இணைய இதழ்இணைய இதழ் 65சிறுகதைகள்

இளையராஜாவின் மெலடி பாடல்! – இலட்சுமண பிரகாசம்

சிறுகதை | வாசகசாலை

தூக்கம் ஒரு மருந்து. அவன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மஞ்சள் சூரியன் மாலை நேரத்தில் முகிழ்த்திருந்தது. அவனுடைய மொபைல் ஒலித்தது. அது இளையராஜாவின் இசையில் ‘நான் உனை நீங்க மாட்டேன்’ மெலடி பாடல். அவனை வருடுவது போல எழுப்பியது. மாலை ஆறு மணி கடந்து கொண்டிருந்தது. மெலடியாக ஒலித்துக் கொண்டிருந்த மொபைலை எடுத்துப் பேசினான். எதிர் முனையில் பேசியவரிடம் காலை வருவதாக பதில் அளித்தான்.

அன்றைய தினம் செவ்வாய் கிழமை. அவனுடைய அலுவலகம் அவனுக்கு ‘ஷிப்ட்’ முறைப்படி விடுமுறை அளிக்கும் நாளாக இருந்தது.

தனது தூக்கம் இன்னும் கலையாமல் இருந்த நிலையில் படுக்கையில் இருந்து எழுந்து கழிவறைக்குச் சென்றான். அடிவயிற்றை முட்டிக் கொண்டிருந்த சிறுநீரை கழித்த பின்னர் அவனுக்கு சிறையில் இருந்து விடுபட்டது போன்ற உணர்வு வந்தது. மதியம் அருந்தியிருந்த மதுவின் மயக்கம் அவனை படுக்கைக்குத் திரும்ப அழைத்தது. ஆனால், அவனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. ஜன்னலைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தான். வானம் இருட்டிக்கொண்டு, பனி பெய்து கொண்டிருந்தது.

தனது சட்டைப் பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்துத் திறந்து அதில் மீதம் இருந்த இரண்டு சிகரெட்களில் ஒன்றை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான். ‘நிகோடின்’ புகையை உள்ளுக்கிழுத்து ஒரு கணம் ஆழ்ந்து ரசித்து வெளியில் விடுகிறபோது ஏற்படும் மனக்கிளர்ச்சியில் அவனுக்கு புத்துணர்ச்சி தரும் சுகம் கிடைக்கும். அது ஒரு கலவிக்கு ஈடானதாக இருக்கிறது என்று அவனது மனம் சொல்லும்.

இப்போதைக்கு, இந்த பனிபொழியும் வேளைக்கு ஒரு தேநீர் போட்டுக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது. விரலிடுக்கில் நெருப்பாய் கனன்று கொண்டிருந்த சிகரெட் சாம்பலை ஒரு தட்டுத்தட்டி விட்டு கடைசி இழுப்பை இழுத்தான். இன்னும் ரெண்டு முறை புகையை உள்ளுக்கிழுக்கலாம் தான். ஆனால், அதுவரைக்கும் அவன் அதை எப்போதும் புகைப்பது இல்லை. அது உடலுக்கு அதிகக் கேடு விளைவிக்கக் கூடியது என்று அணைத்து அறையின் மூலையில் உள்ள குப்பைக் கூடையில் தூக்கி வீசி எறிவது வழக்கம். இப்போதும் அதையே செய்தான். 

ஒரு தேநீர் தயாரிப்பது என்பது ரசனைக்குரிய செயல். இந்த பூமியில் ரசிப்பதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன என்பதில் அவனுக்குத் துளியும் சந்தேகம் இல்லை. அதில் ஒன்று தேநீர். நிச்சயமாக தேநீரும் அதனுடைய சுவை, அதனைத் தயாரிக்கும் முறை போன்ற ஒவ்வொன்றும் எவ்வளவு ரசனைக்குரியவை. தன்னுடைய தேநீர் தயாரிப்பு குறித்து முகநூலில் அவ்வப்போது ஏதாவதொரு பதிவைப் போடுவான். அவை பெரும்பாலும் இரண்டு வரி, மூன்றுவரிகளாக இருக்கும்படி பதிவிடுவான். அந்த வரிகளுக்கு ஏற்ப தேநீர் நிரம்பியபடி இருக்கும் புகைப்படத்தைத் தேடிப்பிடித்து பதிவிடுவதில் அவனுடைய கவனம் சற்றுகூடுதலாக இருக்கும்.

