கள், மொழிசார் மையங்கள், புதிய ஆடை வடிவமைப்புகளில் சீல் ரோமங்களைப் பயன்படுத்துவது என்று இப்போதுதான் கொஞ்சம் நிமிர்ந்திருக்கின்றனர். அவர்கள் வாழ்வில் புதிதாக ஒரு பூதம் வந்து அச்சுறுத்துகிறது. அதுதான் காலநிலை மாற்றம். பனியோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் மக்களின் நிலத்தில் பனி இல்லாவிட்டால் என்ன ஆகும்? பனி உருகுவதால் மீன்பிடித்தொழில் உள்ளிட்ட இனூயிட் வாழ்வாதாரங்கள் அழிந்துவிட்டன. அவர்களின் வாழ்க்கை மாறிவருகிறது. முன்பு இருந்ததுபோல் அவர்களால் பனியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தங்களது வாழ்வின் மையப்புள்ளியாக இருக்கும் பனியை அவர்கள் இழந்துவருகிறார்கள். “இப்போது இருக்கும் பனிக்கு என்ன பெயர் என்றே தெரியவில்லை” என்கிறார் ஒரு இனூயிட் மீனவர்.
2003-ல் காலநிலை மாற்றத்துக்கான தீர்வை நோக்கிப் பயணிக்காமல் தங்களது வாழ்வை அழிப்பதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது இனூயிட்டுகள் மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றைத் தொடுக்கப்போவதாகவும் ஒரு பேச்சு எழுந்தது! இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது என்பதால் காலநிலை சார்ந்த மாநாடுகளில் இவர்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்படுவதில்லை. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் உலகிலேயே ஆர்டிக் பகுதியில்தான் தீவிரமாக இருக்கும் என்றும், அழிவின் முதல் தாக்குதல் அங்கிருந்துதான் தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், அந்த ஆர்டிக் மக்களிடம் கலந்து ஆலோசிக்காமலேயே காலநிலை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. உருவகமாக இல்லாமல் உண்மையாகவே காலுக்குக் கீழ் நழுவும் பூமியில் நின்றுகொண்டிருக்கிறார்கள் இனூயிட்டுகள். அவர்களது உலகம் வேகமாக சீர்குலைந்துகொண்டிருக்கிறது. “இனூயிட்” என்ற கிரீன்லாண்டிக் சொல்லுக்கு “மனிதர்கள்” என்று பொருள். அந்தப் பின்னணியில், “இனூயிட்டுகள் ஆபத்தில் இருக்கிறார்கள்” என்று எழுதும்போது அச்சமாகத்தான் இருக்கிறது.
அரசுகள் மற்றும் அமைப்புகளால் எடுக்கப்பட்ட ஒரு தவறான முடிவு இனூயிட்டுகளை பாதித்த வரலாறு இது என்றால், உணவுரீதியாக நாம் எடுத்த முடிவுகளால் பாதிக்கப்பட்ட ஒரு இனமும் உண்டு. அது என்ன வரலாறு?
(தொடரும்…)