
நிலக்குறிப்புகள்
சற்று முன் யாரோ சிந்திய
ஒரு துளி ஆனந்தக் கண்ணீர் விழுந்த
அதே இரும்பு நாற்காலியில்தான்
அடுத்ததாய் ஆற்ற இயலாத
வலிமிகு கண்ணீர்த்துளியொன்றும்
நடைபாதை மெதுவோட்டத்தில்
கண்டும் காணாமலும் கடக்கும் காலம்
பெரிய கூழாங்கல்லும்
சிறிய கூழாங்கல்லும் பதித்த சமவெளியில்
தாங்கித் தாங்கி நடை பழகும்
அவ்விரு இதயங்களும்
எதிரெதிரே சந்தித்துக்கொள்ளும்போது
ஒன்றையொன்று சமாதானம் செய்வது
சட்டெனப் பிறக்கும் பொய்ப் புன்னகை!
***
யாருக்கோ உரியதை அல்ல
எனக்கே எனக்கான ஒன்றை
கட்டம் கட்டி
திட்டம் தீட்டி
வேறு ஒருவருக்கு கொடுத்தீர்
உங்களுக்கும் தெரியும்
அவருக்கும் தெரியும்
எனக்கும் தெரியும்
அது எனக்கான ஒன்றுதானென்று
கொடுத்த அன்றோடு
நீங்களும் நானும்
அதனிடமிருந்து நகர்ந்துவிட்டோம்
உறுதியாகச் சொல்கிறேன்
வாங்கிய அவர் மட்டும்
ஒவ்வொரு நாளும்
அதில் என் முகம் பார்ப்பார்
கணக்கில் வல்லவர்கள்தானே நீங்கள்
கூட்டிக் கழித்துப் பாருங்கள்
கணக்கு சரியாக வரும்.
***
எத்தனை பேர் வந்து
எட்டி எட்டிப் பார்த்தாலும்
குட்டிக்கரணமே போட்டாலும்
இளகவே இளகாத இந்த மனது
முன்னறிவிப்பு ஏதுமின்றி
உருகி ஓடுகிறது
உன்னுடைய வருகையால்.
அடிவயிற்றிலிருந்து மேலேறி
குபீரென வெளியேறும் குளிர்ந்த காற்றே
அவனென்றால்
உனக்கு ஏன் இத்தனை பிரியம்?
***