அவனுடைய முகநூல் பதிவில் எழுதிய கவிதையின் சில வரிகள்:

“இருவரிடையே 
அழகான உரையாடலை துவக்கி வைக்கிறது
தேநீர் கோப்பை” 

என்று பதிவிட்டிருந்தான். 

அந்த வரி அவனுக்கு எங்கிருந்து வந்திருக்கும் என்று தெரியாது. ஆனால், அந்த வரிகள் அவனுடைய அத்தனை ரசனைகளின் ஒரு சிறு வெளிப்பாடு. அதை, அவன் கவிதை என்றோ அல்லது ஒரு ஹைக்கூ என்றோ கவனித்தது கிடையாது. அவனைப் பொருத்தவரை அவனுக்கு அந்த வரிகள் அந்நொடிக்கான அனுபவம்.. அவ்வளவுதான். ஒரு மழையை, வெயிலை, குளத்தை, பறவையை அவற்றின் ஒலியை, ரசிப்பது போல அவ்வப்போது தானே தயாரித்த தேநீரையும் ரசித்து குடிக்கத் தெரிந்தவன்.

முகநூல் பதிவில் அவனுக்கு ஆண் நண்பர்கள்தான் அதிகம். பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை. தன்னை ‘டேக்’ செய்யப்பட்டு பதிவிடப்பட்ட முகநூல் பதிவுகளில் சில பெண்கள் ‘லைக்’ போடுவதையும், கமெண்ட் போடுவதையும் கண்டு மெலிதாக புன்னகைப்பான்.

அவனுடைய நண்பர்கள் குழு தங்களை ‘சிங்கிள்’ என்று அழைத்துக் கொள்வதில்தான் பெருமை கொள்ளும். அதுவொரு பெருமிதமாக அவர்களுக்குத் தோன்றும். யாருடைய காதலாவது ‘ப்ரேக்-அப்’ ஆகிவிட்டால், அதை ஒரு கொண்டாட்டமாகவே கருதிக் கொள்வது அவர்களுடைய கலாச்சாரமாகவே மாறிவிட்டிருந்தது.

“அழகான உரையாடலை துவக்கி வைக்கிறது தேநீர் கோப்பை” என்ற வரியைக் குறிப்பிட்டு அவனுடைய அலுவலகப் பெண்தோழி ஒருத்தி முகநூலில், “சூப்பர் ப்ரோ! செம்ம லைன். வாட் எ பொயட்டிக்? என்ன ப்ரோ? கமிட் ஆயிட்டீங்களா? யாரு அந்த சேச்சியா?” என்று கேலியுடன் சிரிக்கும் எமோஜி குறியீட்டோடு ரிப்ளை செய்திருந்தாள்.

ஒரு கணம் சற்றுத் தயக்கம். கமெண்ட்டில் பதிவிட்ட பெண் அவனுடன் நல்ல நட்பில் இருப்பவள்தான். அவளுடைய கமெண்ட்டிற்கு பதிவிடலாமா? வேண்டாமா? என்ன பதிவிடுவது என்ற தயக்கம் அவனுடைய மனதில் எழுந்திருந்தது. ஒரு அலைக்கழிப்பு செய்வது போல.

பதில்களை வார்த்தைகளால்தான் பதிவிடவேண்டுமா? அவனும் பதிலுக்கு ஒரு சிரிக்கும் ஸ்மைலி எமோஜியைத் தட்டிவிட்டான். அந்த எமோஜி என்ன விதமான அர்த்தம் அளிக்கும் என்பது அவனுக்குத்தான் தெரியும்.

அவனுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்தோழி குறிப்பிட்ட அந்த ‘சேச்சி’ குறித்துப் பெரிதாக ஒன்றும் அவனுக்கு அபிப்பிராயம் இல்லை. மாளவிகா அவள் பெயர். நல்ல அழகு. குழைந்து குழைந்து மலையாளம் கலந்த தமிழ் பேசுவாள். அதுவொரு கொஞ்சல் மொழி என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். அவன் அவளுடைய தமிழ் உச்சரிப்பை ரசிப்பான். அவ்வப்போது அவளுடைய இருக்கையைத் தாண்டிப் போகும் போது லேசாகச் சிரிப்பான். அவளும் அளவாகச் சிரிப்பாள். அதில் ஆழம் எதுவும் இருந்தது இல்லை. அவள் தனது இருக்கையை தாண்டிப் போகும் போது பார்க்கும் தருணத்தில் ஒரு ஹாய், ஒரு குறுஞ் சிரிப்பு.அவ்வளவுதான் அவளுடனான நட்பு.

முகநூலில் இருந்து சற்று விலகி ஜன்னல் வெளியே பார்வையைப் படரவிட்டான். முன்பை விட பனி அதிகமாகப் பெய்து கொண்டிருந்தது. முகநூலை அதற்கு மேல் அவன் பார்க்க விரும்பாதவன் போல் அதில் இருந்து வெளியேறிவிட்டான். மாலைநேரம். இன்னும் சற்று நேரத்திற்கு வெளியே கொஞ்ச தூரம் நடைபயிற்சி செல்ல வேண்டும். இன்று ஒரு நாள்தான் அலுவலகத்தில் ஓய்வு விடுமுறை அளிக்கிறார்கள் என்ற எண்ணம் மீண்டும் அவன் முன் வந்து சென்றது. வெதுவெதுப்பான கதகதப்பை அளிக்கும் இறுக்கமான பனிக்கால உடைகளைப் போட்டுக் கொண்டான். 

கடிகாரத்தைப் பார்த்தான். மணி இரவு ஏழு ஆகியிருந்தது. இந்த பனிப்பொழிவிற்கு தேநீர் அருந்த வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய சின்னஞ்சிறிய அறையில் இருக்கும் சமையற்கூடத்தில் காலையில் வாங்கி வைத்த பாலில், மீதமிருந்த பாலை தேநீர் தயாரிக்கும் பாத்திரத்தில் ஊற்றினான். கொஞ்சம் தண்ணீர் ஊற்றினான். நகரத்தில் பெரிய கேண்களில் அடைக்கப்பட்ட தண்ணீருக்கு ஆகும் செலவு குறித்து அவனுக்கு கவலைதான். சில சமயங்களில் குறித்த நேரத்தில் கேண் தண்ணீர் கொண்டு வருபவர்கள் வராமல் போய்விடுவார்கள். அப்போதெல்லாம் ஒரு மடக்கு தண்ணீருக்குக் கூட பக்கத்து வீட்டில் அல்லது உரிமையாளரின் வீட்டில் போய் நிற்க வேண்டும். அலுத்துக் கொள்வான். அந்த நேரத்தில் நிச்சயம் கெட்ட வார்த்தைகள் சரளமாக தடையின்றி தாரளாமாக அவன் வாயிலிருந்து வந்து விழும்.

பால் கொதித்துக் கொண்டிருந்தது. இஞ்சியை தட்டிப் போட்டால் தேநீரின் சுவையே தனி ருசிதான். ஒரு துண்டு இஞ்சியை இடித்து கொதிக்கும் பாலில் போட்டான். ஊட்டியிலிருந்து அவனுடைய நண்பன் வாங்கி வந்து கொடுத்த தேயிலைத் தூள். நன்றாக கொதிக்கவிட்டான். இடித்துப் போட்ட இஞ்சியின் மணம் ஒரு வித போதையைத் தந்தது. வடிகட்டிய பின் கண்ணாடி டம்ளரில் ஊற்றினான். சூடு பறந்தது. மேகம் போல. டம்ளரிலிருந்து ஆவி மேலெழுந்தது. 

ஹாலில் ஜன்னலைப் பார்த்தபடி டீப்பாய் போடப்பட்டிருந்தது. அதன் மீது மெல்ல கண்ணாடி டம்ளரை வைத்து அமர்ந்து கொண்டான். தன்னுடைய மொபைல் ஃபோனை ஒரு கையில் ஏந்திக் கொண்டு, மறுகையில் தேநீர் கோப்பையை ஏந்தியபடி அமர்ந்திருந்தான். தேநீர் கோப்பையில் இருந்து இஞ்சி மணத்தோடு ஆவி பறந்து கொண்டிருக்க, ஒரு மடக்கு தேநீர் துளியை விழுங்கினான். மதியம் அருந்திய போதைக்கு மாற்று மருந்து போல அவன் தனக்கெனத் தானே தயாரித்துக் கொண்ட தேநீரின் சுவை நன்றாகவே இருந்தது. 

அவனது பதிவிற்கு முகநூலில் வந்திருந்த லைக்குகள் அதிகம் இல்லை. ஆனால், அவனுடைய அலுவலகத்தில் பணிபுரியும் அவனுக்கு அதிகம் அபிப்பிராயம் இல்லாத ‘சேச்சி’ மாளவிகா ஹாட்டின் ரியாக்ட் செய்திருந்தாள். உடன் ஒரு தேநீர் கோப்பை படத்தை எமோஜியாகப் பதிவிட்டிருந்தாள். சுவைத்துக் கொண்டிருந்த தேநீருக்கு இடையில் காதல் கலந்த புன்னகை ஒன்று அவனை அறியாமல் வெளிப்பட்டது. இது அவனுக்கு ஏதோ ஒருவகையில் ஆறுதலை அளித்தது போல் இருந்தது. அதுவரை அவனுக்கிருந்த அத்தனை மன அழுத்தங்கள் குறைந்திருந்தன. 

அவள் பதிவிட்ட எமோஜிக்கு என்ன ‘ரியாக்ட்’ செய்வது என்று தெரியாமல் அல்லது அதற்கு பதில்தர வேண்டுமா? லைக் போடலாமா? வேண்டாமா? என்று யோசனையிருந்த கணத்தில், லைக் பட்டனைத் தட்டிவிட்டான். அவளிடம் பேசினால் என்ன? ஏன் அவளிடம் பேச வேண்டும்? மாளவிகாவுடன் பேசத் தொடங்கினால் ஆறுதல் கிடைக்கலாம். தயக்கம்தான் அவனை தடுத்துக் கொண்டிருக்கிறது. அலுவலகத்தில் அவளிடம் பேசியது வெகு குறைவு. இருந்தாலும் பேசினால் பரவாயில்லை என்றுதான் அவனுக்கு அப்போது தோன்றியது. ஆனாலும், ஏனோ லைக் தட்டிவிட்டதுடன் நிறுத்திக் கொண்டான்.

தேநீர் சுவையானது பனிபொழியும் வேளையில் அவனுடைய உடலுக்கு கதகதப்பைத் தந்து கொண்டிருப்பது போல், அவளுடன் உரையாட வேண்டும் என்ற ஆவலும் ஏக்கமும் ஒருவித தவிப்பும், அவனது மனதைக் கொதிநிலையிலேயே சில நிமிடங்களுக்கு சிதையாமல் வைத்திருந்தது.

சற்று நேரத்திற்குப் பின் அவனுடைய முகநூல் கவிதையின் பதிவிற்கு மாளவிகாவையும், அவனுடைய அலுவலக நண்பர்கள் சிலரையும் ‘டேக்’ செய்து இணைத்திருந்தான். பனி பொழிந்து கொண்டிருந்த முன்னிரவு வேளையில் அவனுடைய கையில் சுவை ததும்பிய தேநீர் கோப்பையில் சூடு கொஞ்சம் குறைந்திருந்ததை உணர்ந்திருந்தான். 

வெளியில் கொஞ்ச தூரம் சென்றுவரலாம் என்ற எண்ணம் தோன்றியது. எனினும் பனி அதிகம் பொழிந்து கொண்டிருந்தது. எழுந்து அறையின் உள்ளும், வெளியிலும் நடந்தவாறு ஏதோ ஒன்றைப் பற்றிய சிந்தனையோடு இருந்தான். ஊருக்குச் சென்று வரலாமா? அல்லது வேறு எங்காவது நாலைந்து நாட்கள் தங்கிவிட்டு பின்னர் திரும்பலாமா? என்ற சிந்தனையும் அவனிடம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு மாதகாலமாக அலுவலகத்தில் சீனியர் எக்ஸிகூட்டிவ் ராவ் உடன் முரண். அவனை வேலையில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்ற பேச்சு கடந்த சில நாட்களாகவே அலுவலகத்தில் இருந்துவந்தது. இதன்காரணமாக மன அழுத்தம் அவனைத் தாக்கியிருந்தது. ஆனாலும் ராவ் மீதான கோபம் தணியவில்லை. அலுவலகத்தில் தினந்தோறும் ராவ்-வை சந்தித்துத்தான் தீரவேண்டும். ‘ச்சை. அந்தாளு மூஞ்சியிலதான் தெனமும் முழிக்க வேண்டியிருக்கு. இதுக்கு வேலையை ரிசைன் பண்ணிட்டு வேறு கம்பெனிக்குப் போய்விடலாம்’ என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டான்.

ஜன்னல் வழி சில்லென பனிக்காற்று வந்துகொண்டிருந்தது. கதகதப்பிற்கு சிகரெட் பாக்கெட்டில் மீதம் இருந்த ஒற்றை சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான். உதடு கதகதப்பிற்கு புகையை விரும்பியது. கடுமையாக பொழிந்து கொண்டிருந்த பனிக்கு அருந்திய தேநீர் மட்டும் போதுமானதாய் இல்லை. நேற்று வாங்கிவந்திருந்த மதுபாட்டிலில் கொஞ்சம் மீதமிருந்தது, ‘இல்லை. இப்போது வேண்டாம். தூங்குவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு அருந்திக் கொள்ளலாம்’ என்று மனம் சொன்னது. 

இப்போது கோப்பையில் சூடு முற்றிலும் இல்லாதிருந்தது. குடித்துவிட்டு டீப்பாயில் தேநீர் கோப்பையை வைத்தான். டீ.வி. பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. செய்திச் சேனல்களில் வாசிக்கப்படுபவை ஆத்திரமூட்டுபவையாக இருக்கின்றன. ‘டிபேட்’ -ல் கலந்து கொண்டு பேசுபவர்கள் நாய்களைப் போல் குரைத்துக் கொள்வதாகத்தான் அவனுக்குத் தோன்றும். பாடல்கள் மட்டும் ஒளிபரப்பப்படும் சேனல்களில் பழைய கிளாசிக் பாடல்களை கேட்டுக் கொள்வதன் மூலம் தற்காலிகமாக தன்னுடைய மனச் சோர்வை போக்கிக் கொள்வான். அல்லது யூடியூப்பில் அந்தரங்கக் கேள்விகள் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் செக்ஸாலஜிஸ்ட்களின் நேர்காணல்களை, சாலையில் சென்று கொண்டிருக்கும் நபரை அழைத்து கேலியாக ஏதாவதொன்றைப் பற்றி கேட்டுவிட்டு அதனை ‘ஜஸ்ட் ஃபன்’ எனச் சொல்லி சிரிக்கும் வீடியோக்கள், ப்ராங்க் வீடியோக்களை சிரிக்கச் சிரிக்கப் பார்ப்பான். சில நேரம் மொபைலில் வீடியோ கேம்களில் ஏதேனும் ஒன்றை விளையாடுவான். அதில் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் அவைகள் குறித்து பெரிதும் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டான். பொழுது கழிந்து கொண்டிருந்தால் போதுமென எண்ணிக் கொள்வான்.

ஆன்லைன் வழி விளையாட்டினால் பணத்தை இழந்த ஒரு வாலிபன் தன்னுடைய குடியிருப்பிற்கு பக்கத்தில் நடுப்பகலில் மாடிப்படியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு இறந்ததும், அதன் பின்னால் தொலைக் காட்சியில் நிகழ்ந்த அந்த இளைஞனின் தற்கொலைச் சம்பவம் குறித்த செய்திகளையும், நாளிதழ் ஒன்றில் அவனுடைய தற்கொலை குறித்த செய்தி ஒரு ஓரத்தில் அவனுடைய புகைப்படத்துடன் போடப்பட்டது உள்ளிட்டவைகளைப் பார்த்த பின், அவன் மனதிற்குள் எந்த ஒரு சலனமும் ஏற்படவில்லை. இறந்த அந்த நபரைப் பற்றியும், அவனுடைய குடும்பம் பற்றியும் அதிகம் ஏதும் அறிந்து கொண்டிருக்கவும் இல்லை. 

இரவுநேர பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்த காரணத்தால் பகலில் உறக்கம் இல்லாமையால் அவதிப்பட்டதையும், அதனால் முன்பு எடுத்துக் கொண்டிருந்த மதுவின் அளவைவிட அதிகமாகக் குடிக்க ஆரம்பித்ததையும், அதன் காரணமாய் ஏற்பட்ட மனச் சோர்வை போக்கிக் கொள்ள ஆன்லைன் விளையாட்டு ஒன்றில் விளையாடி இலட்சக் கணக்கில் இழந்ததையும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்ள முயன்றதையும், மனத்தில் துணிவு இல்லாமையால், தன்னுடைய அறையில் இருந்த பொருட்களை கோபத்தில் உடைத்ததும் அவனுக்கு இன்னும் மறந்து விடவில்லை. 

தற்கொலையை மேற்கொள்ள துணிச்சல் வேண்டும். தனக்கு அதற்கு உடலிலும், மனதிலும் வலு இல்லை என்பதை சில நாட்களிலேயே உணர்ந்திருந்தான். தன்னை தற்கொலையில் காத்துக் கொள்ள என்ன செய்வது என்று யோசித்து, தனக்குத்தானே ஏதோவொரு சுய சிகிச்சையை மேற்கொள்ள முடிவெடுத்தான். உளவியல் மருத்துவரை அனுகலாம் ஆனால், நான் நிச்சயம் ஒரு பைத்தியக்காரன் இல்லை என்று தனக்குத் தானே கூறிக்கொண்டான். உலக அளவில் உளவியல் சிகிச்சையில் பிரபலமான இசை சிகிச்சை முறை குறித்து அவன் அறிந்திருந்தான் அத்தகைய சிகிச்சையை தானே சுய பரிசோதனையாக மேற்கொள்வதென முடிவெடுத்தான். அதிக ஒலியை எழுப்பும் ராக், ஜாஸ் போன்ற இசையை பின்னணியாகக் கொண்ட பாடல்களை தன்னுடைய மொபைல் ஃபோனிலிருந்து அகற்றி விட்டு, எம்.எஸ்.வி, இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் பாடல்களிலிருந்து தேர்ந்தெடுத்த மெலடி பாடல்களைத் தரவிறக்கம் செய்து கொண்டான். நடைபயிற்சியின் போது அவனது எல்லாவிதமான கவலைகளையும் மறக்க அவை உதவிசெய்தன.

அலுவலகத்தில் ராவ் கொடுக்கும் நெருக்கடியும், பணிச்சுமையின் போதும் ஏற்படும் மன அழுத்தமும் சேர்ந்து அவனுக்கு உள்ளுக்குள் ‘தற்கொலை செய்து கொள்’ என்று ஒரு குரல் ஒலி எழுப்புவது போன்று தோன்றும் நேரங்களில் எல்லாம், தனது தற்கொலையை தடுத்துக் கொள்ள அவனுக்கு முதலில் தற்காப்பெனத் தோன்றுவது, அவ்விடத்தை விட்டு அகன்று நண்பர்களுடன் ஏதேனும் ஒரு கடைக்குச் செல்வது அல்லது வெளியில் சற்று தூரம் நடந்து சென்று மீண்டும் வருவது. இறுக்கமான மனத்தை தளர்வடையச் செய்வதற்கு அவனுக்கு மெலடி பாடல்கள் துணையாய் இருந்தன. நாளடைவில் தன்னுடைய நடவடிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படுவதை அவன் எழுதிய சுயவிவர டைரிக் குறிப்புகளில் இருந்து அறிந்து, தானே தெளிந்து கொண்டான். 

தேநீரை முழுதுமாய் அருந்தி முடித்திருந்தான். அருந்திய தேநீருக்குப் பின் இளையாராஜாவின் பாடல்களில் மெலடி ப்ளே லிஸ்ட் ஒன்றை ஒலிக்க விடலாமா என்று தோன்றியது. அவனுடைய இரவிற்குத் துணையும், ஆறுதலும் இளையராஜாவின் மெலடி பாடல்தான். சற்றுநேரத்திற்குப் பின் அவனுடைய முன்னாள் காதலியிடம் இருந்து அழைப்பு வந்தது. ‘நான் உனை நீங்கமாடேன். நீங்கினால்…’ என்று மொபைல் போனின் ரிங்க்டோன் ஒலித்தது. அதற்கு பதில் அளிக்கப் போவதில்லை என்ற தீர்மானத்தோடு, சட்டென பொங்கியெழுந்த கோபத்தில், அவளுடைய அழைப்பை நிராகரித்து, அவளுடைய பெயரை உச்சரித்து ‘ஃபக் யூ’ என்றான். மேலும் தன்னைத் தானே கெட்டவார்த்தைகளில் திட்டிக் கொண்டான். 

கொஞ்ச நேரம் நடக்கலாம் என்று அறையை விட்டு வெளியே வந்தான். வழக்கம் போல் தன்னுடைய நடைபயிற்சியின் போது தனக்கு ஆறுதலாக இருக்கும் இளையராஜாவின் மெலடி பாடல் லிஸ்ட்டில் ஒன்றில் ‘ப்ளே’ பட்டனை அழுத்திவிட்டு காதில் இசையுணர்வு கருவியை மாட்டிக்கொண்டு, பனி படர்ந்திருந்த சாலையின் நடைபாதையில் நடைபயிற்சியை மேற்கொண்டிருந்தான். காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலை முணுமுணத்துக் கொண்டே நடக்கத் தொடங்கினான்… ‘காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்..’ 

மீண்டும் அவனுடைய போன் ஒலித்தது. அலுவலக நண்பன் அழைத்திருந்தான். செய்தி அவன் எதிர்பார்த்ததுதான். ராவ்-விற்கும் அவனுக்கும் இடையே நடந்த பிரச்சனையின் காரணமாக, அவனை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். ஒரு நொடி மனதினில் கடும் கோபம் எழுந்தது. அத்தனை கோபத்தையும் சேர்த்து ‘ஃபக்’ யூ’ என்று கத்திவிட்டு, ‘இனி ராவ்வின் முகத்தில் முழிக்காமல் இருக்கலாம். அடுத்த வேலை கிடைக்கும் வரை இரவில் நன்றாகத் தூங்கலாம்’ என்ற நிம்மதியோடு பேசிக் கொண்டிருந்த போனை அ ணைத்தான். பின் மீண்டுமொருமுறை ‘ஃபக் யூ’ என்று இலக்கில்லாமல் யாரையோ எண்ணித் திட்டிவிட்டு போனை ஓங்கித் தரையில் அடித்தான். 

******

latchumanaprakasam@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button